தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
காய்கறிகளின் ராணி -கத்தரிக்காய் மரியா சிவானந்தம்

20230128220836698.jpg

இன்றும் அடுக்களை பெண்களின் அரசாட்சியில் தான் இருக்கிறது. சமையல் என்பது சுமையா, சுகமா அல்லது சுகமான சுமையா என்று பட்டிமன்றங்களில் விவாதங்கள் நடந்துக் கொண்டே இருக்கிறது. சுமை என்றால் அது பெண்ணுக்கானது மட்டுமா என்ற கேள்வியும் உடன் எழுகிறது.

The great Indian kitchen போன்ற திரைப்படங்கள் அடுப்பறை பெண்ணை முடக்கி வைக்கும் இடமாகவும், அதில் இருந்து அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்று சித்தரித்தன. "சமையலறையில் ஆண்களும் உடன் இருந்து சமைக்கலாம், அது ஒன்றும் தவறில்லை" என்று பலரும் பெண்களின் வலியை குறைக்க வழியை முன் மொழிகிறார்கள். ஸ்விக்கி ,சோமோட்டோ காலத்தில் "இன்னும் எதற்கு சமையலறை?" சமூக சமையலறைகள் (Community Kitchen) அமைக்கப்பட வேண்டும். குழுவாக சமைத்து சாப்பிடும் அந்த முறை நடைமுறைக்கு வந்தால் வீட்டு சமையலறைகளை மூடி விடலாம்.

இப்போது நான் பேச வந்தது சமையலைறையில் தனி ராஜாங்கம் நடத்தும் கத்திரிக்காய் பற்றித்தான். கொரோனா காலத்தில் காய்கறி கிடைக்காத போதெல்லாம் தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காயே கை கொடுத்தது. பச்சை, வெள்ளை , ஊதா என்று பல வண்ணங்களில் மனதை மயக்கும் கத்தரிக்காயை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.

எண்ணையில் வதக்கும் போதே பசி உணர்வை தூண்டி விடும் கத்தரிக்காயை வித விதமாக சமைக்கலாம். வெஜ், நான் வெஜ் இரண்டு வித சமையலுடனும் அழகாக ஜோடி சேரும் கதாநாயகி கத்தரிக்காய்தான். எல்லாவித கூட்டணிக்கும் தயாராக நிற்கும் கட்சியில் கத்தரிக்காயை நிச்சயமாக சேர்க்கலாம் .

கத்தரிக்காய் சாம்பார் , பொரியல், கூட்டு, வதக்கல் காரக்குழம்பு, வத்தக்குழம்பு, கத்திரிக்காய் கொத்சு, எண்ணெய் கத்தரிக்காய் என்று சைவத்தில் வகை வகையாய் செய்யலாம். கத்தரிக்காயைச் சுட்டு சட்னி செய்யலாம், அல்லது வெங்காயம் தக்காளி சேர்த்து வேகவைத்து கடைந்து கொத்சு போல செய்யலாம். இரண்டுமே இட்லி, தோசைக்கு சுவை கூட்டும். கத்தரிக்காய் ,முருங்கைக்காய் ,மாங்காய் சேர்த்து செய்யும் சாம்பாரில் ஒரு கரண்டி நெய் விட்டு சாப்பிட்டால் அத்தனை சுவையாக இருக்கும்.

கத்தரிக்காய் உடன் எலும்பு சேர்த்து வைக்கும் எலும்பு குழம்பு அசைவத்தில் ஜோராக இருக்கும். கருவாடு, கத்தரிக்காய் சேர்த்து செய்யும் குழம்பை இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம். ஆம்பூர் பிரியாணிக்கு உடன் வைக்கும் கத்தரிக்காயைப் பார்த்துக் கொண்டே, மொத்த பிரியாணியையும் சாப்பிட்டு விடலாம்.

இத்தனை பெருமைக்கும் உரிய கத்தரிக்காய்க்கு புதிய பெருமை சேர்ந்துள்ளது. அதுவும் எங்களூர் வேலூர் முள்ளு கத்தரிக்காய் சமீபத்தில் புவிசார் குறியீடு (Geographical indication ) பெற்றுள்ளது. வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம் இலவம்பாடி .இங்கு நூறாண்டுக்கு மேல் பயிரிடப்படும் பாரம்பரிய முள் கத்திரிக்காய் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் காம்பு பகுதியில் முட்களுடன் இருக்கும். எண்ணையில் வதக்கினால் வெண்ணெயாக கரையும். அத்தனை சுவை. சென்னை, பெங்களூர் செல்லும் பஸ்களில் கத்தரிக்காய் கூடைகள் போவதை தினமும் காணலாம்.

20230128220942631.jpg

. இந்த புவிசார் குறியீடு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தூத்துக்குடி மக்ரூன், சேலம் மாம்பழம் , கோவில்பட்டி கடலை மிட்டாய், தஞ்சாவூர் வீணை , சோழவந்தான் வெற்றிலை , விருதுநகர் பரோட்டா என்று தமிழகத்தின் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இலவம்பாடி கத்தரிக்காய் தமிழகத்தின் 45 வது புவிசார் விருதைப் பெறும் பேறு பெற்றுள்ளது. ராமநாதபுரத்து குண்டு மிளகாயும் இதே நேரத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 300 ஹெக்டேரில் கத்தரிக்காய் பயிரிடுகிறார்கள். ஏக்கருக்கு 45 அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது . இயற்கை முறையில் பயிரடப்படுவதாலும், இம்மண்ணின் சிறப்பும் இந்த காய்க்கு தனித்த சுவையை தருகிறது .இலவம்பாடி மட்டுமன்றி, ஈச்சங்காடு ,பொய்கைப்புதூர் போன்ற பத்து கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாய் தோட்டப்பயிராக இந்த கத்தரிக்காய் விளைவிக்கப்படுகிறது. சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது .

உணவே மருந்து என்பார்கள் .காய்கறிகள் தவிர்த்த ஒரு சமையலை நம்மால் கற்பனை செய்ய இயலாது .உடலுக்கு வலுவூட்டவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் காய்கறிகளும் ,கனிகளும் நமக்கு தினமும் தேவை . கத்தரிக்காய் நல்ல மருத்துவ குணங்கள் நிறைந்த காய் . வைட்டமின் சி , இரும்புசத்து கொண்டது இது .தக்காளியைப் போலவே புரதம், கலோரி அளவு கொண்டது .

சளி ,இருமலை கட்டுப்படுத்த ,நரம்புகளுக்கு வலுவூட்ட, ஆஸ்துமா மலச்சிக்கல் ஆகிய நோய்களில் இருந்து காக்கவும் கத்தரிக்காய் நமக்கு உறுதுணை . முற்றிய கத்திரிக்காய் அரிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. பிஞ்சு கத்தரிக்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு நல்ல உணவாகும்... பலவிதமான ஆங்கில காய்கறிகள் நடுவில் கத்தரிக்காய் இன்னும் மவுசு குறையாமல் இருப்பதே அதன் பெருமையை சொல்லும். கத்தரிக்காய் என்றும் காய்கறிகளின் ராணியாகவே திகழ்கிறது .

அடுத்த தடவை காய்கறி வாங்கும் போது ,'வேலூர் கத்தரிக்காய்" என்றோ , "இலவம்பாடி கத்தரிக்காய்" என்றோ கேட்டு வாங்குங்கள் . அதன் சுவையை மறக்க மாட்டீர்கள்!

உணவென்பது வெறும் உணவல்ல , அது உணர்வு !