தொடர்கள்
கல்வி
ஆரம்ப பாடச்சாலைக்கு அசத்தல் ரோபோ!- மாலாஸ்ரீ

20230202155358699.jpg

சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பது சுலபமான வேலை இல்லை!

மிகுந்த பொறுமையும், கற்பனைத்திறனும் , நுண்ணறிவும், அன்பும் தேவைப்படும் பணிகளில் ஆரம்பப்பள்ளி ஆசிரியப் பணியும் ஒன்று .இந்நிலையில் இந்த ஆசிரியப்பணிக்கு ஒரு ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது

இதை வடிவமைத்தவர் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சிர்சியை சேர்ந்தவர் அக்ஷய் மஷேல்கர்‌, அங்குள்ள சைதன்யா பி.யு.கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணி புரிபவர் . இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் 'சிக்ஷா' என்ற மனித வடிவ ரோபோவை உருவாக்கி,நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதம், வரலாறு, அறிவியல், புவியியல் பாடங்களை நடத்தும் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மனிதனைப்போல வடிவைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, பாடம் நடத்தும் அழகைக் கண்டு அனைவரும் வியந்து வருகின்றனர்.

இதுகுறித்து அக்ஷய் மஷேல்கர் கூறும்போது, " 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிய நிலையில், ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகங்கள் நடத்தி வந்தன. இதில் பல மாணவர்கள் மொபைல் மற்றும் கணினி வழியாகப் பாடங்களை கற்றனர். எனினும், இந்த முறைகளில் மாணவர்கள் நல்ல முறையில் பாடங்களை கற்றிட முடியாது. அது, பாடம் கற்பிக்கும் முறையை மந்தமாக்கிவிடும். அதை மாற்றும் நோக்கில்தான், தற்போது பாடங்களை சொல்லித் தருவதற்கு மனித வடிவ ரோபோவை உருவாக்கினேன்.

நான் உருவாக்கியுள்ள 'சிக்ஷா' மனித ரோபோ நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவில்தான் உள்ளது. இதை கிராமப்புற மாணவர்களுக்காகவே நான் வடிவமைத்தேன். இந்த தத்ரூப ரோபோ, மாணவர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுக்கும் ஆற்றலுடன், வாய்ப்பாடு, கவிதை, பாடல் என அனைத்தையும் மாணவர்களுக்கு சுலபமாக கற்றுக் கொடுக்கும் திறன் கொண்டது.

தற்போது தயார்நிலையில் இருக்கும் இந்த மனித வடிவ ரோபோ, இதுவரை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். வரும் கல்வியாண்டில் பாடங்களை சொல்லித் தரும் மனித வடிவ ரோபோ பயன்பாட்டுக்கு வரும் என உறுதியாக நம்புகிறேன்!" என்று அக்ஷய் மஷேல்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிக்ஷா விரைவில் பணிக்கு ஈடுபடுத்தப்படும் என்று நாமும் நம்பலாம் .