காவிரி மைந்தன்
உன் திருவடி சரணம் என்றதடி!
அன்பிற்கினியவளே!
அன்பெனும் நதியில் நீந்துவதால் நம்மிடம் துன்பம் சேர்வதில்லை!
ஆசையில் நம் மனம் மூழ்குவதால் அணைப்பன்றி அங்கே ஏதுமில்லை!
ஓசைநயங்கள் வேண்டுமென்று நாம் ஒருமனதாக முடிவுசெய்தோம்!
கண்கள் பேசும் பாஷையிலும் கனியிதழ் போதை மதுவினிலும் இரவுகள் கடந்திட வழிவகுத்தோம்!
இன்பத்தின் எல்லைகள் நாமறிந்தோம்!
உறவின் பெருமைகள் கூறுதற்கு உள்ளக்கதவை நாம் திறந்தோம்!
உன் வருகையொன்றே இனிமை சேர்க்கும்!
வண்ணங்கள் வாசலில் வந்துநிற்கும்!
சொல்லடி கிளியே.. தேன்மொழிகள்.. என் மனமெங்கும் உந்தன் ஊர்வலங்கள்!!
கண்ணிலே பாதியும் கருத்தினில்மீதியும் உள்ளதே காதலாம் உனக்குத் தெரியுமா?
என்னிலே நீயுமாய்.. உன்னிலே நானுமாய்.. இணைகின்ற வேளையில் இதயத்தைக் கேட்டுப் பார்!
சொல்லதிகாரம் செல்லுவதில்லை!
உன்னதிகாரம் வேண்டுமடி!
உன் கருவிழிக்கருகிலே காத்திருக்கிறேன்.. கண்மணி நீயே கதை சொல்! சொல்!
மறைபொருள் யாவையும் எனக்காக திறந்திட வேண்டும் என்றபோது உரிமையை உங்களிடம் கொடுத்துவிட்டேன் என்று நீ தப்பித்தாயே பைங்கிளியே!
மறுமொழி சொல்ல வழியில்லாமல் மயங்கி நின்றேன்.. உன்னிடமே!
எதுகையும் மோனையும் என்னிடமே.. எனினும் கவிதைக்குப் பொருள் நீயே!
மனதினில் நினைத்திடும் போதெல்லாம் மன்மதன் அம்புகள் பாய்கிறதே!
மலர்க்கணை என்பதால் காயமில்லை!
நீ எனைக் காத்திருக்க வைப்பதில் நியாயமில்லை!
மறு அடி என்னவென்று மனதைக் கேட்டேன். உன் திருவடி சரணம் என்றதடி!
அன்புமயம் ஆனதொரு உலகில் இன்பமயம் எய்துவது எளிது! கன்னிமலர் வாய்திறந்தா சொல்லும்!
செவ்விதழ்கள் களைப்பின்றித் தேன்வார்க்கும்!
இன்னும்கூட ஒன்றிரண்டு வேண்டும் என்று உனைக் கேட்டபோது.. இதெல்லாம் இனியெதற்கு கணக்கு என்று இதழ்மீது இதழ்மோத வைத்தாய்!
தருவதும் பெறுவதும் ஒரே சமயம் இந்த சமதர்மம் கலவியலின் நியதி!!
அரைகுறை உறக்கத்தில் ஆனந்த மயக்கத்தில் வருகின்ற மொழி அன்பின் கீதமாகும்!
திரைமறைவில் நடக்கின்ற நாடகங்கள் தினந்தோறும் தொடர்கின்ற கதையாகும்!
தித்திக்கும் முத்தங்கள் ஸ்பரிசத்தில் பெறுகின்ற பரிசுகள்.. நமக்கே நமக்காகும்!!
மூன்றாம் பாலெடுத்து வருவதனால் என்றைக்கும் காதலே சுகமாகும்!
தென்றலோடு நடந்துபோகும் பாதையிலே தேவியுந்தன் தோள்சாய்ந்தால் சொர்க்கமாகும்!
முன்னிரவில் கண்விழிக்கத் தொடங்கி பின்னிரவில் கண்ணயற முயன்று காலைவரை லீலை தொடர் என்றால் வாய்வெளுத்து கண்சிவக்கும் கதையே.. காட்டுகின்ற என் ஜீவசிற்பச் சிலையே!
படர்கின்ற கரங்களில் தவழ்கின்றாய்.. பார்வையில் நீ எனக்கு அருள்கின்றாய்!
வரம்தரும் தேவியின் வாய்மொழியில் என் வாழ்வே உளதென்று நானறிவேன்!
பூவிதழ்சிரித்திடும் தாமரை.. பொய்கையில் காட்டும் அழகைத்தான்.. புன்னகை பூத்திடும் பெண்பூவே.. உன் முகம் பார்த்தே உயிர்வாழ்வேன்!!
Leave a comment
Upload