இந்துக்களின் இறை பக்தி எங்கு இயற்கையாக அதிகமாக உள்ளது என்று பார்க்க வேண்டுமெனில் ஒரு முறை இந்து சந்திரனமானம் நாட்காட்டி மாதமான ஆஷாட (ஜூலையில் வருவது) ஏகாதசியில் (11 வது நாள்) பண்டர்பூருக்கு போய் வர வேண்டும். அந்த பக்தி வெள்ளத்தில், சராசரியாக பதினைந்திலிருந்து இருபது லட்ச பக்தர்கள் கூடும் தினத்தில், கூட்டத்தில் மூழ்கி திக்கு முக்காடி மூச்சிழுக்க வேண்டும். மூச்சு நின்னதுன்னா வைகுண்டம். மூச்சு வந்ததுன்னா பக்தி பரவசம். இரண்டுமே வரப் பிரசாதம் தான்.
இந்த பண்டரிபுரம், பண்டரி என்று செல்லமாக பக்தி வாஞ்சையுடன் அழக்கப்படும் இந்த க்ஷேத்ரத்தில் ஆஷாட சுக்ல ஏகாதசி தினக் கொண்டாட்டங்களைக் காணக் கண் கோடி வேண்டும். புண்ணியமும் செய்திருக்கவேண்டும். அன்று முந்தைய நாள் பூனாவிற்கு அருகிலிருக்கும் ஆலந்தியிலிருந்து காடு மலைகளடங்கிய 250 கிலோமீட்டர் தூரத்தை சந்த் ஞானேஷ்வரரின் பாதுகைகளத் தாங்கி வரும் பால்கி கிட்டத்தட்ட ஐந்திலிருந்து எட்டு லட்சம் வார்கரிகள் சூழ கடந்து வரும்.
வார்காரி என்பது மகாராஷ்டிரா மற்றும் வடக்கு கர்நாடகாவுடன் புவியியல் ரீதியாக தொடர்புடையது. "வரி" என்றால் நகர்வது அல்லது யாத்திரை செல்வது, மற்றும் "கரி" என்றால் அதை மேற்கொள்பவர்.
ஆஷாட சுக்ல ஏகாதசி என்பது பண்டர்பூரில் ஒரு பெரிய கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான நாள். வார்கரிகள் - மகாராஷ்டிரா முழுவதிலுமிருந்து கூடிவரும் விட்டலா பக்தர்கள், தங்கள் வீடுகளிலிருந்து பண்டர்பூருக்கு நடந்து சென்று - தங்கள் விருப்பமான தெய்வத்தின் புனித தரிசனம் செய்வர். ஸ்கந்த மற்றும் பத்ம புராணங்கள் பண்டர்பூரை, பாண்டுரங்க-க்ஷேத்திரம், புண்டரிகாஷேத்திரம் திண்டிரவனம், லோஹதண்ட-க்ஷேத்ரா, லக்ஷ்மி-தீர்த்தா மற்றும் மல்லிகார்ஜுன-வனம் ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
ஒரு வார்கரியின் வாழும் கொள்கைகள்:
• கடுமையான சைவ உணவு உண்பவர்
• கழுத்தில் துளசி மணிகள் கொண்ட மாலை அல்லது ஜெபமாலை அணிந்திருப்ப.
• விட்டலின் பக்தர் என்றாலும், ஒரு வார்காரி துறவரம் பூண்டவரல்லர். அவர் தனது குடும்பத்தையும் தொழிலையும் மேற்கொண்டிருப்பார்.
• ஆனால் அவர் ஒரு புனிதமான வாழ்க்கையின் அனைத்து விதிகளையும் பின்பற்றுவார், ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் (மழைக்காலம்) அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பண்டர்பூருக்குச் செல்வார்.
• வார்கரிகள் பொதுவாக ஜாதி மற்றும் மத வேறுபாடின்றி குழுக்களாக நகர்ந்து, பஜனைகளை நிகழ்த்தி, விட்டல் மற்றும் பண்டரியுடன் (பண்டர்பூரின் செல்லப் பெயர்) தொடர்புடைய புனிதர்களின் பாடல்களைப் பாடுகிறார்கள்.
• "புண்டலிக வரத பாண்டுரங்க ஹரி விட்டல்" என்பது பாடல்களுக்கு இடையே பரவச ஆரவாரம் இடுவர்.
•மாதத்தில் இருமுறை, ஏகாதசியன்று விரதம் இருப்பர். மாணவர் வாழ்க்கையின் போது பிரம்மச்சரியம் (சுய கட்டுப்பாடு) கடப்பிடிப்பவர்.
அற்புதமான மஹாராஷ்டிர கலாச்சாரத்தின் ஒரு தனித்துவமான அம்சம், பால்கி என்பது 1000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமாகும், இது வார்காரிகளால் பின்பற்றப்படுகிறது. துகாராமின் இளைய மகன் நாராயண் மஹ்ராஜ்ஜினால் பால்கியில் சந்த்துக்களின் பாதுகா (செருப்பு) சுமந்து செல்லும் பாரம்பரியம் 1685 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் 1820களில் துக்காராமின் வழித்தோன்றல்களாலும், சிந்தியாக்களின் அரசவைத் தலைவரும் மற்றும் தியானேஷ்வரின் பரம பக்தரான ஹைபத்ரவ் பாபாவாலும் புனித யாத்திரையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
தற்போது, மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து சுமார் 40 பால்கிகளும் (ஸந்த்துக்களின் பாதுகைகள் தாங்கிய பல்லக்குகள்) இந்த கொண்டாட்டங்களில் ஊர்வலமாக வார்கரிகள் கொண்டு வருகின்றனர்.
யாத்திரையின் போது ரிங்கன், தாவா போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ரிங்கனின் போது, மௌலிஞ்சா அஸ்வா (குருவின் குதிரை) என்ற புனிதமான குதிரை, பூமி மீது சிலையாய் எடுத்துச் செல்லப்படும் துறவியின் ஆன்மா என்று நம்பப்படுகிறது. அது பக்தர்களின் வரிசைகள் வழியாக ஓடுகிறது. அதனால் கிளம்பும் பறக்கும் தூசித் துகள்களைப் பக்தியுடன் பிடித்து தங்களின் தலையில் பூசிக்கொள்கிறார்கள். அதே போலவே, தாவா என்பது அனைவரும் வெற்றி பெறும் மற்றொரு வகையான பந்தயமாகும். இது சந்த் துக்காராம் பண்டர்பூர் கோவிலை முதன்முதலில் பார்த்துவிட்டு உற்சாகத்தின் எல்லைக்கே சென்று ஆடி ஓடத் தொடங்கிய விதத்தை நினைவுகூரும் வகையில் இது நடத்தப்படுகிறது.
இந்த வார்கரி இயக்கத்தை நிறுவுவதற்கும் ஆதரிப்பதற்கும் பொறுப்பான ஆசிரியர்களில் தியானேஷ்வர், நாம்தேவ், துக்காராம், சோகமேளா ஆகியோர் அடங்குவர். இன்னும் பலப் பல பக்தர்கள்.இந்த பக்தி வெள்ளத்தில் மூழ்கி பாண்டுரங்கனோடேயே உலவி குலவி ஆடி பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவர்களில் பலர் பலவாறாக அவனை அனுபவித்திருக்கின்றனர். இவர்களில் ஒருவர் குயவர், ஒருவர் தையற்காரர், ஒருவர் நாவிதர், ஒருவர் தோல் வேலை செய்யும் சக்கிலி, சேணியர், முஸ்லீம் என்று பார்க்கலாம். நமது தமிழகத்தில் வாழ்ந்த திருப்பாணாரையும், திருநாளைப் போவாரையும் இங்கு காணலாம்.
1. ஞானேஸ்வரருக்கு சுவற்றை தாங்கினான்
2. கபீர் தாஸர் வீட்டில் துணி நெய்தான்
3. ஜனாபாய் என்ற வீட்டு வேலைக்காரிக்கு மாவரைத்தான்
4. ரோகி தாஸருக்காக செருப்பு தைத்தான்
5. ஸாவ்தா என்ற தோட்டக்காரனுக்கு மண் வெட்டி வைத்து தோட்ட வேலை செய்தான்
6. சோகா மேளா என்ற மலமெடுத்து சுத்தப்படுத்தும் தொழிலாளிக்கு செத்த மாட்டை சுமந்தான்
7. நாம தேவருடன் போஜனம் செய்து அவர் எச்சிலை உண்டான்
8. கோரா கும்பர் என்ற குயவருக்காக மண் பாண்டம் செய்து சந்தையில் விற்றான்
9. தாமாஜி பந்த்திற்காக சுல்தானிடம் பணம் கொடுத்து ரசீது பெற்றான்
10. கூர்ம தாஸருக்காக காலால் நடந்து விரைந்து வந்து உதவினான்
11. சேநா நாயீ என்ற நாவிதனுக்காக அரசனுக்கு சவரம் செய்தான்
12. மீராவிற்காக விஷம் அருந்தினான்
13. ராம தாஸருக்காக மூட்டை நிறைய சொர்ணம் கொண்டு அரசனிடம் வந்து தராசு உயரும் வரை நிறைய கொடுத்தான்
14. துளசி தாசருக்காக வயலில் விதை தெளித்து கஷ்டபட்டான்
15. நர்ஸி மேத்தாவின் மகளுக்கு விவாகம் செய்ய உதவினான்
16. நரஹரி சோநாருக்கு ஹரி ஹர பேதம் இல்லை என்று காண்பித்தான்
17. துக்காராம் அபங்கத்தை தண்ணீரில் இருந்து மீட்டான்
18. சக்குபாய்க்காக அவள் வீட்டில் அடிமை வேலைசெய்தான்
19. கோமாபாய்க்காக பரிசல் காரன் ஆனான்
20. நீளோபாய்க்காக சமையல் காரன் ஆனான்
21. திரிலோசனருக்காக ஆபரண வேலை செய்தான்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என் விட்டலனின் லீலா வினோதத்தை….
இதிலிருந்து, இறைவனை வழிபடுவதிலும், அவனுடைய மெய்யடியார்களுக்கு பணி செய்வதிலும் சாதி, குலம், வயது, தன்மை, சூழ்நிலை, கல்வி, செல்வம், தொழில் இவற்றுல் எதுவுமே குறுக்கிடாது. எந்த சூழ்நிலயில் பக்தி கை கூடுமானால் அவனிடன் மெய்யன்பு தோன்றுமானால் அவனது பேரருள்பெறுவது திண்ணம். அவன் என்றுமே நம்மிடையே இருக்கிறான். நம்முள்ளேயே இருக்கின்றான் என்ற தத்துவமஸி கோட்பாடு விளங்கிகிறது.அவன் எந்த வடிவிலும் தோன்றலாம். சந்த் ஞானேஷ்வர், துக்காராம் மற்றும் பிறரின் எழுத்துக்கள் இந்த குணங்களை சாதாரண மனிதனிடம் புகுத்த உதவியது. வார்கரி பாரம்பரியத்தின் சந்த்துக்கள் பாண்டுரங்கனை "சர்வவல்லமையுள்ளவர்" என்பதை மிக எளிய வார்த்தைகளில் உணர்த்தினர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சிறிய வசனங்களை எளிய வார்த்தைகளில் எழுதி வைத்தனர்.அனைவரும் அதை ஹரிபாட் (ஹரி பாடல்/பாடம்) என்று அழைத்தனர்.
இந்த பக்தனுக்காக இறங்கி பக்தி செய்த, இதைத்தான் தமிழ் சமய இலக்கியங்களில் அடியவற்கு அவன் அடியவன், அடியவர் வசப்படுபவன் என்று படிக்கக் காண்கிறோம், அந்த விட்டலன் இந்த பண்டர்பூருக்கு எப்படி வந்தான் என்று அறிய முற்பட்டால் ஆச்சர்யமே மிஞ்சும்.
அதனால் தானே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றில்லாது, ஜாதி பேதமின்றி பக்தி என்ற ஒரே தகுதி கொண்டு இத்தனை லட்சங்களில் வார்கரிகள் வருகின்றனர்.
பண்டரிபுரம் அமைந்த கதை
மஹாபாரதப் போர் முடிந்து த்வாரகையில் கண்னன் தனது அரண்மனையில் ருக்குமிணி தேவியுடன் இருக்க அவரைக் காண நாரதர் வருகிறார். கிருஷ்ணனின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் இழையோடுவதை பார்த்தார்.
ஏன் கண்ணன் ஏன் வருத்தம் உன் முகத்தில்? அவதார நோக்கமெல்லாம் நிறைவேறியும் வருத்தமெதற்கு?
அதற்கு கண்னன், “நாரதரே? பெற்றவள் ஒருத்தி. வளர்த்தவள் மற்றொருத்தி. இளம் வயதிலேயே அவளையும் பிரிந்து …ஹும்…பெற்றொரை பேணிக் காக்கும் அந்த பாக்கியம் கிட்ட வில்லையே? இந்த உலகில் யாராவது தனது பெற்றொரை அவர்களது முதுமைக் காலத்தில் பெணிக் காத்து வருபர் உள்ளாரா? நான் பார்க்க முடியுமா?
அதற்கு நாரதர், “அப்படி ஒருவன் உள்ளான். வா காண்பிக்கிறேன்” என்று கூற ப்ரஸன்னமாகி போகிறான் கண்ணன். ருக்குமிணியும் தானும் கூட வருவதாகக் கூற மூவரும் புறப்பட்டனர்.
இதற்கு முன்னர், அவர்கள் யாரைக் காண போகிறார்களோ அந்த நபரின் பரிச்சயம் இதோ.
இள வயதில் தாய் தந்தையர் சொல் கேளாத புண்டரீகன் என்ற ஒருவன் இருந்தான். தாய் தந்தையர் இவனது கொடுமை தாங்காது காசி செல்லும் பாத யாத்ரிகர்களிடம் சேர்ந்து சென்று விட்டனர். தானும் தன் மனைவியயும் அழைத்துக்கொண்டு அவனும் காசியை நோக்கி குதிரையில் பயணித்தனர். இடையில் தனது பெற்றோரைக் கண்டும் காணாதது போலே சற்று தள்ளி ஒரு ஆசிரமத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினர். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த குக்குட முனிவரிடம், “இன்னும் காசி எவ்வளவு தூரம்”, என்றதற்கு, அவரோ,” தெரியாது என்றிருக்கின்றார்.
“காசிக்கு அருகில் இருந்தும் அதன் பெருமை தெரியாது இருக்கிறீர்களே”, என்று இகழ்ந்து பேசி தன் இருப்பிடம் வந்தன்.
மறு நாள் அதிகாலை வேளை, அந்த ஆசிரமத்தில் அருவருக்கத்தக்க உருவங்கள் கொண்ட மூன்று பெண்கள் உள்ளே நுழைந்து அந்த ஆசிரமத்தை சுத்தம் மற்றும் பணிபவிடைகள் செய்துவிட்டு, கங்கை யமுனை சரஸ்வதி என்ற மூன்று ஒளி பொருந்திய பெண்மணிகளாக வெளியே வருகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த புண்டரீகன், அவர்களிடம் அவர்களைப் பற்றி வினவ, அவர்களும் தாங்கள் பிறரின் பாவங்களைப் போக்கும் புண்ய நதிகள் தாம், ஆனால் எங்களிடம் வந்து சேரும் பாவங்களை ஏற்று அருவருக்கத்தக்க குரூபிகளாக ஆகிவிடுகிறோம். அந்த பாவங்களக் கழுவிட இந்த முனிவருக்கு பணிவிடைகள் செய்து எங்கள் பழைய ஒளி பெறுகிறோம். நீயும் முற்பிறவியில் செய்த புண்யங்களினால் இங்கு வந்துள்ளாய். இந்த முனிவர் எந்த பெரிய புண்யங்கள் ஒன்றும் செய்தவறில்லை, ஆனல், எப்போதும் த்ம் பெற்றோரை தெய்வமாக மதித்து அவர்களுக்கே பணிவிடை செய்து வருகிறார். அது ஒன்றே மற்றெந்த புண்யங்களை விட உயர்ந்ததால் அவர் உயர்ந்திருக்கின்றார். அதனால் எங்கள் பாவமும் களயப்படுகிறது. அவரது பாத சேவையே எங்களுக்கு போதுமானது என்று கூறினர்.
இதனைக் கேட்ட புண்டரீகன், இனி தம் பெற்றோரை பேணுவதே தம் தலையாய கடமை என்று தன் தோளில் சுமந்தபடியே பாத யாத்திரையாய் அப்போதய திண்டிரவனத்துக்கும் சந்த்ரபாகா நதிக்கும் இடைப்பட்ட தற்போதய பண்டரி நகருக்கு வந்து சேர்ந்தான். அங்கேயே ஆசிரமம் அமைத்து பெற்றோரை கண்ணும் கருத்துமாக கவனித்து வரலானான். பெற்றொர்களும் மகிழ்ந்தனர்.
செங்கல்லாய் மாற சபிக்கப்பட்ட இந்திரன் விஷ்ணுவை சாபம் தீர வழி கோர அவரும்,” நீ புண்டரீகனது ஆசிரமத்தில் கிட. அங்கு வந்தூன் மீது அடியிட்டு நிற்பேன். அப்போது உனது சாபம் தீரும். உன் ஞாபகார்த்தமாக என்றென்றும் அந்த செங்கல்லில் நின்றிருப்பேன்,” என்றார்.
புண்டரீகன் பெற்றோர்க்கு செய்யும் பணிவிடைகளைக்காண த்வாராகதீஸ்வரன்னீல வண்ணனாய், பொன்முடி தரித்து, அரையிற் பட்டு பீதாம்பரம் இலங்க, சங்கு சக்கர கதாதரனாய், மார்பிலே வன மாலையும் கௌஸ்த்துபமும் துலங்க மெல்ல மெல்ல நடந்துவந்து புண்டரீகனது பக்கத்தில் நின்றார். அவர் வருகின்ற ஒலியும், அவரது திருமேனியின் ஒளியும் அவனை மெய் மறக்கச்செய்தன. கங்கா தேவி கூறியது போலே, ‘இறைவன் தன்னை தடுத்தாட்கொள்ள வந்து விட்டான்,’ என்றுணர்ந்தான். அருகே இருந்த செங்கல்லை எடுத்துப்போட்டு,”இதில் சற்று நின்றிரும், இதோ எனது பெற்றோர்க்கு பணிவிடை செய்து விட்டு வந்து விடுகிறேன்,” என்று கூறிவிட்டு ஆசிரமத்துள் செல்கிறான்.
சாபம் நீங்கிய இந்திரன் தனது சுய நிலை பெற்று தன்னகம் திரும்பினான். இறைவனோ புணடரீகன் தனது பெற்றோர்க்கு செய்யம் பணிவிடையில் லயித்தபடி நின்றான்.
புண்டரீகனது வேண்டுகோளின்படியே அந்த இடத்திலேயே இறைவனை எழுந்தருள இசைந்தான். அந்த பக்தனது பெயராலேயே அந்நகர் புண்டரீகபுரம் என்றும் நாளடைவில் பண்டரிபுரம் என்று அழைக்கப் பெறுகிறது.
அந்த நகரில் த்வாரகாதீசனின் கோயிலும் பண்டரினாதனின் கோயிலுக்கும் சந்திரபாகா நதிக்கும் இடையில் இருக்கிறது. பிறைச்சந்திரனைப் போன்றே அரை வட்ட வடிவில் இருப்பதால் அந்த நதி சந்திரபாகா என்றழைக்கப்படுகிறது.
ஆஷாட சுக்ல ஏகாதசிக்கு முதல் நாளில் பால்கிகள் முன் கூறிய சந்துக்களது பாதுகைகளை தாங்கியபடி வந்து சேருகின்றன. நாடெங்கிலுமிருந்தும் விட்டலனது பக்தர்கள் லட்சங்களின் அன்று குவியக்குவிய குழுமியிருக்க காணலாம்.
பாதை தெரியாது. தலைகளசைந்து அசைந்து செல்வதைக் காணலாம்.பெண்கள் தலயில் துளஸி மாடங்களையும் விட்டலன் ருக்குமிணி சிலைகளை ஏந்தியவாறு நடந்து வருகிறார்கள்.
எந்த தெரு எடுத்தாலும் மக்கள் வெள்ள ஓட்டம்தான். கையில் தம்புரா கிண்ணாரம் சஹிதம் ஒலித்தவாறு ஜெய் ஜெய் ராம் க்ரிஷ்ண ஹரி ஜெய் ஜெய் ராம் க்ரிஷ்ண ஹரி என்ற கோஷம் எங்கும் ஒலித்தன. வானைப் பிளந்தன. கேட்பவர் உடலில் ஒரு ப்து வித பக்தி கலந்த இன்ப உணர்ச்சி தானாய் எழும்புவதை காணமுடிந்தது. சுருக்கமா சொல்லணும்னா இந்த கொண்டாட்ட கோலாகலங்களில் கலக்காது ஏதொ ஒரு வழிப் போக்கன் மாதிரி பார்த்துக்கொண்டு செல்வதென்பது இயலாத காரியம்.
ஆங்காங்கே பல பக்தர்கள் தெருவில் விழுந்து புரண்டு செல்வதைப் பார்க்கலாம். தன் முன்னோர்களான சாதுக்கள் நடந்த பாதையில் இருந்து பாத தூளி தம் மீது படட்டும் என்ற எண்ணத்தில் செய்வதாக தெரியவந்தது.
திடீரென்று, ஒருவர் தனது தோள் துண்டை நமது பாதத்தருகே போட்டுவிட்டு அதை எடுத்து கண்களில் ஒற்றிக் கொள்வதயும் காண நேரிட்டது. அனைவரிலும் பாண்டுரங்கன் இருப்பதாகவும் நம் பாதமும் அவன் பாதத்தை தொட்டு கும்பிடுகிறார்களாம் என்று தெரிய வருகையில் பக்தியின் எல்லையை நினைத்து பூரித்தேவிட்டேன்.
ஊருக்குள் வந்திருக்கும் பால்கிகள் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் பக்தர்கள் காவிக்கொடிகளை ஆட்டியவாறு புடை சூழ ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. அதன் முன்னும் பின்னும் சென்ற பக்தர்களது இசைக் கருவிகள் இசைக்க எழுந்த சரண கோஷம் எங்கும் நீக்கமற பரவிக்கொண்டே இருந்தது.
சந்திரபாகா நதிக் கரையில் அசைந்தசைந்தாடும் பக்தர்கள் ஒரு முறையாக பாண்டுரங்கனின் நாமங்களையும், சந்த்துக்கள் பேரைச்சொல்லியவாறு நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அங்கே ஒரு பெண்மணி பக்தி பரவசமுடன் பாண்டுரங்கனது லீலைகளை ப்ரகடனப் படுத்திக்கொண்டிருந்தாள். அதற்கும் அனேக பக்தர்கள் சிரத்தையாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
இத்தனை கோலாகலங்கள் கொண்டாட்டங்களில் பக்தர்கள் ஏகாதசி உபவாசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர் என்றால் எங்கிருந்து இவர்களுக்கு சக்தி என்று யோசிக்கத் தோணும். அந்த அபரிதமான பக்தியின் சக்தியே அங்கு தொற்று நோய் போலே பரவி இருந்தது என்பது தான் அனுபவித்த உண்மை.
எதிரில் ஒருவருகொருவர் ராம் க்ரிஷ்ண ஹரி என்று ஒருவர் கூற மற்றவர் வாசுதேவ ஹரி என்று விளித்துக்கொள்வது சர்வ சதாரணமாக காண முடிந்தது.
அன்று கோயிலுக்குள் சென்று தரிசனம் என்பது முக்கிய நோக்கமாய் அங்கு விளங்கவில்லை. மாறாய் அனைவரிடமும் விட்டலன் இத்துணை பக்தர்கள் வெளியில் இருக்கையில் அவனும் இந்த கூட்டத்திற்குள் தான் இருந்துகொண்டு லீலை செய்வதாய் பக்தர்கள் திடமாக கூறினார்கள்.
இதற்கிடையில் தலையில் கூம்பு கவிழ்த்தாற் போல் மயில் பீலிகள் மற்றும் வெண் மணிகளாலான தொப்பியணிந்து சிலரைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் சிவ பக்தர்கள் . காதுகளிலும், கை கால்களிலும் சிறு மணிகளைக் கட்டிக் கொண்டு இருந்தனர். கேட்டால் ஹரி நாமத்தைக் கேட்க வேண்டாம் என்றே அந்த அங்க மணிகளை அசைத்து ஒலிக்கப்படும் ஹரி நாமத்தை தன் காதுகளில் ஏறாத வண்ணம் பார்த்துக் கொள்கின்றார்களாம். இது கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும் பண்டய காலத்தில் இந்த சைவ வைஷ்ணவ பேதங்கள் மிகுதியாய் இருந்ததாம். நரஹரி சோனார் என்ற தீவிர சைவருக்கு பாண்டுரங்கன் தன் லீலையின் மூலம் ஹரியும் ஹரனும் ஒன்று நிரூபித்தபின் இது சரித்திரமாகி போய்விட்டது. இதை ஊர்ஜிதம் செய்வதாய் ஆதி சங்கரரும் இவர் மீது பரப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டு ரங்கம் என்ற விதமாய் பாண்டுரங்காஷ்டகம் என்னும் ஸ்லோகத்தை இயற்றினார்.
வீட்டு வேலைக்காரி ஜனாபாயுடன் அவரது பக்திக்கு மெச்சி அவருடன் உரலில் மாவரைத்த இடம் காணலாம்.
சந்த் நாம்தேவ் அளித்த நிவேத்தியத்தை எதிர்பட்டு தோன்றி உண்ட அதே விக்ரஹமும் காணலாம். அருகே நாம்தேவ் வம்ச வழியில் வந்த 16 வது தலைமுறையானவரைக் காணலாம்.
இன்னும் பலப் பல அமோக உணர்வுகள்..
பண்டரிக்கு ஒரு முறையாவது சென்று வரவேண்டும் இன்னாளில். சென்ற பின் மறுபடியும் ஆஷாட சுக்ல ஏகாதசி வரும் நாளை நோக்கி காத்திருப்பது இயற்கையாகிவிடும்.
Leave a comment
Upload