தொடர்கள்
அரசியல்
'அம்மா'வின் கார் - மாலாஸ்ரீ

20230201124551387.jpg

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொது செயலாளராக வந்தபோது, அவர் பயன்படுத்திய டாடா சுமோ காரை அதிமுகவின் அதி தீவிர தொண்டர் முருகன் என்பவர் வாங்கி, முதல்வர் அமர்ந்து சென்ற சீட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து, சென்னைக்கு அருகே பாடியநல்லூரில் நாள்தோறும் பூஜித்து வருகிறார். அந்த சீட்டில் தனது குடும்பத்தினரைக்கூட உட்கார அனுமதிப்பதில்லை என்ற தகவல் நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவின் பொது செயலாளராக ஜெ.ஜெயலலியதா நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணம் வசூலித்து, TN07 V 1948 என்ற பதிவெண் கொண்ட டாடா சுமோ காரை வாங்கி பரிசளித்தனர். அந்த காரில், ஜெயலலிதா பிறந்த ஆண்டான 1948-ஐ பதிவெண்ணாகவும், 'விக்டரி' என்ற வார்த்தையை குறிக்கும் வகையில் 'V' என்ற எழுத்தும் நம்பர் பிளேட்டில் இடம்பிடித்தது.

இதன்பிறகு ஜெயலலிதா அடுத்த கட்டமாக அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், தமிழக முதல்வர் என அபரிமித வளர்ச்சி அடைந்த போது, அவர் பயன்படுத்திய கார்களும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைந்தது. இதனால் அவருக்கு அதிமுக தொண்டர்கள் வாங்கி கொடுத்து பயன்படுத்தி வந்த டாடா சுமோ கார், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓரங்கட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அந்த கார் , அப்போதைய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. அவரால் இந்தக் காரை பயன்படுத்த முடியவில்லை. அவரது பொருளாளர் பதவியை ஜெயலலிதா பறித்ததால், இந்த கார் அப்படியே பயன்பாடின்றி மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த காரை அதிமுக நிர்வாகிகள் யாரும் வாங்கி பயன்படுத்த முன்வரவில்லை. இதனால் அந்த டாடா சுமோ கார் பழுதாகி சேதமடைந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மாதவரம் அருகே பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதி(முகவின்)தீவிர முருகன் என்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அளவு கடந்த மரியாதையால், அவர் அதிமுகவில் பயன்படுத்திய டாடா சுமோ காரை முறைப்படி வாங்கி, தனது பெயருக்கு காரை மாற்றிக்கொண்டார். பின்னர் பல லட்சங்கள் செலவு செய்து, அந்த காரில் ஜப்பான் ஏசி, இஞ்சின் என சகலவிதமான பாகங்களையும் சீரமைத்தார்.

எனினும், அந்த டாடா சுமோ காரின் முன்சீட்டில் ஜெயலலிதா அமர்ந்து சென்ற இருக்கையில் மட்டும் முருகன் கைவைக்கவில்லை. அந்த இருக்கையில் வெள்ளைத் துண்டை விரித்து, அதில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மாலையிட்டு, நாள்தோறும் பூஜைகள் செய்து, காரின் முன்பக்க கண்ணாடியில் 'தங்கத் தாரகையின் ரதம்' என ஸ்டிக்கர் ஒட்டி, பார்வையாளர்களை முருகன் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இதுகுறித்து முருகன் கூறுகையில், "அம்மா அமர்ந்த சீட்டில், இதுவரை என் குழந்தைகளைக்கூட அமரவிடுவதில்லை. கடந்த 8 ஆண்டுகளாக இந்த டாடா சுமோ காரை பயன்படுத்தி வருகிறேன். நல்ல கன்டிஷனில் உள்ளது. சிறிய பழுதானாலும் உடனடியாக சரிசெய்துவிடுவேன். இந்த காரில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் அளவுக்கு 'பக்கா'வாக உள்ளது"என்றார்

அத்துடன் "காரின் முன்சீட்டில் அம்மாவின் படத்தைத் தவிர, வேறு யாரும் அமருவதற்கு அனுமதி இல்லை. இந்த காரை நான் பணிக்காக நாள்தோறும் ஓட்டி செல்லும்போது, காரில் பயணிப்பவர்களின் பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது வாழ்நாளின் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்!" என்று முருகன் தெரிவித்தார்.