தொடர்கள்
கதை
ஜாபாலி  சத்யபாமா ஒப்பிலி

20220713061312664.jpg

சித்திரகூடத்திற்கு செல்வது என்று முடிவாகிவிட்டது. தான் அழைத்தால் அண்ணல் கட்டாயமாக திரும்பி வருவார் என்று தீர்மானமாக நம்பினார் பரத ஆழ்வார்.

" எப்படி மறுப்பார்? அவருக்கு என்மேல் மிகுந்த அன்பு உண்டு. கட்டாயமாக வருவார். அன்னையரும் என் உடன் வந்தால் அவர் மறுக்கவே மாட்டார். நாம் அனைவரும் செல்லலாம். ஏற்பாடு செய்யுங்கள்!"

சுமந்திரரைப் பார்த்து கூறி விட்டு கோசலை மாதவைப் பார்க்க அவர் அந்தப்புரம் சென்றார் பரதன், சத்ருக்னன் பின் தொடர.

வஷிஷ்டரும், சுமந்திரரும், ஜாபாலியும் மற்ற அறிஞர்களும் இருந்த அமைச்சரவையில் பரதன் இவ்வாறு கூறிச்சென்றதும் அனைவரும் ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறு பக்கம் சிந்தனையிலும் ஆழ்ந்தார்கள்.

" ராமன் வருவானா? தந்தையின் சொல் காப்பது தர்மம் என்று தான் பேசுவான். தந்தை மரித்தது தெரிந்தபின் அயோத்தியின் நலனுக்காக திரும்பி வர ஒப்புக்கொள்வானா? பரதன் நாடாள்வதில் அவனுக்கு எந்த மாற்று கருத்தும் இருக்காது. மகிழ்ச்சியுடன் அவனே முடிசூட்டிவிடுவான்"

அத்தனை மனதிலும் இதே சிந்தனைதான். ராமனை மறுபடியும் ஆயோத்திக்கு வரவழைப்பது கடினம்.

வசிஷ்டருக்கு தெரியும் இராமனின் அவதார நோக்கம். இருப்பினும் குருவாக அவர் அவனை சாமாதனப்படுத்த வேண்டும். அயோத்திக்கு வரவழைக்க வேண்டும். "அவன் கூறும் தர்மத்தையே முன் வைப்போம். நாட்டு மக்களை காப்பது மன்னர் வம்ச தர்மமல்லவா!" என்று எண்ணிக்கொண்டார்.

சுமந்திரருக்கும் இதே சிந்தனை தான். ராமன் அவ்வளவு சுலபமாக வரமாட்டான். "மக்களை திரட்டுவோம். அவர்கள் அனைவரும் மறுபடியும் அழைத்தால் அவன் வர தீர்மானிக்கலாம்." யோசித்த உடனே செயல் படுத்த முடிவு செய்தார். அவைக்கு வணக்கம் சொல்லி வெளியேறினார்.

ஜாபாலி அமைதியாக அமர்ந்திருந்தார்.

20220713061336436.jpg

" இவர்கள் அனைவரும் தர்மத்தைக்கொண்டு வாதாடுவார்கள். தந்தை சொல் கேட்பது தர்மமென்றால் நாட்டைக் காப்பதும் தர்மம், என்பார்கள். மக்கள் அனைவரின் விருப்பமும் அது தான் என்றால் மன்னன் மறுக்க முடியாது என்று விவாதிப்பர். எனக்கு தெரிந்து இவை எதற்கும் ராமன் சம்மதிக்க மட்டான். அவனின் தர்மம் தந்தை சொல் காப்பது. அவரே உயிரோடு இருந்து திரும்பி வா என்று சொன்னால் கூட சம்மதிப்பானோ என்று சந்தேகம் தான்"

தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தார். ஜாபாலியும் தசரதன் அரசவையில் ஒரு முக்கியமான அமைச்சர். அவர் கொள்கைகளும் பேச்சும் சற்று முரண்பாடாகத் தான் இருக்கும். ஆயினும் தக்க மரியாதையுடனே நடத்தப்பட்டார். ஒரு நல்ல அரசனுக்கு எல்லா சிந்தனையாளர்களும் தேவை. அவர்கள் நோக்கம் மக்கள் நலமாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

மெதுவாக எழுந்து வெளியில் வந்தார். ஏதோ தான் செய்யவேண்டிய முக்கிய பணி ஒன்று வரப்போவதாக தோன்றியது. " ராமனிடம் பேச வேண்டும். எல்லார் போல அல்லாது என் வாதம் வேறாக இருக்க வேண்டும்" .யோசித்துக்கொண்டே நடந்தவர் எதோ சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். குரங்குகள். கிளையைப் பற்றிக்கொண்டு மரத்துக்கு மரம் தாவிகொண்டிருந்தன. கிளை தான் ஆதாரம். கீழே விழாமல் இருக்க எதையாவது பற்றிக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. நியாயத்தைப் போற்றும் மனிதர்களும் அப்படித்தான். தர்மம் என்னும் கிளையை விடாமல் பற்றிக்கொள்கின்றனர்.

"அதையே விவாதமாய் கொள்வோம். 'உண்டு ' என்று நம்புவதை '' இல்லை என்று வாதடுவோம். ஜபாலிக்கு எதோ பிடி கிடைத்தது போல தோன்றியது. தர்மம் என்பது அவர்கள் ஏற்படுத்திய விதி. யாரும் எதைச் சார்ந்தும் இல்லை, யாரும் எதற்கும் கட்டுப்பட்டவர் இல்லை என்று கூறுவோம். ஒவ்வொரு மனிதனும் தனியானவன் தான். யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல, தந்தை ஆனாலும் சரி, தாய் ஆனாலும் சரி. ஒரு மனிதனின் உறவு என்பது ஒரு வழிப்போக்கன் தங்கும் சத்திரத்தை போலத்தான். கடந்து போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லுவோம். அரண்மனையை விட்டு விட்டு காட்டில் இருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று எடுத்துரைப்போம். கண்கள் பார்ப்பது மட்டுமே உண்மை, கண்களுக்கு தெரியாதது எதுவுமே உண்மை இல்லை. நிதர்சனம் என்பது இந்த உலகம். கண்டறியாத வேறு உலகத்தை பற்றி நம்புவது தேவை இல்லாத விஷயம். பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. இது தான் என் தர்க்கவாதமாக இருக்கப்போகிறது

முடிவுடன் தன் குடிலுக்கு திரும்பினார்.

சித்திரகூடத்தில் அனைவரும் நினைத்தது போலத்தான் நடந்தது. ராமச்சந்திரமூர்த்தி அயோத்திக்கு திரும்ப மறுத்து விட்டார். எல்லாருடைய தர்க வாதமும் தோல்வியுற்றது. ஜாபாலி உட்பட. மற்றவரிடம் பொறுமையாக பதில் சொன்னாலும், ஜாபாலியின் வாதம் இராமனுக்கு சற்று கோபத்தை வரவழைத்தது.

" சத்தியமும், தர்மமும் தான் தலை சிறந்தது. நானே அதை பின்பற்றவில்லை என்றால் என் மக்கள் எவ்வாறு பின்பற்றுவார்கள். எல்லாம் அறிந்தவர்களும், யோகிகளும் கூறுவதும் இதைத்தான். நமது முன்னோர்கள், சத்யத்தையும், தர்மத்தையும் , பிரம்மத்தையும் நம்பினார்கள். ஈகையும் நல்லோரை சார்வதும், அப்பழுகில்லாத வாழ்க்கை வாழ்வதும் அவர்களுடைய வாழ்க்கை முறையாக இருந்தது. நல் வழியே வீடு பேறு தரும் என்று தீர்மானமாக இருந்தார்கள். தங்கள் கடமையில் கருத்தாக இருந்தார்கள். தன் வாழ்வின் தர்மம் உணர்ந்து நிதி வழுவாமல் நடந்தார்கள். இதை எல்லாம் கேள்வி கேட்பது என்பது விரும்பத்தக்க ஒன்றாகாது. உங்களைப் போல் ஒருவரை எவ்வாறு என் தந்தை அரசபையில் அனுமதித்தார் என்றே புரியவில்லை."

ராமன் அத்தனை வேகமாக பேசி யாரும் கேட்டது இல்லையாதலால் அனைவரும் அமைதியாக இருந்தனர். வசிஷ்டர் ராமன் அருகில் சென்று,

"ராமா, அமைதி கொள். ஜாபாலி நம்பிக்கையற்றவர் அல்லர். உன்னை அயோத்திக்கு வர வழைக்கவே இவ்வாறு பேசுகிறார்" என்றார்.

ஜாபாலியும் ராமனிடத்தில், "உன்னை வர வழைக்க நான் கையாண்ட யுக்தி தான் அது என்று கூறி ராமனை சமாதானம் செய்தார்.

இந்த கதை அயோத்யா காண்டத்தில் 108 109 வது சர்கத்தில் இடம் பெறுகிறது. எதையும் நம்பாமல், பாவமோ, புண்ணியமோ, சரியோ, தவறோ, நம்பிக்கையோ, கடமையோ எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை முறை அக்காலத்திலேயே பேசப்பட்டிருக்கிறது. அந்த விவாதம், அனைவராலும் கடவுள் என்று உணரப்பட்ட ராமனிடத்திலேயே நடைபெறுகிறது.

இந்த ஒரு சம்பாஷனை இல்லாமலேயே கதை நிகழ்ந்திருக்கலாம். ஆயினும் மகான் வால்மீகி இதை உள் சேர்த்ததற்கு காரணம் ராமனின் வைராக்கியத்தை மட்டும் சொல்லவா அல்லது எதிர் கால கேள்விகளுக்கு ராமபிரானின் திருவாக்கிருந்து பதில் பதிவிடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்ந்ததாலா!

,