தொடர்கள்
ஆன்மீகம்
மூர்க்க நாயனார் !! -​​​​​​​ஆரூர் சுந்தரசேகர்.

மூர்க்க நாயனார் !!


மூர்க்க நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் சிறு வயது முதலே சிவபெருமான் மீது பற்றுக்கொண்டு வாழ்ந்ததோடு தன்னை நாடிவரும் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு உணவளித்த பிறகு உண்பதை வழக்கமாகிக் கொண்டிருந்தார். எந்த சூழலிலும் சிவனடியார்களுக்கு உணவிடுவதை நிறுத்தாதக் கொள்கை கொண்டவர். செல்வம் எல்லாம் இழந்த பிறகும் சூதாட்டம் மூலம் கிடைத்த பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டினைச் செய்து வந்தார். தம்முடன் சூதாட வருவோர் ஆட்டத்தில் முறை தவறி நடப்பவர்களை உடைவாளால் மூர்க்கமாகத் தாக்கும் குணம் கொண்டதால் மூர்க்கர் என்றழைப்பட்டார்.
சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் தொண்டினைத் தொடரும் பொருட்டு சூதாடி பொருளீட்டிய மூர்க்க நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் "நாட்டமிகு மூர்க்கர்க்கும் அடியேன்." என்று புகழ்கிறார்.

திருவேற்காடு ஸ்தலத்தில் அவதரித்த மூர்க்க நாயனார்:
பண்டைய தொண்டை நாட்டில் பாலாற்றின் வடக்குக் கரையில் வளம் நிறைந்து அமைந்திருந்தது திருவேற்காடு என்னும் தலம் (இவ்வூர் பூவிலிருந்தவல்லியிலிருந்து மூன்று கி,மீ. தொலைவில் உள்ளது) இவ்வூரில் வேளாளர் மரபில் அவதரித்தவர் மூர்க்க நாயனார். அறிவு தோன்றிய நாளிலிருந்தே மூர்க்க நாயனார் சிவபிரானிடத்தும் அவர்தம் அடியார்களிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார். தன்னை நாடிவரும் சிவனடியார்களுக்கு அறுசுவையுடன் உணவளித்து பின்னர் தான் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தார். இவர் சிவனடியார்களுக்கு உணவளிக்கும் செய்தி நாடு முழுவதும் பரவியது. இதனால் இவரது இல்லத்திற்கு வரும் சிவனடியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது. நாளடைவில் அவருடைய செல்வ வளம் குன்றத் தொடங்கியது. ஆதலால் தம்முடைய பொருட்கள், நிலங்கள் ஆகியவற்றை விற்று சிவனடியார்களுக்கு அறுசுவையுடன் உணவளிக்கும் தொண்டினை தவறாது தொடர்ந்தார். சில காலம் கழித்து மூர்க்க நாயனாரிடம் விற்கப் பொருட்கள் ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே அடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டினை எப்படியாவது தொடர வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார் மூர்க்க நாயனார்.

சூதாட்டத்தின் மூலமாகச் சிவனடியார்களுக்கு உணவளித்தல்:

மூர்க்க நாயனார் !!


இந்த நிலையில் நாயனாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இவர் தமது இளமைப் பருவத்தில் சூதாடுவதற்குக் கற்றிருந்தார். சூதாடுவது பெரும்பாவம் என்று தெரிந்தும், அவர் தான் கொண்ட குறிக்கோள் நன்மையானது புண்ணியமானது என்று உணர்ந்து சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார். அவ்வூரில் உள்ளவர்களோடு சூதாடத் தொடங்கினார். அதில் பலபொருள் சேர்த்து அதன் வாயிலாகச் சிவனடியார்களுக்கு உணவளித்து வந்தார். அதே சமயத்தில் தம்முடன் சூதாட வருவோர் ஆட்டத்தில் முறை தவறி நடப்பவர்களை தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் உடைவாளால் மூர்க்கமாகத் தாக்கும் குணம் கொண்டதால் ‘மூர்க்கர்’ என்றழைப்பட்டார் (இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை)
அவ்வூரில் இருந்தவர்கள் எல்லோரும் சூதாட்டத்தில் மூர்க்க நாயனாரிடம் தோற்றனர். அவருடன் சூதாட அவ்வூரில் யாரும் முன் வரவில்லை. ஆதலால் இவ்வூரில் இனி இருந்து பயனில்லை என்று எண்ணிய அவர், சிவபெருமான் திருக்கோயில்கள் உள்ள திருத்தலங்களுக்குச் செல்லலானார்.
ஒரு திருத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு, அவ்வூரில் உள்ளோரிடம் சூதாடி பொருளீட்டி, அங்கே சிவனடியார்களுக்கு உணவளித்து, சில நாட்கள் தங்கியிருந்து சூதாட யாரும் வரவில்லை என்றால் அடுத்த தலத்திற்குச் செல்லலானார்.

மூர்க்க நாயனார் சிவபதம் அடைந்தார்:
ஒவ்வொரு ஸ்தலமாகச் செல்லுகையில் திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்தை அடைந்து தங்கிய மூர்க்க நாயனார் அங்கே எழுந்தருளியுள்ள சிவனாரை அளவிலா அன்புடன் வணங்கினார். அத்தலத்தில் பல நாட்கள் தங்கினார். ஈட்டிய பொருளைக் கொண்டு சிவனடியார்கட்கு அறுசுவை உணவளிக்கும் தொண்டினை செய்து முடிவில் சிவபதம் அடைந்தார்.

குருபூஜை நாள்:

மூர்க்க நாயனார் !!


எத்தொழிலைச் செய்தேனும் சிவனடியார்களுக்கு உணவளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட மூர்க்க நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான சென்னை திருவேற்காடு அ/மி வேதபுரீஸ்வரர் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன கும்பகோணம் அ/மி ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலிலும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலிலும், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலிலும் மூர்க்க நாயனாருக்குத் சந்நிதி உள்ளன. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

"திருச்சிற்றம்பலம்"

அடுத்த பதிவில் மூர்த்தி நாயனார்…!!