தொடர்கள்
கவிதை
ஜெய்ஹிந்த் செம்பக ராமன் எனும் தமிழன்... - இரா.சு.இராசன்

20210525195453420.jpeg

சேகுவாரா படம்
போட்ட சட்டை அணிந்த
இளம் தமிழர் கூட்டம்
பெருமையுடன் எங்கும்
போகவரக் காணும்போதில்
எனது மனம் தாய் நாட்டு
விடுதலைக்காய் ஒரு
தமிழன் வெளிநாட்டில்
சாகும் வரைப் போராடி
ஜர்மனியில் கெய்சரையும்
பின்னாளில் ஹிட்லரையும்
சந்தித்துப் பழகி இன்று
ஏகமாய் இந்தியத்தில்
எங்கும் ஒலித்தெவரும்
வணங்கி நிற்கும் மேலான
“ஜெய் ஹிந்த்” மந்திரத்தை
உருவாக்கி அதனைப்
பின்னாளில் வியன்னாவில்
நேதாஜி சுபாஷ் தன்னைச்
சந்தித்தபோதும்
பெரும் போரில் வெள்ளையனை
வீழ்த்துமொரு படைக்கலனாய்
கொள்வோமென அளித்த
அருந்தமிழன் ஆற்றலையும்
முற்றும் தனைக் கொடுத்து
இன்னுயிரும் இந்தியத்தின்
பெருமைக்காய் ஈந்ததையும்
வரும் தலைமுறைக்கு
விளக்கமுற உரைத்திருந்தால்
வீரன் “செண்பகராமன் பிள்ளை”
படம் நெஞ்சில் தாங்கும்
சட்டையணிந்தன்றோயெம்
இளைஞர் கூட்டமின்று
இறுமாந்து மகிழ்ந்திருக்கும்
என் கண்கள் பனித்திருக்கும்.

எட்டுத் திக்கிலும் உலகில்
எங்கும் அறியச் செய வேண்டும்
ஏற்றமுடை வரலாறு இந்தியத்தில்
இன்னும் முழுதாய்
எட்டவில்லை என்றாலது
தமிழன் பிழைதானே

முற்றத்து முல்லை மணம்
மூடி வைத்தல் என்றும்
நமதியல்பு என்று முன்னாலும்
சுட்டிடடவே பல நிகழ்வு
நெஞ்சில் வருகிறது. வள்ளுவன்
குறள் பற்றி காந்தி மகானறிய
ரஷ்யாவின் டால்ஸ்டாய், தான்
வேண்டும் எனில் காந்தி
உடனிருந்த தமிழினத்துத்
தலைவர்கள் விடுதலைக்கே
முதலிடம் எனக்கொள்ள
யாண்டும் நமது மொழிச்
சிறப்பு, வடபுலம் காணவில்லை.

இன்னிலையில் நேதாஜிக்கு
முன்னால், நாடும் கடலும்
தாண்டி பிற மண்ணில்
இந்திய தேசீய தன்னார்வப்
படை அமைத்து விடுதலைப்
போர் வெளிநாட்டில் முதலில்
ஊன்றி வளர்த்து வேட்கையைத்
தூண்டி விட்ட செண்பக ராமன்
வரலாறு தொடர்ந்து வரும்
பிழை நீக்கிப் படித்ததனைப்
பாரறியச் செய்திடுவீர்.

(தொடரும்)