தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் முதலில் தெய்வ வழிபாடே முன் நிற்கிறது. ஊரின் ஒதுக்குப்புறத்திலோ, ஊர் எல்லையிலோ, நீர்நிலைகளுக்கு அருகில் முறையான கோயில் அமைப்போ, சிலை வடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோ கூட தெய்வம் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். அதனால் அவற்றிற்கு மஞ்சள் குங்குமமிட்டு அதில் தெய்வங்கள் குடி இருப்பதாக நம்பிக்கை வைத்து வழிபட்டு வருகிறார்கள். கிராமப்புற தெய்வங்களில் பெண் தெய்வங்களே மிகுதி என்பதால் பெண் தெய்வ வழிபாடு முதன்மை பெற்றது.
இந்த பெண் தெய்வங்களில், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்பட்டாலும் ‘அம்மன்’ என்ற பொதுவான பெயரால் அழைக்கின்றார்கள். அதற்குக் காரணம் ஒருவருக்குத் தேவையான அனைத்தையும் அள்ளித் தருபவள் ஒரு தாயே!
இந்த பெண் தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்ப்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இது மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் அடங்கும்.
கிராமப்புற தெய்வங்களைக் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப்படுகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றன. ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு வழிபாடுகளும், பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.
கிராம பெண் தெய்வங்கள் அல்லது ‘ஊரம்மா’ என்று அழைக்கப்படும் கிராமங்களின் எல்லை தெய்வங்கள், தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கிய, முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த அவர்கள், மரணத்தின் மூலமாகத் தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் புலனாகிறது..
ஒரு கிராமத்தில் நோய்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கையான பாதிப்புகள் நுழையாதபடி எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்தி அம்சங்களாகக் கிராம தெய்வங்கள் திகழ்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர் பெண் தெய்வம் என்பதான நம்பிக்கை உள்ளதால் ஆண் தெய்வங்களை விடப் பெண் தெய்வங்களுக்கு ஆராதனைகள் அதிகமாகவே உள்ளது.
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வப் பெயர்களும், பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இம்மரபு இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
கிராமப்புற சிறுதெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ் வொரு பெருமைகள் உண்டு. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு கிராம மக்கள் களிமண்ணால் ஆன சிலைகளை வடிவமைத்து அவற்றைத் தத்தம் கிராம எல்லையின் நுழை வாயிலில் இன்றும் கையில் கத்தி, வாள் மற்றும் பிற ஆயுதத்தை ஏந்திய ஆண் மற்றும் பெண் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளதைக் காண முடிகிறது.
கிராம பெண் தெய்வங்கள் என்பது மூட நம்பிக்கையில் எழுந்தவை அல்ல. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற குறளுக்கு ஏற்ப, ஆங்காங்கே வாழ்வாங்கு வாழ்ந்த பலர் தெய்வங்களாக கருதப்பட்டனர். ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று நம்மை வரவேற்கவும், நம்மை வழியனுப்பவும் செய்பவர்கள் கிராம பெண் தெய்வங்களே…!!
Leave a comment
Upload