“விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியை போலே"
என்ன அழகான, .ஆழமான வரிகள். இந்த வரிகளை மந்திரமாய் சொல்லிப் பழக வேண்டும் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக பெண்களுக்கு. ஆண்கள் மேல் பச்சாதாபம் இருந்தாலும் மகளிர் தினத்திற்காக நீங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறீர்கள். மன்னிக்கவும்.
சரி எதற்கு இந்த மந்திரம்? விஷயத்திற்கு வருகிறேன்.
போன வருடக் கடைசியில் ஒரு நிறுவனம் எடுத்த ஆய்வில் வேலை பார்க்கும் இந்திய பெண்கள் மிகுந்த அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கணித்திருந்தனர்.
இதன் காரணம் பெரும்பாலும் இந்திய பெண்கள் தினசரி செய்ய வேண்டிய பல பணிகளால் இருக்கலாம்.
வொர்க் லைஃப் பேலன்ஸ் என்று இப்போது எல்லா நிறுவனத்திலும் பட்டறைகள் நடத்துகின்றனர். சற்று மனம் தளர்ந்து போனாலும் உளவியல் சிகிச்சைக்கு பலரும் தயாராக இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருப்பதின் முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரிந்ததாகவே இருக்கிறது.
இப்படி இது எல்லாருக்குமே முக்கியமான ஒன்று என்று தெரியும் போதும் மன அழுத்தம் ஏன் கூடிக் கொண்டே இருக்கிறது?
இதற்கு பதிலை வெளியே தேடாமல் உள்ளே தேடுவது அவசியம் என்று தோன்றுகிறது.
ஒரு சிறு கோடு நாமே போட்டுக் கொள்வது மிக முக்கியமாகப்படுகிறது. மனஅழுத்தம் தரும் சூழலிலிருந்து நம்மை நாமே விலக்கி ஒரு மெல்லிய கோட்டுக்கு மறுபுறம் சென்று நிற்பது அத்தியாவசியமான ஒன்று என்பது என் கருத்து.
நான் பார்க்கும் பல பெண்கள் இந்த கோட்டின் அவசியம் புரியாமல் தவிக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பு என்று அல்லாடுகிறார்கள். எங்கேயும் எதுவும் தவறி விடக்கூடாது என்ற பதட்டம். வீட்டிலும் அலுவலகத்திலும் தான் தனித்து தெரிய வேண்டும் என்று தனக்கே போட்டுக் கொண்ட ஒரு நிர்ப்பந்தம்.
அலுத்துக் களைத்துப் போனாலும் தோற்று விடக் கூடாது என்ற ஓட்டம்.
"ஏன் இவ்வாறு ஓடுகிறார்கள்? எங்கேயோ கொஞ்சம் நிதானிக்கலாம்" என்று எனக்குத் தோன்றும். அவர்களுடைய மிதமிஞ்சிய பரபரப்பு எனக்கு எதிர்வினை தொற்றாக இருக்கும். நான் மிக அதிக கவனத்துடன் கால் ஊன்றிக்கொள்வேன். எப்பொழுதும் எதிர்காலத்திலேயே வாழ்கிறார்களோ என்ற எண்ணம் வரும். நிகழும் அந்தத் தருணம் அந்த நொடியை தவற விட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றும்.
ஆங்கிலத்தில் சில் பில் (chill pill) என்று சொல்கின்றனர் ஒரு கட்டாய ஆசுவாச தருணம் விதித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
“என்ன இது? ஒரு பெரிய இலக்கை வைத்து அசாதாரண வாழ்க்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்காமல் ... “ நீங்கள் சொல்லுவது காதில் விழுகிறது.
பெப்சிகோ முன்னால் முதன்மை செயல் அதிகாரி இந்திரா நூயி தன் பதவியில் இருந்து விலகும் போது, தான் இன்னும் சில மணி நேரங்கள் குடும்பத்திற்காக செலவழித்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.
வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வு கூடவே தொத்திக் கொண்டு வருகிறது. எங்கேயோ தான் தவறு இழைக்கிறோமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. இது சம்பந்தமான ஒரு கட்டுரையை ஒரு ஆங்கில பத்திரிக்கையில் படித்தேன். ஒரு மனோ தத்துவ நிருபர் எழுதிய கட்டுரை. தாய்மார்கள், தங்கள் குழந்தைகளையோ, குடும்பத்து முதியவர்களையோ, தன் குழுவையோ அல்லது நிறுவனத்தையோ ஏதாவது ஒன்றை குறித்து அல்லது சில சமயம் எல்லாவற்றையும் குறித்துமே, தன் பங்களிப்பு போதுமானது இல்லையோ என்று சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த உணர்விலிருந்து விடுபட ஒரு சில யுக்திகளை குறிப்பிடுகிறார்.
முதலில் நம்மை நாம் மன்னித்துக்கொள்ள பழகவேண்டும். தவறே செய்திருந்தாலும், அதைப்பற்றி யோசிக்கும் போது, " என் தவற்றை நினைத்து எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று நினைக்காமல், நான் அந்த தவறு செய்தேன், ஏனென்றால் ----" என்று யோசிக்க சொல்லுகிறார். "முடியாது" என்று சொல்லப்பழக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
தேவையில்லாததை தூக்கி கொண்டு செல்வது நம்மில் பலபேருக்கு பழக்கம். அதை மாற்றலாம்.
அவர் மூன்றாவதாக சொல்லுவது மிகவும் முக்கியமாக பட்டது எனக்கு. "தயங்காமல் உதவி கேளுங்கள்" என்பது. நம்மில் நிறைய பேருக்கு அதற்கே தயக்கம். கணவரிடமும், குழந்தைகளிடமும், மற்ற நெருங்கிய உறவினர்களுடனும், தெரிந்தவர்களிடமும் உதவி கேட்கலாம். திருப்பி உதவி செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செய்யலாம்.
கடைசியாக அவர் சொல்லுவது, உலகத்தில் மிக சிறந்த தாயாராக இருக்கவேண்டும் என்று உங்களை வதைத்துக் கொள்ளாதீர்கள். உங்களால் முடிந்த வரை சிறந்த தாயாராக இருங்கள். அது போதும், என்கிறார்.
ஓடத் துடிக்கும் நமக்கு சற்று இளைப்பாறவும் தெரிய வேண்டும். எத்தனை வேடங்கள் எத்தனை முகங்கள் எத்தனை பந்தயங்கள் அத்தனையும் கயிறாய் நம் கால்களை கட்டி இருக்க முயலும் பொழுது
கொஞ்சம் விட்டு விடுதலையாய் நிற்கலாம்.
Leave a comment
Upload