திருவாலங்காடு - பழையனூர் கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்றுக்கதைகள்.
நீலிக்கண்ணீரும், உயிர் துறந்த 70 வேளாளர்களும் -- சென்னை மாதம் - 47
'இவள் நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்' என்று ஏன் சொல்கிறோம் ? சென்னை பெறுநகரைச் சார்ந்த திருவாலங்காடு - பழையனூர் பகுதியில் நடைபெற்ற பல கதைகள், வரலாற்று சம்பவங்கள் இரண்டு பேய்களை சுற்றியுள்ளன -- ஒன்று நீலிப்பேய், இன்னொன்று காரைக்காற்பேய் (காரைக்கால் அம்மையார்).
தொல்லியல் துறை, மேனாள் இயக்குநர் திரு நடன காசிநாதன் "பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நீலி பற்றி இரு கதைகள் கூறப்படுகின்றன" என்கிறார்.
முதல் கதை --
பாண்டியன் நெடுஞ்செழியனின் மதுரை மூதூரை எரியூட்டிய பிறகு கற்புக்கரசி கண்ணகி முன்பாகத் தோன்றிய ஊர்த்தெய்வம், கண்ணகி தன் கணவனை இழந்ததற்கு இரங்கிற்று. இது ஊழ்வினையின் விளைவு என்று இயம்பிற்று. மேலும் அத்தெய்வம் நெடுஞ்செழியன் தவற்றுக்குக் கோவலன் பழவினையே காரணம் என்று கண்ணகிக்குப் புலப்படுத்தியது. கபிலபுரத்து வணிகன் சங்கமன் தன் மனைவி நீலியோடு சிங்கபுரத்துத் தெருவில் நகை விற்பைனை செய்தான். பரதன் என்பது கோவலன் முற்பிறப்புப் பெயர். சங்கமனை ஒற்றன் என்று தன் மன்னனுக்குச் சொல்லிக் கொல்வித்தான். கணவனை இழந்த நீலி இது முறையோ என்று அலறினாள். பதினான்கு நாள் கழித்து மலைமேல் ஏறி வீழும்போது, யான் பட்ட துன்பம் எனக்குத் துன்பம் செய்தோரும் படுக என்று சபித்தாள். அவ்வினையே இன்று கோவலன் உயிரை வவ்வியது."
திரு நடன காசிநாதன் குறிப்பிடும் இரண்டாவது கதையில் கச்சியம்பதியில் வாழ்ந்து வந்த அந்தணன் ஞானாதீபனின் மகன் புவனபதி, திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையானான். இவன் காசி யாத்திரை செல்ல முடிவெடுத்தபோது, ஒரு பேய் கணிகையாக உருக்கொண்டு அவனை தம்மோடு வரும்படி அழைத்தது. வணிகனுக்கு அவள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இடுப்பில் செருகியிருந்த தம் சுரிகையில் அவன் கையை வைக்கவே , அவள் மறைந்துவிட்டாள்.
பின்பு வியாபாரம் செய்யும் பெண்ணாக ஒரு கடையில் அமர்ந்து, அந்த பேய் அவனை பொருள்கள் வாங்க கூறியது. மறுபடியும், சுரிகையில் அவன் கையை வைக்க, கடையும், வணிகப் பெண்ணும் மறைந்தனர்.
வணிகன் திருவாலங்காட்டை அடுத்துள்ள பழையனூருக்கு வந்தபோது, அவ்வூர்க் கூழாண்டார்களிடம் திருவாலங்காட்டில் நடந்த நிகழ்வுகளை விவரித்துக்கொண்டிருந்தான். அப்போது அப்பேய் அவ்வணிகனுடைய மனைவி உருவில், கையில் குழந்தையோடு அங்கே வந்து, கண்ணீர் வடித்து, அவர் கணவர் தக்கோலத்தில் விட்டு வந்ததாக பழையனூர் ஊர் மக்களிடம் முறையிட்டது.
வணிகன் அவள் தன் மனைவி அல்ல என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னான், அவன் உயிருக்கு ஆபத்து என்றும் சொன்னான். ஆனால் கூழாண்டார் கோத்திரத்தைச் சேர்ந்த பழையனூர் வேளாளர்கள் வணிகனை வற்புறுத்தி, அவளோடும் குழந்தையோடும் அன்றிரவு பழையனூரிலேயே தங்க வைத்தனர். அவன் உயிர் பிரிந்தால், எம் 70 வேளாளர்களும் உயிரையும் கொடுப்போம் என்று உறுதி அளித்தனர். கணவர் சுரிகையை வைத்திருப்பதால் தம் உயிருக்கு ஆபத்து என்று பேய் சொன்னதின் பெயரில், ஊர் மக்கள் சுரிகையையும் வாங்கிக் கொண்டனர்
அன்றிரவு அப்பேய் அவனை கொன்றுவிட்டு, அவனது குழந்தையாக உருப்பெறச் செய்து, எடுத்து இந்த கொள்ளிக் கட்டையையும் வீசி எறிந்து மறைந்துவிட்டது.
மறுநாள் காலை, இல்லத்துக்கு வந்த வேளாளர்கள் வணிகன் இறந்து கிடந்ததை பார்த்ததும் திகைத்து நின்றனர். அவனது மனைவியைக் காணவில்லை. தாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்ந்தனர் வேளாளர்கள்.
"அவ்வூர் இறைவன் சாட்சிநாதர் கோயிலுக்கு முன்பாகத் தீ வளர்த்து எழுபது பேரும் தீயில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக்கொண்டனர்," என்று குறிப்பிடுகிறார் திரு நடன காசிநாதன்.
"முதல் கதை மணிமேகலையில், வஞ்சி நகர் புக்ககாதையில் மணிமேகலையிடம் கண்ணகி கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கதை (தேவார ) திருஞானசம்பந்தராலும், பிற்கால புலவர்களாலும் புலவர்களாலும் கூறப்பட்டுள்ளது. முதல் கதைக்கும் இரண்டாம் கதைக்கும் தொடர்புடைய நீலிக் கண்ணீர் இரண்டாம் கதையில் கையாளப் பெறும் பொய்மைக் கண்ணீர் வஞ்சம் என்ற பொருள்களிலேயே இந்நாள் வரை வழக்கத்தில் இருந்து வருகிறது", என்று கூறுகிறார் திரு நடன காசிநாதன்.
பழையனூர் நீலியின் கதை சிற்சில மாறுபாடுகளுடன் கூறப்படுகிறது. அதில் ஒரு வடிவம் இது; பழங்காலத்தில் காஞ்சி நகரத்தைச் சேர்ந்த அந்தணரான புவனபதி என்பவர் திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். காசி யாத்திரை செல்லத் திட்டமிட்ட புவனபதி காசிக்கு சென்று அங்கேயே சில காலம் தங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த சத்தியஞானி என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அவரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற புவனபதி சத்தியஞானியின் மகளான நவக்கியானியைக் கண்டு ஆசைப்பட்டு தனக்கு திருமணமானதை மறைத்து அவளை திருமணம் செய்துகொண்டார். பிறகு தன் ஊரான காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி தானும் உடன் வருவதாக அடம்பிடித்ததால் வேறு வழியில்லாமல் அவளையும் உடன் அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். இவர்களுடன் நவக்கியானியின் அண்ணன் சிவக்கியானியும் புறப்பட்டார். சொந்த ஊரை நெருங்கும்போது இவர்களை என்ன செய்வது என்று புவனபதி யோசித்தார். ஒருநாள் மாலையில் திருவாலங்காட்டை அடைந்து அவர்கள் அங்கேயே இரவைக் கழிக்க முடிவு செய்தனர். அங்கே தங்கி இருந்தபோது குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு ஊருக்குப் புறப்பட்டுவிட்டார் புவனபதி.
தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்து தானும் அருகில் இருந்த புளிய மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டில் சுற்றித் திரிந்தனர். நீண்டகாலம் கழித்து அடுத்த பிறவியில் புவனபதி வணிக குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தார். குழந்தை பிறந்தபிறகு அதன் சாதகத்தைக் கணித்த சோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருக்கிறது. எனவே வடக்கில் செல்வதை தவிர்க்கவும் என்று அறிவுரை கூறினர். மேலும் அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றை கொடுத்தனர். தரிசனன் வளர்ந்த பிறகு காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் திருமணம் செய்து கொண்டார். தரிசனனின் தந்தை இறப்பதற்கு முன், அவருக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறி, மந்திரக் கத்தியை உடன் வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு இறந்துபோனார்.
காஞ்சியில் இருந்த தரிசனன் பழையனூர் சென்று வணிகம் செய்ய எண்ணம் கொண்டார். பழையனுரூக்கு புறப்பட்ட தரிசனின் வழியில் திருவாலங்காட்டை அடைந்தார். அவருக்காக காத்திருந்த நீலி, தரிசனனிடம் மந்திரக்கத்தி இருந்ததால் அவரை நெருங்க முடியவில்லை. இதனால் ஒரு தந்திரம் செய்த நீலி தரிசனனின் மனைவியைப் போல் உருமாறி, ஒரு கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக திருவாலங்காடு ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினாள். தன் கனவனை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று அழுது முறையிட்டாள். இவள் தன் மனைவியல்ல என்பதை உணர்ந்த தரிசனன் அவளை மறுத்தார். தன் கணவர் தன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவார். எனவே அவர் கையில் உள்ள கத்தியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள்.
இவளுடன் சென்றால் என் உயிருக்குதான் ஆபத்து என்றும் தரிசனன் கூறினார். அதற்கு பஞ்சாயத்தார் இவளுடன் இன்று ஒருநாள் தங்குங்கள் உங்களுக்கு ஒன்றும் நேராது. காலையில் பேசிக்கொள்ளளாம். ஒருவேளை உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், இந்த பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் 70 வேளாளர்கள் நாங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று சத்தியம் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தியையும் வாங்கிக்கொண்டனர்.
இதன்பிறகு நீலியுடன் ஒரே அறையில் தங்கவைக்கப்பட்ட தரிசனனை நீலி கொன்றுவிட்டாள். இதனால் 70 வேளாளர்களும் தங்களால் ஒரு உயிர் போய்விட்டதே என்று வருந்தினர். தாங்கள் தரிசனனுக்கு அளித்த வாக்கின்படி சாட்சிபூதேசுவர் சிவன் கோயிலின் அருகில் தீ மூட்டி அதில் விழுந்து தங்களை மாய்த்துக் கொண்டனர்.
வாக்குத் தவறாத இந்த 70 வேளாளர்களும் திருவாலங்காட்டில் தீக்குளித்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டப்பட்டு அவர்கள் தீகுளிக்கும் சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது. மன உறுதியுடன் மறு பிறப்பு வரை போராடி தன் கணவனை கொன்று பழி தீர்த்த நீலிக்கு திருவாலங்காட்டில் ஒரு சிறிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
-- (தொடரும்)
-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)
Leave a comment
Upload