தொடர்கள்
கதை
கரண்ட் வருமா? - சிறுகதை - பா அய்யாசாமி

20221124093824687.jpg


“ வீட்டிலே கரண்ட போய் இரண்டு மணி நேரமாகுது, இன்னும் யாரும் வந்து கூடபார்க்கலை, ராத்திரி பூரா ஷிப்டில் வேலை செய்துவிட்டு, ஓய்வு எடுக்க வீட்டிற்கு வந்தால், இந்த பிரச்சினை, சே! என அலுத்துக்கொண்டான் ரகு

தம்பி, நான் லைன்மேனாக இருந்த போதெல்லாம் இந்த மாதிரி கிடையாது,ராத்திரி பகல்பார்க்காம சைக்கிளை எடுத்துகிட்டு ஓடனும், எங்கே குறைபாடு ஏற்பட்டாலும் காரணம் சொல்லாமல் அதை சரி செய்கிற வரை உதவிப்பொறியாளர் வந்து எங்க கூடவே நிற்பார், சில சமயத்தில் போஃர்மேன் கூட கம்பம்ஏறுகிற மாதிரி இருக்கும், இப்போ என்னடான்னா லைன்மேன் கூட கம்பம் ஏறுவதில்லை, ஏன் தன்னைக் காக்கும் அந்த இடுப்புக் கயிறைக் கூட பலபேர் கட்டுவதே இல்லை, ஸ்டேகம்பிகளைக் கூட ஒழுங்கா கட்டுறதில்லை, அங்கே அங்கே போஸ்ட் நிற்கதியாகநிற்பதைப் பார்த்தால் பயமாக இருக்கு, என தனது பணிக்கால அனுபவங்களை இந்தகாலத்து பணியோடு ஒப்பிட்டுக்கொண்டு இருந்தார் மின்சார வாரியத்தில் ஓய்வுப்பெற்றரகுவின் அப்பா மணி, கம்பெனியாக இருந்தபோது வேலையில் சேர்ந்து ஓய்வுப் பெற்றவர். மின்சார வாரியத்தில் நாற்பது வருட அனுபவம் அவருக்கு.

“ இந்த பழையக் கதையெல்லாம் இப்போ வேண்டாம்பா, இப்ப இருக்கிற உயர்அதிகாரிங்க முதற்கொண்டு லைன்மேன் வரைக்கும் வேலையிலே ரொம்பஅலட்சியமாகத்தான் இருக்காங்க என்றான் ரகு.

செய்கிற வேலை மேலே பக்தியோ,பணிவோ இல்லை. அப்படித்தான் இருக்கும், நாங்கஅந்த காலத்திலே என மீண்டும் ஆரம்பித்தார்

இந்த ஊருக்கே நீ தான் முதன்முதலாக சர்வீஸ் கொடுத்தீங்க, அந்த டிரான்ஸ்பார்மர்நீங்கதான் வேலை செய்தீங்க அதானே என்றான்,

ஆமாண்டா, உனக்கு எப்படித் தெரியும்? என்றார் ஆச்சரியமாக சிரித்தபடி.

கடுப்பான ரகு அப்பா, போதும்பா! என் கிட்டே மட்டும் நீ இதைச் சொல்றது நூறாவதுதடவை. கரண்ட் இல்லை என கடுப்பிலே இருக்கேன், நீ வேறே கடுப்பேத்திகிட்டு..எனமுனகியபடி நகர்ந்தான் இடத்தை விட்டு.

அவர் கம்பெனியில் சேர்ந்த நிகழ்வை, பணிக்கால அனுபவங்களை, பணியில் தான்சேர்த்துவிட்ட நபர்களை, தான் செய்த வேலைகளை, அதன் நேர்த்திகளை, தன்னுடையசாமார்த்தியங்களை, சிக்கனமாக இருந்து வீடு வாங்கியதை, அடிக்கடி யாரிடமாவதுசொல்லிக்கொண்டே இருப்பார்,

அன்றும் நண்பன் ரவி வரவே, அவனிடம் மீண்டும் பழைய கதைகளைக் கூறிக்கொண்டுஇருந்தார், அவனும் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருக்க, ரகுதான்டென்சன் ஆகி இருந்தான்.

எனக்கு என்ன வயதாகிறது?. தெரியுமா என கேட்க,

எண்பது இருக்கும் என்றான்,

அவனுக்கு நல்லாவே தெரியும் அப்பாவின் வயது தொண்ணூறு என்று, இருந்தும் அவரிடம்குறைத்து சொல்லி, அவர் வாயாலே தொண்ணூறு என சொல்ல வைத்து மகிழ்ந்தான் ரவி.

இதையெல்லாம் பார்த்த ரகுவிற்கு கரண்ட் கட்டானது கூட நான் தாங்கிகிட்டேண்டா ரவி, ஆனால் நீ அப்பாகிட்டே பண்ற பாரு,

உன் அதே பழைய கேள்வியும், அவரின் அறுந்து தேய்ந்த அதே பதில்களும் அதைஎன்னால தாங்க முடியலை,

வாடா, வெளியே போய் ஒரு டீயாவது சாப்பிட்டு வரலாம் என வண்டியில் ரவியைஅழைத்துப் போனான் ரகு.

ரகுவின் பேச்சு அவர் காதில் விழுந்தும், சிரித்தபடியே, ஏண்டா ரகு தூங்கலையா ? எனகேள்வி மட்டும் கேட்டு இருவரையும் வழி அனுப்பி “ வரும்போது வைத்தா டீ கடையிலேஇருந்து சமோசா வாங்கியாடா, என்றார் மணி.

பாருடா ரவி, இந்த வயசிலே சமோசா கேட்கிறார் என்றான் ரகு.



ரகு, அவர் வேலையில் இருந்தபோது இந்த மாதிரி டீ கடையிலேதான் சாப்பிட்டு இருப்பார், அதனால் அவர் திரும்ப அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இந்த வயதில் கட்டாயம்இருக்கும்,

நாமே டேஸ்ட் தேடித்தானே எத்தனை டீ கடைகள் இருந்தாலும் வைத்தாகடையைத்தானே தேடி குடிக்க வருகிறோம்.என்றான் ரவி.

இப்படி சின்ன சின்ன அவர்களின் ஆசைகள், அவரது பழையக் காலப் பேச்சுகளைக்கேட்பது, அனைத்தும் நம்மைப் பொறுத்தவரை கால, வயது, வித்தியாசத்தால், போரடிப்பாதாகவும்,
நிகழ் காலத்திற்கு ஒத்துப் போகாதவையாகவும்,
ஏன் சில விஷயங்கள் அல்பமாகவும் கூடத் தெரியலாம், ஆனால் அது அவர்களுக்குசந்தோஷத்தைத் தரும், அவரது செய்திகளைக் காது கொடுத்து கேட்பது அவர்களின் முதியபருவத்திற்கு அருமருந்தாகும். அதை உடனே அப்போதைக்கு அப்போதே தீர்க்கமுயலவேண்டும் என்றான் ரவி.

உனக்கு மட்டும் எப்படிடா இதெல்லாம் தெரியுது, என்ற ரகுவிடம்

“ எனக்கு மட்டுமில்லைடா, அப்பாவை இழந்த அனைவருக்கும் தெரியும் என்ற ரவிகண்களில் ஈரம் துடைத்தபடி சொன்னான்.

அப்பாவிடம் சமோசாவைக் கொடுத்து அவரை சாப்பிட வைத்து, சாப்பிடும் அழகை ரகுரசித்தபோது, அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி பிராகாசமாக இருந்தது.வீட்டிலும் கரண்ட் வந்திருந்தது.