தொடர்கள்
பொது
தமிழக கோவில்கள்  பாதுகாப்புடன் இருக்கிறதா?! – ஆர்.ராஜேஷ் கன்னா

2021052513470254.jpg

தமிழகத்தின் கோயில்களையும் அங்குள்ள பிரதான கலை சின்னங்களையும் காக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் அறிவுறுத்தியது.

தமிழக கோயில்கள் புராதன சின்னங்களாகவும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல மன்னர்கள் செல்வங்களை அள்ளி வழங்கி, பல ஆலயங்களை கட்டி தந்ததால் தமிழகத்தில் கோவில்கள் அதிகமாக உள்ளது.

தமிழக கோயில் எவ்வாறு நிர்வாகிகப்பட்டு வந்தது என்பதை கோவில் ஒழுகு என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வழங்கிய செல்வம் அளவிட முடியாதது.

காவிரி ஆற்றில் இரண்டு படகுகளை, முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மிதக்கவிட்டு… ஒரு படகில் மன்னனின் பட்டத்து யானை ஏற்றப்பட்டது. யானையின் மீது மன்னன் ஏறி அமிர்ந்து, படகு எவ்வளவு தூரம் தண்ணீரில் அமிழ்கிறதோ... அதே அளவு மற்றொரு படகு அமிழும் வரை அதில் பொன், வெள்ளி, வைடூரியும் உட்பட நவரத்தினங்களும் ஏற்றப்பட்டது.

மன்னன் அமர்ந்திருந்த படகுக்கு இணையாக மற்றொரு படகில் ஏற்றப்பட்ட செல்வங்களை எடுத்து, ஸ்ரீரங்க கோயில் விமானத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டது என்ற செய்தியை திருவரங்க கோயில் வரலாறு ஆங்கில நூலில் சான்றாக எழதப்பட்டுள்ளது.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்…. சோழர்கள், சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களை போரில் வென்றதன் மூலம் அவருக்கு கிடைத்த பொன் பொருட்களை, சிதம்பரம் கோவிலுக்கு தானமாக கொடுத்த விவரம் சிதம்பரம் கோவிலின் மேற்கு கோபுர சுவரில் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கோவில்களுக்கு தன்னுடைய செல்வங்களை எல்லாம் வாரி வழங்கி, ஸ்ரீரங்க கோயில் விமானத்திற்கு தங்க முலாம் பூசி திருப்பணிகள் செய்ததால் அவருக்கு ‘கோவில் பொன் வேய்ந்த பெருமாள்’ என்ற புகழ்பெற்றார்.

இப்படித் தமிழகத்தில் உள்ள புராதன கோயில்களுக்கான நிலங்களை, வேந்தர்களும், மன்னர்களும், பக்தர்களும் நன்கொடையாக அளித்தாலும்... தற்போது, அவை பாதுகாப்புடன் இருக்கிறதா என்ற கேள்வி பக்தர்களிடம் எழந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 40,695 கோயில்களில் நல்ல நிலையில் 32,935 கோயில்களில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 6414 கோயில்கள் சேதமடைந்துள்ளது. முழுவதும் பாழடைந்த நிலையில் 716 கோயில்களும், பகுதியாக பாழடைந்த நிலையில் 530 கோயில்கள் உள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில்... கோயில்கள் புனரமைக்க மற்றும் குடமுழுக்கு செய்ய ரு1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது 100 கோயில்களை புனரமைத்து, குடமுழுக்கு செய்ய ரு. 100 கோடி தமிழக அரசு தற்போது ஓதுக்கியுள்ளது.

கடந்த காலங்களில்... தமிழக கோயில்களில் இருந்து திருடி, எடுத்து செல்லப்பட்ட பழமை வாய்ந்த சாமி சிலைகள் பல வெளிநாடுகளில் உள்ளது.

அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுருந்தன் கோயிலில் இருந்த 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பஞ்சலோக சிலைகளான விநாயகர் மற்றும் மாணிக்க வாசகர் சிலைகள் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாகாணத்தில் இருந்ததை கடந்த 2016 ஆண்டில், மத்திய அரசிடம் அமெரிக்க அரசு திரும்ப வழங்கியது. இந்தச் சிலைகளின் தற்போதைய மதிப்பு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவில் 1000 வருடங்கள் பழமையான சகரத்தாழ்வார் மற்றும் பூதேவி சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டது. இந்த சிலைகளின் சர்வதேச மதிப்பு ருபாய் 11.75 கோடிகள் ஆகும்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலையை, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலிய அரசு கண்டுபிடித்து, இந்தியாவிற்கு திருப்பி தந்தது.

நமது விலைமதிப்பற்ற புராதன கலைசின்னங்கள் திருடப்பட்டு, சிலை கடத்தல் கும்பல்களால் வெளிநாடுகளில் பெரும் தொகைக்கு விற்பனை செய்து வரும் மாப்பியா கும்பலின் கைவரிசையாக இருந்து வந்துள்ளது.

நமது நாட்டு சட்டங்களில், சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை இல்லாததே நமது கோயில்களில் உள்ள புராதன சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்கு காரணம் என விபரமறிந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் புராதன சின்னங்களை சேதப்படுத்தினால் அல்லது கடத்தினால் கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது போன்ற சட்டங்கள் நமது நாட்டில் இல்லாததால், கோயில் புராதன பொருட்கள் கடத்தப்படுகிறது. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள், அபகரித்தவர்கள் அதற்கான வரியையும் முறையாக செலுத்துவதில்லை எனக் கோயில் அர்ச்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு…. உலக பராம்பரிய சின்னங்கள் அடங்கிய டிப்ரோனிவிக் நகரத்தில் உள்ள உலக கலாச்சார பாரம்பரிய தளங்களை வரலாற்று சின்னங்களையும், கட்டிடங்களையும், கலை மற்றும் அறிவியல் கட்டிடங்கள் மற்றும் ஆவணங்களை யுகோஸ்லோவியா கடற்படை தாக்குதல் நடத்தி பெருத்த சேதம் ஏற்படுத்தியது. இதில் இருவர் மரணமடைந்தனர். யுகோஸ்லோவியா கடற்படை அதிகாரி, உலக பராம்பரிய சின்னங்களை அழித்த போர்குற்றத்திற்காக, ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஏழு வருட கடுங்காவல் சிறை தண்டனை அளித்து, சிறையில் அடைத்தது.

அதே போன்று மாலி நகரில் உள்ள டிம்புகுடு என்ற பகுதியில் நடந்த போரில், அங்கிருந்த உலக கலாச்சர பாரம்பரிய தளங்கள் என அங்கிருந்த ஒன்பது கல்லறைகள் மற்றும் மசூதியை அழிக்க அகமது அல் பாகி மஹதி தனது படைகளுக்கு உத்திரவிட்டு, குண்டு வீசி தகர்த்தார். அத்துடன் பராம்பரியமாக கையால் எழதப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழதப்பட்ட குறிப்புகளையும் தனது படையினர் மூலம், அங்குள்ள நூலகத்திற்கு தீவைத்து எரித்த செயலும் செய்தார் என போர்குற்றம் சுமத்தப்பட்டு, ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

கடந்த 2017 ஆண்டு… உலகளவில் இருக்கும் கலாச்சார பராம்பரியத்தினை பாதுகாக்க வேண்டும். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மனித சமுகத்தின் இரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்கள். போர்காலத்தில் மற்றும் இயற்கை பேரிடல் காலத்திலும் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் கவுன்சில் சபை தீர்மானம் நிறைவேற்றியது. இதன்படி நமது மன்னர்கள் கட்டி தந்த புராதன கோவில்கள் மற்றும் அதன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது நமது அரசின் கடமையாகும்.

20210525134752631.jpg

படம்: மேப்ஸ்

கோவில் சொத்துக்களுக்கு பலர் இப்போது வாடகை தரமாலும், ஆக்ரமித்து கோவிலுக்கு சேரவேண்டிய வரிபாக்கியை கூட ஒழுங்காக செலுத்தாமல் உள்ளனர். இதனால் பல கோயில்களுக்கு நிறைய நிலங்கள் இருந்தும், ஒரு கால பூஜை செய்ய கூட வழியில்லாமல் திண்டாடி வருகிறது. தமிழகத்தில் இந்து அறநிலைய துறை என்ற தனி அமைப்பு நிறைய கோயில்களை பராமரித்து வந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்ற தமிழக பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு இருவரும் தானாக முன்வந்து கோயில் புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படுகிறதா... அதனை தமிழக இந்து அறநிலைய துறை எப்படி நிர்வாகம் செய்கிறது என்ற வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.

கடந்த அறுபது வருடங்களாக…. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் இருக்கும் புராதன கோயில்கள், நினைவு சின்னங்கள், சிலைகள் மற்றும் கோயில் சொத்துக்களை பாதுகாப்பிற்கான எந்தவொரு முறையான வரைமுறையும் தமிழக அறநிலைய துறை ஏற்படுத்தி முறையாக பாதுக்காக்க தவறிவிட்டது.

தமிழக கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள், பொருட்கள் மற்றும் பிற கோவில் சொத்துக்களின் பட்டியல் சரிவர இல்லாதது, தமிழக அறநிலைய துறையின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படையாக காட்டுகிறது.

தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தாலும்.... தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே எந்தவித வில்லங்கமின்றி உள்ளது. மீதி கோயில் நிலங்கள் என்னவானது…. யாரிடம் உள்ளது என்ற கேள்வி பக்தர்களின் கவலையாக உள்ளது.

நமது அரசியலமைப்பு சட்டப்படி புராதன சின்னங்கள், மற்றும் அதன் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளது.

தமிழக கோயில்களை பாதுகாப்பதில் இந்து அறநிலையதுறை (H R & CE) போதுமான திறன்களை கொண்டிருக்கவில்லை என்று யுனொஸ்கோ நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது.

தமிழக கோயில் நிதியை பயன்படுத்துவது மற்றும் சிலை கடத்தல் திருட்டை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக இந்து அறநிலைய துறைக்கு பல்வேறு ஆலோசனைகளை பல வழக்கின் போது வழங்கி இருந்தாலும்... அவை கடைபிடிக்கப்படுகிறதா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரிய பொருட்களை கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ளது. இதன் மூலம் தமிழக கோவில்களில் இருந்து களவாடி அல்லது வெளிநாடுகளில் கடத்தப்பட்ட புராதனமிக்க சிலைகளை மத்திய அரசின் துணையோடு மீண்டும் நமது கோயில்களுக்கு தமிழக அரசு மீட்டு வரலாம்.

20210525135050385.jpg

படம்: மேப்ஸ்

சில நாட்களுக்கு முன்பு … சென்னை சாலிகிராமத்தில் வடபழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்பு. இதன் மதிப்பு ரு. 250 கோடி தனியாரிடமிருந்து மீட்கப்பட்டதாக அறநிலையதுறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். ஆனால் எந்த சர்வே எண்ணில் இருந்து இந்த நிலம் யாரிடமிடருந்து மீட்கப்பட்டது என்ற தகவலை இந்து அறநிலைய துறை விவரங்களை வெளியிடவில்லை என்பது பக்தர்களின் கவலையாக உள்ளது.

கோயில்கள் மற்றும் புராதன கலாச்சார பாரம்பரியமிக்க இடங்களை பற்றி ஆலோசனை வழங்க உயர்நிலை குழ அமைக்கப்படும் என தமிழக அரசு சட்டசபையில் அறிவித்துள்ளது மட்டும் நம்பிக்கையின் கீற்றாக உள்ளது. நீண்ட நாட்களாகவே தமிழக அறநிலைய துறை செயல்பாடுகள் மீது நம்பிக்கையின்றி இருக்கும் பக்தர்கள், தற்போது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நிர்வாகம் செய்யும் ஸ்ரீராமனுஞரின் கோயில் ஒழுகு முறையை மீண்டும் பயன்படுத்தலாம் என்ற குரல் தமிழகம் முழவதும் ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது!