அன்பின் ஞாபகச் சின்னங்கள்!
அன்பே!
ஒரு நாள் வாழ்வதிலும் உள்ள சுகம் போதுமென்று சொன்னவளே எங்கு சென்றாய்?
ஒவ்வொரு நாளும் ரணமாக உணருகின்றேன் இங்கே நான்!
வெண்பனித்துளியெடுத்து செய்ததன்றோ உன் நெஞ்சம்!
கண்மலர் திறந்துநீயும் காதல்மொழி சொல்வாயே!
உன் மடியில் எனை வைத்து உயிர்வரையில் தொடுவாயே!
கன்னங்களில் சிறுகுழிவிழ பொன்மலராய்ச் சிரிப்பாயே!
போதைமுத்தம் நாளும்தந்து புன்னகையில் ஜொலிப்பாயே!
ராமன் என நானிருந்தால் சீதையென வருவாயே!
ரகசியமாய் கதைகள் சொல்லி நான் கேட்க ரசிப்பாயே!
உன் நெஞ்சமலர் பஞ்சணையில் எனை உறங்க வைப்பாயே!
நேசம் என்ன பாசம் என்ன நெருக்கத்திலே உணர்வாயே!
கொஞ்சும்கிளி உன்னிடத்தில் இன்பஸ்வரங்கள் கேட்கின்றேன்!
முல்லைமலர் பஞ்சணையில் உன் முகம் திறக்கப்போகிறேன்!
வெட்கத்தில் கரங்கள்மூடும் அந்த வெள்ளைத் தாமரைகள் இனி என் விழிப்படலங்களில் வாழட்டுமே!
இரவில் என்ன நடந்ததென்று மறுநாள் காலை விடைதரட்டும்!
விடிந்தபிறகும் நீலாம்பரியாய் நம் விழிகள் மோத மனம் ரசிக்கும்!
கட்டுக்கடங்கா ஆசைகள் வைத்த கடவுளின் நோக்கம் அறிவாயா?
உள்ளம் கட்டுப்படுவது காதலில்தான் எனும் உன்னத ரகசியம் அறிவாயா?
தொட்டுக் கலந்திடும் மேனியிலே எத்தனை எத்தனை வண்ணங்கள்?
தொடரும் நினைவுகள் ஆயிரமே தரும் அன்பின் ஞாபகச் சின்னங்கள்!
பேசிக்களித்திடும் தருணங்களும் பெய்யும் இன்ப மழைதானே!
ஒரு நாள்விடுமுறை என்றாலும் இங்கு மட்டும் உள்ளம்படுவது வலிதானே!
நீயும் நானும் இணைந்திருந்தால் ஒவ்வொரு நாளும் திருநாளே!
கரையினைத்தழுவிடும் அலைகளைப்போல் காதலின்பம் காலமெல்லாம்!
கவிதை சொல்லி அழைத்திடுவேன் என் கண்மணி உந்தன் காதோரமாய்!
நிலவின் நேசன் என்கிற பட்டம் எனக்குப் பொருத்தம்தான் கண்ணே!
அருகே எந்தன் பால்நிலா என்று உருகியுருகி எழுதியவன்.. அனுதினம் உன்னை மனதில் சுமந்து அள்ளி அள்ளி மகிழ்ந்தவன்!
தர்ம தரிசனங்கள் வேண்டுமென்று நாளும் அடம்பிடிப்பவன்!
உயிரின் பாதி நீயென்று உணர்ந்துகொண்டேயிருப்பவன்!
இதற்கும் மேலா எதுவும் வேண்டும் என்று தன்னை எழுதித்தருபவன்!!
வருடவரும் தென்றலையும் திருடிவிடும் கள்ளி நீ!
கொட்டிவிழும் அருவியின் குளிர்நிழல் வேண்டும் அருகில் வா!
கட்டழகுப் பெட்டகத்தின் கனியிதழ் பற்றி நானும் கவிதை சொல்ல இதழைத் தா!
சட்டெனத் தோன்றிய உன் திருமுகத்தில் வெட்கச்சிமிழ்கள் ரசித்திருப்பேன்.. இங்கே பார்!!
தொட்டுவிடத் துடிக்கும் துணிகரம் இங்கே நடப்பதை
எங்கே சொல்வது என்னைக் கேள்!!
Leave a comment
Upload