நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமப் பகுதியில், கடந்த வருட இறுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, அங்குள்ள ஒரு கிணற்றில் ஒரு மாதத்துக்கும் மேலாக தினசரி 50 கன அடி தண்ணீர் விடப்பட்டும் முழுமையாக நிரம்பவில்லை. ஆனால், அருகிலுள்ள விவசாயக் கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தியது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான், இந்த கிணற்றின் நீர்போக்கு சுமார் 5 கிமீ சுற்றளவில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த நிரம்பாத கிணறு குறித்து சென்னை ஐஐடி குழுவினர் ஆராய்ச்சி செய்ய மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த 3 மாதத்துக்கும் மேலாக ஐஐடி குழுவினர் களப்பணி மேற்கொண்டனர். இதில், திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகையில் உள்ள நிரம்பாத கிணற்றைபோல், சுற்றுவட்டார பகுதியில் மேலும் 14 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
முதல்கட்டமாக அந்த கிணறுகளை ஆய்வு செய்ததில், இப்பகுதியில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன பூமிக்கு அடியில் பெரிய நிலத்தடி நீரோடைகளைக் கொண்ட குகைகள் இருப்பது தெரியவந்தது.
மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் சுண்ணாம்பு பாறைகளில் உள்ள கனிமங்களுடன் வேதிவினை நடைபெற்று, இதேபோல் நிலத்தடி நீரோடைகள், பாதாளக் குகைகள் பூமிக்கு அடியில் ஏற்படுவதாகவும் ஐஐடி குழுவினரின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சுண்ணாம்பு பாறைகள், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட குகைகள் மற்றும் குகைகளின் நிலத்தடி நீரோடை வளையமைப்பை உருவாக்கி உள்ளது. இவை தொழில்நுட்ப ரீதியாக ‘கார்ஸ்ட் நீர்நிலை அமைப்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக, மீள்நிரப்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆயன்குளம் பகுதியில் உள்ள நிலத்தடிநீர் மட்டத்தை சுமார் 30 முதல் 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி பேராசிரியர் குழுவினர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, நவீன டிரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். பூமிக்கு கீழே நீர்வழிப் பாதையை மேம்படுத்தவும், நிலத்தடிநீர் மட்டத்தை அதிகரித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய ஆய்வின்படி, சராசரியாக 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக நிரம்பாத கிணறு உள்ளது. இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு, மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை இந்த கிணறு வழியாக செலுத்தும்போது, 30 முதல் 40 கிமீ வரையிலான சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐஐடி பேராசிரியர் வெங்கட்ராமன் சீனிவாசன் கூறுகையில், “நிலத்தின் மேலே இருக்கும் நீர்வழிகள் போல, பூமிக்கு அடியில் இருக்கும் இந்த ஓடைகளில் நீர் அதிவேகமாக பரவலாக்கப்படுகிறது. இதனால் பூமிக்கு அடியில் செல்லும் இந்த நீர்வழி பாதையில் துளையிட்டு வெள்ள உபரிநீரை செலுத்தினால், பூமிக்கு அடியே சுற்றுப் பாதைகள் வழியே அனைத்து கிணறுகளுக்கும் நீர் சென்று, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
கடந்த மூன்று மாதங்களாக இந்த கிணறு குறித்து தீவிர ஆய்வு செய்தோம். 300 கிணறுகள் வரை சர்வே செய்தோம். 160 கிணறுகள் வரை, அதன் நீர் மற்றும் கிணற்றின் தரைப்பகுதியில் இருக்கும் மண் எடுத்தும் ஆய்வு நடத்தினோம். ஆராய்ச்சிக்காக நீர்மூழ்கி காமிராவை பயன்படுத்தி, சுண்ணாம்பு பாறைகளில் உள்ள துளைகளின் அளவுகளை படம்பிடித்துக் கொண்டோம். இதன் மூலம் இந்த ஆயன்குளம் நிரம்பாத கிணறு, உண்மையில் ஒரு அதிசய கிணறுதான்!
இந்த கிணற்றின்கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த கிணற்றின் மூலமாக சுற்றிலும் 6 கிமீ பரப்பளவிலான கிணறுகளின் நீர்மட்டம் உயர்கிறது. இதேபோல் பக்கத்து கிராமங்களிலும் கிணறுகள் உள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம் மற்றும் ராதாபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இதேபோல் கிணறுகளை ஆய்வு செய்தோம்.
இது சிறு ஆய்வு திட்டம்தான். கருமேனியாறு நீர்வழி பாதை அருகில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். இதுதொடர்பான ஆய்வு அறிக்கை அடுத்த மாத இறுதிக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்!” என்றார் பேராசிரியர் வெங்கட்ராமன் சீனிவாசன்.
(செய்திக்கு சம்பந்தம் இல்லை. சும்மா பாதாள குகைன்னு தேடி வலைதளத்தில் எடுத்தது. இது போல ஏதாவது கண்டு பிடித்தால் நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை எகிறும்...!!)
Leave a comment
Upload