சிறுகதை, தொடர்கதை படிக்கும் வழக்கம் உண்டா? உங்களுக்கு பிடித்த கதை, அதன் ஆசிரியர் பற்றி கூறுங்கள்..!
வே.வினோத்குமார், ஹாங்காங்.
“மாயமான்”- கீரா அவர்களின் படைப்பு.
ஒரு விவசாயி தன் நிலையில் இருந்து ஒரு அடி முன்னெடுக்க நினைத்ததின் விளைவு, அதன் பொருட்டு இயற்கையின் சுழற்சியிலும், சமுதாயத்தின் சூழ்சியிலும் சிக்கி நான்கு அடி பின்னுக்கு தள்ளப்பட்ட கதை..
விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால் என்னை வெகுவாக தொட்டு பார்த்த கதை.
ந.கலைச்செல்வன், நாகை.
“சொந்த கதை சோக கதை....
நெஞ்சுக்குள்ள நிக்கிறது..” மாதிரி சொந்த கதையே பெரும்பாடா இருக்கும் போது, எனக்கெதுக்கு சிறுகதை தொடர்கதை எல்லாம்??!!
ம.உமாமகேஸ்வரி, குரோம்பேட்டை.
“ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” ஜெயகாந்தன் எழுதிய நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் வரும் ஹென்றி கதாபாத்திரம், இந்த உலகில் மிக அரிதாகவே காணப்படும் அளவுக்கு பெருந்தன்மையும், மனித நேயமும் உடைய கதாபாத்திரமாக செதுக்கி இருப்பார் ஜெயகாந்தன்.
“நீ எந்த மதம்..?” என்று ஹென்றியை நோக்கி எழுப்பப்படும் கேள்விக்கு “நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை” என்பான். “பின்ன ஏன் சாமி கும்பிடுற.?” என்ற கேள்விக்கு...
“சாமி கும்பிடுவதுக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்..?” என்று கேட்பான் ஹென்றி. ஒவ்வொரு முறையும் இந்த நாவலை படிக்கும் போது போட்டி பொறாமை இல்லா புத்தம்புது உலகில் உள்ளது போல் உணர்வு வரும்.
ரா.நிவேதிதா, வண்டலூர்.
சிறுகதைகள் மிகவும் பிடிக்கும். அதுவும் சுஜாதா எழுதிய கதைகள் என்றால் மிகவும் உயிர். அதில் “கொலையுதிர் காலம்” மிகவும் பிடித்த நாவல்.
அறிவியலுக்கும், அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் கதை. மனதை ஸ்தம்பிக்க வைக்கும் சில சம்பவங்களும், சடாரென்று நிகழும் திருப்பங்களும், தீர்க்க முடியாத புதிர்களும் நிறைந்த கதை. அத்துடன் அவரின் சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் எனது ஆல்டைம் ஃபேவரைட்..
பா.இராஜா, மும்பை.
தி.ஜானகிராமன் எழுதிய “மோகமுள்” பிடித்த ஒன்று. கதாநாயகி யமுனாவின் பாத்திரம் அருமை. அன்றைய தஞ்சை மண்ணின் மராட்டிய, கர்நாடக சங்கீத சூழலை படம்பிடித்துக் காட்டியுள்ளதால், இந்தக் கதை எனக்கு பிடிக்கும்... பொதுவாக தி.ஜா வக்கிரமாக எழுதுபவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மேல் உண்டு. “அம்மா வந்தாள்” நாவலை மட்டுமே படித்து விட்டு, வாசகர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். அவரின் மற்ற படைப்புகள் குறிப்பாக சிறுகதைகள் படித்தீர்கள் என்றால்... அவரின் கதைகள் அற்புதமானவை என்பதை உணருவீர்கள். ஒரு எழுத்தாளன் என்பவன் வாசகரின் மனநிலைக்கு ஏற்ப எழுதுபவன் இல்லை. படைப்பாளிக்கு எந்த நெருக்கடிகளையும் கொடுக்காமல் சுதந்திரமாக எழுதப்படும் படைப்புகளே காலத்தை தாண்டியும் நிற்கும்.
N.ஜெயானந்தன், ஆதம்பாக்கம்.
சி.சு. செல்லப்பா எழுதிய “வாடிவாசல்” எனக்கு மிகவும் பிடித்த கதை. “ஜல்லிக்கட்டு” விளையாட்டை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கதைக்களம். படிக்கும் போதே ஏதோ ஜல்லிக்கட்டை மிக அருகில் இருந்து, நிகழ்ச்சியை பார்த்து வர்ணனை செய்வது போல் அச்சு அசலாக இருக்கும். கதையின் கதாபாத்திரங்கள் வட்டார மொழிகளில் புழங்குவது நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச்செல்லக்கூடிய அளவுக்கு இருக்கும்.
தமிழ் எழுத்துலகின் அதிகம் கவனிக்கப்படாத எழுத்துலகநாயகன் என்று இவரை சொல்லலாம்.
1940-களின் வாழ்க்கை குறித்த செறிவான காட்சிகளை நீங்கள் காண வேண்டுமென்றால், இவரின் சிறுகதைகள் நாவல்கள் படியுங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.
Leave a comment
Upload