குரு என்கிற குருசாமிக்கு திடீரென்று ஒரு பிரச்சனை. அவனுக்கு உடனே மனநோய் மருத்துவர் ஏகாம்பரம் நினைவுக்கு வந்தது. “ஆகா ..அவர்தான் நல்ல டாக்டர். முன்பு அவரிடம் சென்று என் பிரச்சனை தீர்ந்தது. இப்பவும் அவரிடமே போக வேண்டியதுதான் “ என்று தீர்மானித்தான்.
டாக்டர் ஏகாம்பரம் குருசாமிக்கு இந்த முறை அவ்வளவு எளிதாக நேரம் ஒதுக்குவதாக இல்லை. முன்பே இந்த குருசாமியிடம் மாட்டிக்கொண்டு நாம் அவதிப்பட்டது போதும். அவன் வந்து சொர்க்கம் நரகம் என்று ஏதேதோ சொல்லி எனக்கு மயக்கமே வந்து விட்டது. இந்த முறை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டாக்டர் நோயாளியை கண்டு பயப்பட வேண்டியாதாகிவிட்டது.
எப்படியோ குருசாமி டாக்டர் எகாம்பரத்திடம் நேரில் வந்து விட்டான். இரவு வெகுநேரம் அவன் நம்மை தொல்லை கொடுக்கமாட்டான் என்று தீர்மானித்து அவனுக்கு இரவு எட்டு மணிக்கு நேரம் ஒதுக்கி இருந்தார்.
“என்ன குரு எப்படி இருக்கீங்க.. உங்களுக்கு என்ன பிரச்சனை . சுருக்கமாக சொல்லுங்க. குறைந்த நேரம்தான் இருக்கிறது “
“நீங்க நல்ல டாக்டர். என்னோட கனவு பிரச்சனை நீங்க சுலபமா சரி செய்துட்டிங்க. அதுபோல இந்த பிரச்சனையும் சரியாகிவிடும் என்று நம்பி உங்களிடம் வந்து இருக்கிறேன்.”
“சரி. சொல்லுங்க. உங்க பிரச்சனை என்ன?”
“கடந்த சில நாட்களாக எனக்கு யூரின் போகும்போது ஒரு பிரச்சனை”
“அடடா..அதற்கு நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? நான் உங்களுக்கு நல்ல டாக்டரை சிபாரிசு செய்கிறேன். அங்கெ சென்று உங்கள் பிரச்னையை சொன்னால் உடனே சரியாகிவிடும்”
டாக்டர் ஏகாம்பரம் குருவிடம் முழு பிரச்சனையும் என்ன வென்று கேட்க பயந்து எப்படியாவது அவனை அனுப்பிவிடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
“சரி டாக்டர். நான் யாரை பார்க்க வேண்டும்?”
“நீங்க அச்சா டாக்டரை போய் பாருங்க. அவர் உங்க பிரச்னையை சரி செய்துவிடுவார்.”
“அது என்ன அச்சா டாக்டர்?”
“அது ஒன்றுமில்லை. அவருக்கு இந்தி தெரியும். அவர் பாலச்சந்தர் படத்தில் வருவது போல எப்ப பார்த்தாலும் பேசும்போது அச்சா அச்சா என்று சொல்வார். அதனால் அவர் அச்சா டாக்டர். நான் அவருக்கு போன் செய்து சொல்லிவிடுகிறேன். அவரை நாளை காலை எட்டு மணிக்கு நீங்க சந்திக்கலாம்”
குருசாமி அச்சா டாக்டர் விலாசம் வங்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
“பாவம் அந்த அச்சா டாக்டர். இவனிடம் மாட்டிக்கொண்டார் “ என்று ஏகாம்பரம் கவலைப்பட்டார்.
அடுத்த நாள் காலை குருசாமி மிகவும் மகிழ்ச்சியுடன் அச்சா டாக்டரை பார்க்க சென்றான். காலை சரியாக 8 மணிக்கு அவருக்கு முன்பாக உட்கார்ந்து இருந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “ நான் டாக்டர் ஏகாம்பரத்தின் சிபாரிசின் பேரில் வந்து இருக்கிறேன். நீங்க நல்ல டாக்டர் என்று அவர் சொன்னார். என் பிரச்சனையை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும்” என்று சொன்னான்.
“அச்சா பகுத் அச்சா”
“டாக்டர் நீங்கள் சொல்லும் அச்சா நன்றாக இருக்கிறது என் பிரச்சினையை கொஞ்சம் கேட்கிறீர்களா?”
“அச்சா ..சரி சொல்லுங்கள் உங்கள் பிரச்சனைதான் என்ன?”
டாக்டர் எனக்கு தினமும் உச்சா போகும் போது..”
“அது என்ன உச்சா.?. அச்சா மாதிரி இருக்கே..”
“அதுவும் இந்தி வார்த்தை என்று எனக்கு சந்தேகம்”
“எப்படி?”
“உச்சா அப்படின்னா உட் ஜா..அதாவது எழுந்து போ..அதாவது நான் உச்சா என்று சொன்னது யூரின். அத எழுந்து போகலாம் , உட்கார்ந்து போகலாம், நின்றுகொண்டு போகலாம் எப்படிவேணும்நாலும் போகலாம் அதனால் அது உச்சா..”
அச்சா டாக்டருக்கு ஏகாம்பரம் சொன்னது நினைவு வந்தது. இவன் ஒரு விவகாரமான ஆள். இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்படியாவது இவனை அனுப்பிவிடவேண்டும்.
“அச்சா..அச்சா.. சச்சா?”
“சச்சாதான் டாக்டர். அதில் தான் எனக்கு பிரச்சனை”
“அச்சா..”
“என் பிரச்சினையை கொஞ்சம் கேட்கிறீர்களா?
“சரி சொல்லுங்கள் உங்கள் பிரச்சனைதான் என்ன?”
டாக்டர் எனக்கு தினமும் யூரின் போகும் போது...”
“என்ன ஆச்சு யூரின் போகும் போது உங்களுக்கு எரிச்சலா இருக்கா இல்ல கஷ்டமா இருக்கா?”
“அது இல்ல டாக்டர்”
“அச்சா... என்ன பிரச்சனை சொல்லுங்க”
“ அது இல்ல டாக்டர் ..அதெல்லாம் நல்லாத்தான் போகுது. எந்த பிரச்சனையும் இல்லை.”
“பின்ன எதுக்கு இங்க வந்தீங்க?”
“டாக்டர் இது வேற பிரச்சனை..அத சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு”
“பிரச்சனை என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே உங்க பிரச்சனை என்ன. வெட்கபடாம சொல்லுங்க”
“சரி டாக்டர் நான் சொல்லிடறேன். நான் வந்து உச்சா போகும்போது யாரோ வந்து விசில் அடிக்கிற மாதிரி எனக்கு கேக்குது”
“அப்படியா? எங்க உங்க வீட்டுலையா இல்ல பொது இடத்திலா? உங்க கூட வேற யாரும் இல்லையே?”
“சீச்சீ அதெல்லாம் யாரும் கிடையாது டாக்டர். ஆனால் நான் தனியா தான் போறேன். ஆனா உச்சா போகும்போது யாரோ விசில் அடிக்கிறார்கள். டாக்டர் எனக்கு பயமா இருக்கு டாக்டர். இதுதான் என்னுடைய பிரச்சனை. நீங்க எப்படியாவது சரி பண்ணி விடுங்க”
“அந்த மாதிரி பிரச்சனையா.. சரி சரி இதுக்கு நீங்க என்கிட்ட வரக்கூடாது. எனக்கு வந்து இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வைத்தியம் செய்ய முடியாது. நீங்க மீண்டும் டாக்டர் ஏகாம்பரம் கிட்ட சொல்லுங்க. அவர் சரி பண்ணி விடுவார்”
“சரி .வேறு வழியில்லை என்றால் நான் ஏகாம்பரம் டாக்டரிடம் போகிறேன்”
என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் நேரம் வாங்கிக்கொண்டு எகாம்பரம் டாக்டரைப் பார்க்க சென்றான்.
ஏகாம்பரம் டாக்டருக்கு திகிலாக இருந்தது. மீண்டும் இவனிடம் திரும்ப மாட்டிக்கொண்டோம் என்ன செய்வது. வந்து தொலைக்கட்டும். அவன் வரவுக்காக காத்திருந்தார்
குருசாமி “நீங்க சொன்ன அச்சா டாக்டர போய்ப் பார்த்தேன். அவர் என் பிரச்னையை கேட்டுவிட்டு சரி செய்ய முடியாது நீங்க ஏகாம்பரம் டாக்டரிடம் சொன்னால் அவர் சரி செய்து விடுவார் என்று சொல்லிவிட்டார்.”
“சொல்லுங்க”
“சில நாட்களாக எனக்கு யூரின் போகும்போது யாரோ விசில் அடிக்கிற மாதிரி கேட்குது. இதான் பிரச்சனை”
“நீங்க தனியா போகும்போதா அப்படி கேட்குது?”
“அமாம். எங்க வீட்டுல தனியா போகும்போது தான் விசில் சத்தம் கேட்குது.”
ஏகாம்பரம் யோசித்தார்.
“நீங்க யூரின் போகும்போது ஒரு செல்ஃபி எடுத்துட்டு நாளைக்கு வந்து என்ன பாருங்க உங்க பிரச்னையை சரி பண்ணிடலாம்”
“கண்றாவி..சீசீ ..அத்த போயி யாரவது செல்பி எடுப்பாங்களா. அசிங்கம்.”
“நான் சொன்னத நீங்க தப்பா புரிஞ்சிகிட்டிங்க. நான் உங்க மூஞ்சிய மட்டும் யூரின் போகும்போது செல்பி எடுத்துக்கொண்டு வர சொன்னேன்”
அடுத்தநாள் தான் எடுத்த செல்பியுடன் குரு டாக்டர் ஏகாம்பரத்தை சென்று பார்த்தான்.
டாக்டர் அந்த செல்பியைப் பார்த்து சிரித்தார்.
“என்ன டாக்டர் ..எதுக்கு சிரிக்கிறிங்க? என்ன ஆச்சு?”
“நீங்களே பாருங்க..இதுல உங்க உதடுகள் குவிந்து இருக்கு. நீங்களே விசில் அடித்துவிட்டு யாரோ அடிப்பதாக சொல்கிறீர்கள்”
“என்னால நம்ப முடியவில்லை டாக்டர்”
“அப்படியானால் நீங்க நாளைக்கு உங்க வாயில் துணிய கட்டிக்கிட்டு யூரின் போங்க. அப்ப விசில் சத்தம் கேட்குதா பார்க்கலாம்”
குரு மீண்டும் டாக்டரை பார்க்க வரவில்லை.
Leave a comment
Upload