தொடர்கள்
தொடர்கள்
உலகின் மோசமான வசவு வார்த்தை- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20220712171128598.jpg

ஓட்டி. வந்த இரண்டு சக்கர வாகனத்தை வீட்டு வெளிவாசலின் இடதுபுறம்
ஸ்டாண்டிட்டு நிறுத்தினார் தங்கதுரை. வயது 43. உயரம் 170செமீ. திராவிடநிறம்.
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர். நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர். கடந்த 75வருடங்களாக இந்திய அரசியல் தலைகீழ் பரிணாமத்தை அடைந்து வருவதை அசூயையுடன் பார்த்து வருபவர்.

ஜனநாயகம் என்பதே மாயமானோ என்கிற சம்சயம் தங்கதுரைக்கு.
அரசாங்கங்கள் கட்சி நலனுக்காகவும் கார்பரேட் நலனுக்காகவும்
செயல்படுகின்றனவே தவிர வெகுஜனத்திற்கு எதையும் கிள்ளிப் போடுவதில்லை.ஊழலில் ஒரு கட்சி விடாகண்டன் என்றால் இன்னொரு கட்சி கொடாகண்டன்.
வீட்டிற்குள் நுழைந்த தங்கதுரை கால் செருப்பை அதற்குரிய மரஅடுக்கில்
வைத்தார். முகம் கைகால் கழுவினார். பேன்ட்டை கழற்றிவிட்டு கைலிக்கு மாறினார்.
மனைவி பரமேஸ்வரி ஓடி வந்தாள். “ஈஷிசேர்ல உக்காந்து இளைப்பாறுங்க.
இஞ்சி டீயும் வெங்காய பஜ்ஜியும் எடுத்துட்டு வரேன்!”
“எல்லாம் சரி. நம்ம மகன் பாலமுருகன் எங்கே?”
“படுக்கையறைல உக்காந்து என்
செல்போன்னை நோண்டிக்கிட்டு இருக்கான்!”
செல்போனை அவனுக்கு தராதேன்னு எத்தனைதடவை சொல்றது?”
“நீங்க வேற. இன்னும் ரெண்டு மாசத்ல அவனுக்கு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்
வாங்கித் தரலைன்னா தற்கொலை பண்ணப்பேன்னு மிரட்டுறான்!”
“அவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்க!”
“யாரு நானா? உங்களையும் என்னையும் அவன் பெற்றோரா என்னைக்கு
மதிச்சிருக்கான்? நான் அவன் சொன்ன வேலைகளை செய்யும் ஆயா, நீங்க ஒரு ஏடிஎம் கார்டு. அவ்வளவுதான்!”
“அவனுக்கு என்ன வயசாகுது?”
“பெத்த உங்களுக்கு தெரியாதா? பதினாறு வயசாகுது!”
“என்ன படிக்கிறான்?”
“அதையும் என்கிட்ட கேக்கனுமா? ப்ளஸ் ஒன் படிக்கிறான்!”
“அவனை கொஞ்சம் கூப்பிடு. அவன்கிட்ட சில விஷயங்கள் பேசனும்!”’

“மொதல்ல பஜ்ஜியை தின்னுட்டு இஞ்சிடீயை குடிங்க அதுக்கப்பறம் அவனை கூப்பிடுறேன்!”
சுடச்சுட பஜ்ஜியும் டீயும் கொண்டு வந்து வைத்தாள் பரமேஸ்வரி.
இருபஜ்ஜிகளை தின்று டீயை குடித்தார் தங்கதுரை. “இப்பக் கூப்பிடு அவனை!”
படுக்கையறைக்கு போன மனைவி சுணக்கமாக திரும்பினாள்.
“அவன் பிஸியா இருக்கானாம் உங்களை வரச் சொல்ரான்!”
“எவ்வளவு திமிர் அவனுக்கு!” முணுமுணுத்தபடி படுக்கையறைக்கு போனார் தங்கதுரை. குப்புறபடுத்து காலாட்டியபடி திறன்பேசியில் விடியோகேம் ஆடிக்கொண்டிருந்தான் பாலமுருகன்.
“என்னடா கூப்ட்டா வராம என்னை வரச் சொல்ற?”
“என்ன விஷயம்… மொதல்ல அத சொல்லுங்க!”
செல்போனை ஆப் பண்ணிட்டு இப்படி வந்து உக்காரு!”
வீடியோகேமை பாதில ஆப் பண்ணிட்டு வர முடியாது. விடியோகேம்
ஆடிக்கிட்டே உங்ககிட்ட பேசுறேன்!”
“உங்க ஹெச்எம் இன்னைக்கி எனக்கு போன் பண்ணினார்!”
“என்னவாம்?”
“ஸ்கூல்ல நீ பண்ற அலும்புகள் தாங்கலன்னு புகார் பண்ணினார்!”
“நான் சந்தோஷமா இருக்றத பார்த்து வயிற்தெரிச்சல் படுது அந்த பெருசு. ஒரே ஒரு நாள் நான் படிக்ற ஸ்கூலை என்கிட்ட ஒப்படைக்கட்டும். ஹெச்எம்முக்கு தகுந்த பாடம் கற்பிச்சுடுவேன்….” முஷ்டி மடக்கி பற்களை நறநறத்தான்.
“வாயைத்திறந்தா டன் கணக்கில் பொய் பேசுறியாமே?”
“பொய்யா, நானா? ஹெஹ்ஹே…”
“போன வாரம் கிளாஸ் ரூமுக்குள்ள நல்ல பாம்பு புகுந்திருச்சுன்னு அளப்பறை குடுத்தியாம். ஸ்கூலையே தலைகீழா புரட்டி போட்டு எல்லாரும் பாம்பை தேடுனாங்களாம். அப்ப நீ நிஜம் போலவே கிளாஸ் ரூமுக்குள்ள பாம்பு புகுந்துட்டா என்ன நடவடிக்கை எடுப்பீங்கன்னு செக் பண்ணினேன் எனக்கூறி இளித்தாயாம்!”
“இளித்தேன் என்பதனை சபைக்குறிப்பிலிருந்து நீக்குங்கள் ‘பரிகசித்தேன்’ எனக்கூறுங்கள்!”
“பள்ளி சுவற்றில் ‘பள்ளிகளை இழுத்து மூடுங்கள் வாருங்கள் ஆடுமாடு பன்றி வாத்து மேய்ப்போம்’ என கிறுக்கி தள்ளியிருக்கிறாயாமே?”
“எல்லா கடவுள்களும் மாடு மேய்த்திருக்கிறார்கள். கால்நடை மேய்த்தால் நாம் டென்மார்க்கை விட பால்பொருள் உற்பத்தியில் பலமடங்கு அதிகமாக சாதிக்கலாம்!”

“கிளாஸ்பசங்களை எல்லாம் கலரை வச்சு அணி பிரிக்கிறியாமே… கறுப்பா இருக்கிறவன் உன் கட்சியாம். சிவப்பா வெள்ளையா மஞ்சளா இருக்றவன் உன் எதிரி
கட்சியாம்!”
“கறுப்பு என் இனத்தின் நிறம்!”
“அந்தமான் டூர் போனபோது ஆதிவாசிகளுடன் சேர்ந்து டைனசார் கறி
தின்றதாக கூறினாயாமே?”
“யானைக்கறி திமிங்கலக்கறி கூட தின்றிருக்கிறேன்!”
‘‘எப்ப போன பிறவியிலா அல்லது கனவிலா?”
“நம்ம பேச்சை கேட்டா எல்லா பயலும் திறந்த வாய் மூடக்கூடாது.
அடுத்தவனை அசத்த எதை வேணாலும் பேசலாம் எப்படி வேணாலும் பேசலாம்!”
“பொய் பித்தலாட்டம் எல்லா நேரத்திலும் உதவாது. நீ பேசும்போது திறந்த
வாய் மூடாமல் கேட்போர் உன் முதுகுக்கு பின் உன்னை காரித்துப்புவார்கள்!”
“நோ ப்ராப்ளம்!”
“இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்!”
“என்ன விஷயம்?”
“ஸ்கூல் பசங்க எல்லார்கிட்டயும் நிதி வசூல் பண்ணி ஐஸ்கிரீம், பிட்ஸா,
மசால்தோசை, பால் அல்வா, பலூடா எல்லாம் முழுங்கிறியாமே?”
“தகப்பா… நீ ஒரு மிடில்ஸ்கூல் டீச்சர். உன்னால் எனக்கு டெய்லி எரநூறு
முந்நூறு பாக்கட் மணி தர முடியுமா? அதான் நானே கலக்ட் பண்ணிக்கிறேன்.
லோக்கல்ல இருக்ற எல்லா ஸ்கூல்லயும் நிதி வசூல் பண்ணி ஐ போன் வாங்கப்போறேன்!”
“கிளாஸ் லீடர் தேர்தல்ல நின்று தோத்தியாமே? ஆறாம் கிளாஸ்லயிருந்து
ஸ்டுடன்ட் எலக்ஷன்ல தோத்துக்கிட்டேதான வர்ற? ஏன் இன்னும் உனக்கு புத்தி வர மாட்டிங்குது!”
“பு ஹாஹா.. கிளாஸ் லீடர் தேர்தல்ல நிப்பேன் தோற்பேன்.. அது என்
உரிமை.. நான் நிக்றதினாலதானே நீங்க ஜெயிக்கிறீங்க… நன்றியா இருங்கடே!”
“எனக்கு காலம் சென்ற எம்ஜிஆர்தான் பேர் வச்சார்னு சொன்னியாமே… என் அப்பாவுக்கு அதாவது உன் தாத்தாவுக்கு அறிஞர் அண்ணாதான் பேர் வச்சார்னு ரீல் விட்டியாமே… இப்படி பிராடுதனமா பேச உனக்கு அசிங்கமாயில்ல?”
“இல்ல.. உனக்கு தெரியாது.. நாஞ்சொல்றதை பத்தில மூணுபேர் நம்புரான்க.. பொய் பேசுறது தனித்திறமை… எல்லாராலும் முடியாது… பொய்யை பொய்னு தெரிஞ்சே ரசிக்கிறவங்களும் இருக்காங்க. கவிதைக்கு பொய் அழகு என்றான் என் பெரியப்பன் வைரமுத்து. வாழ்க்கைக்கு பொய் அழகு என்கிறேன் நான்!”
“உண்மையை தவிர வேறெதுவும் பேசாத எனக்கு எப்டிடா மகனா பிறந்த?”

“சேத்ல பிறந்த செந்தாமரை நான்!”
“சாக்கடைல புரளும் பன்றி நீ!”
“பாராட்டுக்கு நன்றி!”
“சரிவர பராமரிக்கபடாத பொது கழிப்பிடம் நீ”
“ஓவ்… சூப்பர்!”
“இராப்பிச்சைக்காரனின் எச்சில் தட்டு நீ!”
“வாவ்!”
ஆங்காரம் கொப்பளிக்க கடைசியாக ஒரு வாக்கியத்தை வெடித்தார் தங்கதுரை.
“நீ ஒரு சின்ன மலையமான்!”
இதுவரை துள்ளாட்டமாக இருந்த பாலமுருகன் சுருண்டான். அவனது முகம்
அவமானத்தால் கறுத்தது. கண்களில் கண்ணீர் பொங்கியது. தரையில் சரிந்து முழங்காவிட்டான். தனது இரு உள்ளங்கைகளால் முகத்தை அறைந்து கொண்டான்.
“உலகத்தில் எத்தனையோ வசவுவார்த்தைகள் இருக்க என்னை ஏன் ‘சின்ன
மலையமான்’ என அழைத்தீர்கள்?” மூக்கையும் வாயையும் ஒரு சேர தேய்த்துக் கொண்டான் பாலமுருகன்
“நீ அவரை மாதிரிதானே வர்ற?”
“வாயை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதி அவர்.
இனவெறியை தூண்டுபவர் அவர். கீழதமிழர்களிடம் நிதி வசூலித்து ராஜவாழ்க்கை
வாழ்பவர் அவர். நேற்று ஒரு கட்சியை இன்று இன்னொரு கட்சியை நாளை
வேறொரு கட்சியை வசவுவார். ஆயிரம் பொய் சொல்லிய அபூர்வ சிந்தாமணி
அவர்..”
‘‘அவருடை ஜெராக்ஸாகதானே நடக்கிறாய்!”
தொடர்ந்து மூன்று நாட்கள் அழுது வீங்கி எதுவும் சாப்பிடாமல் தனது
அறையிலேயே முடங்கி கிடந்தான் பாலமுருகன். நான்காவது நாள்..-
பெற்றோரை சேர்ந்து நிற்க சொல்லி கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான் பாலமுருகன். “என்னை மன்னிச்சிருங்க. இனி ஒழுக்கமா நடந்துக்கிறேன் அப்பா என்னை திட்ட உபயோகித்த ‘சின்ன மலையமான்’ வசவு வார்த்தையை வாபஸ் வாங்க சொல்லுங்கம்மா ப்ளீஸ்.. உடம்பு பூராவும் லட்சம் கம்பிளிபூச்சி ஊர்ற மாதிரி இருக்கு!”
“அந்த வசவு வார்த்தையை வாபஸ் வாங்குகிறேன் பாலமுருகன். இனியாவது யாரையும் போல நீ இல்லாது நீ நீயாகவே இரு. முடிந்தவரை உண்மை பேசு.
பெற்றோரை மதி. நன்கு படி. சாதி மத இன துவேஷங்களை தலை முழுகு. உனது
ஆயுளுக்குள் உலகில் ஒரு தங்க முத்திரையை பதி. வாழ்த்துகள்!”

பாலமுருகனின் முகத்தில் ஏழாம் வானத்து நிலவு பொழிந்தது..