தொடர்கள்
அரசியல்
மாயத்தேவர் - இரட்டை இலையும் அதிமுகவும் - விகடகவியார்

20220713070212217.jpeg

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தவரும் அதிமுக தொடங்கியதும் நடைபெற்ற முதல் தேர்தலில் போட்டியிட்டு வென்ற மாயத்தேவர் சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

திண்டுக்கல் இடைத்தேர்தல் என்பது அதிமுகவுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய தேர்தல். புதிய கட்சியான அதிமுகவுக்கு சோதனை களம் தான் திண்டுக்கல் இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் பழைய காங்கிரஸ் மற்றும் புதிய கட்சியான அதிமுக என்று நான்கு முனைப்போட்டி அதிமுக சார்பில் மாயத்தேவர் திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் போட்டி இவர்கள் இருவருக்கும் இடையே தான் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.

திண்டுக்கல் பிரசாரத்திற்காக திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி 12 மணிக்கு பிரச்சாரத்திற்கு வந்தார். அப்போதெல்லாம் தேர்தல் ஆணையம் கெடுபிடி எல்லாம் கிடையாது விடிய விடிய தேர்தல் பிரச்சாரம் நடக்கும் காலம் அது. மேடைக்கு கருணாநிதி வந்த சில நொடிகளில் அங்கு வந்த இரண்டு சிறுவர்கள் பக்கத்து தெருவுக்கு எம்ஜிஆர் வந்து விட்டார் என்றார்கள். அவ்வளவுதான் ஒட்டு மொத்த கூட்டமும் எம்ஜிஆரை பார்க்க ஓடிவிட்டது. கருணாநிதிக்கு இடைத்தேர்தல் முடிவு கிட்டத்தட்ட அப்போது அவருக்குத் தெரிந்துவிட்டது.

20220713070831269.jpeg

திண்டுக்கல் தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் சிறுவர்கள் இளைஞர்கள் சிவப்பு துண்டு போட்ட தோழர்கள்.திமுகவுக்கு எதிராக குறிப்பாக கருணாநிதிக்கு எதிராக எம்ஜிஆரின் பிரச்சாரம் திண்டுக்கல் தேர்தலில் நன்கு வேலை செய்தது.அந்தத் தேர்தலில் மாயத்தேவர் வெற்றி பெற்றார். பழைய காங்கிரஸ் வேட்பாளர் என் எஸ் வி சித்தன் இரண்டாம் இடத்தை பிடித்தார். திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. நான்காம் இடத்துக்கு வந்த இந்திரா காங்கிரஸ் டெபாசிட் இழந்தது.

திண்டுக்கல் தேர்தல் திமுகவை வீழ்ச்சி பாதைக்கு திருப்பி விட்டது. திண்டுக்கல் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் திமுகவிலிருந்து நிறைய முக்கிய பிரமுகர்களை அதிமுகவுக்கு வரச் செய்தது.

இரட்டை இலைச் சின்னம் மாயத்தேவர் தேர்வு. அப்போது தான் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக என்பதால் சுயேச்சை வேட்பாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட சின்னத்தில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று தேர்தல் அதிகாரி சொன்னார். அப்போது அவர் தேர்ந்தெடுத்தது தான் இரட்டை இலைச் சின்னம். புகழ்பெற்ற இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்று மாயத்தேவர் இடம் எம்ஜிஆர் ஒருமுறை கேட்டார். அப்போது மாயத்தேவர் இங்கிலாந்தில் வின்சன்ட் சர்ச்சில் வெற்றியைக் குறிக்கும் விதமாக தனது இரண்டு விரல்களை உயர்த்திக் காண்பிப்பார். அது மக்களை மிகவும் கவர்ந்தது இதேபோல் நாமும் இரட்டை இலை சின்னத்தை காண்பிப்பதற்காக இரண்டு விரலை உயர்த்தி பிடித்தால் போதும் அதுவே நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்றார். எம்ஜிஆரும் அதைத்தொடர்ந்து இரண்டு விரலை உயர்த்தி பிடித்து வெற்றியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார் எல்லாமே மாயத்தேவர் சொன்ன ஐடியா தான்.

20220713070249170.jpeg