தொடர்கள்
கதை
ஒல்லி குஷ்பூவும்  அராஜக சுப்புசாமியும்!  புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன், இலங்கை.

20221109125757563.jpeg

ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன், இலங்கை.

ல்லா ஜவ்வரிசி போடச் சொல்லு. கொஞ்சம் பச்சரிசி கலந்து இட்லி நல்லா கும்முன்னு குண்டா இருக்கணும்...!" என்று அவசர உத்தரவுகொடுத்துக் கொண்டிருந்தார் சுப்புசாமி.

"அதெல்லாம் ஜமாய்ச்சிபுடலாம் சாமி...!" என்ற சமையல்காரர் சன்னாசி முத்துவுக்கு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று அனைத்துப் பருவங்களிலும் பெண்கள். அவர்களைக் கரையேற்றி, தானும் கரையேறி, ஒவ்வொரு ஊருக்கும் சமையல்செய்ய செல்லும்போதெல்லாம், மையல்கொண்டு, கரண்டிகையால் பிடித்த தன் எடுபிடி காதலிகளையும் ‘கரையேற்றுவது எப்படி?’ என்றுயோசித்தவாறே பதில் சொன்னார்.

சுப்பு, அவர் கொண்டு வந்த 'கொஸ்துவை' நக்கிப் பார்த்துக் கொண்டே, "இன்னும் கொஞ்சம் இஞ்சி சேர்க்கணும்...!" என்றார்.

"சரிங்க. நான் கேட்ட ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் எப்ப தருவீங்க ஐயா?" என்றார் ச.கா.

சுப்புசாமியை ஒரு குரல் அழைத்தது.

"என்ன தாத்தா ஏற்பாடு எல்லாம் முடிஞ்சிபிடுத்தா...?" என்ற அதிகாரத் தொனியில் கேட்டுக்கொண்டே வந்தான் குண்டு ராஜா.

"தாத்தா, எங்க தலைவி நிகழ்ச்சி நிரலைச் சொல்லிடறேன். சாயந்திரம் 4.01க்கு காரைவிட்டு இறங்குறாங்க. 4.05க்கு மேடையில. அதுக்குமுன்னாடி ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் மற்றும் கை கொடுத்தல். மேடையில் முக்கால் மணி நேரம் இருக்கிறதாச் சொல்லிருக்காங்க. சமூகசேவை உதவிகளை கட்சி சார்பாக வழங்குறாங்க. பிறகு, என்னை முறையா அறிமுகப்படுத்தி அவங்க பேச்சு. அப்புறம், ஒரு குரூப் போட்டோ. பிறகு, அவங்க நம்ம திடீர்க் கேண்டின்ல இட்லி சாப்பிடறாங்க. அப்புறம் கார்ல ஏறுகிராங்க. இதுதான் ப்ரோக்ராம்...!" என்று மூச்சு விடாமல்சொன்னான்.

"சரி, நம்ம ஆஸ்தான சமையல்காரருக்கு அட்வான்ஸ் ரூபா உடனடியா வேண்டுமாம். ஏற்பாடு எப்ப பண்ண போறே?"

"ருக்குவோட ரெட்டைவடச் சங்கிலிய அடகு வெக்கப் போறேன், தாத்தா. ரெண்டு நாள்ல மீட்டு, தெரியாம பீரோவில் வெக்கினும்...!"

"அதான் பலப் பல ஆயிரங்கள் அள்ளப் போகிறாய்...அப்புறமென்ன?"

அட்வான்ஸ் VS குண்டு ராஜா பைசல் ஆகுமுன் பிளாஷ்பேக்கை பார்த்துவிடுவோம்.

இந்தியச் சினிமாவில் இடுப்பு ஒடிந்து போகும் நிலையில் இருந்த நடிகைகளின் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த குண்டு, ஒருசினிமாவைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒய்யாரமாக, குண்டாக இருந்த குஷ்புவின் நடிப்பை உளமார ரசித்தான். ரசிக உள்ளம் பொங்க, உடனேதணிகாசலம் சாலைக்குச் சென்று, தொப்பி, கருப்பு கண்ணாடி போட்ட நிறுவனம் வெளியிட்ட பிரபலங்களின் முகவரி புத்தகத்தைவாங்குவதுபோல் புரட்டிப் பார்த்துவிட்டு, நைஸாய் நடிகையின் முகவரியை மனதுக்குள் குறித்துக் கொண்டான். பின்னர், வெளியே வந்தவன், அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்குச் சென்று போஸ்ட் கார்ட் வாங்கினான்.

'எனதருமை குஷ்பூ அவர்களே, தாங்கள் நடித்த ‘…........’ படத்தைப் பார்த்து வியந்தேன். உங்களைப் பார்த்து வீழ்ந்தேன்' என்ற பாணியில் ஒருகடிதத்தை எழுதி அனுப்பி வைத்தான்.

ஐந்தாவது நாள் கையில் ஒரு கடிதத்தோடு சுப்புசாமியை நோக்கி ஓடி வந்தான்.

"என்னடா, ஏதாவது லாட்டரி அடிச்சுட்டியா?"

"இதோ பாருங்க தாத்தா...!" என்று கவரில் இருந்து அந்தப் புகைப்படத்தை உருவினான். அதில் கன்னங்கள் சிவக்க, கழுத்துகள்...சே, கழுத்துபளபளக்க லிப்ஸ்டிக் போட்ட ரோஸ் வண்ணப் புகைப்படம் இருந்தது. போட்டோ அடியில் ‘குஷ்பூ’ என்று கையெழுத்து போட்டுஅனுப்பியிருந்தது.

தனது வாழ்க்கையில் பெரும் ஜென்ம சாபல்யத்தை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் நின்றிருந்தான் குண்டு ராஜா.

"பலே,பலே!" என்றார் சுப்பு.

"இப்படித்தான் ஒரு விஷயத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கணும். எல்லாரும்தான் படம் பாக்குறாங்க. கடுதாசியா அனுப்புறாங்க? நீ செஞ்சதுஅருமையான விஷயம்டா...!" என்று அவனை ஊக்கப்படுத்திக் கெடுத்தார் சுப்பு.

அந்த நேரம் பார்த்தா கோமுப்பாட்டி 'மினி வாக்' வரவேண்டும்?

"வாட் குண்டு , ஏதாவது ஈவினிங் காலேஜ்ல கோர்ஸ் சேரப்போறியா? என்ன கடிதம் அது?"

வேறு வழியில்லாமல் வெட்கப்பட்டுக்கொண்டே கடிதத்தை கையில் கொடுத்தான்.

"குட், லெட்டர் ரைட்டிங் நத்திங் பட் ரைடிங் அ ஸ்டோரி. அது உருப்படியாக இருக்கணும் என்பார்கள் அவ்வளவுதான். யார் இந்த ஆக்டிரஸ்? புதுசாஇருக்கிறதே! அட, ஆட்டோகிராஃப் வேற போட்டு அனுப்பியுள்ளார். ஓகே... ஓகே...!" என்று நடையைத் தொடர்ந்தாள். ஆனால், போகும்போதுஅவள் தன் கணவரைப் பார்த்த அந்தப் பார்வை, மிகவும் சகிக்க முடியாமல் இருந்தது.

இப்படியாக, மடல் வழி நடிகையின் தொடர்பு தொடர்ந்தது. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கடிதம். நடிகையின் மேனேஜருக்கு குண்டு ராஜாவின்பெயர் மிகவும் பரிச்சயமாகிப் போனது. அவர், அவன் ஆர்வத்திற்குத் தலைவணங்கி ,மேடத்திடம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி, குஷ்பூ ரசிகர் மன்றசெயலாளராக அவனுக்குப் பதவிப் பிரமாணம் செய்ய ஏற்பாடு. அதற்கான அறிமுக விழா படலம்தான் ஆரம்பம்!

"பத்தாயிரம் பேர் கூடுவாங்க. ஆளுக்கு ரெண்டுன்னாலும் இருபதாயிரம் இட்லி போகும். கூடவே குஷ்பூ வடையும் அறிமுகப்படுத்தலாம் தாத்தா...!"

"எம். பி. ஏ. சொல்லிக் குடுக்குற காலேஜில் உன்னை மாடலா வைக்கலாம்டா...!"

"மழை பெய்யும்போது ரெயின்கோட்டையும் குடையையும் தேடுறவன்தான்டா மனுஷன். உன்னோட பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் குஷ்பூ இட்லிபிசினஸ்... அந்த அதானியே பேங்குளே பிச்சை வாங்கனும்டா! அப்பாராவுக்கு போனைப் போடு. புள்ளை பாவம், நாலைஞ்சு இட்லி சாப்பிட்டுட்டு, வியாபாரத்தையும் நல்லா கல்லா கட்டுவான்...!"

குண்டு தனது பிசினஸ் டிரிக்கால் கணிசமாகத் துட்டுக் கனவு காண ஆரம்பித்து விட்டான்.

சிந்தாதிரிப்பேட்டை வம்சாவழி ரவுடிகளுடன், ஹாஃப் பிளேடு கருணாச்சலம் அவசர ஆலோசனையில் இருந்தான்.

"ஏர்யா பூராவும் சொம்மா ஜனம் பிச்சிக்கும் நைனா. கூட்டம் நடத்துறது நம்ம தோஸ்த்துதான். நீயும் பிராஞ்சிக்கோ...நானும் பிளேடுபோடறேன்...!"

காகிதமில்லாமல் ரகசிய ஒப்பந்தம் போட்டவன், குப்புசாமியைக் காண விரைந்தான்.

'பெர்சாண்ட கூவினாகாண்டி, குஷ்பூ அக்காகூட ஒரு போட்டா எட்துகினா பேட்டையில மருவாதி எகிறும்...!'

விண்டவர் கண்டிலர் என்பதாக, பிட்டு வாயில் போட்டதுமே கரைந்தது. உணவு பிடித்தால், குழந்தை உடனே உடனே வாய் திறக்குமே... அதுபோலசுப்புசாமி பர்ஸ் வாயானது திறந்து, மல்லிகைப் பஞ்சு இட்லிகளை சகல சட்னி, குழம்பு சம்பத்துகளோடு தோய்த்து கபளீகரம் செய்தது.

"இந்த இட்லியைக் கண்டுபிடித்தவனுக்கு அவார்டு கொடுக்கணும்டா, குண்டு ...!"

"நாந்தாங்க சுட்டேன்...!" என்று ஏதோ புலியொன்றைச் சுட்டுத் தள்ளியதுபோல சமையல்காரர் சன்னாசி...மாவுக் கரண்டியோடு ஓடிவந்தார்.

அப்பாராவ், "வாங்க ஜனங்களே, ரசிக உள்ளங்க வாங்க, குஷ்பூ இட்லி சாப்பிட்டு, அம்மாவை தரிசனம் பண்ணுங்க...!" என்று கூவி, ஒத்திகைப்பார்த்துக் கொண்டிருந்தான்.

கட் அவுட், தோரணங்கள், பிட் நோட்டிஸ்கள், பேனர்கள் என்று வண்ணக்கோலம் பூண்டிருந்த திடலில், மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாகக்கூடிக் கொண்டிருந்தது. ஏதாவது...சொற்பொழிவு ஆற்றலாமா என்று பார்த்தால், குண்டு, "வடை பதமா வருதான்னு பாருங்க, தாத்தா...!" என்றுகலைத் தாகத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான். அவனுக்குக் கவலை, போட்ட பனிரெண்டாயிரம் முதலீடு திரும்ப வருமா?

முதலீடு போடாத பிளேடும் கூட்டத்தை அதிகம் எதிர்பார்த்து, இட்லி வியாபாரத்துக்கு உதவி செய்வதுபோல நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

ருக்குமணி கல்லாவில் அமர்ந்திருந்தாள்.

முதல் போணி - பத்து ரூபாய்க்கு இட்லி!

பதவிப் பிரமாணம் செய்ய வந்த தலைமைக் கழகத்திலிருந்து இரண்டு பேர் வந்து பரபரப்பாக ஏற்பாடுகளைக் கவனித்தார்கள்.

"என்ன செயலாளர், கூட்டம் இன்னும் கூடலையே?"

"வந்துடுவாங்க. அம்மா வந்துட்டா உடனே கூட்டம் கூடிடும்!" என்றான் குண்டு.

மணி இரவு 9.30.

தலைவியையும் காணோம்...ஒரு தலையையும் காணோம்!

நிகழ்ச்சி களேபரத்தைப் பார்த்து, ஒதுங்கிய 97 பேரும் தூக்கம் கண்களைச் சுழற்ற, தத்தமது பஞ்சணைகளைத் தேடிக் களைந்தனர்.

"இவுனுங்களாம் இப்பிடிதாம்ப்பா...உடான்ஸ் உடுவானுங்க. குஷ்பூவெல்லாம் இங்க வருவாங்களா...?"

ருக்குமணி வாழ்க்கையில் இப்படி முறைத்து குண்டு பார்த்ததில்லை!

சுப்புசாமி, தாகசாந்திக்காக ஏதாவது அமைதியான டீக்கடை இருக்கிறதா என்று தேடப் போய்விட்டார்.

அப்பாராவ், ஆரம்பத்தில் ஆர்வமாகக் கூவி வியாபாரம் பார்த்தவன், சகல ஆவி சக்திகளும் இறங்கி அமர்ந்திருந்தான்.

மொத்தம் 357 இட்லிகள் விற்றிருந்தன. ஆயிரக்கணக்கானவை விற்காமல் வீற்றிருந்தன. மசால் வடைகளாவது நாளைக்கு வடைகறி ஆகும். சமையல்காரர் சன்னாசிமுத்துவின் சமயோசிதப் புத்தியால் மெதுவடை போட்டது பெருங் குற்றமாகிவிட்டது.

குண்டு நாக்கு தள்ள, ஐநூற்று சொச்சம் டெலிபோன் பண்ணியதுதான் மிச்சம். கடைசியில்தான் காரியதரிசி போனை எடுத்தார்.

"விவரம் தெரியலீங்க. அம்மா, இப்பதான் எக்சைஸ்லாம் செஞ்சு, ஸ்லிம் ஆகியிருக்காங்க...டாக்டர் அட்வைஸ்படி ரெஸ்ட் கிஸ்ட்எடுக்கிறாங்களோ என்னவோ...?" என்று சுலபமாகச் சொல்ல, குண்டுவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அவனைவிட, சன்னாசிதான் ரொம்ப விரக்தியில் இருந்தார். 'இந்தப் பார்ட்டியிடம் மீதி காசை எப்படி வாங்குறது? பேரெழவாப் போச்சே...!'

குண்டுவுக்கு போன் வந்தது. விக்ரம் படத்தின் வெற்றிக்களிப்பை எட்டிய கமல்ஹாசனின் நிலையை அவனும் அடைந்தான்!

"கு...கு...குஷ்பூ மேடம் வர்றாங்களாம்...! பத்து நிமிஷத்திலே வந்துடுவாங்களாம். டேய் அப்பாராவு, தாத்தாவை எங்கிருந்தாலும் கூட்டியா...!" என்று கத்தினான்.

'அடடா, இப்போ கூட்டத்துக்கு எங்க போறது?' அவனது பெருத்த மண்டையில் உடனே ஒரு யோசனை தோன்றியது. பிளேடை ஏவினான்.

"மானத்தைக் காப்பாத்துடா. கண்ணு அவிய அவிய சரக்கு வாங்கித் தாரேன்....!"

கருணாச்சலம் தனது சகாக்களோடு விரைந்தான்.

சுப்புசாமி, "மைக் டெஸ்டிங்...டெஸ்டிங்...!" என்று நன்றாக இருந்த மைக்கை டொக்கிக் கொண்டிருந்தார்.

அருகிலிருந்த பேட்டையிலிருந்து தப தபவென்று கூட்டம் ஓடி வந்து கொண்டிருந்தது.

"கூவாம இலவச இட்லி வடைகளைப் பெற வேண்டுகிறோம்...!" சுப்பு கூவ, அப்பாராவ் ஜனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய இரண்டாயிரத்துச் சொச்சம்பேர் இருப்பார்கள்.

"வரிசையில் அமருங்கள். நம் உள்ளத்தைக் கவர்ந்த குஷ்பூ அவர்களை தரிசனம் செய்துகொண்டே, சுடச்சுட இட்லிகளைச் சுவைக்கலாம்...!"

இரண்டு பெரிய கார்கள் வந்து நிற்க, தங்கச் சிலையாய் ஸ்லிம் குஷ்பூ முகமெல்லாம் புன்னகையோடு இறங்கினார், தன் சகாக்களோடு. அடுத்தவாகனத்திலிருந்து கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை இறங்கினார்.

கூட்டம் ஆரவாரம் செய்தது.

"அண்ணா, பாத்தீங்களா, நமக்கான வரவேற்பை!" என்ற குஷ்பூ, மறுபடியும் காருக்குள் எட்டிப்பார்த்து, "யூ ஆர் ஆல்சோ வெல்கம் மேடம், ஒருநடிகை ஒரு இண்ட்டெலக்சுவல் பர்சானாலிடியுடன் பழகுவது என்பதும் எனக்குப் பிளஸ்தான்...ப்ளீஸ்

வாங்க மிசஸ் கோமு...!"

சுப்பு முந்திரிக்கொட்டைமாதிரி முன்னே ஓடி வந்தார், கையில் இட்லி - சட்னியோடு!

தனக்குமுன் முந்திய தாத்தாவைப் பார்த்து எரிச்சல் பட்டான் குண்டு. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மேடத்திடம் வந்தவன்...

"வணக்கம், தலைவி குஷ்பூ அவர்களை குஷ்பூ இட்லிகளோடு வரவேற்கிறேன்...!" என்று பவ்யமாகக் குனிந்தான்.

"என்ன குண்டு ராஜா, இந்த ராத்திரியிலே இப்படி தூள் கிளப்பறீங்களே, குட்...!" என்றார் மேடம்.

இப்பொழுது சுப்புசாமிக்கு எரிச்சல் ஏற்பட்டது. உடம்பு எரிய, இட்லி எபிசோட் தயாரித்தால், பயல் மேடத்திடம் தன்னை அறிமுகப்படுத்தவில்லைஎன்ற மன எரிச்சல்.

"இந்தப் பெரியவர் யார்? என் ரசிகரா? பார்த்தால் கட்சித் தொண்டர்போல தெரியலையே? இட்லி விக்கிறவரா?" என்றார் குஷ்பூ.

சுப்புசாமிக்கு இதயம் சுக்கு நூறாகி, அது பொடிந்து பொடிந்து ஓர் அணுகுண்டு தயாரிக்க ஏதுவான ரா (Raw) பொருளானது.

'என்ன பெரிய குஷ்பூ? பெரிய குஷ்பூவாக இருந்தாலும் பரவாயில்லை. ஒல்லி குஷ்பூ! நான் இட்லி விக்கிறவனா? கோமுவிடம் ஓ.பி.எஸ் மாதிரிஎத்தனை தடவை அவமானப்பட்டிருக்கேன். ஆனாலும்...ஆனாலும்...இப்படி பொதுக்கூட்டத்திலே...ஒரு பண்பட்ட நடிகை...பண்பில்லாதஅரசியல்வாதியாய், ஒரு மூத்த அரசியல் ஆலோசகரை இப்படியா அவமானப்படுத்துவது? அதை குண்டு கேட்டும், காணாததுபோல...'

உடனடியாக, தான் தகுந்த அறிவுரை வழங்கி, அந்த அரசியல்வாதியின் எதிர்காலத்தை உய்விக்கத் தயாரானார் சுப்பு. இட்லி, சமாச்சாரங்களைஅருகிலிருந்த குண்டுவிடம் திணித்தவர்...

"தோ பாரும்மா, நீ வளர்ந்து வர்ற பொண்ணு...ஓர் அரசியல்வாதியா நீ பக்குவமா வளர நான் வழி சொல்றேன்...!" என்று சொல்லிவிட்டுப்போயிருக்கலாம்.

ஆனால், அன்போடு, பரிவோடு, ஆதரவோடு தன் இரண்டு கைகளையும் விரித்து, மேடத்தின் தோள்களில் பக்குவமாகத் தட்டியதுதான் மிச்சம்... எங்கிருந்துதான் கடோத்கஜன்கள்போல குதித்தார்களோ...? பாதுகாப்பு வளைய ஆட்கள் தாத்தாவின்மேல் பாயத் தயாரானார்கள்! சுப்புத்தாத்தா, லாரி டயர்களில் மாட்டிய கிழப்பெருச்சாளியாய் சட்னிபோல ஆகியிருப்பார். காரின் கதவைத் திறந்த கோமுப்பாட்டி, "ஸ்டாப் பாய்ஸ்...!" என்றுஉத்தரவுக்குரல் கொடுத்ததால், தப்பித்தார்.

"டோண்ட் டேக் மிஷ்டேக் மிசஸ் குஷ்பூ. ஹி ஈஸ் புவர் பெரியவர். வயதானால், அன்பையும் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கான ரெஹிபிலியேஷன் சென்டர் ஆரம்பிக்கும் நிலையில்தான் எங்கள் பாட்டிகள் முன்னெற்றக் கழகம் தங்களைப்போன்றசெலிப்ரிடிகளை நாடியுள்ளது. இவரை என்னால் சில வார்த்தைகளால் சரிசெய்ய முடியும். லீவ் ஹிம், ஐ வில் ஹேண்டில் திஸ்

ஓல்ட் மேன்...!"

மேடம், கோமுப்பாட்டியின் அன்புக்கு கட்டுப்பட்டு, கண்களால் சைகை காட்ட, பாடிகார்டுகள் விலகினர்.

இரவு ரோந்தில் அகப்பட்ட சந்தேகக் கேஸை நெட்டித்தள்ளும் கான்ஸ்பிடள்போல, தாத்தாவை இருபது மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றாள்கோமு.

"யூ ரெச்சட் டெவில்...என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இங்கே? கொஞ்சம் லேட்டாயிருந்தா, நாளைக் காலை பெரிய பத்திரிகையிலிருந்து எல்லா மீடியாவிலேயும் நியூசன்ஸ் நியூஸா ஆகியிருப்பீங்க. 'ஓவர் குடி...கிழவனாரின் அட்டகாசம்! பிரபல நடிகையிடம் அத்துமீறல்...!' போன்றதலைப்புகளில் ஜொலித்திருப்பீர்கள்...!"

தான் இன்னதுதான் செய்தோம் என்று புரிந்துகொள்ளாத பாடிகார்டுகளின் அழுத்தப்பிடி, கோமுப்பாட்டியை திடீரென்று பார்த்த அதிர்ச்சி, கோமுவின் சமயோஜிதத்தனம்...தான் மனைவியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று திகைத்திருந்தவர்...மெல்ல அப்பாவிக் குரலில்சொன்னார்:

"அந்த குண்டுப் பயல்தான் கோமு, இதற்கெல்லாம் காரணம்...!"

"இப்படி பொடிப்பயல்கள் சகவாசம் இருந்தால், சர்வ நாசம் நிச்சயம். உடனே ஒரு ஆட்டோவைப் பிடித்து, இந்த இடத்தைவிட்டு நகருங்க...!" - ஹேண்ட் பேக்கைத் திறந்து, ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டுத்தான் திரும்பினாள் பாட்டி.

"என்ன ஆச்சு, மேடம்? எப்படி இப்படி குயிக்கா அந்தப் பெரியவரை கன்வின்ஸ் பண்ணீங்க...?" குஷ்பூ ஆச்சரியத்துடன் கேட்டார்.

"உண்மையைச் சொன்னேன்...!" என்றாள் பாட்டி.

* * * * *