தொடர்கள்
கதை
பத்து பைசா... - கி. ரமணி

20210525194727860.jpeg

1957-ல் ரூ, அணா, பைசா மாறிப்போய் ஒரு ரூபாய்க்கு 100 நயா (புதிய) பைசா என்று மாறியது.

கொஞ்ச நாளுக்கு எல்லா பொருளாதார மற்றும் கணித மேதைகளும், தங்கள் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால்,
பழைய நாணய முறையில், ஒரு ரூபாய்க்கு 16 அணா. (ஒரு அணாவுக்கு 12 தம்படி அல்லது பழைய பைசா. ஆக ஒரு ரூபாய்க்கு 192 பைசா.) புது நாணய முறையில் ஒரு ரூபாய்க்கு 100 நயாபைசா.

ரூபாய் இரண்டு நாணய முறைக்கும், பொது.

அப்போ, ஒரு அணாவுக்கு ஆறு நயா பைசா, ரெண்டு அணாவுக்கு 12 நயா பைசா.

ஆனால், மூன்று அணாவுக்கு 18 நயா பைசா இல்லை.19 நயா பைசா.
கூட ஒரு நயா பைசா.

நாலணா என்றால் 25 நயா பைசா ஆனது.

அதேபோலதான் எட்டணா 50 நயா பைசா, பன்னண்டணா 75 நயா பைசா, ஒரு ரூபாய் 100 நயா பைசா, என்று எல்லாம் ரவுண்டு ஆகிவிட்டது .

அதாவது மூன்று அணா முதல் அடுத்த ஒவ்வொரு நாலாவது அணாவுக்கு மட்டும் (7,11,15) கூட ஒரு பைசா.

இது எதற்கு என்றால், அப்போதான் ஒரு ரூபாய்க்கு 100 பைசா வரும். இல்லாவிட்டால் 96 பைசா தான். அப்போது தசம முறை வராது. புதிய நாணய முறைக்கு அர்த்தம் இருக்காது.

இந்த புதிய முறையில் நிறைய குழப்பம் இருந்தது. (உங்களுக்கும் இப்போது தலைசுற்ற ஆரம்பித்திருக்கும்!)

ஒரு பெரிய பங்கனபள்ளி மாம்பழம் விலை ஒரு அணா என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு டஜன் மாம்பழம் தனித்தனியாக வாங்கினேன் என்றால் 72 நாயாபைசா தான் செலவு. அதை மொத்தமாக வாங்கினால் 12 அணா அதாவது 75 நயா பைசா கொடுக்க வேண்டும். மூணு நயா பைசா நஷ்டம்.

மூணு நயா பைசாவுக்கு அந்த காலத்தில் வீட்டு பக்கத்து உடுப்பி ஹோட்டலில் இரண்டு இட்லி சாம்பார் சாப்பிடலாம்.

இது தவிர ஓரணாவுக்கு ஆறு நாயா பைசா என்றால் அரை அணாவுக்கு மூணு நயா பைசா. அப்போ கால் அணாவுக்கு ஒண்ணரை நயா பைசாவா?

இல்லை... இரண்டு நயா பைசா.

சரி, அப்படியானால் ஒரு அணாவுக்கு எட்டு நயா பைசா இல்லையா?

இல்லவே இல்லை. ஆறு நயா பைசா தான்.

இந்த மாதிரி சின்ன ‘சில்லறை’ தகராறுகள் வேற தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும். அதனால் நயா பைசா டு அணா அட்டவணை ஒன்று எல்லா கடையிலும் மாட்டி இருந்தது.

பழைய, புதிய, நாணயங்கள் சில வருடங்கள் ஒன்றாகப் புழங்கின.
பழைய காலணா, அரையணா, ஒரு அணா, இரண்டணா, நாலணா, எட்டணா, போன்ற வகையறா எல்லாம் கொஞ்ச நாளில் செல்லாமல் போய்விடும் என்பதால் எல்லாருக்கும் கொஞ்சம் பயம் வந்தது.

அந்தக் காலத்தில் ஓட்டைக் காலணா என்று ஒன்று உண்டு. செம்பு மிகுந்த உலோகத்தில் தட்டையாக வாஷர் போல இருக்கும். நடுவில் பெரிய ஓட்டை.

என் பாட்டி ரொம்ப வருஷமா ஓட்டை காலணா எல்லாம் சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் நூலுக்குள் கோர்த்து மாலையாகச் செய்து சாமி படத்திற்கு அணிவித்திருந்தாள். கிட்டத்தட்ட ஆயிரம் ஓட்டை காலணா இருக்கும். சுமாராக 16 ரூபாய் கிட்ட தேறும்.

நாணய மாற்றம் காரணம் சொல்லி, தாத்தா பாட்டியிடம் இருந்து அதை அபகரித்து விற்று ரூபாய் ஆக்கிவிடலாம் என்று பார்த்தார். காம்பன்செஷன் ஆக அதன் விலைக்கு நயா பைசாவா அப்புறமா கொடுப்பதாகக் கூட நைஸாக சொல்லிப் பார்த்தார்.

பாட்டி லேசுப் பட்டவள் இல்லை.

“உங்க நயாபைசாவைக் கோத்து மாலையாக பண்ண முடியுமா?” என்று
பாட்டி உறுதியாக மறுத்துவிட்டாள். (அந்தப் பாட்டியோட ஓட்ட காலணா மாலை இப்போ எங்கு இருக்கிறதோ தெரியவில்லை!)

பிற்காலத்தில் அணா முறை ஓய்வு பெற்று நயா பைசா, பைசா வானது. ஒரு பைசா, இரண்டு பைசா, மூணு பைசா, அஞ்சு பைசா, பத்து பைசா, இருபது பைசா, 25 பைசா, 50 பைசா என்று வந்தன.

பின்னர் சிறிய நாணயங்களில் (இருபது பைசா வரை) செம்பு, நிக்கல் போன்ற கலவைகள் மறைந்து நாணயங்கள் அலுமினியத்தில் வந்து பலவீனமாக இளித்தன.

இதில் இந்தப் பத்து பைசாவுக்கு மட்டும் என் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. என்னை வருஷக்கணக்கில் ரொம்ப பாடாய்ப் படுத்திவிட்டது.

ஆரம்ப காலத்தில், என் ஸ்கூல் பருவத்தில் கையில் பத்து பைசா இருப்பதே கஷ்டம். அதிலும் ஒரே ஒரு பத்து பைசா மட்டுமே இருந்தால் ரொம்பக் கஷ்டம் தான். ‘ரீட்டா’ குச்சி பால் ஐஸ் ஆறு பைசா தான். பத்து பைசாவை நீட்டி ஐஸ் கேட்டால் சில்லறை இல்லை என்று விடுவான் ரீட்டா வண்டிக்காரன். இல்லையென்றால் ‘நாளைக்கு சில்லறை வாங்கிக்கோ’ என்பான். இது ரிஸ்க். மற்றும் கட்டுபடியாகாது.
நாலு பைசாவில் எவ்வளவோ பண்ணலாம்.

உடுப்பி ஹோட்டலில் தோசை சாப்பிடலாம். 40 தீப்பெட்டிப் படங்கள் வாங்கலாம். பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி இருக்கும் இரண்டு பேரி (parry) ஆரஞ்சு மிட்டாய் வாங்கலாம். ஸ்கூல் வாசலில் பயாஸ்கோப் இரண்டு தடவை பார்க்கலாம். கபாலீஸ்வரர் கோவில் வாசலில் நாலு பைசாவுக்கு தக்கவாறு பெருசாக சுற்றிய ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் வாங்கலாம்.

ரீட்டா குச்சி ஐஸை தியாகம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம் பலமுறை மேற்கண்ட காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது.

மன்னாதி மன்னன் எம்ஜிஆர் படம், மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் இரண்டாம் ஓட்டத்துக்கு வந்து இருந்தது. நல்ல கூட்டம். என் கஸினுடன் சென்றிருந்தேன். 75 பைசா டிக்கெட் என்று கணக்கு பண்ணி சரியாக ஒரு ரூபாய் 50 பைசா உண்டியலில் சேர்ந்தவுடன், வீட்டு பர்மிஷனுடன் போயிருந்தோம். அரை மணி நேரம் க்யூவில் நின்றபின் கவுண்டர் வந்தது.
கவுண்டர் பக்கத்தில் சென்று கையை உள்ளே நீட்டினேன். “ரெண்டு டிக்கெட்” என்றேன். உள்ளேயிருந்து “இன்னும் பத்து பைசா கொடுப்பா” என்று குரல் வந்தது.

குனிந்து உள்ளே பார்த்து டிக்கெட் கொடுப்பவரிடம், “ஒரு டிக்கெட் 75 பைசா தானே” என்றேன்.

“இல்லப்பா ஒரு டிக்கெட், எண்பது பைசா. நேற்றிலிருந்து” என்றார் அவர்.

“அச்சம் என்பது மடமையடா” என்று எம்ஜிஆர் போல் மனதில் நினைத்துக் கொண்டு தைரியமாக....

“அப்ப ஏன், 75 பைசாவை 80 பைசா என்று கவுண்டரில் மாற்றவில்லை?” என்றேன்.

என்னையோ.. என் கேள்வியையோ எல்லாம் அவர் துளிக்கூட மதிக்கவில்லை.

“ம். அடுத்த ஆள் வாங்கப்பா” என்றார்.

வேறு வழியில்லாமல், அவசரமாக வெளியே வந்து 50 பைசா டிக்கெட் கிடைக்குமா என்று பார்தோம். ஏகக் கூட்டம். ஹவுஸ் புல் ஆகிவிட்டது. அப்புறம் 15 வருஷம் கழிச்சு திருச்சியில் தான் அந்தப் படத்தை முருகன் தியேட்டரில் ‘புது பிரிண்டில்’ பார்த்தேன். (படத்தில் பத்மினி - எம்ஜிஆர் ரெண்டு பேரும் வயதாகாமல் பழையபடியே அழகாகத்தான் இருந்தார்கள்!).

பத்து பைசாவின் சதித்திட்டங்கள் இத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்தது.

அந்தக் காலத்தில் மயிலாப்பூரில் எங்கள் டாக்டர் ஜி ஏ நாராயணனை பற்றி இப்போது கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது...

கருகருவென்ற தலைமுடியுடன் உசிலை மணி இருந்தால் எப்படி இருந்திருப்பார். அவர்தான் நாராயணன். வயது 40 இருக்கலாம். வெள்ளைச் சட்டையும், அதைக் கஷ்டப்பட்டு அமுக்கித் திணித்து உள்ளடக்கி, அதற்குமேல் பெரிய்ய்ய பெல்டுடன், கருப்பு பேண்ட் அணிந்து இருப்பார். எதற்கு வம்பு என்று, பெல்ட் மேல் இருந்த சந்தேகத்துக்காக... பேண்ட்லிருந்து இரண்டு தோள்பட்டைக்கும் நாடா போல இரண்டு ஸ்டராப்பும் வேறு அணிந்திருப்பார். இருந்தாலும் அவர் பேண்ட் நிலையற்ற சமநிலையில் இருப்பது போல் தான் பார்ப்பவருக்கு தோன்றும். ஆனால், காலுக்கு மட்டும் தெரு கடையில் வாங்கிய ரப்பர் செருப்பு தான் அணிந்திருப்பார்.

அவர் அணிந்த பெரிய லாங் சைட் கண்ணாடி வழியே அவர் கண்கள் இரண்டு மடங்கு பெரிதாக தெரிந்து பயமுறுத்தும். அவருக்கு கோபமே வராது.

எப்போது பார்த்தாலும் புன்னகை தவழும் முகம். ஊசிபோடும் போது கூட சிரித்துக் கொண்டே தான் போடுவார். ஊசி போடப்படுபவர் கையை அசைத்தால் கூட புன்சிரிப்புடன் தான் அவரை கண்டிப்பார்.
எப்பேர்ப்பட்ட வியாதியாய் இருந்தாலும், கன்சல்டேஷன் ஒரு ரூபாய் என்று வைத்திருந்தார்.

ஒரு பெரிய மேஜையின் பின்புறம் உள்ள ராட்சச சைஸ் நாற்காலியில் அமர்வார். நாற்காலியில் அவர் அமர்ந்த பின்பு பார்க்கும்போது, நாற்காலி கொலு பொம்மை போல் சின்னதாக தெரியும்.

பின்னாலே மிகப் பழங்காலத்தின் அறுவை சிகிச்சையின் தந்தையான சுஸ்ருதர் கையில் கத்தியுடன் ஒருவருக்கு அனஸ்தீசியா இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யத் தயாராகும் தத்ரூபமான படம் ஒன்று பிரேம் பண்ணி சுவரில் மாட்டியிருக்கும்.

அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு எப்பவுமே என்னை நோக்கிதான் சுஸ்ருதர் கத்தியுடன் வருகிறாரோ என்று கொஞ்சம் பயமாக இருக்கும்.

எல்லா நோய்களுக்கும் பொதுவாக ஊதா கலர் மிக்சர் ஒன்று அளவிடப்பட்டு கோடிட்ட பாட்டிலில் பாதி பாட்டில் கொடுப்பார். ஆறு வேளைக்கு.

ஆனால் எல்லா நோய்களும், அந்தப் பாதி முடிப்பதற்குள் குணமாகிவிடும். (அந்த குமட்டல் சகிக்க முடியாமலே நோய்க் கிருமிகள் ஓடிவிடும்.).

பீஸ் வாங்கும் போதும் புன்சிரிப்புடன், ஒரு ரூபாய் என்று கேட்டு வாங்கி விடுவார். நம்மிடம் ஒரு ரூபாய் இல்லாவிட்டாலும் நோட்புக்கில் குறித்து கொள்வார்.

பச்சை விளக்கு - சிவாஜி படம் - ரிலீஸ் ஆனவுடன் சைதாப்பேட்டை, நூர்ஜஹான் தியேட்டர் ஒரு ரூபாய் 25 காசு டிக்கெட் ஈவினிங் ஷோவுக்காக அம்மா, அப்பா, அக்கா, தம்பி, நான் என்று ஐந்து பேருக்கு புக் பண்ணியிருந்தார் அப்பா.

சிவாஜி படத்தை தவிர எந்தப் படமும் பார்க்கக் கூடாது என்ற ஏக ஹீரோ விரதம் கொண்டவர் அப்பா. தவிர, இந்த மாதிரி புது படத்துக்கு அவர் அட்வான்ஸ் புக்கிங் பண்ணுவதெல்லாம் மிக மிக அரிதான சம்பவம்.

சம்பவ தினத்தன்று பி.டி. கிளாசுக்கு மட்டம் போட்டுவிட்டு, வீட்டுக்கு நாலு மணிக்கே வந்து விட்டேன். 5 மணிக்கு கிளம்ப வேண்டும்.

எல்லோரும் ரெடி என்றபோது, ஐந்து வயது தம்பி ஒருமாதிரியாக முழித்துக் கொண்டிருந்தான். என்னடா என்றால் “பத்து பைசாவை தெரியாம வாயில போட்டு முழுங்கி விட்டேன்” என்கிறான்.

எல்லாரும் பதறிப்போக நானும் அப்பாவும் தம்பியை இழுத்துக்கொண்டு ஜி.ஏ. நாராயணனிடம் போனோம்.

சோதித்த ஜி.ஏ. நாராயணன், அப்பாவிடம் பாட்டிலில் விளக்கெண்ணெய் மாதிரி ஒரு மருந்தைக் கொடுத்து (அவருடைய டிரேட்மார்க் மிக்ஸர் இல்லை) தம்பிக்கு கொடுக்க சொன்னார்.

“காலையில லட்ரின் போனதுக்கப்புறம் செக் பண்ணி பாருங்க. பத்து பைசா இருக்கும். அப்படி இல்லன்னா இரண்டு வாழைப்பழம் விளக்கெண்ணையில் முக்கி கொடுங்க. வெளியே வந்துவிடும்” என்றார்.

“அப்படியும் வரலைன்னா” என்றார் அப்பா.

“பரவாயில்லை. பையன் வளர்ந்து பெரியவன் ஆனதுக்கு அப்புறம், அவனுக்கு வேலை எதுவும் கிடைக்காம வெட்டியா இருந்தான் என்றால், நீங்க அவன ‘பத்து பைசாக்கு லாயக்கில்லை’ என்று திட்ட முடியாது என்று கூறி உடல் குலுங்க, அவர் டேபிள் மீது வைத்திருந்த பேப்பர் வெயிட் நகர்ந்து கீழே விழ, சிரித்தார்.

ஜோக்கை வெறுத்த அப்பா... ஒரு ரூபாய் கொடுத்து விட்டு எங்களுடன் வெளியே வந்தார். மணி ஏழு ஆகிவிட்டது.

அப்படியாக அன்று பத்து பைசா புண்ணியத்தில் பச்சை விளக்கு, சிவப்பு விளக்கு ஆகி எங்களை படம் பார்க்க முடியாமல் செய்துவிட்டது.

அடுத்த நாள் காலையில், அந்த சதிகார பத்து பைசா ஒருவழியாக தன் வேலை முடிந்து விட்டதால் வெளியே வந்துவிட்டது. அதை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று ஒரு மணி நேரம் விவாதித்துக் கடைசியில், அந்தத் துரோகியை சாக்கடைக்குள் போட்டு விட்டோம்.

நாள் ஆக வருடங்கள் ஓட.. ஓட.. இந்தப் பத்து பைசாவின் மதிப்பு குறைந்து கொண்டே வந்தது. ஒருவகையில் சந்தோஷம் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. மற்ற நாணயங்களும் மதிப்பு குறைகிறது என்று கூட நான் கவலைப்படவில்லை. இனிமேல் பத்து பைசா நம்மை தொந்தரவு செய்ய முடியாது என்று ஒருவகையான இறுமாப்பு கூட ஏற்பட்டு விட்டது.

1970, 80-களில் ஒரு மாதிரி பத்து பைசாவின் படுத்தலை மறந்தே போய்விட்டேன் என்று வைத்துக் கொள்ளலாம்.

80 கள் முடிவுல ஒரு முறை கேகே நகர் - பி.டி. ராஜன் சாலையில்
காலை வாக்கிங்க்காக நடக்கும்போது, மழை வந்ததால் ஒரு கடைப் பக்கம் கூரைக்கு அடியில் ஒதுங்கிய போது, ஒரு வயதான பெண்மணி மட்டும் என்னுடன் கூட நின்றாள். “ஐயா கொஞ்சம் தர்மம் பண்ணுங்க” என்றாள். நான் பர்சை எடுத்து கொண்டு வரவில்லை. சட்டை - பேண்ட் பாக்கெட் எல்லாம் தேடி பார்த்தால், எந்தப் பெரிய நாணயமும் இல்லை.
கடைசியில் பின் பாக்கெட்டில் எங்கோ ஒரு இடுக்கில் இருந்த பத்து பைசாவை எடுத்து பெருமையுடன் அவளை அருகில் அழைத்து அவள் கையில் கொடுத்தேன்.

அதை முறைத்து பார்த்து பின், என்னிடமே திருப்பி கொடுத்துவிட்ட கிழவி, அடித்தொண்டையில் அடுத்த ஐந்து நிமிஷங்கள் நான் எவ்வளவு பெரிய கருமி என்றும், நாணயங்கள் இல்லாவிட்டாலும் சரி, ஒரு ஐந்து அல்லது பத்து ரூபாயோ போட்டால் எந்தவிதத்திலும் என் சொத்து குறைந்து விடப் போவதில்லை என்பதையும் விளக்கினாள். இப்பேர்ப்பட்ட என்னைப் போன்றோர் இருந்த போதும் கூட சென்னையில் இன்னும் மழை பெய்வது ஆச்சரியம் என்று வேறு சொன்னாள்.

மழை நிற்கா விட்டாலும் பரவாயில்லை என்று இடத்தை அவசரமாக காலி பண்ணினேன்.

10 பைசாவின் மதிப்பு உயர்ந்து இருந்தாலும் சரி, குறைந்து போனாலும் சரி, அது என்னை இக்கட்டில் மாட்டுவதை நிறுத்தப் போவதில்லை என்று புரிந்தது.

2011-லோ என்னமோ 25 பைசாவுக்குக் கீழே உள்ள எல்லா நாணயங்களும் செல்லாது என்று ஆர்பிஐ அறிவித்தது, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

இருந்தாலும் வரும் காலத்தில் ஏதாவது வின்டேஜ் ரூபத்தில் வந்து இந்த பத்து பைசா என்னை படுத்தாது என்று மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.