தொடர்கள்
அரசியல்
அண்ணாமலை - "டோன்ட் கேர்" - ஜாசன்

20230005192841726.jpg
பாரதிய ஜனதா ரொம்பவும் வித்தியாசமான ஒரு தேசிய அரசியல் கட்சி அது எப்போதும் தனது கொள்கைகளுக்காக யாருடனும் சமரசம் செய்து கொள்ளாது. அதேசமயம் அதன் கொள்கை அல்லது திட்டம் செயல்பாடு அவையெல்லாம் ஹிடன் அஜெண்டாவாக இருக்காது. இன்றைய பாரதிய ஜனதாவின் பூர்வாங்க பெயர் ஜனசங்க கட்சி.

எல்லாமே வெளிப்படையாக இருக்கும் இதுதான் எங்கள் திட்டம் இப்படித்தான் எங்களது அடுத்த கட்ட நகர்வு என்று சொல்லி சொல்லி தான் அவர்கள் செயல்பாடு இருக்கும். அது இந்துத்துவா கொள்கையாக இருந்தாலும் சரி,ராமஜென்ம பூமியாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் தேர்தல் அரசியலுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்தோ சமரசமோ செய்து கொண்டோ கூட்டணி வைக்காது.


தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தால் முதல் பலியாக அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரை ராஜினாமா செய்ய வைத்து புதிய மாநில காங்கிரஸ் கட்சி தலைவரை நியமிக்கும்.அவ்வளவு ஏன் ராகுல் காந்தி தலைவராக இருந்து பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததும் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இன்று வரை தனக்கு கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.

பாரதிய ஜனதா அணுகுமுறை வேறு மாதிரி தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தார். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று கோஷத்தை முதலில் சொன்னது அவர்தான். ஆனால், அவர் தலைமையில் இருந்தபோது நடந்த தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் படு தோல்வி அடைந்தது. ஆனால் அவரை ஆளுநராக பாஜக நியமித்தது அவருடைய தந்தை குமரி ஆனந்தன், மூத்த காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் தன்னை ஆளுநராக நியமிக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால், அது கண்டு கொள்ளப்படவில்லை. தமிழிசை சௌந்தர்ராஜன் தன்னை ஆளுநராக நியமிக்குமாறு கோரிக்கை எல்லாம் வைக்கவில்லை. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவை வளர்க்க அவர் செய்த முயற்சிக்கு மத்திய பாஜக தந்த பரிசு இது. அவருக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார்.


கந்த சஷ்டி கவசம் சர்ச்சையானதும் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை போனார். திமுக பயந்து போய் கையில் வேல் வைத்துக் கொண்டு போஸ் தரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது.

எல்.முருகன் தலைமையிலான தமிழக பாஜக பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனார். ராஜ்யசபா எம் பி ஆனார். சட்டசபைத் தேர்தலில் போட்டி போட்டு தோல்வியடைந்த அண்ணாமலையை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக டெல்லி தலைமை நியமித்தது. இந்த துணிச்சல் அரசியல் பாரதிய ஜனதாவுக்கு மட்டுமே சாத்தியம். அண்ணாமலை பொறுப்பேற்றப் பிறகு டெல்லி அவருக்கு சொன்ன ஒரே ஒரு மெசேஜ் ஒன் லைன் அஜண்டா.

திமுகவை கடுமையாக போட்டு தாக்குங்கள் என்பதுதான். கட்சி நிர்வாகிகள் நியமிப்பதில் மாநிலத்தில் கட்சி சம்பந்தமாக முடிவெடுப்பது போன்ற விஷயங்களில் டெல்லி பாஜக அவருக்கு பூரண சுதந்திரம் தந்தது. அவருக்கு இன்னொரு உத்தரவாதமும் தரப்பட்டது. 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை உங்கள் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் சொன்னது.


உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்பது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு. இப்போது கூட 25 பேர் பாஜக எம்பிக்களாக தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படுவார்கள். அதில் ஐந்து பேர் மத்திய அமைச்சர்கள் என்கிறார் . போன மாதம் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் என்னால் எடப்பாடி வாழ்க... ஓபிஎஸ் வாழ்க... என்றெல்லாம் சொல்ல முடியாது நாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடப் போகிறோம். செலவைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள் . ஒரு தொகுதிக்கு 100 கோடி வரை நாம் செலவு செய்யலாம் என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை.


இது ஒரு புறம் இருக்க, சென்ற பொங்கல் பரிசுத்தொகுப்பில் பெரும் ஊழல் அதில் இவ்வளவு கமிஷன் கோபாலபுரத்துக்கு போயிருக்கிறது. அந்த பொருளின் உண்மை விலை, இது அரசாங்கம் வாங்கிய விலை, இது சில விவரங்களை வெளியிட்டது. உடனே கடுமையாக மறுத்து விளக்கமெல்லாம் சொன்னது. ஆனால், இந்த முறை உங்கள் பரிசுப் பொருள் கிடையாது அதற்கு பதில் ரொக்கமாக ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி மீண்டும் பொங்கல் பரிசுதொகுப்பு சர்ச்சையை தவிர்த்து இருக்கிறது திமுக. இதற்கு காரணம் அண்ணாமலையை எபெக்ட்தான். இதேபோல் மின்சார வாரியத்திலும் ஊழல் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் சொன்னார் அண்ணாமலை. அப்போது புகாரை மறுத்ததோடு இல்லாமல் உங்கள் மேல் 100 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன் என்று சொன்னார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது 100 கோடி எல்லாம் தரும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை நான் ஏழை விவசாயி தயவுசெய்து நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் நான் அங்கு எல்லா ஆதாரங்களையும் தருகிறேன் என்றார் அண்ணாமலை.

ஆனால், செந்தில் பாலாஜி அப்படி வழக்கு எல்லாம் எதுவும் போடவில்லை. அதைத்தொடர்ந்து அவர் எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. ஆளுநரிடம் திமுக மீது முறை ஊழல் குற்றச்சாட்டு மனுதந்திருக்கிறார் அண்ணாமலை.

ஒரு முறை அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் துரைமுருகன் அவர் குற்றச்சாட்டில் உப்பும் இல்லை, சப்பும் இல்லை என்று நக்கலாக சொன்னார் அமைச்சர் துரைமுருகன். உடனே அண்ணாமலை துரைமுருகன் இலாகாவான கனிமவளத் துறையில் அனுமதி என்று எங்கெங்கு அனுமதி இன்றி கற்கள் வெட்டப்படுகின்றன என்றெல்லாம் ஒவ்வொரு இடத்தையும் குறிப்பிட்டு புகைப்பட ஆதாரத்துடன் ஊழல் தடுப்பு ஆணையரிடம் தனது கட்சி நிர்வாகிகளை விட்டு துரைமுருகன் மீது புகார் மனு தந்தார் அண்ணாமலை. இப்போது ஊழல் தடுப்புத் துறை கனிமவளத் துறை அதிகாரிகளை அழைத்து இது பற்றி விசாரிக்கிறது.

அதுமட்டுமல்ல ஊழல் தடுப்புத் துறை அதிகாரியிடம் நாங்கள் தந்த புகார் மனு என்ன ஆயிற்று நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றம் போய் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்வோம் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள் பாஜக நிர்வாகிகள்.


ஒரு கட்டத்தில் தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணாமலைக்கு நாம் இருவரும் பதில் சொல்ல வேண்டாம் நாம் ஏன் அவரை பெரியாளா ஆக்க அமைச்சர்களை பதில் சொல்வதை நிறுத்த சொன்னார்.

அதே சமயம் முரசொலியில் பாஜகவை விமர்சனம் செய்யும் சாக்கில் அண்ணாமலையும் விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டார்கள். தமிழக ஆளுநர் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் அவ்வளவு ஏன் மோடி ,அமித்ஷாவை எல்லாம் கூட கடுமையாக விமர்சனம் செய்து முரசொலியில் கட்டுரை தலையங்கங்கள் எழுதி வருகிறார்கள். ஆனால், அண்ணாமலை பற்றி அப்படி பெரிய அளவில் எதுவும் காணோம். .

திமுகவின் ஐடி அண்ணாமலையை "ஆட்டுக்குட்டி" அண்ணாமலை என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் இல்லாததும் பொல்லாததுமாக அவர் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக பரப்பி வருகிறது. அதே போல் அண்ணாமலையை ரொம்பவும் முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியாக கூடாது எந்த ஒரு மறைமுக நெருக்கடியை அரசு விளம்பரங்கள் தருவதன் மூலம் பத்திரிகைகளுக்கும் திமுக ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்த விவரமும் அண்ணாமலைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. 18 கோடி விளம்பரம் தந்த தொலைக்காட்சி நிறுவனம் எது 40 லட்சம் ரூபாய் அரசு விளம்பரம் தந்த பத்திரிக்கை எது என்ற விவரம் எல்லாம் எனக்கு தெரியும் என்று அந்த ரகசியத்தையும் அவர் போட்டு உடைத்து விடுகிறார்.


பத்திரிக்கை அதாவது அச்சு ஊடகம் தொலைக்காட்சி ஊடகங்கள் இவற்றிற்கெல்லாம் அவர் ஜால்ரா அடிப்பது எல்லாம் கிடையாது. நிருபர்கள் சந்திப்பில் நிருபர்களை அண்ணா என்று அன்போடுதான் அழைக்கிறார். தலைவரே... என்று பாசத்தோடு சொல்கிறார்.

அதேசமயம் நீங்கள் எல்லோரும் திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறீர்கள் நான் சொல்லும் கருத்தை முழுவதுமாக நீங்கள் வெளியிடுவதில்லை என்பதை அவர் பதிவு செய்ய என்றும் மறப்பதில்லை.

ஒருமுறை நிருபர்களை குரங்கு மாதிரி பாய்கிறீர்கள் என்று சொன்னார். இதற்கு பத்திரிக்கை சங்கங்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டது. அப்போது சிலர் அண்ணாமலை நிருபர் சந்திப்பை புறக்கணிக்க வேண்டும் அண்ணாமலை செய்தியை வெளியிடக்கூடாது என்றெல்லாம் சொன்னார்கள். உடனே அண்ணாமலை அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. நான் ஏதோ ஒரு வேலையாக போனேன் அப்போது திடீரென்று ஓடி வந்து என்னை சூழ்ந்து கொண்டு யாரோ ஒரு சாராய அமைச்சர் சொன்ன கருத்துக்கு என்னிடம் கருத்து கேட்டால் நான் என்ன செய்ய நீங்கள் என் அறிக்கை பேட்டி வெளியிடுவது அதை வெளியிடாமல் போவது என்பது உங்கள் உரிமை சுதந்திரம் அதில் நான் தலையிட நான் யார் நான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதெல்லாம் நடந்து சில சில வாரங்கள் பிறகு அண்ணாமலை நிருபர் சந்திப்பு நடந்தது அந்த குரங்கு பற்றிய சொன்ன உதாரணத்தை நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டீர்கள் எந்த ஒரு சின்ன விளக்கம் சொல்லி அத்தோடு விட்டு விட்டார் அண்ணாமலை.


அண்ணாமலை திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை இரண்டு லட்சம் கோடி ஊழல் செய்து சம்பாதித்து இருக்கிறது அந்த விவரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி அந்த விவரங்களை நான் வெளியிடுவேன் என்றார் ஒரு அமைச்சர். ஒரு நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி இருக்கிறார் ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு துறைமுகமே இருக்கிறது என்றெல்லாம் சொன்னார். அப்போது திமுக அவர் கட்டியிருக்கும் வாட்ச் பற்றி பிரச்சனை எழுப்பியது. அதுவும் குறிப்பாக செந்தில் பாலாஜி தான் இந்த பிரச்சனையை கிளப்பினார். பதிலுக்கு அண்ணாமலை சபரீசன் கட்டி இருக்கும் வாட்ச் அவர் பயன்படுத்தும் கார் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் கார் ஸ்டாலின் பயன்படுத்தும் கார் அதன் விலை எல்லாம் நான் எவ்வளவு என்று சொல்லவா என்று பதில் கேள்வி கேட்டார். அப்பவே முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அழைத்து தேவையில்லாமல் அண்ணாமலைக்கு எதற்கு நீங்கள் பதில் சொல்கிறீர்கள் என்று கோபித்துக் கொண்டார்.


சமீபத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் பொழுது தேர்தல் வெற்றிக்காக பாரதி ஜனதா எதையும் செய்யும். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு பெண்கள் சம்பந்தமான சர்ச்சைகள் கமலாலயத்தை சுற்றி வரத் தொடங்கியது. முதலில் கே.டி. ராகவன் மாநில செயலாளர் அவர் பற்றிய ஒரு ஆபாச வீடியோ வெளிவந்தது. அப்போது யாரோ திட்டமிட்டு கேமரா வைத்து படம் பிடித்து இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று சொல்லி அண்ணாமலை மீது அப்போது சந்தேக நிழல் விழுந்தது.

சில வாரங்களுக்கு முன்பு சூர்யா சிவா டெய்சி என்று இரண்டு நிர்வாகிகள் பேசிக் கொள்ளும்போது நாராச ஆபாச ஆடியோ அதுவும் வெளியானது. அது பெண்கள் பற்றிய பாஜகவின் மதிப்பீட்டையே கொச்சைப்படுத்துவது போல் இருந்தது. ஒரு ஆண் ஒரு பெண் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் அந்த உரையாடலை பதிவு செய்திருக்கிறார்கள் அவர்களில் யாரோ ஒருவர் தான் அந்த உரையாடல் வெளியே சொல்லி இருக்க வேண்டும்.அவரே அந்த உரையாடலை பதிவு செய்தாரா அல்லது யாரோ சொல்லி பதிவு செய்தாரா இந்தக் கேள்வி எழுந்த போது அப்போதும் அண்ணாமலை தலை உருட்டப்பட்டது.

20230005193117942.jpg

குறிப்பாக காயத்ரி ரகுராமன் இது பற்றிய சந்தேகங்களை எழுப்பிய போது அவர் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுவும் அண்ணாமலை எடுத்த முடிவு தான். அப்போதும் தொடர்ந்து காயத்ரி ரகுராமன் அண்ணாமலை பற்றிய சர்ச்சை கருத்துக்களை சொல்லி வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை காயத்ரி ரகுராமனை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்தார். இந்த விஷயம் யாரோ சொல்லி தான் முன்கூட்டியே கட்சியை விட்டு காயத்ரி ரகுராமன் ராஜினாமா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.


காயத்ரி ரகுராமன் திமுகவுக்காக சில உள்ளடி வேலைகளை செய்தார். இந்த தகவல் அண்ணாமலைக்கு ஆதாரப்பூர்வமாக கிடைத்தது அதனால் தான் அவர் கட்சியை விட்டு நீக்க முடிவு செய்தார் என்றும் ஒரு பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சர்ச்சையான சூழ்நிலையில் புது வருடத்தை முன்னிட்டு நான்காம் தேதி அண்ணாமலை நிர்வாகிகளை சந்தித்தார். நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து எல்லாம் சொல்லிவிட்டு காயத்ரி ரகுராமன் விஷயத்தை அவரே ஆரம்பித்து கட்சியை விட்டு வெளியே போகிறவர்கள் வாழ்த்திவிட்டா போவார்கள் இப்படி எல்லாம் சொல்வது வாடிக்கை தானே அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று நான் வாழ்த்துகிறேன் என்று சொல்லி அத்தோடு அந்தப் பிரச்சினையை முடித்து விட்டார்.


அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் வேறு சில செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கும்போது புதிய தலைமுறை நிருபர் நீங்கள் இப்படி நிறைய திமுக மீது குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறீர்கள். ஆனால், அதற்கான ஆதாரங்களை தர மறுக்கிறீர்கள்,என்ற புதிய தலைமுறை நிருபர்.அப்போது அண்ணாமலை நான் ஆதாரங்களை தருகிறேன் உங்கள் தொலைக்காட்சியில் நீங்கள் வெளியிடுகிறேன் என்று எனக்கு உத்தரவாதத்தை தருங்கள் என்று கேட்டார் அண்ணாமலை.


அண்ணாமலை ஏற்கனவே 355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பி ஜி ஆர் எனர்ஜி நிறுவனத்திடம் எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கத்திற்கு முறைகேடாக ரூ.4,472 கோடிக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அண்ணாமலை ஏற்கனவே குற்றம் சுமத்தி இருந்தார். இதை அப்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்தார் மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன் என்றார். அதைத்தான் புதிய தலைமுறை நிருபர் சுட்டிக்காட்டி அண்ணாமலையிடம் கேள்வி கேட்டார். அதற்கு அண்ணாமலை இந்த நிருபர்கள் சந்திப்பு முடிந்ததும் நீங்கள் என் அறைக்கு வாருங்கள் நீங்கள் அந்த ஆதாரங்களை எல்லாம் பாருங்கள். ஆனால், அவற்றையெல்லாம் நீங்கள் வெளியிட வேண்டும் என்ற உத்தரவாதத்தை நீங்கள் தந்தால்நான் உங்களுக்கு அந்த ஆதாரத்தை தருகிறேன் என்றார். நிருபர்கள் சந்திப்பு முடிந்ததும் புதிய தலைமுறை நிருபர் அண்ணாமலையை அவரது அறையில் சந்தித்து இருக்கிறார் அவரிடம் அந்த ஆதாரங்களை எல்லாம் அவர் காட்டி இருக்கிறார். அப்போது அந்த நிருபர் நீங்கள் நாளைக்கு புதிய தலைமுறை ஸ்டூடியோக்கு வாருங்கள் இந்த ஆதாரங்களை எல்லாம் காட்டி பேட்டி தாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

20230005192947119.jpg

அதற்கு அண்ணாமலை என்னால் வர இயலாது எனக்கு பதில் இந்த கட்சியின் துணைத் தலைவர் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வருவார் அவர் இந்த ஆதாரங்கள் பற்றி விளக்கி உங்களுக்கு பேட்டி தருவார் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், புதிய தலைமுறை நிருபர் அண்ணாமலை தான் வரவேண்டும் என்று சொல்லி இல்லை என்றால் பேட்டி வேணாம் என்று சொல்லிவிட்டார். இப்படித்தான் எங்கள் இருவருக்கும் உரையாடல் நடந்தது என்று அந்த விவரத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அண்ணாமலை.


பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை திராவிட கட்சிகள் போல் தலைமை துதி பாடல்கள் எல்லாம் இல்லை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, தளபதி, சின்னவர் என்று சம்பந்தப்பட்ட தலைவர்கள் பெயரை அழைக்காமல் அவர்களது பட்டப் பெயரை வைத்து அழைக்கும் வழக்கமெல்லாம் இல்லை மேடையில் பேசும்போது பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்தோடு சரி.. பிரதமரை நரேந்திர மோடி என்று பெயர் சொல்லி தான் தான் கவுன்சிலர் கூட மேடையில் பேசுகிறார்.

சமீபத்திய பேட்டியில் சுப்பிரமணிய சுவாமி பற்றி குறிப்பிட்டு பேசும்போது அண்ணாமலை அவர் மூத்த தலைவர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்கிறார். ஆனால், நான் அவரை வந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதெல்லாம் என்னால் முடியாது எனக்கு என் கட்சி முக்கியம் என் கட்சிக்கு அவரால் என்ன பயன் என் கட்சிக்கு அவர் என்ன செய்கிறார் இவைதான் என்னுடைய அளவீடு இது எல்லா மூத்த தலைவருக்கும் பொருந்தும் கட்சிக்கு யார் விசுவாசமாக வருகிறார்களோ கட்சிக்கு யார் உழைக்கிறார்களோ அவர்களை நான் பார்ப்பேன் எனக்கு இதில் எந்த சங்கடமும் இல்லை என்று எல்லா மூத்த தலைவருக்குமான பதிலாக இதை சொல்லிவிட்டார் அண்ணாமலை.

இது எப்படி சர்ச்சைக்குரிய வார் ரூம் பற்றி கேட்டபோது ஆமாம் பாஜகவில் வார் ரூம் இருக்கிறது, ஏர்போர்ஸ் இருக்கிறது, நேவி இருக்கிறது, ராணுவம் இருக்கிறது, மிலிட்டரி இருக்கிறது அவற்றையெல்லாம் தேவைப்படும்போது பயன்படுத்துவோம் என்று பதில் சொல்லிவிட்டார். வார் ரூம் என்ற ஒரு தனி அமைப்பை அண்ணாமலை உருவாக்கி அதன் மூலம் திமுக மற்றும் கட்சி நிர்வாகிகளை கண்காணிக்கிறார் என்பதுதான் அவர் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு அதற்குத்தான் அவர் சொன்ன பதில் இது.

அதுமட்டுமல்ல, திமுகவுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது அவர்கள் உங்கள் உறவினர்களாக இருந்தால் கூட அவர்கள் வீட்டு நல்லது கெட்டதுக்கு கூட போகக்கூடாது இது சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தரவாகவே சொன்னார். இது ஏற்கனவே ஜெயலலிதா தனது கட்சிக்காரர்களுக்கு சொன்னது.


அதிமுகவில் நடக்கும் குழப்பங்களை பாரதிய ஜனதா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஒர் முயற்சியை மேற்கொள்கிறது. திமுகவிற்கு மாற்று நாம்தான். நாம் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி நாம் தான் என்று சொல்லி வருகிறார் அண்ணாமலை.

அண்ணாமலை கட்சியை சமூக வலைதளம் மூலம் வளர்க்க முடியும் என்று நம்புவது ஒரு தவறான அணுகுமுறை என்ற பேச்சும் கமலாலயத்தில் வர தொடங்கி இருக்கிறது. திராவிட கட்சிகளை விட கட்சியின் கட்டமைப்பு வலுவானதாக தமிழ்நாட்டில் இல்லை. பூத் கமிட்டி அமைப்பதற்கு கூட நாம் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்று ஒரு விமர்சனம் அண்ணாமலை மீது வைக்கப்படுகிறது.

20230005193316366.jpg
அண்ணாமலை பொருத்தவரை அவர் ஏடாகூடம் ஏனோ தானோ எல்லாம் இல்லை அவர் முகஸ்துதி எல்லாம் நம்புகிறார் போல் தெரியவில்லை. என் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும் ஐ டோன்ட் கேர் என்பதுதான் அவரது அரசியல் பாணி ஆனா தமிழ்நாட்டுக்கு இது கொஞ்சம் புதுசு.

கடைசிச் செய்தி :

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை என்னை பணித்திருந்தார். இன்று மாலை 7 மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக புதிய தலைமுறையின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்த நிலையில், திடீரென்று நேற்று இரவு இந்த நேரலை நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியையே நடத்த புதிய தலைமுறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறினார். ஆனால், புதிய தலைமுறை செய்தியாளரின் சவாலை ஏற்று ஆவணங்களை வெளியிட்டு அது குறித்த விளக்கத்தை மக்களுக்கு அளித்த பின்னர் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தி கொள்ள நமக்கு மறுப்பேதும் இல்லை என்று நான் கூறினேன். ஆனால், மக்களிடம் நேரடியாக பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த விளக்கத்தை பாஜக அளிக்க புதிய தலைமுறை மறுத்து விட்டது.

பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் புதிய தலைமுறையின் சவாலை ஏற்று கொண்டு ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், நான் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தும், புதிய தலைமுறையின் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் அச்சுறுத்தலா அல்லது முறைகேடுகளை பாஜக அம்பலப்படுத்தி விடுமோ என்ற தயக்கமா என்பது புரியவில்லை. எது எப்படியிருந்ததாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து ஒழிக்க திரு. அண்ணாமலை அவர்களின் தலைமையில் நாம் உறுதியாக உள்ளோம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி முறைகேடுகள் குறித்த ஆவணங்களை மக்களிடம் வெளிப்படுத்த தயாராக இல்லாததால் இன்றைய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை.

நாராயணன் திருப்பதி.