தொடர்கள்
ஆன்மீகம்
மானக்கஞ்சாற நாயனார்…!! ஆரூர். சுந்தரசேகர்.

மானக்கஞ்சாற நாயனார்…!!


அறுபத்து மூன்று நாயன்மார்களும் தன்னலம் இன்றி பல தொண்டுகள் செய்து, சிவபெருமானின் அருளுக்கு பாத்திரமாகி இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் மானக்கஞ்சாற நாயனார்.
செல்வந்தரான இவர் சிவ பக்தர்களை வழிபடுவதும் அவர்களை உபசரிப்பதும் சிவபெருமானுக்கே செய்யும் உயர் வழிபாடு என்று கருதி, தான் சம்பாதித்த பெரும் பொருள்கள் அனைத்தும் சிவனடியார்களுக்கு உரியது என்று எண்ணி அவர்கள் வேண்டுபவற்றை அவர் கேட்பதற்கு முன் குறிப்பறிந்து கொடுப்பார்.
சிவனடியார் கேட்டதைச் சிவனே கேட்டதாகக் கருதும் மானக்கஞ்சாற நாயனார், மணக்கோலத்தில் இருந்த தனது அன்பு மகளின் கூந்தலைத் தானமாகக் கேட்ட சிவனடியாருக்கு தாமதியாமல் உடனே அடியோடு கூந்தலை அரிந்து கொடுத்தவர்.
இவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவர்.
'மலைமலிந்த தோள் வள்ளல் மானற்கஞ்சாறன் அடியார்க்கு அடியேன்' என சுந்தரமூர்த்தி நாயனார் இவரை போற்றுகிறார்.

கஞ்சாறு என்ற ஸ்தலத்தில் அவதரித்த மானக்கஞ்சாற நாயனார்:
சோழநாட்டிலுள்ள கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த தலத்தில் (தற்போது ஆனதாண்டவபுரம் என்று வழங்குகிறது) பரம்பரையாக அரசருக்கு சேனாதிபதியாக பதவி வகிக்கும் வேளாளர் குடியில் மானக்கஞ்சாற நாயனார் திரு அவதாரம் செய்தார். மேலும் அவர் விவசாயத்திலும் நல்ல விளைச்சல் பெற்று செல்வ வளம் பொருந்தியவராக வாழ்ந்து வந்தார். செல்வ வளம் மிக்கவராக இருந்தாலும், சிவபெருமானை போற்றிப்புகழும் பணிவுடையவராக இருந்தார். அடியார்களுக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என கருதி எப்போதும் சிவனடியாருக்கு தொண்டுகள் செய்வதையே மனதில் எண்ணிக் கொண்டிருப்பார். சிவனடியார்களுக்கு தான் சம்பாதித்த செல்வத்தையெல்லாம் கேட்பதற்கு முன்பே குறிப்பறிந்து கொடுப்பார்.

பெண் குழந்தையை வரமாகப்பெற்ற மானக்கஞ்சாற நாயனார்:
மானக்கஞ்சாற நாயனார் பல பேறுகள் பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. நெடுங்காலமாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த மானக்கஞ்சாற நாயனார் மனம் வருந்தி சிவபெருமானிடம் வேண்டினார். அவருடைய திருவருளினால் அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை வரமாகப்பெற்ற மானக்கஞ்சாற நாயனார் அக்குழந்தையைச் சீரும் சிறப்புமாக வளர்த்தார். சிவ நெறியை போதித்தார். மகளும் சிவப்பக்தையாகவே வளர்ந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து மணப்பருவம் அடைந்தாள். தன் மகளுக்கு திருமணம் செய்ய மானக்கஞ்சாற நாயனார் விரும்பி, ஏற்ற மணமகனைத் தேடினார்.
ஏயர்க்கோன் கலிகாம நாயனார் என்னும் சிவனடியாரை மணமுடிக்க எண்ணினார். ஏயர்க்கோன் கலிகாம நாயனாரின் பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே இருத்தரப்பினரும் திருமணத்திற்கான நல்ல நாளை நிச்சயித்தனர்.

சிவபெருமானின் திருவிளையாடல்:
மானக்கஞ்சாற நாயனாரின் மகளை மணம் முடிக்க ஏயர்க்கோன் கலிகாம நாயனார் தன் சுற்றத்தாருடன் கஞ்சாற்றினை நோக்கி வந்து கொண்டிருந்தார். சிவபெருமான் மானக்கஞ்சாற நாயனார் சிவனடியார்களிடம் கொண்டிருந்த மாறாத பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பினார்.
சிவனார் ஒரு சிவனடியார் உருக்கொண்டு, மானக்கஞ்சாற நாயனார் வீட்டுக்குச் சென்றார். அந்நாயனார் அவரைக்கண்டு எதிர்கொண்டு, உபசாரவார்த்தைகளைச் சொல்லி வணங்கினார்.
சிவனடியாரோ, ஒன்றும் தெரியாதது போல், விசேஷம் என்னவென்று வினவினார். மானக்கஞ்சாறரோ தன் மகளுக்குத் திருமணம் நடக்கப்போவதாகக் கூறி, சிவனடியாரிடம் ஆசி பெற மகளை அழைத்து வந்தார். அப்பெண்ணும் சிவனடியாரின் பாதங்களை கீழே விழுந்து வணங்கினாள். தம்மை வணங்கி எழுந்த பெண்ணினுடைய கூந்தலைப் பார்த்து, மானக்கஞ்சாற நாயனாரை நோக்கி, "உன் மகளது கூந்தல் கிடைத்தால் நம் பஞ்சவடிக்குப் பயன்படும்” என்றார்.(பஞ்சவடியாவது மயிரினாலெ அகலமாகச் செய்யப்பட்டு மார்பிலே பூணூலாகத் தரிக்கப்படும் வடமாம். பஞ்சம் -விரிவு வடி-வடம்)

மானக்கஞ்சாற நாயனார்…!!


சிவனடியாருக்கு தம்மிடம் உள்ள பொருட்களை கேட்டதும் கொடுக்கும் இயல்புடைய மானக்கஞ்சாற நாயனார், அடியார் கூறியதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார். தன்னுடைய ஒரே மகள் திருமணக் கோலத்தில் இருக்கிறாள் என்பதை மறந்து, சிறிதும் தயங்காமல் தம்மிடமிருந்த உடைவாளை எடுத்து,
தனது மகளின் நீண்ட கூந்தலை அடியோடு அறுத்து, சிவனடியாரிடம் நீட்டினார். சிவனடியார் அவ்விடத்தில் மறைந்து ரிஷப வாகனத்தில், பார்வதி சமேதராக சிவபெருமான் காட்சி கொடுத்து, "உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்" என அருளினார். அதைக் கண்டு மானக்கஞ்சாற நாயனார் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் உள்ளம் நெகிழ்ந்தனர். அப்போது, அங்கு மணக்கோலத்துடன் வந்த ஏயர்க்கோன் கலிகாம நாயனார், நிகழ்ந்தவற்றை உணர்ந்து, சிவபெருமானின் திருவருளை எண்ணி உருகினார். மானக்கஞ்சாற நாயனாருடைய மகளை அந்த நிலையிலே திருமணம் செய்துகொண்டு இன்புற்றார். அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முன்பு போல, கூந்தல் அலங்காரத்துடன் வளர்ந்தது. மானக்கஞ்சாற நாயனார் பல ஆண்டுகள் அடியவர்களுக்கு தொண்டு செய்து முடிவில் சிவபெருமான் திருவருளால் பேரின்ப நிலை பெற்றார்.

மானக்கஞ்சாற நாயனார்…!!

குருபூஜை நாள்:
சிவனடியார் கேட்டதைச் சிவனே கேட்டதாகக் கருதி சிவனடியாருக்காக மணக்கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை அரிந்து கொடுத்த மானக்கஞ்சாற நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் அ/மி பஞ்சவடீஸ்வர சுவாமி திருக்கோயிலில் (மயிலாடுதுறை - சீர்காழி சாலையில் 1-கி.மீ. வந்து, அங்கிருந்து ஆனதாண்டவபுரம் செல்லும் சாலையில் 5-கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. நீடூரிலிருந்தும் செல்லலாம். நீடூரிலிருந்து 11-கி.மீ தொலைவில் உள்ளது) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் மானக்கஞ்சாற நாயனாரின் திருமேனியும், அவருடைய மகளின் திருமேனியும் உள்ளன. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

"திருச்சிற்றம்பலம்"

அடுத்த பதிவில் முருக நாயனார்…!!