தொடர்கள்
நாடகம்
சாருகேசி - ஒய் ஜி எம் மின் புதிய நாடகம் - வேங்கடகிருஷ்ணன்

20220421084332210.jpg

சாருகேசி
ஒய் ஜிபி துவங்கிய யுஏஏ குழுவின் 70ஆம் ஆண்டு ஒய் ஜி மகேந்திரா அவருக்கு நாடக உலகில் அறுபதாவது ஆண்டு சுப்புணி அவர்களுக்கு யுஏஏ குழுவில் 50ஆவது ஆண்டு இப்படி பல விசேஷங்கள் உடன் அமைந்தது அவர்களின் புதிய நாடகமான சாருகேசி 25வது காட்சி. பாராட்டு உரையில் சொன்னதைப்போல 25வது காட்சி நாங்கள் கொண்டாடியது இல்லை. எப்போதும் நூறாவது 200வது 500வது என்றுதான் கொண்டாடி வழக்கம். கொரோனாவிற்கு பிறகு சினிமாக்காரர்கள் வெற்றிகரமான மூன்றாவது நாள், நான்காவது நாள் என்று கொண்டாடும் போது நாங்களும் 25-வது காட்சியை சிறப்பாக கொண்டாடும் நிலைமைக்கு தள்ளப் பட்டோம் என்பதை தனக்கே உரிய நகைச்சுவையோடு மகேந்திரா, மாது பாலாஜி பேசும்போது கூறினார்.

20220419225749951.jpg20220419225843247.jpg20220419225935211.jpg

சாருகேசி பெயருக்கேற்றார் போல் அந்த ராகத்தின் ஒட்டுமொத்த உருவகமாகவே அமைந்தது. துவக்கத்தில் வெங்கட்டின் முத்திரையோடு அக்மார்க் ஒய். ஜி.எம் பிராண்ட் நகைச்சுவை வெடிகள் வீசப்பட்ட அரங்கம் அதிர்ந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சங்கீத புரட்சி பாடகர் எம் கிருஷ்ணாவுக்கும் மற்ற கடவுள் மறுப்பாளர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற வகையில் துணுக்குத் தோரணங்கள் ஆகவே பதிலடி கொடுத்தார் ஒய் ஜி எம். வெங்கட் இவ்வளவு எழுதி இருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் சோபிக்காமல் போனாலும் நாடக மேடையில் எப்போதும் தான் ஒரு டான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். இந்த நாடகத்தின் கரு அமரர் கிரேசி மோகனின் மனதில் உதித்த ஒன்று. இதை மாது பாலாஜி தனது பாராட்டு உரையில் பகிர்ந்து கொண்டார். எம்எஸ் அம்மாவை சந்திக்க சென்றபோது அல்சைமர் வியாதியால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்கள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை காபி சாப்பிடுங்கள் என்று மறந்து போய் திரும்பத் திரும்ப கூறியிருக்கிறார். அதை நினைவுகூர்ந்த அவர் அங்கிருந்து கிளம்பும்போது "மாடியில் தான் சதாசிவம் மாமா இருக்கிறார் பார்த்து விட்டுப் போங்கள்" என்று எம்எஸ் அம்மா சொன்ன போது நாங்கள் அனைவரும் மனதால் உடைந்து போனோம் என்று மாது பாலாஜி குறிப்பிட்டார். இந்த நிகழ்வை தன் மனதிலேயே அசைபோட்டு வந்த கிரேசி மோகன் ஒரு பிரபலத்தின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து அவருக்கு அல்சைமர் வியாதி வந்தால் அவருடைய நிலை என்னவாக இருக்கும் என்பதை நகைச்சுவையாக சொல்லி இனிமேல் யாரும் இந்த வியாதியை பார்த்து பயப்படக்கூடாது அதைத் துணிவோடு எதிர் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று கூறியதாக சொன்னார். மகேந்திரா தனது ஏற்புரையில் இதை அப்படியே வழிமொழிந்தார். இவர்கள் இருவரும் சொன்னபிறகு நாடகத்தைப் பார்த்த நமக்கு அதன் மீது இன்னும் மதிப்பு கூடிவிட்டது. தான் சிவாஜியின் சூடம் கொளுத்தாத ரசிகன் என்பதை நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் மகேந்திரா.

20220419230143705.jpg

அனைவரும் கூறியது போல் கடைசி காட்சிகளில் அவருக்கு எந்த வசனமும் இல்லை மற்றவர்களைப் பேசவிட்டு அவர் அதனை ரசித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் ஒரு அல்சைமர் நோயாளி எப்படி நடந்து கொள்வாரோ அதை தத்ரூபமாக மேடையில் நடந்து காண்பித்தார் பேப்பர் எடுக்க முடியாமல் எடுப்பதும் தவற விடுவதும், உட்காருவதற்கு முடியாமல் சற்று சரிந்து உட்காருவதும் சட்டையை போட்டு கொள்ள முடியாமல் கஷ்டப்படுவதுமாக சாருகேசி ஆகவே வாழ்ந்தார் நம் கண் முன்னே. பாராட்டிய பிரபலங்கள் அனைவரும் இந்த விஷயத்தை குறிப்பாகச் சொன்னார்கள். ஒரு சங்கீத வித்வானுடைய வாழ்க்கை வரலாறு என்பதால் அங்கங்கே நிறைய சங்கீதம் சார்ந்த வசனங்கள். முக்கியமாக அருமையான பின்னணி இசையும் பாடல்களும் டைட்டில் இசை தனித்துவமாக வழங்கியிருக்கிறார் ராஜேஷ் வைத்யா பின்னணி இசையையும், நாடகத்தில் பாடப்படும் அற்புதமான பாடல்களையும் தவிர தானே ராகதேவன் ஆகவும் நடித்து நம்மை ஆட்கொண்டு விட்டார் பாலசுப்ரமணியம் அவர்கள். சுப்புணி 50 வருடங்கள் கடந்த நாடகமேடை அனுபவம் உள்ளவர் என்பதை அவரது ஒவ்வொரு காட்சியிலும் பதிவுசெய்தார். மௌலி ஒரு படத்தில் வசனம் சொல்வதுபோல் இத்துனூண்டு உடம்புக்குள்ள இவ்வளவு நடிப்பா? என்று கேட்கத் தூண்டியது அவரது நடிப்பு. அவர் வரும்போதும் வித்தியாசமான பாணியில் தன்னுடைய இடுப்பை குலுக்கும்போதும் அரங்கத்தில் அதிர்வுகள். சாருகேசியாகவே மகேந்திரா வாழ்ந்து இருக்கிறார் என்றால், அவர் உடன் நடித்தவர்கள் அந்த சாருகேசியை பார்த்துக் கொண்ட விதமும் அவரோடு பழகும் விதம் என முதல் முறை நடிகர்கள் தானா? என்று கேட்குமளவிற்கு புகுந்து விளையாடினார்கள். மகேந்திராவே சொல்லியதுபோல் அதில் இரண்டு மூன்று நடிகர்கள் மிகச் சுலபமாய் நடித்து ஜமாய்த்தார்கள் இதுபோன்ற ஒரு வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் கதாபாத்திரத்தை சுலபமாய் கையாண்டு அந்த பாதிப்பையும் நெகிழ்வையும் மிகச்சரியாக ஆடியன்ஸுக்கு கடத்தி இருக்கிறார் மகேந்திரா.

20220419230406805.jpg

பாராட்டிய இந்து என் ரவி அவர்கள், மாது பாலாஜி, நடனக்கலைஞர் தனஞ்செயன் அவர்கள் மலையாள முன்னணி நடிகர் ஜெயராம் அவர்கள், கதாசிரியர் வெங்கட் அவர்கள் முத்தாய்ப்பாக பேசி எல்லோரையும் தனது பேச்சினால் கட்டிப்போட்ட பாரதி பாஸ்கர் அவர்கள் என்று பாராட்டி அவர்களும் நம் மனதிற்குள் மேடை போட்டு உட்கார்ந்து கொண்டார்கள். ( மேடையில் ஒரு நாற்காலி காலியாகவே இருந்தது, இந்த நாடகம் உருவாக காரணமாக இருந்த கிரேசி மோகன் அமரவேண்டியது ?!)

20220419230534177.jpg20220419230632864.jpg20220419230807227.jpg

இதில் குறிப்பிட்டிருந்த மௌலி அவர்கள் நாடகத்தின் இறுதிக் காட்சி மனதை கலங்கச் செய்ததனால் தன்னால் மேடையேறி பேச முடியாது என்பதை தெரிவித்து விட்டு கிளம்பிவிட்டார். அவருக்கே இந்த நிலைமை என்றால் நமக்கு கேட்கவா வேண்டும். முத்தாய்ப்பாக பேசிய பாரதி பாஸ்கர் அவர்கள் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டார். ஒன்று ஒரு பாடலை அவர் உணர்ச்சிவசப்பட்டு பாடிக் கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு அல்சைமர் தாக்குதல் வரும் மேடையில் பாதியில் அந்தப்பாடல் நிறுத்தப்படும். அதன்பிறகு அவருடைய வாழ்க்கை நிலைமை மாறி அவர் அந்த நோயின் ஒரு ஒரு படியாக முன்னேறும் போது அவருடைய நடை உடை பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களை மிக அற்புதமாக ஒய் ஜி மகேந்திரா நமக்கு காண்பித்து இருப்பார். இறுதிக் காட்சியில் திடீரென அவருக்கு நினைவுக்கு வந்து பாடலை விட்ட இடத்திலிருந்து பாடத் துவங்குவார். அதை சிலாகித்துச் சொன்ன பாரதி பாஸ்கர், கலைஞர்கள் எந்த விஷயத்தையும் பாதியில் விடும் பழக்கம் இல்லாதவர்கள் அதை அவர்கள் நிறைவு செய்யும்போது அவர்கள் அந்தக் கலையோடு ஒன்றிப் போகிறார்கள் நாத பிரம்மத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறார்கள் என்ற ஒரு குறிப்பிட்ட விதம் மிக அருமை. அதேபோல இசைக் கலைஞர் பாக் (Bach) இசைஞானி அடிக்கடி சொல்லும் அந்த கலைஞர், மொசார்ட் காலத்தில் வாழ்ந்த மற்றும் ஒரு இசை மேதை. அவர் உடல் முடியாமல் படுக்கையில் இருந்து நகரக்கூட முடியாமல் நோய்வாய்ப்பட்டு படுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய பெண், வீட்டு வரவேற்பறையில் இருந்த பியானோவில் இவர் எழுதிய இசைக்குறிப்பு ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும் போது பாதியில் யாரோ வந்துவிட அப்படியே விட்டு விட்டு வெளியேறி விடுகிறார். அதை முடிக்க வேண்டி மிகவும் பிரயத்தனப்பட்டு தன்னுடைய கட்டிலிருந்து இறங்க முடியாமல் இறங்கி தவழ்ந்து உருண்டு போய் அந்த பியானோவில் மெதுவாக அமர்ந்து அந்த மிகுதி பாட்டை முடித்து அதன் மேலேயே சாய்ந்து உயிரை விடுகிறார். இது வரலாறு என்று குறிப்பிட்டார்.

2022041923093578.jpg

ஆகவே இந்த இரண்டு விஷயங்களும் நமக்கு பலவற்றை நினைவுபடுத்துகிறது. இசைக்கும் கலைஞர்களுக்கும் இன்னும் குறிப்பாகச் சொன்னால் கலைக்கும் கலைஞர்களுக்கும் முடிவு என்பதே கிடையாது. இதை மனதில் கொண்டு இசைக்கலைஞர் ஆகவே வாழ்ந்த ஒய்.ஜி. மகேந்திரா இன்னும் பல நாடக மேடைகள் கண்டு வாழ்வாங்கு வாழ விகடகவி சார்பாக வாழ்த்துவோம்." சாருகேசி" இன்னும் பல மேடைகள் கண்டு விரைவில் 500ஆவது மேடை காண வாழ்த்துவோம்.