தொடர்கள்
கல்வி
ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்... - தில்லைக்கரசிசம்பத்

20210525194912380.jpeg

சமீப காலமாக... தமிழ்நாட்டில், பள்ளி ஆசிரியர்கள் மேல் பாலியல் பலாத்காரம், பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து பள்ளி மாணவ மாணவிகளின் புகார்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து, கடைக்கோடி இராமநாதபுரம் முதுகுளத்தூர் வரை பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொரோனா காலத்தின் ஊரடங்கினால்... பள்ளிக் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற, இத்தனை வருடங்களாக நேரிடையான பாலியல் துன்புறுத்தல் செய்து கொண்டிருந்த சில ஆசிரியர்கள், தங்களின் ஆன்லைன் வகுப்புகளின் வீடியோவிலேயே அவற்றை செய்ய ஆரம்பிக்க... வீடியோ காட்சிகள் பதிவு மற்றும் திரையடி காட்சிகள் எடுக்கப்பட்டு, மாணவ-மாணவிகளால் விஷயம் வெளியே வர ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து பல பள்ளி குழந்தைகள், தங்களுக்கும் இதே போன்று கொடுமைகள் தத்தம் பள்ளி ஆசிரியர்களால் நடக்கிறது என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார்கள். தமிழகமே அதிர்ச்சியில் அதிர... தமிழக அரசு விழித்து கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து, இப்போது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் என்பது நம் குழந்தைகளுக்கு என்றுமே பாதுகாப்பான இடம் என்ற பெற்றோர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டிருக்கிறது, இம்மாதிரியான கொடுமை செய்திகள்.

அதிலும் சென்னையின் பிரபல பள்ளியின் தாளாளர், பள்ளி வளாக பங்களாவிலேயே தங்க, அந்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்ற ஒரு பெண் குழந்தைக்கு சிறிது மது கொடுக்கப்பட்டு, அரை மயக்கத்தில் தாளாளரின் அறைக்கு அழைத்து சென்று நாசம் செய்த செய்தி, நமது உள்ளத்தை நடுங்க வைக்கிறது. அவ்வாறு அக்குழந்தையை அழைத்து சென்றதும், அதே பள்ளியில் வேலைப் பார்த்த ஒரு ஆசிரியை என்பதும் இந்த வேலைகளை தான், அவர் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்ற செய்தி கொடுமையாக இருக்கிறது.

இது போன்ற செய்திகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் ஏன், உலகம் எங்கிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

பள்ளிக் குழந்தைகளில் 10%, தங்களின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் பாலியல் ரீதியாக தாக்குதல்களுக்கு ஆட்படுகிறார்கள். தங்களின் உடல்ரீதியாக தேவையில்லாத தொடுகைகளிலிருந்து, பாலியல் பலாத்காரம் வரையான குற்றங்கள் பள்ளி குழந்தைகள் மேல் சில ஆசிரியர்களால் பிரயோகிக்கப் படுகின்றன.

இதைத் தவிர... வேறுவிதமான பாலியல் தொந்தரவுகளாக, தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் காண்பிப்பது... அந்த படங்களை மாணவ- மாணவிகளுக்கு அலைபேசியில் அனுப்புவது, ஆபாசமாக பேசுவது போன்ற வக்கிர செயல்களிலும், சில ஆசிரியர்கள் ஈடுப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் 10 வயது குழந்தைகள் கூட, கையில் மொபைலை வைத்திருக்கிறார்கள். இது குற்றவாளிகளுக்கு எளிதாக எந்த நேரத்திலும், அக்குழந்தையை தொந்தரவு செய்வது எளிதாகின்றது. ‌தங்களுடன் பணியாற்றும் ஆசிரியர், இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்று சக ஆசிரியர்களுக்கு தெரிந்தாலும், அவர்கள் மௌனமாகவே இருக்கின்றார்கள். அது பள்ளி நிர்வாகத்திற்கு எதிரான செயல் என்று நினைக்கிறார்கள். அப்பள்ளியை நடத்தும் நிர்வாகமோ, செய்திகள் வெளியானால் பள்ளியின் “நற்”பெயர் பாழாகி, கெட்ட பெயர் உண்டானால்... பள்ளிக்கு யாரும் குழந்தைகளை சேர்க்க வர மாட்டார்கள் என்று மொத்தமாகவே மூடி மறைக்கும் செயலை செய்கின்றனர். ஆகமொத்தத்தில்... யாருக்கும் தத்தம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் மேல், அறம் சார்ந்த எந்த அக்கறையும் இல்லை என்றே தெரிகிறது. ‌

அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள், பயந்து கொண்டு பெற்றோரிடம் இதைப் பற்றி பேசாமல் இருந்தாலும், சில அறிகுறிகளை வைத்து பெற்றோர் கண்டறிய வேண்டும். பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு சரியான தூக்கம் இருக்காது.. சரியாக சாப்பிட மாட்டார்கள், மனநிலை மாறி கொண்டே இருக்கும். எப்பொழுதும் ஒரு வித பயத்துடன் இருப்பார்கள்.

இதை பெற்றோர் கண்டுப்பிடித்து... உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இதை கையாள வேண்டும். ஒரு போதும் குழந்தைகளை இதற்கு குற்றம் சாற்றக்கூடாது.

இது அவர்களின் தவறில்லை என்பதை குழந்தைகளின் மனதில் பதிக்க வேண்டும்.. தேவைப்பட்டால், மனோதத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும். அதே சமயத்தில்... காவல்துறையிடம் புகாரும் பதிய வேண்டும்.

தற்போது அதிக அளவில் பாலியல் புகார்கள் குவிய ஆரம்பித்ததால், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை 5 நாட்களுக்கு முன் “தமிழக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து காத்தல்” குறித்து வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

அதற்கேற்ப அரசு... “மாணவர்கள் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு” (student safeguarding advisory committee) (SAC) அமைத்திருக்கிறது.

ஒவ்வொரு குழுவிலும்...

பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், நிர்வாகத்தின் சார்பாக ஒருவர், ஆசிரியர் அல்லாத ஒருவர், தேவைப்பட்டால் வெளி ஆள் ஒருவர் என இருப்பார்கள்.

அத்துடன் ஆன்லைன் வகுப்பை முழுவதுமாக பள்ளி நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அவ்வப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையே திடீர் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆன்லைன் வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியரும் மாணவர்களும் சரியான உடை, கட்டுப்பாட்டு நெறியை பின்பற்ற வேண்டும்.

மாநில அளவில் பள்ளி கல்வித்துறை சார்பாக “மத்திய புகார் மையம்” (Central Complaint Centre) (CCC) எந்நேரத்திலும் தொடர்பு கொள்ள ஹாட்லைன் தொலைபேசி வசதியுடன் அமைக்கப்படும். புகார்களை ஈமெயிலிலும் அனுப்பலாம்.

அப்படி SAC-க்கு மாணவ - மாணவிகளிடமிருந்து புகார் வரும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் CCC-க்கு தகவல் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும் CCC-க்கும் இடையே நடக்கும், உரையாடல்கள் ஆவனப்படுத்தப்பட்டு ரகசியம் காக்கப்படும்.

மேலும் கூடுதலாக, பல்வேறு துறைகளில் இருந்து வந்த, பயிற்சியளிக்கப்பட்ட நபர்களை கொண்டு குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களையும் மற்றும் அவர்களின் புகார்கள் குறித்தும் வழிநடத்துவார்கள்.

அத்துடன் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் போக்சோ சட்டம் 2012 இன் கீழ் வருகின்ற சிறார் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து கட்டாய வழிகாட்டி முறைகளை அறிந்து கொள்ள, வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கூட்டத்தில் கட்டாயமாக பங்கு பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்கட்டும்... குழந்தைகளை இவ்வளவு பத்திரமாக யாரிடமிருந்து பாதுக்காக்கிறோம் என்று பார்க்கும் போது குற்றவாளிகள் நம் குழந்தைகளின் ஆசிரியர்களே என்று முடிகிறது. அனைத்து ஆசிரிய பெருமக்களையும் குற்றம் சொல்லவில்லை..

மாதா, பிதா, குரு ,தெய்வம் என்று தெய்வத்தை பின்னால் வைத்து முன்னால் இருக்கும் குருவை மரியாதை செய்யும் சமூகம் நம் சமூகம். அந்தக் காலத்தில் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில், முன்னுக்கு வந்த பெரிய மனிதர்கள் தங்கள் ஆசிரியராலே தான் இந்த மேம்பட்ட நிலைமை அடைந்தோம் என நன்றியுடன் நினைவு கூறுவார்கள். அப்போதெல்லாம் ஆசிரியர் பணிக்கு விரும்பி சேர்ந்து, சேவை மனப்பான்மையுடன், மாணவர்கள் நலனுக்காகவே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார்கள். இன்றோ 80, 90, 100 மதிப்பெண்களை எடுத்தவர்கள் மருத்துவ பொறியியல் படிப்புகளுக்கு போக, பாக்கி 40, 50, 60 எடுத்தவர்கள் வேறு வழியின்றி பிழைப்புக்காக ஆசிரியர் வேலைக்கு சேருகிறார்கள். அரசு பள்ளிகளில்... ஆசிரியர் பணிக்கு, லட்சக்கணக்கில் அதிகார வர்க்கத்திடம் கப்பம் கட்டி சேருவது ஒரு பக்கம்... இன்னொரு பக்கத்தில் அடாவடித்தனங்களின் மொத்த உருவான தனியார் பள்ளிகள்.

தமிழகத்தில் 1980 முதல் புற்றீசல்களாக தோன்றிய தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிப்புரிய எந்த முன் அனுபவங்களும் இல்லாது, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடிந்திருந்தால் போதும் என்ற நிலை உருவாகியது. அதிலும் தனியார் பள்ளிகள், கல்வியை கக்கத்தில் வைத்து கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து, கல்லா கட்டுவது மட்டுமே குறிகோளாக வைத்து கொண்டு... ஒழுக்கம், நன்னெறி, நேர்மை, கண்ணியம், மாணவர்கள் நலன் போன்றவைகளை காற்றில் பறக்க விட்டு விட்டன. சுருக்கமாக சொன்னால்... கல்வி என்று வியாபாரம் ஆனதோ, அன்றே இக்கேடு விளைய ஆரம்பித்தது. வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக ஆசிரியர் பணிக்கு வரும் மிக சிலரால் இன்று இந்த நிலைமை.

ஆசிரியர் பணி என்பது புனிதமானது. குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் மீது, இந்த சமூகம் மிகுந்த நம்பிக்கை வைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அந்த கல்வியாளர்களில் ஒரு சிறிய சதவீதம், தங்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கு தங்கள் அதிகார நிலையை பயன்படுத்துகின்றனர். இறுதியில் பாதிப்படைந்த குழந்தைகள், தங்கள் ஆசிரியர்களிடம் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து போகிறது.

பாரத் ரத்னா விருது வாங்கிய டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர் மாணவ கண்மணிகளின் வாழ்வை உயர்த்தும் கல்வித் திட்டம், இந்தியாவில் உருவாக அரும்பாடுபட்டார். சிறந்த மாணவர்களை உருவாக்கினார். உயர்ந்த எண்ணங்களுடன் ஆசிரியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் இந்திய ஜனாதிபதியாகவும் உயர்ந்தார்.

அப்பேற்பட்ட சிறந்த மனிதர் வாழ்ந்த இந்த நாட்டில், தற்போது ஏன் இந்த அவல நிலை? புல்லுருவிகளை களை எடுத்து, ஆசிரியர் நல்லுலகம் மீண்டும் சிறந்து, அற்புதமான மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கை ஆகும்.