பழைய திருவெண்பாக்கம் பூண்டி நீர் நிலைக்குள் மூழ்கி விட்டது:
பிறகு, புதிய வெண்பாக்கநாதர் கோயில் வேறு இடததில் கட்டப்பட்டது:
பழைய திருவெண்பாக்கம் பூண்டி நீர் நிலைக்குள் மூழ்கி விட்டது. பிறகு, புதிய வெண்பாக்கநாதர் கோயில் வேறு இடததில் கட்டப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பியிருக்கும் காலங்களில் காண இயலாத ஒரு சிவன் கற்றளி, நீர் வற்றிய காலங்களில் நன்கு தெரியவரும்.
சுந்தரர் சங்கிலி நாச்சியாருக்குச் செய்த பிரமாணத்தை மீறித் திருவொற்றியூரின் எல்லையைக் கடந்து சென்றதால் பார்வை இழந்தபொழுது வெண்பாக்கம் வந்து சிவபெருமானைத் துதித்து ஊன்றுகோல் பெற்ற தளம். சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
இக்கோயில் இறைவனுக்கு 'வெண்பாக்க நாதர்' என்று பெயர். இறைவி 'கனிவாய்மொழி' என்று அழைக்கப் பெற்றுள்ளார். இறைவன் 'வெண்பாக்க நாதர்' என்று அழைக்கப்பெற்றிருப்பதால், இக்கோயில் "வெண்பாக்கம்" என்ற ஊரில் இருந்திருப்பது தெரிகிறது.
ஒரு கட்டுரையில், முனைவர் சுதா சேஷய்யன் கேட்கிறார், "சுந்தரரான நம்பி ஆரூரர், கோல் பெற்ற தலமான வெண்பாக்கம் செல்வோமா? சற்றே கடினம்தான். ஏன் தெரியுமா? இப்போது, வெண்பாக்கம் நாம் செல்லும் வகையில் இல்லை. நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. ஆனால், வெண்பாக்கத்து வெண்கோயில் என்று சுந்தரர் பாடிய கோயில் இருக்கிறது.
இதென்ன புதிர்? தீரர் சத்தியமூரத்தி சென்னை நகர மேயராக இருந்த காலகட்டம். சென்னையின் குடிநீர் தேவைக்கான திட்டங்கள் பலவும் வகுக்கப்பட்டும், பரிசீலிக்கப்பட்டும், திருத்தங்கள் செய்யப்பட்டும் வந்த காலம், பூண்டி நீர்த் தேக்கம் அந்தக் கால கட்டத்தில்தான் செயல் வடிவம் பெற்றது. பூண்டுகள் (குட்டைச் செடி வகைகள்) நிறைய மண்டிக் கிடந்ததால், இந்த இடம் பூண்டி என்ற பெயர் பெற்றது. சுமார் 12 சதுர மைல் பரப்பளவில்இருக்கும் பூண்டி நீர்த்தேக்த்தை அமைக்கும்போதுதான் சிக்கல் எழுந்தது. 17 கிராமங்களின் இடம் இதற்குத் தேவைப்பட்டது. கிராம மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்தக் கிராமங்களில் ஒன்று, நம் (சுந்தார் பெருமானுடைய) வெண்பாக்கம். கோல் கொடுத்த கோலபிரானுடைய காலடியிலேயே நீர் தரும் பொறுப்பையும் போட்ட பெரியவர் வெண்பாக்கத் திருக்கோயிலை மொத்தமாகப் பெயர்த்எடுத்து வேறு இடததில் அமைத்தார்கள்."
"நீர்த் தேக்கத்தின் கரையில், பூண்டி கிராமத்தின் நடுநாயகம் பூண்டி அரசு பள்ளிக்கூடத்தின் எதிரில், பெரிய நிலப்பரப்பு அமைக்கப்பட்டுள்ளது புதிய வெண்பாக்கத் திருக்கோயில்."
ஆனால் தற்பொழுது வெண்பாக்கநாதர் கோயில், இவ்வூர் இல்லை. தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன், தமிழ்நாட்டரசு தொல்லியல்துறை, மேனாள் இயக்குநர் கூறுகிறார், "இக்கோயிலின் பெயர் மாறி 'ஊன்றீஸ்வரர் கோயில்' என்று வழங்கி வருகிறது. சுந்தரர் கண் பார்வையிழந்து இங்கு வந்தபோது அவருக்கு "ஊன்றுகோல் வழங்கியருளியதால் 'ஊன்றீஸ்வரர்' என்று இறைவனும், "உளோம் போகீர்" (யாம் உள்ளோம், நீங்கள் போய் வாருங்கள்) என்று இறைவன் சுந்தரரின் கேள்விக்குப் பதிலளித்ததால், இன்று இவ்வூர் 'திருவுளம்பூதூர்' என்று மருவி வழங்கப்படுகிறது.
"இங்குப் பிற்காலப் பல்லவர்கால முதல் கோயில் இருந்திருக்கும் என்பதற்குக் கல்வெட்டு மற்றும் சிற்பச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன," என்று திரு காசிநாதன் தெரிவிக்கிறார்.
(தொடரும்)
-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)
Leave a comment
Upload