தொடர்கள்
கவிதை
மகளதிகாரம் - 16 - கவிஞர் தனபாண்டியன்

2022061321464279.jpg

# மகளதிகாரம் - 16 #

பெரும் சிரத்தையுடன் எழுதியதாய்ச் சொல்லி

கீழ்க்காணும் கவிதையினை வாசித்தேன்
மகளிடம்

"தூரத்திலிருந்தே
தூவானமென
இரு கைகளை நீட்டி
ஏந்திக்கொள்கிறாய்
உன் அணைப்பிலிருந்து
மீண்டவர் யார்?

நெருங்கும் கூர்மிகு விழிகளை
நிராகரிக்க முடியுமா என்ன?
வீழ்வது ஒன்றுதான்
மீள்வதற்கான ஒரே வழி

முதலில் சத்தம்
பிறகு முத்தம்
சத்தத்தில் லயித்து
முத்தத்தில் கரைவதைவிடவா
இனிதாய் இருந்துவிடப்போகிறது
அமிழ்தம்?

சிகையினைக் களைத்து
சிறு கடி கடித்து
உயிர் வரை நிரம்பும்
உயிருறை இறைப்பொருளே!
ஈடற்ற தமிழிசையே!

கணங்களையெல்லாம்
பேரன்பு வரங்களாக்கும்
தந்திரங்கள் கற்றவளே!
தர்க்கங்களில் மூத்தவளே!!
மகளே!
நீடூழி வாழ்க பல்லாண்டு!"

கண்ணிமைக்காமல் கேட்டவள்
சட்டென எழுந்தாள்
கரங்களால் என் கழுத்தினைப் பற்றினாள்
"பச் பச்"சென பல முத்தங்களிட்டாள்

கண்கள் கலங்கி
வார்த்தைகள் ஏதுமிராதிருந்தன
இருவருக்கும்

சட்டென விலகி
தூரமாய் போனாள்

கவிதையின் உயிர்ச்சத்து
வெறும் வார்த்தைகளில் அல்ல என்பதை
முதன் முதலாய்
கற்றுக் கொண்டேன்
மகளிடம்!