தொடர்கள்
ஆன்மீகம்
திருமூல நாயனார்!!- ​​​​​​​ஆரூர் சுந்தரசேகர்.

திருமூல நாயனார்


திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயனார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திர மாலையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்...”என்று திருமந்திரத்தில் அழகாக விளக்கியுள்ளார். திருமந்திரம் ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் துறைகளைக் கொண்டது.
இவரை நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்என சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் போற்றியுள்ளார்.

சிவயோகியார் திருமூலர் ஆனார்:
திருக்கயிலாயத்தில் நந்திதேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவரான சுந்தரநாதர் என்னும் சிவயோகியார்
அஷ்ட சித்திகளையும் ஒருங்கே பெற்ற சித்த புருஷர். பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவரைத் தரிசிக்க வேண்டித் தென் திசையில் உள்ள பொதிகை மலையை நோக்கிப் பயணிக்கையில், வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்துவிட்டுத் தில்லையில் இறைவனின் அற்புதத் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்தார். தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரிக்கரைப் பகுதியான ஆவடுதுறையில் (ஆ+ஆடுதுறை = பசுக்கள் நிறைந்துள்ள காவிரிக் கரையிலுள்ள ஊர்) கோயில் கொண்டுள்ள பசுபதியாகிய கோமுக்தீஸ்வரர் கோயிலை (பார்வதிதேவி பசுவின் கன்றாக வடிவம் பூண்டு தவஞ் செய்த பெருமை மிக்க திருத்தலம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் கோமுக்தீஸ்வரர் என்பதாகும்) வழிபட்டுவிட்டுத் திரும்பச் செல்லும் போது, அண்மையில் உள்ள சாத்தனூர் என்ற ஊரை அடைந்தபோது, பசுக்களை மேய்க்கும் மூலன் என்ற இடையர் ஒருவர் மாண்டு கிடப்பதையும் அவனைச் சுற்றி நின்று, அவன் மேய்த்த பசுக்கள் கண்ணீர் சிந்திக் கதறுவதையும் கண்டார். பசுக்களின் துயர்கொண்டு மனம் இரங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார். எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடு விட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம் ) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போலச் சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார். உயிர் பெற்று திருமூலரைக் கண்டு பசுக்கள் துயரம் நீங்கி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன.

திருமூல நாயனார்

ஈசனின் திருவிளையாடல்:
மாலைப்பொழுது வந்ததும், பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்றன. திருமூலர் மூலன் இல்லத்துக்கு வந்தார்.
மூலனது மனைவியார் அவரைத் தனது கணவன் என்று எண்ணி , வீட்டுக்கு வரும்படி கூப்பிட, திருமூலர் மூலனின் மனைவியிடம் என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது. உனக்கும் எனக்கும் இனி மேல் எந்த உறவும் கிடையாது. அதனால் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு அமைதி பெறுவாயாக என்று கூறினார். அதற்குமேல் அவள் முன்னால் நிற்பதும் தவறு என்பதை உணர்ந்து திருமூலர் அத்தலத்திலுள்ள திருமடம் ஒன்றுக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார். கணவனின் மனமாற்றத்தைப் பற்றி ஒன்றும் புரியாமல் கணவனின் நிலையைக் கண்டு கதிகலங்கி, கவலையோடு வீடு திரும்பினாள்.
சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர் மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். கிடைக்கவில்லை முதலில் திருமூலருக்குச் சற்று வியப்பாகவே இருந்தது. மீண்டும் யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர எண்ணினார். தவ வலிமையால் இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே ஈசன் தம் உடலை மறைத்து திருவிளையாடல் புரிந்துள்ளதை உணர்ந்து கொண்ட, திருமூல நாயனார் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றச் சித்தம் கொண்டார்.

வாழ்க்கை நெறி உணர்த்தும் திருமந்திரம்:
மூலனது உடலில் இருந்தபடியே திருவாவடுதுறையை அடைந்து ஈசனை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராஜ யோகத்தில் அமர்ந்து, உலகோர் பிறவியாகிய துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறும் நல்ல திருமந்திர மாலையினை ஆகம சாரமாகத் தமிழில் ஆண்டுக்கு ஒரு பாடலாக,மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்தார்.
திருமூலர் அருளிச் செய்த “திருமந்திரம்” எனப்படும் நூல் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகச் சைவப்பெருமக்களால் போற்றப்படுகிறது. இதனைத் திருமந்திரமாலை ' என்றும் ' தமிழ் மூவாயிரம் ' என்றும் கூறுவர் .திருமந்திரத்தில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் திருமூல நாயனார் சொல்லியிருக்கிறார்.
தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப்
பற்றத் தலைப்படும் தானே" - திருமந்திரம்.
திருமந்திரத்தின் முதல் பாடலே அர்த்தங்கள் நிறைந்ததாகவும் நற்சுவையாகவும் அமைந்துள்ளது.

'ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே (மந்திரம் - 1)

'ஒன்று' என்பது முதலாகிய 'சிவம்!'

'இரண்டு' என்பது சிவத்தின் மறுபாதியாகிய ஆற்றல் 'சக்தி!'

'மூன்று' என்பது ஆன்மா, சிவம், சக்தி என்பதையும், ஆக்கல் (பிரம்மா)காத்தல் (விஷ்ணு) அழித்தல் (ருத்திரன்) என்பதையும் குறிக்கின்றது.

'நான்கு' என்பது ரிக், யஜூர், சாமம், அதர்வணமாகிய சதுர்வேதங்களையோ அல்லது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நான்கு அனுபவ நிலைகளையோ குறிக்கிறது.

'ஐந்து' என்பது பஞ்சபூதங்களையும் ஐம்புலன்களையும் குறிக்கிறது.

'ஆறு' என்ற எண் குறிக்கும் பொருள் ஒன்றுக்கும் மேல் உள்ளது. ஆறு ஆகமச் சமயங்கள், ஆறு ஆதாரங்கள் மற்றும் வண்ணம், பதம், மந்திரம், கலை, புவனம், தத்துவம் ஆகிய அறுபெரும் விஷயங்கள்.

'ஏழு' ஏழாவது சக்கரமாகிய சகஸ்ராரம், ஏழு மேல் உலகங்கள். ஏழு கீழ் உலகங்கள்.

‘எட்டு’ என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், சிவன் ஆகிய எண் பெரும் சக்திகள்.

இறுதிச் சொல்லான 'உணர்ந்தெட்டே' என்பதற்கு, இவற்றை அனுபவத்தின் மூலம் அடையுங்கள் அல்லது உணருங்கள் என்று பொருள்!
சித்தர் ஆய்வாளர்கள் இப்பாடலை 'எண் குறி இலக்க மொழி' எனச் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நூல் ஒன்பது தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகின்றன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன.
முதல் தந்திரம் அறத்தைப்பற்றி அடிப்படையான கருத்துக்களைக் கூறுகின்றது. எச்சமயத்தவரும் மேற்கொள்ளும் அறங்களே இத்தந்திரத்தில் கூறப்பட்டுள்ளன .
இரண்டாம் தந்திரத்தில் இறைவன் பக்தர்களுக்கு அருள் புரிந்தமை, அவரது ஐந்தொழில், அஷ்டவீரட்டம்,
சில புராணக்கதைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.
மூன்றாம் தந்திரத்தில் அஷ்டாங்கயோகம்
அஷ்டமாசித்தி, ஜோதிடம் முதலானவற்றின் விளக்கங்களைத் தெரியப்படுத்தியுள்ளது.
நான்காம் தந்திரத்தில் மந்திர நூல் கருத்துக்களையும், தெய்வ சக்கரங்களைப் பற்றியும் தெரிவிக்கின்றன.
ஐந்தாம் தந்திரத்தில் சைவ சமய பேதங்களையும், புறச்சமய பேதங்களையும் சரியை , கிரியை , யோக , ஞான மார்க்கங்களையும் பற்றிய விளக்கங்களைத் தெரியப்படுத்தியுள்ளது.
ஆறாம் தந்திரமானது சிவகுரு தரிசனம் , திருவடிப்பேறு , துறவு , தவம் , நீறு , பக்குவன் , அபக்குவன் முதலியன விரித்துரைக்கப்பெற்றுள்ளது.
ஏழாம் தந்திரம் சிவபூசை , குருபூசை , மகேஸ்வர பூசை , அடியார் பெருமை , போஜன விதி , இந்திரிய அடக்கம் , சற்குரு , அசற்குரு பற்றிய விளக்கங்களைக் கூறுகின்றது.
எட்டாம் தந்திரத்தில் அவா அறுத்தல் , ஞானி செயல், தத்துவமசி மகா வாக்கியம், பக்தியுடைமை, புறங்கூறாமை , முக்குற்றம் முதலியனவற்றைத் தெரியப்படுத்தியுள்ளது.
ஒன்பதாம் தந்திரமானது தன்னகத்தே பஞ்சாட்சரத் தின் பேதங்கள், சிவதரிசனம், திருக்கூத்து தரிசனம்
முதலியன பற்றிய குறிப்புக்களைத் தெளிவாக்கியுள்ளது.
இந்தப் புனிதமான திருமந்திரத் திருமுறைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு.

திருவடி நிழலைப் பெற்று பேரின்ப நிலையை அடைந்தார்:
சிவபெருமானின் விருப்பத்துக்கிணங்க உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திரத்தை நிறைவு செய்த திருமூல நாயனார் சிவபெருமானது திருவடி நிழலைப் பெற்று பேரின்ப நிலையை அடைந்தார்.

திருமூல நாயனார்


குருபூஜை நாள்:
திருக்கயிலாயத்தில் நந்திதேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவரான சுந்தரநாதர் என்னும் சிவயோகியார்,
மூலன் என்ற இடையர் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய திருமூல நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான மயிலாடுதுறை மாவட்டம் சாத்தனூரில் (மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாத்தனூர் இருக்கிறது) உள்ள திருமூல நாயனார் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன மயிலாடுதுறை மாவட்டத்தின் திருவாவடுதுறையில் உள்ள அ/மி கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈஸ்வரர்) திருக்கோயிலில் (மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது. திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது. இந்தக்கோவில் பிரகாரத்தில் திருமூல (இடைய) நாயனாரின் சந்நிதி இருக்கிறது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

"திருச்சிற்றம்பலம்"

அடுத்த பதிவில் நமிநந்தியடிகள் நாயனார்…!!