தொடர்கள்
அனுபவம்
விபத்தை ஒழிக்க லஞ்சம் தவிர் - ஜெர்மன் டயரி கார்த்திக் ராம்

20230007081859439.jpeg


என்னடா புதுசா டாபிக் இருக்கேன்னு நெனைக்கிறிங்களா, சொந்த அனுபவித்தில ஒரு விஷயம் மனசுல பட்டது. அதைத்தான் இந்த வாரம் எழுதலாமுன்னு.

இப்பதான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி என்னோட ஜெர்மன் டிரைவிங் லைஸென்ஸ் வந்து சேந்துச்சு, அது கைல வரத்துக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. அதோட முழு அனுபவத்தை பத்தி எழுத முன்னாடி, ஏன் நான் இதை பத்தி எழுதறேன்னு முதல்ல.

(இது போல விபத்து வெளிநாடுகளில் அபூர்வம்)

வாட்ஸாப்ப்ல அடிக்கடி நிறைய வீடியோ பார்வேர்டு கோரமான ஆக்சிடெண்ட் பத்தி வந்திருப்பதை பார்த்திருப்பீங்க. இந்தியாவில ஒரு வருசத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு சுமார் 17 பேர் சாலை விபத்துல இறந்து போறாங்க. நம்மள விட யாரு மோசமா இருக்காங்க அப்டினு பாத்தா பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடோ அல்லது தென் அமெரிக்க நாடோதான். இதே ஜெர்மனி எடுத்துக்கிட்டீங்கன்னா ஒரு லட்சம் பேருக்கு சுமார் 3 பேர் தான் சாலை விபத்துல இறந்து போறாங்க. அதுவும் இது ஐரோப்பாவுல இருக்கிறதுனால, மத்த ஐரோப்பா நாட்டை சேர்ந்த பயணிகளோ கன ரக வாகன ஓட்டுனர்களோ சாலைகளை உபயோகபடுத்தறதுனால. வெறும் ஜெர்மனி மக்களை மட்டும் எடுத்துக்கிட்டா இது மிகவும் குறைவே. மிகவேக சாலைகளை எடுத்துக்கிட்டிங்கனா வேக வரம்பே கிடையாது. 200 / 220 கிமீ மணிக்கு விரையும் வண்டிகளை பார்ப்பது சுலபம்.

20230007082008247.jpeg

ஆனா நம்ம ஊர்ல முழு கல்வி முறை மற்றும் ஓட்டுநர் உரிமத்துல ஊழல் இருக்கிறதுனாலதான் இவ்வளவு விபத்துகள் நடக்குது. ஒரு காலத்துல உரிமம் வீடு தேடி வந்துச்சாமே. இங்க கனவுதான் அதெல்லாம்.

சரி ஜெர்மனியில் எப்படின்னு பார்ப்போம்

1. கண் பரிசோதனை - அந்த ஆவணம் இருந்தாதான் நீங்க அப்பிளிகேஷன் பத்தி நினைக்க கூட முடியும்

2. ஓட்டுநர் பள்ளி - நம்ம ஊர்ல பெருசா ஒரு மரியாதையே கிடையாது. இங்க இருக்கிற பள்ளியெல்லாம் மக்கள் ரொம்ப சீரியஸா எடுத்துகிறாங்க. கிட்டத்தட்ட 6 மாசம், சில சமயம் 1 வருஷம் கூட காத்திருக்கணும் அட்மிஷன் கிடைக்க. ஓட்ட கத்துகுடுக்கிற வண்டியெல்லாம் ஆடி பென்ஸ் பி எம் டபுள்யூ கார்ல தான். உங்கள ஏதாவது ஒரு ஓட்டுநர் பள்ளி எடுத்துகிறேன்னு ஒத்துக்கிட்டாதான் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். ஓட்ட தெரிஞ்சாலும், உங்ககிட்ட வண்டி இருந்தாலும் நீங்களா போய் ஓட்டுநர் பரீட்சை கொடுக்க முடியாது. அதுக்கு காரணம் கீழ.

20230007082028368.jpeg

3. பயிற்சி - 14 மணி நேரம் வகுப்பில் உக்காந்து கோட்பாடுகளை கத்துக்கணும் அப்பறம் கொறஞ்ச பட்சம் 12 x 90நிமிட ஓட்டுநர் பயிற்சி. ஓட்டுநர் பயிற்சி வாத்தியார் பாத்து நீ ரெடிபா ன்னு சொன்னா தான் பரீட்சை.

4. தியரி பரீட்சை - சுமார் 3000 கேள்வி பதில் எழுத்து மற்றும் காணொளி படிச்சி மனப்பாடம் பண்ணிட்டு போகணும். அதையும் மீறி எழுத்து தேர்வில் முதல் தடவை வெறும் 50 சதவிகிதம் பேர் தான் தேர்ச்சி. உலகத்திலேயே மிக கஷ்டமான ஓட்டுநர் எழுத்து தேர்வு ஜெர்மனியில தான்னு சொல்ராங்க.

5. ஓட்டுநர் பரீட்சை- சந்துக்கு சந்துக்கு அளவுக்கு அதிகமான போர்டு, ஓராயிரம் சிம்பல்ஸ் ஞாபகம் வச்சிக்கண்ணும், சுச்சுவேஷன் தகுந்தாப்ல மாறிக்கிட்டே இருக்கும். ஒரு கணம் கவனம் தப்பினாலும் தப்புதான். முன் சீட்ல பக்கத்தில டீச்சர், பின்னாடி டெஸ்ட் எடுக்கிற ஆபிசர் நமக்கு ஆணி சீட்ல ஒக்காந்து டெஸ்ட் எடுக்கற மாறி ஒரு எபெக்ட்.

6. முதலுதவி பயிற்சி- மிக முக்கியம் பரீட்சை கொடுக்க முன்னாடி, 8 மணி நேர முதலுதவி பயிற்சி கண்டிப்பா எடுக்கணும். ஏன்னு கேக்கறீங்களா, நீங்க ஒரு ஓட்டுனரா இருந்து நீங்க போகும் வழியில ஏதாவது ஆபத்து பார்த்தீங்கன்னா சட்டப்படி இறங்கி முதலுதவி கொடுக்கணும் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கணும். உதாசீன படுத்திட்டு அப்படியே போக முடியாது.

20230007082051544.jpeg

ஒருத்தர் சாதாரணமா பயிற்சி எடுத்து லைசென்ஸ் எடுக்கறதுக்குள்ள ஒரு 2-3 லட்சம் ரூவா செலவாகும். யாரோ ஒருத்தர் 9 முறை பெயில் ஆகி கடைசியா பாஸ் ஆனாராம், ரொம்ப விலை அதிகமான லைசென்ஸ் தான். சரி எடுத்தாச்சு, அப்பாடான்னு பெருமூச்சு விட்டு உக்கார முடியுமா. அதுதான் இல்ல, ரொம்ப சின்ன தப்புனாலும் பைன் வீடு தேடி வரும், கொஞ்சம் அதிகம்னா லைசென்ஸ் பிடிங்கி வச்சிக்குவாங்க. இங்க ஒரு சின்ன கிராமத்துல ஒரு அம்மா 50 கி மீ வேகம் போற எடத்துல 80கிமீ வண்டி ஓட்டிட்டு போனாங்க. போலீஸ் அவங்க லைசென்ஸ் திரும்ப வாங்கிட்டு 3 மாசம் கழிச்சி வாம்மான்னு அனுப்பிட்டாங்க. அவங்க திருப்பி பொய் கிளாஸ் உக்காரனும். அதனால தான் எல்லாரும் ரொம்ப கவனமா வண்டி ஓட்டுறாங்க, விபத்துகள் ரொம்ப கம்மியா நடக்குது. அந்த அளவுக்கு காசு அதிகமா சார்ஜ் பண்ணாட்டியும், கொறைஞ்சபட்சம் லைசென்ஸ் கொடுக்கிறத கொஞ்சம் ஸ்ட்ரிக்டா பண்ணலாம். காசுக்கு ஆசைப்பட்டு கொஞ்சம் பேர் செய்ற தவறினால் யாராருக்கோ கேடு சேருது, அதே மாதிரி சரியா கத்துக்கறதுக்கு கஷ்டப்பட்டு காசு கொடுத்து லைசென்ஸ் வாங்கற பொது மக்களும் இதுக்கு காரணம்.

கைல தகுதிக்கு மீறின பொறுப்பை கொடுக்கிறது கேடு விளைவிக்கும், அது ஒரு லைசென்ஸுக்கும் பொருந்தும்.