வனத்தை கதைக்களமாக கொண்டு ஒரு புதிய இந்தித் திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி வந்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. அமித் மஸுர்க்கர் இயக்கி வெளிவந்துள்ள “ஷேர்னி” என்ற இந்த திரைப்படத்தில், வித்யா பாலன் வனத்துறை அதிகாரியாக நடிக்கிறார். காடும், காடு சூழ்ந்த பகுதியிலும் மெல்ல பயணிக்கிறது இக்கதை.
‘ஷேர்னி’ என்ற இந்திச் சொல்லுக்கு ‘பெண் சிங்கம்’ என்று பொருள். ஆனால் கதை ஒரு ‘பெண் புலியை’ப் பற்றியது. ஜிம் கார்பேட்டின் “Man eaters of Kumaon” என்னும் நூலை நினைவு படுத்தும் திரைக்கதை.
மத்திய பிரதேசக் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது இக்கதை.
அந்த வனக்கிராமத்து மக்களின் வாழ்க்கை, அந்த அடர்ந்த காட்டைச் சுற்றியே சுழல்கிறது. விறகு பொறுக்கவும், கால்நடைகளுக்கு தழை ஒடிக்கவும், காட்டுக்குள் செல்லும் கிராமவாசிகளுக்கு அங்கு உலவும் T12 என்று வகைப்படுத்தப்படும் ஒரு பெண்புலி அச்சத்தைக் கொடுக்கிறது. அக்காட்டில் தொடர்ந்து நிகழும் மரணங்கள், மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது. இந்தச் சூழலில்... அங்கு மாற்றலில் DFO வாக வருகிறார் வித்யா வின்சென்ட் (வித்யா பாலன்).
மனித உயிர்களைக் காப்பற்ற வேண்டிய அதே தருணத்தில்... காட்டு மிருகங்களையும் காக்க வேண்டிய கடமை அவருக்குச் சேர்கிறது. மக்களின் உயிரா, வனவிலங்கு பாதுகாப்பா என்ற கேள்விகளுக்கு இடையில் அவர் ஊசலாடுகிறார். அரசியல் சித்து விளையாட்டு நடத்தும் அரசியல்வாதி, அவருக்குத் துணை போகும் வனத்துறை அதிகாரிகள் ஒருபுறம். மரணப் பீதியில் செத்து பிழைக்கும் மக்கள் மறுபுறம். இரண்டுக்கும் இடையில்... அப்பெண்புலியைப் பாதுகாத்து, சரணாலயத்துக்கு அனுப்ப வேண்டிய கடமையை மேற்கொள்கிறார் வித்யா. அவருக்கு ஏற்படும் இடையூறுகள், அனுபவங்கள் நம் நாட்டில் நிலவும் அரசியலை, இயற்கை குறித்த அலட்சியப் போக்கினை படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்தப் போராட்டத்தில் மலை வாழ் மக்களின் பீதியைச் சாதகமாக்கி கொள்ளும் அரசியல்வாதியும், அவருக்கு துணை சென்று, தனது வேட்டைத் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க நினைக்கும் வேட்டைக்காரரும் (சரத் சக்சேனா), வித்யா பாலனைப் போலவே அறிவியல் நோக்குடன் சிந்திக்கும் ஹசன் (விஜய் ராஸ்), அலுவலக நிர்வாகக் கூட்டத்தில் கவிதை சொல்லும் உயர் அதிகாரி, மலைவாழ் மக்களின் குரலாக ஒலிக்கும் “ஜோதி” என்னும் இளம் பெண், இவர்கள் எல்லோரும் தத்தம் பாத்திரங்களாகவே வாழ்கிறார்கள்.
வெள்ளித் திரையில், சின்னத் திரையில் கலெக்டராக, ஐபிஎஸ் அதிகாரியாக அதகளம் செய்யும் பெண் அலுவலர்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் நிஜத்தில் இருந்து விலகியவர்களாக, சர்வ வல்லமைப் படைத்தவர்களாக, அதகளம் செய்பவர்களாக, அதீதமாக உணர்ச்சி வசப்படுபர்களாகவே தமிழ்ப் படங்களில் பார்த்து பழகி விட்டோம். ஆனால் வித்யாபாலன், தன் சூழலை உணர்ந்துக் கொண்டவராக.. அதை வெல்ல முடியாத தன் இயலாமையை அறிந்தவராகவே சித்தரிக்கப்படுகிறார். அவரது அதிகப்பட்ச கோபத்தைக் கூட, மிகவும் நம்பிக்கை வைத்த உயர் அதிகாரியே, புலியை வேட்டை ஆடிக் கொல்ல துணை போகும் போது “Coward” என்று ஒற்றைச் சொல்லில் தான் காட்ட முடிகிறது. “பொம்பளையை அனுப்பி வச்சிருக்காங்க” என்ற குரலுக்கு அவர் முகத்தில் சின்னச் சலனம் மட்டுமே பதில்.
இது கதாநாயகியை முன்னிறுத்தும் படமல்ல, கதையை மட்டுமே முன்னிறுத்தும் திரைப்படம் என்பது புரிகிறது. அறிவியல் முன்னேறி உள்ள இந்த காலக் கட்டத்தில், மனிதரும், விலங்குகளும் தத்தம் சூழலில் வாழ நடத்தும் போர்க்களத்தை இந்தத் திரைப்படம் அழகாக சித்தரித்துள்ளது.
‘ஷேர்னி’ திரைப்படம் எனக்கு பல வினாக்களை முன் வைத்தது... தெளிவு பெற, ஓய்வு பெற்ற வன அலுவலர் திரு.நாகராஜன் அவர்களை அணுகினேன்.
அவர் கூறியதில் இருந்து...
“வனத்துறையில் 37 ஆண்டு காலம் பணி செய்து ஓய்வு பெற்றேன். விலைமதிப்பற்ற செல்வங்களை உள்ளடக்கியது காடு. ஆனால் இப்போது அந்த செல்வங்கள் அழிந்துக் கொண்டே வருகிறது. சில ஆண்டு முன்பு வரை இருந்த சந்தன மரம் போன்ற மரங்கள் இப்போது வெட்டப்பட்டு, காட்டின் செல்வங்கள் அழிந்துக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் சொல்வது போல, வனவிலங்குகளை யார் வேண்டுமானாலும் வேட்டையாட முடியாது. மனிதரைக் கொல்லும் ஆட்கொல்லி விலங்கு என்றாலும், அதை முறையாக அறிவிக்க (declare) வேண்டும். கலெக்டர் அனுமதியுடன், தக்க பாதுகாப்புடன் தான் அதைச் செய்ய முடியும்.
வனவிலங்கு, வனத் தாவரங்கள் குறித்து பணியில் இருந்த போதே ஆராய்ச்சி செய்து வந்துள்ளேன். முதுமலை, ஜவ்வாது மலை, ஊட்டி என்று நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் எல்லையில் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். அங்கு நீங்கள் காணும் காடு வேறு... அடர்ந்த காட்டுப்பகுதியில், நீங்கள் காட்டின் தன்மையை, அதன் பிரமாண்டத்தை உணர முடியும்.
இந்தியாவின் வனச்சட்டம் (Forest Law) மிகவும் சிறந்த முறையில் இயற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் தேசிய புலிகள் பாதுகாப்பு மையம் NTCA (National Tiger Conservation Authority) புலிகளின் பாதுகாப்பிற்காக இயங்குகிறது. திரைப்படம் வேறு, நிஜத்தில் இருக்கும் நிலைமை வேறு” என்கிறார் அவர்.
மேலும், சமீபத்தில் அமெரிக்காவின் “Wild Innovators Award” பெற்ற முதல் இந்தியப் பெண்ணான கிர்தி கரந் அவர்களைப் பற்றியும் பெருமையுடன் கூறினார் நாகராஜன் அவர்கள். வனவிலங்குகள், மலை வாழ்மக்கள் குறித்து ஆய்வு செய்துள்ள கிர்தி, மக்கள் தொகை பெருகியுள்ள இந்த காலத்தில், இவ்விரு முனைகளும் மோதிக் கொள்ளும் போராட்டங்களைக் குறைக்கவும், அம்மக்களுக்கு காடுகளில் இருந்து தொலைவிடங்களில் இருப்பிடம் அமைத்துத் தர வேண்டும் என்றும் பல தீர்வுகளை சொல்கிறார். இந்த ஆய்வுக்கு பரிசாக... அமெரிக்கா சர்வதேச விருது வழங்கி உள்ளது” என்றார்.
‘ஷேர்னி’ திரைப்படம் ஒரு ஆவணப்படம் போல எளிய முறையில் அமைக்கப்பட்டு இருந்தாலும்... பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும்... கதாநாயகி, கதாநாயகன் என்று யாரையும் கொண்டாடாமல் இருந்தாலும்... வனத்துறை பற்றிய, சுற்றுச்சூழல் பற்றிய அழகான படம். தீர்வு சொல்ல வேண்டிய பல கேள்விகளை முன்வைக்கும் படம் இது. அடர்வனத்தில் பயணிக்கும் கேமராவும், பறவைகள் ஒலியும், மிதமான பின்னணி இசையும் படத்துக்கு அழகு சேர்க்கிறது.
‘பெண்புலி’ நயவஞ்சகமாக வேட்டை ஆடப்பட்ட பின்... அதன் குட்டிகள் பாதுகாப்பாக இருப்பது கண்டு, வித்யா பெருமூச்சு விடும் போது நமக்குள் ஆசுவாசம் பிறக்கிறது.
அதுவே இந்தத் திரைப்படத்தின் வெற்றி.
Leave a comment
Upload