உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே (திருமூலர்)
இந்நிலத்தில் உயிர் வாழ உணவும், காற்றும் எப்படி அவசியமோ அவ்வாறே மருந்துகளும் தேவையாகி விடுகிறது. வரும் முன் காக்கவும், நோய் வந்த பின் சுகமாக்கவும் மருந்து நிச்சயம் தேவை. "நீரின்றி அமையாது உலகு" என்று உரைக்கிறது குறள். வாழ்க்கை முறை மாறி வரும் இன்றைய சூழலில் மனித உடலை பல்வேறு நோய்கள் ஆக்கிரமிக்கின்றன. எனவே, "மருந்தின்றி அமையாது உலகு" என்னும் புதுக்குறளைப் படைக்க வேண்டி உள்ளது.
வள்ளுவர் திருக்குறளில் 'மருந்து' என்னும் ஒரு அதிகாரத்தையே படைத்து, உடல் நலம் காக்கும் வழிகளை கூறுகிறார் என்றால் மற்றும் ஒரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான திரிகடுகம் பாடலுக்குப் பாடல் மருந்துகளைப் பற்றி பேசுகிறது . நல்லாதனார் என்னும் புலவர் எழுதிய திரிகடுகத்தில் நல்வாழ்வுக்குத் தேவையான அறவுரைகளை 'மருந்தெனவே' கூறுகிறார் .
திரிகடுகம் என்பது காரணப்பெயராகும். 'திரி' என்னும் சொல்லுக்கு மூன்று என்றும் 'கடுகம்' என்னும் சொல்லுக்கு காரம் மிக்கது என்றும் பொருள் . சுக்கு , மிளகு ,திப்பிலி என்ற காரத்தன்மை கொண்ட மூன்று பொருள்களால் ஆன மருந்து திரிகடுகம் என்றும் ,சமய சஞ்சீவி திரிகடுகம் என்றும் சித்த வைத்தியத்தில் அழைக்கப்படும். குழந்தை வளர்ப்பில் இம்மூன்று பொருட்களின் மருத்துவக் குணங்கள் நாம் அறிந்ததே. கார்ப்புச் சுவை உள்ள இம்மருந்து பெரியவர்களுக்கும் அருமருந்து.
ஒவ்வொரு பாடலிலும் மூன்று அறக் கருத்துக்களைக் கொண்டதால் இந்நூலைத் திரிகடுகம் என்று அழைத்தல் பொருத்தமானதே . இந்நூலின் அமைப்பு ஏனைய அறநூல்களைப் போலவே அழகானது. காப்புச் செய்யுளுடன் துவங்கும் நூலில் அதைத் தவிர்த்து நூறு பாடல்கள் உள்ளன. நூலின் முதற் பாடலின் 'திரிகடுகம் போல மருந்து' என்னும் இறுதி அடி, இந்நூலின் பெயர் காரணத்தை எடுத்துக் கூறுகிறது. இதுவே அப்பாடல்
அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.
அருந்ததியைப் போல கற்புடைய மங்கையரை மணம் செய்துக் கொள்வதும், உயர்பண்புகளை உடைய, பராம்பரிய குடியில் பிறந்தவரின் தொடர்பும், சொல்லில் ஏற்படும் குற்றங்களைக் களையக்கூடிய கேள்விச் செல்வம் கொண்டவரின் நட்பும் திரிகடுகம் போல ஒருவருக்கு நன்மை விளைவிக்கும் மருந்தாகும் என்பதே இப்பாடலின் பொருளாகும்.
ஏனைய நீதி நூல்களைப் போலவே திரிகடுகமும் அறக்கருத்துக்களை செறிவாக தன்னகத்தே கொண்டுள்ளது .கொல்லாமை ,ஊன் உண்ணாமை , அருளுடைமை , இன்சொல் கொண்டிருத்தல், நட்பின் பெருமை என பலவகையான நல்வழிகளை இவ்வாழ்க்கைக்கும், மறுமைக்கும் நலம் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இனி இந்த வாரத்துக்கான திரிகடுகம் பாடல் இதோ :
உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.
திரிகடுகம் -27
இப்பாடல் சொல்லும் மூன்று கருத்துக்கள்:
•உணவு உண்ணும் நேரத்தில் நீராடி உண்ணுதல்.
•எவ்வளவு பெரிய பலனை அடைவதாய் இருந்தாலும், ஒரு பக்கம் சார்ந்து பொய் சொல்லாது இருத்தல்.
•தோல் வற்றி ,உணவில்லாத காரணத்தால் உடம்பு இளைத்து அழியும் நிலை வந்த போதும் தனக்குரிய நற்குணங்களில் இருந்து நீங்காது இருத்தல்.
இம்மூன்றும் மனம், மொழி, உடல் இவற்றில் குற்றமற்ற தூய்மை உடைய சான்றோரின் செயல்களாகும்.
எத்தனை செல்வம் இருந்தாலும் உடல், மனம், வாக்கு இவற்றில் தூய்மை கொண்டு வாழ்வதும், உலகமே பரிசாக கிடைத்தாலும், ஒருவருக்காக பொய் சான்று சொல்லாமல் இருப்பதும், எத்துணை துன்பம் நேர்ந்தாலும் தமக்குரிய அருங்குணங்களில் இருந்து விலகி நடக்காமல் இருப்பது, இவை அனைத்தும் அறிவுடைய பெரியோரின் செயல்கள் என்று திரிகடுகம் விளக்கம் தருகிறது.
அருமையான,உயிர் காக்கும் மூன்று மருந்துகள் அல்லவா இவை?
மற்றும் ஒரு அழகிய பாடலுடன் ,மீண்டும் சந்திப்போம்.
-தொடரும்
Leave a comment
Upload