மாமல்லபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, ஹாங்காங் நாட்டின் சார்பில் - மதுரையில் பிறந்து வளர்ந்து, ஹாங்காங்கில் கணவர், மகனுடன் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த செஸ் வீராங்கனை சிகப்பி கண்ணப்பனும், அவரது மகன் தண்ணீர்மலையும் பங்கேற்றனர்.
மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டின் பிரமாண்ட அரங்கில் பல்வேறு வீரர்-வீராங்கனைகளுடன் செஸ் விளையாடியபடி, மகனுக்கு 'எப்படி காய்களை நகர்த்த வேண்டும், எந்த நிலையில் செக் வைக்க வேண்டும்?' என சொல்லி கொடுத்த சிகப்பி கண்ணப்பனை பார்த்து, நாம் வியப்பின் உச்சிக்கு சென்றுவிட்டோம்.
நாம் அவரிடம் பேச்சு கொடுத்தபோது, "நான் அச்சு அசல் மதுரை தமிழச்சிங்க… எனக்கு சின்ன வயசிலேயே செஸ் ஆர்வம் அதிகம். எனக்கு தாத்தா செஸ் விளையாட கற்றுக் கொடுத்தார். என் பெரியப்பா மகன், என்னை முதன்முறையாக செஸ் போட்டிக்கு அழைத்து சென்றதில் 3-வது பரிசு பெற்றேன். பின்னர் எனது பயிற்சியாளர்கள் மூலம் மாவட்ட, மாநில அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றேன்.
இதையடுத்து 10 வயதில் தேசிய போட்டியில் வெற்றி பெற்றேன். இதனால் பலர் என்னை தேசிய அளவில் சாம்பியனாகப் போறேன்னு சொன்னதும் பதட்டமாயிடுச்சு. அதில் நான் 4-வது இடம் பிடிப்பதற்கு, எனது பயிற்சியாளர்களான முரளிமோகன், அதுலன் ஆகிய இருவரும் முக்கிய காரணம்! இன்றுவரை இந்தியா சார்பில் விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் மனதில் இருக்கிறது…" என சிகப்பி ஏக்கம் பெருமூச்சு விட்டார்.
"அதுசரி… இப்போ எப்படி ஹாங்காங் சார்பில்..?" எனக் கேட்டோம். சிகப்பி ஆவலுடன் தொடர்ந்தார் - "செஸ் சாம்பியன் கனவை மூடிவிட்டு உயர்கல்வி முடித்தேன். பின்னர் கடந்த 2002-ல் கண்ணப்பனுடன் திருமணம் நடைபெற்று, நைஜீரியாவில் குடியேறினோம். இதைத் தொடர்ந்து கணவர் மற்றும் 3 வயது மகன் தண்ணீர்மலையுடன் கடந்த 2005-ல் ஹாங்காங்கில் குடியேறினோம். இங்குள்ள செஸ் கூட்டமைப்புக்கு சென்றபோது, அங்கு பெண்கள் யாரும் செஸ் விளையாடவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து எனது செஸ் ஆர்வம் மீண்டும் துளிர்த்தது. அதில் எனக்கு சுமாரான செஸ் ரேட்டிங் வந்தது. பின்னர், 2016-ல் அசர்பைஜானில் பெண்கள் செஸ் அணியை உருவாக்கி, ஹாங்காங் நாட்டுக்காக விளையாடினோம். தற்போது ஹாங்காங் சார்பில், தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 40 வயதில் பங்கேற்று விளையாடியது மிகுந்த மகிழ்ச்சி! சர்வதேச செஸ் போட்டியில் எனது மகன் சாம்பியனாக வரணும்னு ஆசை…" என சிரித்தபடி தெரிவித்தார் சிகப்பி கண்ணப்பன். வாழ்த்து கூறி விடைபெற்றோம்.
Leave a comment
Upload