# மகளதிகாரம் - 19 #
அவசரத்தில் மறந்துவிடுகிற
அப்பாவின் அத்தனை பொருட்களின் மீது
மகள்களின் பெயரே
எழுதப்பட்டிருக்கும் போல!
வண்டிச்சாவி துவங்கி
பெல்ட்
தலைகவசம்
கைக்குட்டை
டை அடிக்கும் பிரஷ் என
இன்னும் நீள்கிறது அதன் பட்டியல்
முற்சேர்க்கையாக
எண்ணிலடங்கா முறைகள்
தன் பெயர் அழைக்கப்பட்டே
அலுத்துப்போனவள்
"உங்க பொருள மறந்துட்டு
எம்பேர கூப்பிட்டாமட்டும்
வந்திடவா போகுது.." என
பலமுறை சண்டையிட்டிருக்கிறாள்
அப்பாவுடன்
திடீரென்று ஒருநாள்
மகள் திருமணமாகி சென்றுவிட
அன்றுமுதல் இன்றுவரை
தன் பொருட்களை மறந்துவிடாது
வரிசைப்படுத்தி எடுத்துக்கொள்ளும்
அப்பாவிற்குள்
உறைந்திருக்கிறது மகளின் பெயர்
எதையேனும் மறந்துவிட்டு
ஒருமுறையேனும்
தன்பெயரை அழைக்கும்
அப்பாவின் குரலைக் கேட்க மாட்டோமா என
ஏங்கிக் காத்திருக்கிறாள் மகள்
இதற்கிடையேதான்
வந்து போகின்றன
நாட்கள்
Leave a comment
Upload