தொடர்கள்
தொடர்கள்
  சென்னை  மாதம்  --  பாகம் 62  - ஆர்.ரங்கராஜ்.

20221109170240814.jpg
திருக்காரிக்கரையில் சோழர் கால கல்வெட்டுக்கள் உள்ளன.

கல்வெட்டுக்களில் திருக்காரிக்கரை என்று குறிக்கப்படும் இவ்வூர் தற்போது இராமகிரி என வழங்கப்படுகிறது. இவ்வூருக்குத் திருக்காரிக்கரை என்னும் பெயர் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வழங்கியிருத்தல் வேண்டும். ஏன் என்றால், திருஞானசம்பந்தர் திருக்காளத்தி சென்று இறைவனைத் தரிசிப்பதற்கு மலைகள் சூழ்ந்த காரிக்கரை வழியாகச் சென்றார் எனப் பெரிய புராணம் கூறுகிறது. சோழர் காலம் முதல் விஜயநகர மன்னர் காலம் வரையுள்ள கல்வெட்டுகள் காட்டுகின்றன. நின்றையூர் என்பது தற்போது இராமகிரிக்கு வடக்கே நின்றை என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. திருக்காரிக்கரை என்பது ஊருக்கும் இறைவனுக்கும் வழங்கப்படுகிறது.
20221109170307202.jpg
இராமகிரி மலையின் அடிவாரத்தில் திருகாரிக்கரை பிள்ளையார், திருக்காரிக்கரை உடைய நாயனார், திருப்பள்ளி நாச்சியார் ஆகியோருக்குத் தனித் தனியாக மூன்று கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன.

திருகாரிக்கரை பிள்ளையார்

தற்போது பைரவர் கோயில் என அழைக்கப்படும் சேத்திரபாலருக்காக எடுக்கப்பட்ட இக்கோயில் கருவறையில் காணப்படும் சேத்திரபாலர் சிலை சோழர் கலைப் பாணியில் அமைந்துள்ளது.

முக மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நவகண்டச் சிற்பங்களும், துவாரபாலகர் சிற்பங்களும் உள்ளன.

இக்கோயிலில் 15 கல்வெட்டுக்கள் உள்ளன

இக்கோயிலில் 15 கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் ஒன்று தொன்மையான முதல் குலோத்துங்கனின் சிதைந்த கல்வெட்டு. மூன்றாம் குலோத்துங்கன். மூன்றாம் இராசராசன், கண்ட கோபாலன், வீரசண்ட கோபாலன், வீரநரசிங்க யாதவராயர் ஆகியோர் கல்வெட்டுக்களில் இக்கோயிலில் உள்ள இறைவன் திருக்காரிக்கரை பிள்ளையார் என்று குறிப்பிடப்படுகிறார். தற்போது பைரவர் கோயிலாக விளங்கும் இது முதலில் சேத்திர பாலருக்காக எடுப்பித்திருக்க வேண்டும்.

"சிவபெருமானின் மகன் எனக் கூறப்படும் ஐய்யனாரைக் காரியுண்டி கடவுள் என்று குறிப்பிடுவர். அதுபோலவே, சிவபெருமானின் மற்றொரு மகன் சேத்திர பாலரைக் காரிப்பிள்ளை என்று அழைத்துள்ளனர். சேத்திர பாலருக்குக் காரி என்னும் பெயரும் உண்டு எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது. மேலும், சேத்திரபாலரை. சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றாகவும் சிலர் குறிக்கின்றனர். ஐய்யனாரும், சேத்திரபாலராகிய காரிப்பிள்ளையும் கிராமத்தைக் காக்கும்தெய்வங்களாக விளங்கியதால், கிராம மக்கள் மத்தியில் இவர்கள் வழிபாடு மிகவும் சிறப்புற்றிருந்தது", என்று கூறுகின்றனர் சி. வீரராகவன் - மங்கையர்கரசி, தொல்லியல் ஆய்வாளர்கள், விழுப்புரம்.

20221109170331928.jpg

"கிராமதெய்வங்களுக்கு ஆடுகளை பலியிடுவது வழக்கமாதலால், இக்கோயிலிலும் சேத்திர பாலருக்கு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு ஆடு வெட்டுவதற்குக் குவலையழகியான் ஒற்றியரைசன் என்பவன் 96 ஆடுகளைத் தானமாக அளித்துள்ளான் என்பதை இங்குள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகிறது."

திருக்காரிக்கரை உடைய நாயனார் கோயிலிலும் 15 கல்வெட்டுக்கள்

சோழர் காலத் திருக்காரிக்கரை உடைய நாயனார் கோயில் தற்போது திருவாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலிலும் 15 கல்வெட்டுக்கள் உள்ளன, அதில் தொன்மையானது இரண்டாம் ராசாதிராசனின் கல்வெட்டாகும். சோழர் காலத்தில் இக்கோயில் சேத்திரபாலர்கோயில் அளவிற்குச் சிறப்புற்றிருக்கவில்லை என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பின்னர் விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் போதுதான் மிகவும் சிறப்படைந்தது.

"இரண்டாம் கம்பண உடையார், இரண்டாம் புக்கர், இரண்டாம் அரி ஹரர், இரண்டாம் விருபாக்ஷர் ஆகியோர் கல்வெட்டுக்கள் யாவும் இக்கோயிலில்தான காணப்படுகின்றன. இவர்கள் காலத்தில்தான் (கம்பண உடையார்) இது திருவாலீஸ்வரம் என்னும் பெயரையும் பெற்றது."

(தொடரும்)