தொடர்கள்
தொடர்கள்
அமுதத் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் - 10 - பாலாஜி & வேங்கடகிருஷ்ணன்

20210525161720521.jpg

பேயாழ்வார்

20210525161417553.jpg

(ஓவியக் குறிப்பு)

பேயாழ்வார் அவதரித்த திருக்கிணறு மயிலாப்பூரில் கச்சேரி தெருவில் இருந்து இடது பக்கம் பிரியும் அருண்டேல் வீதியில் அமைந்துள்ளது.
மயிலாப்பூரில் தான் மாதவ கேசவ பெருமாள் சன்னதிகள் அருகருகே அமைந்துள்ளன. ஆண்டாள் தனது கடைசி திருப்பாவை பாசுரத்தில் குறிப்பிடுவதுபோல மாதவனை கேசவனை சேவிப்பதற்கு மயிலை மக்கள் புண்ணியம் செய்தவர்கள்.

இருப்பினும் தொன்றுதொட்டு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள ஆழ்வார் சன்னதி அவருடைய அவதார ஸ்தலம். ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், விஜயநகர் காலம் வரையில் அதன் வரலாறு உலகிற்கு தெரிந்துள்ளது. மூலவர் திருமேனி சோழர் காலத்தை சேர்ந்தது. ஆழ்வார் சன்னதி, பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. மூலவர் திருமேனி அமர்ந்த திருக்கோலத்தில் அஞ்சலி ஹஸ்தம் ஆக அதாவது குவித்த கையுடன் அமைந்திருக்கிறது. ஆழ்வாரின் உற்சவத் திருமேனி, அதே அமைப்பிலும் மேலும் பல அரிய வேலைப்பாடுகளுடன், முகம் நிறைய தவழும் சிரிப்புடன் அமைந்திருப்பது சிறப்பு.


பேயாழ்வார், பூதத்தாழ்வார் தோன்றிய மறுநாள் சதய நக்ஷத்திரத்தில் திருமாலின் வாளான நந்தகத்தின் அம்சமாய், திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் நெய்தல் நில மலரான செவ்வல்லிப் பூவில் தோன்றினார். திருமாலின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்ததனால் அந்த அன்பு, பேய்த்தனமாக இருந்ததனால் பேயாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். இவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தம் “மூன்றாம் திருவந்தாதி” என்று வழங்கப்படுகிறது. “திருக்கண்டேன்” என்று தொடங்கும் இந்தப் ப்ரபந்தம் 100 பாசுரங்களைக் கொண்டது.

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

இப்படி மூன்று ஆழ்வார்களும் ஒன்று சேர்ந்து நின்று பெருமானை அனுபவித்து, முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மற்றும் மூன்றாம் திருவந்தாதி என்று மூன்று திவ்யப்ரபந்தங்களை முறையே அருளிச் செய்தனர். இவர்கள் மூவரும் நின்று பெருமானை அனுபவித்து திவ்யப் பிரபந்தங்கள் அருளிச்செய்த இடமானது திருக்கோவலூரில் உள்ள “ம்ருகண்டு” மகரிஷியின் ஆசிரமத்து இடைகழி (தாழ்வாரம்) ஆகும்.

இவர்கள் மூவருடன் சேர்ந்து தானும் நிற்க விருப்பம் கொண்டு பெருமானும் பிராட்டி சகிதமாய் அங்கு எழுந்தருளினான். அர்ச்சாமூர்த்தியாய் தான் எழுந்தருளியிருக்கும் மற்ற திவ்யதேசங்களைக் காட்டிலும், பரவாசுதேவனாய் வீற்றிருக்கும் வைகுந்தத்தைக் காட்டிலும், வியூக வாசுதேவனாய் சயனித்திருக்கும் திருப்பாற்கடலைக் காட்டிலும், மெய்யடியார்கள் இதயமே அவன் தனது பிரதான இருப்பிடமாகக் கொள்கிறான். “உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்னும் உளன் கண்டாய்” என்று பொய்கையாழ்வாரும், “மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான்” என்று பூதத்தாழ்வாரும், “மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான்” என்று பேயாழ்வாரும், தங்கள் மனத்தினுள் எம்பெருமான் கோயில் கொண்டிருப்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.

பொய்கையார், பூதத்தார் இருவரும் ஏற்றிய விளக்கில், தங்களை நெருக்கியது எம்பெருமானே என்றறிந்த பேயாழ்வார், தான் பெற்ற தரிசனத்தை உணர்த்தும் வண்ணம்...

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று”

பாசுர விளக்கம்: பெரிய பிராட்டியாரை (ஸ்ரீமஹாலக்ஷ்மி) சேவித்தேன்; அழகிய திருமேனியையும் சேவிக்கப் பெற்றேன்; ஒளிவிடுகின்ற சூரியனைப் போன்று அழகிய ஒளியைக் கண்டேன்; போரில் கிளர்ந்து எழுந்த அழகிய சக்ராயுதத்தைக் கண்டேன்; வளைந்த சங்கத்தையும் திருக்கையில் கண்டேன் என்று பாடுகிறார்

ஒருவரைப் பார்த்தால், அதைப் பற்றி மற்றவரிடம் பேசும்போது... அவரைப் பார்தததற்கு அடையாளமாக சிலவற்றைக் கூறினால்தானே, மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்வர். “கண்டேன் சீதையை” என்று வெறுமனே சொன்னால் தன் நாதனான இராமன் அதை ஏற்றுக்கொள்ளமாட்டான்; நம்பமாட்டான். ஆதலால், திருமகளைத் தான் கண்டேன் என்பதை உணர்த்துவதற்காகவே, பிராட்டியிடமிருந்து சூடாமணியைப் (திருகு பூ) பெற்றுக்கொண்டு, இராமனிடம் அதைக் காட்டி, அவனை மகிழ்வித்தான் அனுமான். இதைக் கருத்தில் கொண்டே பேயாழ்வார் தான் பெற்ற தர்சனத்தை வெறுமனே அறிவிக்காமல், பெருமானுடன் சேர்ந்திருக்கும் திருமகளையும், திருக்கைகளில் ஏந்தியிருக்கும் சக்கரத்தையும், சங்கையும் தரிசித்தேன்; பொன்மயமான ஜோதியை உடைய எம்பெருமானை தரிசித்தேன் என்று தான் தரிசித்தது திருமாலையே என்று பல வித ஆதாரங்களையும் அடையாளங்களையும் சொல்லி அறிவித்தார்.

பேயாழ்வார் அவர் சென்று வந்த திருத்தலங்களை பற்றி குறிப்பிடுகிறார்...

“விண்ணகரம் வெஃகா விரி திரைநீர் வேங்கடம்
மாநகரம் மாமாட வேளுக்கை - மண்ணகத்த
தென்குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.”

இதில் விண்ணகரம் என்பது சோழ நாட்டில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில் என்று சொல்கிறார்கள்.

சோழ நாட்டில் ஐந்து விண்ணகரங்கள் (விஷ்ணுவின் கிரஹங்கள்)
நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்), வைகுந்த விண்ணகரம், அரிமேய விண்ணகரம், காழிசீராம விண்ணகரம் (சீர்காழி) திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்).

வெஃகா என்பது காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னா வண்ணம் செய்த பெருமாள் கோயில். வேளுக்கை என்பது காஞ்சியிலே உள்ள முகுந்த நாயகர் கோயில். குடந்தை - கும்பகோணம், வேங்கடம் திருப்பதி, திருவரங்கம் ஸ்ரீ ரங்கம், தென் கோட்டி என்பது பாண்டி நாட்டில் உள்ள திருக்கோஷ்டியூர். குடங்கை என்பது உள்ளங்கையில் நீர் ஏற்ற வாமன அவதாரக் குறிப்பு.

பேயாழ்வார் திருவல்லிக்கேணி பற்றியும் குறிப்பிடுகிறார்..

“வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்திவிளக்கும் அணி விளக்காம் - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிகேணியான் சென்று.”

கடற்கரையில் வெள்ளி அலைகள் வந்துதைத்த சிவப்பான பவளம், வெண்மையான முத்துக்கள், அந்தி மாலை நேரத்தின் அழகான விளக்குகள் என்று அவர் வர்ணிக்கும் திருவல்லிக்கேணி, ஊரடங்கினால் அப்படிதான் இருக்கிறது...

இறைவன் எப்படி இருப்பான் வெள்ளையா.. சிகப்பா.. பச்சையா.. கருப்பா.. என்ன அவன் உருவம்? இதை யார்.. யார் சொல்ல முடியும் என்று கேள்வி கேட்டு விட்டு, அதற்கு பெரியாழ்வார் அருமையான ஒரு பதிலை சொல்கிறார்... இயற்பாவின் மூன்றாம் திருவந்தாதியில் வருகிறது இந்த வெண்பா.

“நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் - நிறைவு உடைய
நா மங்கை தானும் நலம் புகழ வல்லளே
பூமங்கை கேள்வன் பொலிவு?”

(வெளிது - வெள்ளை, பசிது - பச்சை, செய்து - சிவப்பானது, கரிது - கருப்பானது, நா மங்கை - சரஸ்வதி, பூமங்கை - லட்சுமி, கேள்வன் - கணவன், பொலிவு - உருவம், அழகு)

இறைவன் வெளுப்பா, சிவப்பா, பச்சையா, கருப்பா என்று அவன் உருவத்தை என் போன்றவர்களால் சொல்ல முடியாது. எண்ணிப் பார்த்தால் கல்வி அறிவு நிறைந்த சரஸ்வதி தான், லட்சுமி மணவாளனின் உருவத்தை வருணிக்க வல்லவள். பிரம்மனின் நாக்கில் சரஸ்வதி உறைவதாக சொல்வார்கள். அதனால் அவள் நா மங்கை, தாமரைப்பூவில் பிறந்தவள் என்று லட்சுமியை சொல்வார்கள். அதனால், அவள் பூமங்கை இந்தப் பாடலில் சரஸ்வதி கல்வியின் அறிவின் தீட்சண்யத்தின் குறியீடு. இறைவனை, இந்நிறத்தவன் அவன் என்று சொல்வதற்கே சரஸ்வதியின் அறிவு முதிர்ச்சி வேண்டும். இறைவன் கருப்பா, சிவப்பா என்கிற கேள்விக்கெல்லாம், அவளால் தான் பதில் சொல்ல முடியும் என்கிறார் பேயாழ்வார்..

“மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி- கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்
வயிற்றினொடு ஆற்றாமகன்.”

பேயாழ்வார் தரும் அற்புதமான உருவகம் இது “வயிற்றினொடு ஆற்றாமகன்” அதாவது எத்தனை சாப்பிட்டாலும் மறுபடி இன்னமும் ஏதாவது சாப்பிடக் கொடேன் என்று ஏங்குவது வயிறு.
ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் சொன்ன “உதர நிமித்தம் பகுக்கருத வேஷம்” என்று சொல்லும்போது வயிற்றுக்காக பலவிதமான விஷயங்கள் போடுவது தான் வாழ்க்கை என்கிறார்.

பகவானின் வயிறு பிரபஞ்சத்தையே சாப்பிடக்கூடிய அளவுக்கு பெரியது. அதை பிறப்பிக்கக் கூடியது ஆகவே ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்வது பகவானின் பெரிய வயிற்றை பற்றி, உலகங்களை எல்லாம் எடுத்து உண்டான் பேய்ச்சியின் பாலையும் உண்டான், உயிரையும் உண்டான், அதிலும் திருப்தி படாமல், ஆய்ச்சியின் வெண்ணையையும் உண்டு அவளால் கயிற்றில் கட்டப்படுகிறான். இந்த வயிற்றை வைத்துக்கொண்டு இவன் படுகிற பாடு! என்று வியக்கிறார்.

“திருவரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவும் கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்குநாளே” என்று (பெருமாள் திருமொழி) பிரார்த்தித்தார் குலசேகர ஆழ்வார். எம்பெருமானின் அடியார்களுடன் (தொண்டர்கள் - தொண்டாகிய கைங்கர்யத்தைச் செய்து வாழ்பவர்கள்) கூடி இருக்கவேண்டி, அதைப் பிரார்த்திக்கும் பாசுரம் இது. ஆனால், முதலாழ்வார்களின் வைபவத்தால் நாம் அறியவேண்டியது என்னவென்றால், அனைவரும் தன் அடியவர்களாக இருக்கவேண்டும்; எப்பொழுதும் அவர்களுடன் நான் சேர்ந்து இருக்கவேண்டும் என்று பேரவா கொள்கிறான் எம்பெருமான்; அதை உணர்த்தும் வண்ணமே, மெய்யடியார்களான முதலாழ்வார்களுடன் தான் ஒன்றுசேர்ந்து நின்ற இடத்தையே (இடைகழி) தன் “கர்ப்பக் க்ருஹமாக”க் கொண்டு, அங்கு (திருக்கோவலூர்) திரிவிக்கிரமனாய் நித்யவாசம் செய்து அனைவர்க்கும் இன்னருள் செய்துகொண்டிருக்கிறான் எம்பெருமான். “மன்னும் இடைகழி எம் மாயவன்” என்று இப்பெருமானுக்குப் பல்லாண்டு (மங்களாசாசனம்) பாடியுள்ளார் திருமங்கை ஆழ்வார் (பெரிய திருமடல்).

இவர்கள் ஏற்றிவைத்த பக்திவிளக்கானது, இருள்தருமா ஞாலத்தில் பிரகாசத்தை விளைவித்து, அனைவரும் எம்பெருமானின் தர்சனத்தைப் பெறும், பெரும் பாக்கியத்தை அடைவித்துத் தரும் என்பது திண்ணம் (உறுதி). “உபாயமும் அவனே; உபேயமும் அவனே”! அதாவது, அடையப்பட வேண்டியவனும் அவனே; அவனை அடையும் வழியை ஏற்படுத்தித் தருபவனும் அவனே என்று பொருள். தன்னை அனைவரும் வந்தடைய வேண்டும் என்ற பெருத்த ஆவல் கொண்டே, அவன் மெய்யடியார்களான ஆழ்வார்களையும், ஆசார்யர்களையும், பலபல மகான்களையும் இப்பூவுலகில் தோற்றுவித்திருக்கிறான்.

“கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்” என்பது சான்றோர் வாக்கு. பகவானின் தர்சனத்தைப் பெற்றவர்கள், அவனைவிடத் துணியமாட்டார்கள்; அவனை விடத்துணிபவர்கள், அவனது தர்சனத்தை ஒருபோதும் பெறப்போவதில்லை. இதை உணர்ந்து, தங்கள் திவ்யப்ரபந்தங்கள் மூலம், ஆழ்வார்கள் ஏற்றிவைத்த பக்தியென்னும் திருவிளக்கின் ஒளியை நம் உள்ளத்திலும் தக்கவைத்துக்கொண்டு, அவன் தர்சனத்தைப் பெற பிரார்த்திப்போம்.

அமுதம் பருகுவோம்....