தொடர்கள்
தொடர்கள்
திரை நாயகிகள் ஒரு நடுநாயகப் பார்வை... - 3 - தி. குலசேகர்

நாட்டாமை

20210524183050584.jpg

‘மண் புழுவின் உடலமைப்பு பல அடுக்குகளை கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு ஆணுறுப்பு ஒரு பெண்ணுறுப்பு இருக்கும்.
அவை பாலுறவு கொள்ள விரும்புகிறபோது, அது தன்னைத்தானே வளைத்து நெளித்து, ஒரு அடுக்கில் உள்ள ஆணுறுப்பு
இன்னொரு அடுக்கிலுள்ள பெண்ணுறுப்பிற்குள் செலுத்தி
உறவு கொண்டு வம்சவிருத்தி செய்து கொள்கிறது.
அதனால் அங்கே பாலியல் வன்முறைகள் ஏற்படுவதில்லை.
ஈவ் டீஷிங். ரேப் என எதுவும் அங்கே நிகழ்வதில்லை’


உன் நாட்டாமைய வேற எங்கயாவது வச்சுக்க.. இந்த நாட்டாமை தான வேணாங்கறது.. உன் நாட்டாமைய விட மாட்டியே.. என்று பேச்சுவாக்கில் நாட்டாமை என்கிற பதத்தை பல இடங்களில் பயன்படுத்தி இருப்போம். நாட்டாமை என்பது ஜனநாயக முறைப்படி, தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கிற பதவி அல்ல. அது வழி வழியாக பரம்பரை பரம்பரையாக வழங்கப்படுகிற ஒரு கௌரவ பதவி. ஆனால், அந்தப் பதவி, அந்த ஊரையே ஆட்டிப் படைக்கிற வல்லமை கொண்டது. உண்மையில் நாட்டாமை என்பது ஆணவம், அதன் உட்பொருள் அகம்பாவம்.

ஒரு பதவி தானாக கிடைக்கிறது என்றால், அது மன்னராட்சியில் தான் பரம்பரை பரம்பரையாக ரத்த வழித்தோன்றல்களுக்கு கிடைக்கும். மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி முறை வந்து விட்டாலும், இந்த நாட்டாமை இன்னும் பல இடங்களில் இருக்கவே இருக்கிறது.

அப்படியான நாட்டாமைகளுக்கு வெற்றிலை பாக்கு மென்று துப்பவதற்கு ஏதுவாக பித்தளை செம்பை தூக்குவதற்கு ஒரு ஆர்டர்லி பணியமர்த்தப்பட்டிருப்பார். பின்னாலிருந்து விசிறி விட ஒரு ஆசாமி. எடுபிடிக்கு ஒரு நபர். இப்படி ரகளையாக அவர் பஞ்சாயத்து பண்ணுவார். அவர் தான் பதினெட்டு பட்டிக்கும் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ். அவர் வைத்தது தான் சட்டம். அவர் சொன்னது தான் தீர்ப்பு.

இதில் எங்கே ஆணாதிக்கம் வந்தது என்று தோன்றுகிறதா? எந்த நாட்டாமையாவது தன்னுடைய பரிவட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிற போது, அறிவில் சிறந்த ஏதாவது ஒரு மகளுக்கு வழங்கி இருக்கிறாரா? அந்தப் பதவி ஆண்களுக்கானது என்பது அறிவிக்கப்படாத சேதி. அப்படியென்றால் அதில் ஆணாதிக்கம் துளிர்க்காமல் எப்படி போகும்?

ரத்தபாசம் என்பது நிர்பந்தமிக்கது. குறுகலானது. ரத்தபாசத்தை கடந்து அறத்தின் பக்கம் நின்று செயல்பட்டதாலேயே விதுரனும், விபீஷ்ணனும் அத்தனை திறமை இருந்தும், இதிகாசங்களில் கண்டுகொள்ளப்படவில்லை. காரணம்... அவர்கள் எந்தக் குழுவின் பக்கமும் சேராமல், அறத்தின் பக்கம் நின்றவர்கள். ரத்தபாசத்தை விட, அறமே பெரிதென வாழ்ந்தவர்கள். தங்களுக்கு அதனால் எந்த புகழும், கிரீடமும் கிடைக்காதென்பதை தெரிந்தும், விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டவர்கள். ஆணவம் அற்றவர்கள். ஆணாதிக்க மனோநிலை அற்றவர்கள்.

மகாபாரத்தில் குருஷேத்திர யுத்தம் துவங்க இருக்கிற வேலையில், தனக்கு எதிர் முகாமில் இருப்பவர்கள் எல்லாம் தன்னுடைய உறவினர்கள் என்பதை கண்ணுறும் அர்ஜுனனுக்கு போர் செய்யவே மனம் வரவில்லை. தன் கையாலேயே எப்படி தன்னுடைய உறவினர்களை மாய்க்க முடியும் என்று மருகுகிறான். அதற்கு கண்ணன் காரணம் கேட்கிறார். அவனும் மனதில் உள்ளதை சொல்லி, இத்தனை வன்முறை தேவையா என்கிறான். உண்மையில் இப்போது நீ சொல்வது தான் உண்மையான வன்முறை.. வன்முறையின் உச்சம் என்கிறார். அர்ஜுனன் அதிர்ந்து போய் பார்க்கிறான்.

கண்ணன் விளக்குகிறார். நீ உயிர்கள் கொல்லப்பட இருப்பதற்காக வருந்துவது அன்பின் நிமித்தத்தினால் அல்ல. பாசத்தின் நிமித்தம். பாசம் ரத்தசம்பந்தத்தினால் வருவது. அது அறத்திலிருந்து அனைவரையும் வழுக்கி விட செய்யக்கூடியது. குறுகலானது.

அன்பு விசாலமானது.. பாரபட்சம் பார்க்காதது. எதிர்பார்ப்பு அற்றது. அது அறத்தின் பக்கம் நின்று செயலாற்றுவது.

இப்போது நீ என்ன செய்கிறாய்? பாசத்தின் பக்கம் பரிவு காட்ட நினைக்கிறாய். அறத்தை அடியோடு மறந்து நிற்கிறாய். ரத்தபாசமே கொடிய வன்முறை நோக்கி இழுத்துச் செல்கிறது. பேரன்பு அறத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. இங்கே கொலைகள், கொலைகள் அல்ல. அநீதியின் தர்மமா? அறத்தின் தர்மமா? என்பதே பிரதானம். எதன் பக்கம் நிற்கப் போகிறாய். ரத்தபாசம் என்கிற மூர்க்கமான வன்முறையின் பக்கமா, அறத்தை காக்கும் பேரன்பின் பக்கமா என்கிறார். அர்ஜுனன் தெளிவடைகிறான் என்று ஒரு காட்சி உண்டு. ரத்தபாசம் எப்படியெல்லாம் பொதுவாழ்வில் பங்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதை உணர்த்துகிற காட்சி. விதுரன், விபீஷ்னன் போன்றவர்கள் ரத்தபாசத்திற்கு ஆட்படாமல் அறத்தின் பக்கம் நின்றவர்கள் தான்.

அப்படியாக இந்தத் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அந்த கதாபாத்திரம் தான் நாட்டாமை சரத்குமாரின் தந்தையான நாட்டாமை விஜயகுமார். அவர் தன்னுடைய தங்கையின் குடும்பம் செய்த குற்றத்திற்காக சிபியாய் இருந்து அறத்தின் பக்கம் தீர்ப்பு சொல்ல, உடனே தங்கையின் கணவனாலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்.

எப்படிப்பட்ட உறவுகள், இப்படியாக, ஆணவமும், ஆணாதிக்க மனோநிலையும் கடந்து நிற்கின்றன? நட்பும், நேசமும். ரத்த பாசம் கடந்தவை. அவை பேரன்பினால் கட்டி எழுப்பப்படுபவை.

அப்படியான பேரன்பு ஆதிகாலத்தில் தாய் வழி சமூகத்தின் கூறாக இருந்தது. அதன் பிற்பாடு, அதே மாண்பு இப்போதும் இருப்பதென்பது, ஓசையற்று, பறவையை போல எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிற பழங்குடியினரிடம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை பற்றிய ஆவணப்படத்தை தமிழ்நாடு அரசிற்காக எடுத்தோம். அந்த தருணத்தில் அவர்களோடு அந்யோன்யமாக பழகுகிற வாய்ப்பு நிறையவே வாய்க்கப் பெற்றோம். அவர்கள் பறவையை போல அன்றாடம் உழைக்கிறார்கள். தேன் எடுக்கிறார்கள். கைவினைப்பொருட்கள் செய்து விற்கிறார்கள். தாய் வழி சமூக மரபின்படி, ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால், பிடித்த இளைஞனோடு காதல் செய்ய மீன் பிடி விளையாட்டு விளையாட அனுப்பி வைக்கப்படுகிறாள். அங்கே மலையடிவாரத்தில் தெளிந்தோடும் ஓடைக்குள் இறங்கி பெண் தாவணி முந்தானையை அந்த அரும்புமீசை இளைஞனிடம் தருவாள். இருவருமாய் சேர்ந்து மீன் பிடிப்பார்கள். அவன் மீன் பிடித்துக்கொண்டே தன் பருவ செழிப்பை ரசிப்பதை ஓரக்கண்ணில் கண்டு லயித்திருப்பாள். பழங்குடியினர் இப்படியாக பிடித்த ஆண்களோடு டேட்டிங் செல்வதற்கென இந்த விளையாட்டை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.

வெள்ளையங்கிரி பழங்குடியினர் தேன் எடுக்கிறார்கள். காடுகளில் மூங்கில் வெட்டி கூடை நெய்கிறார்கள், கைவினைப்பொருட்கள் செய்கிறார்கள். மாலை ஆனதும் வட்டமாக ஆண்களும், பெண்களும் கைகோர்த்து கூடி நின்றுகொள்ள, தாங்களே உருவாக்கிய இசை வாத்தியங்களை கொண்டு நடுவில் சிலர் ரகளையான இசையாலாபனைகளை நிகழ்த்த, சுற்றியிருக்கிற ஆண்களும், பெண்களும் உற்சாக மிகுதியில் ஆடித் திளைக்கிறார்கள்.

சூரியன் மயங்கியதும் தங்களின் குடிலுக்குள் சென்று விடுகிறார்கள். அங்கே பெண் உடல் அரசியல் என்பதே இல்லை என்பதை உணர முடிந்தது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அங்கே ஒரு மத்திய வயது ஆணுக்கு ஊதாக்கண் இருப்பதை கவனித்தேன். அதே மாதிரி கண்களோடு அவனுக்கு ஒரு பையன் இருந்தான். அதே போல ஒரு மத்திய வயது பெண்ணிற்கு அவளைப் போலவே பழுப்பு நிற கண்களோடு அச்சில் வார்த்த மாதிரி ஒரு பெண்ணும், ஊதா நிற கண்கள் கொண்டு இன்னொரு பெண்ணும் இருந்தார்கள். அந்த பழுப்பு நிற பெண் இந்தக் குடிலில் குடும்பமாக வசித்தாலும், பிடித்திருந்தால் வேறு ஆணோடு உறவு கொண்டு விட்டு இங்கே வருவதில் அங்கே எந்த தடையும் இல்லை. அப்படியாக அவள் அந்த ஊதா கண் ஆசாமியோடு உறவு வைத்துக்கொண்டு, தன் குடிலுக்கு திரும்பி வந்திருக்கிற விசயத்தை அதிலிருந்து சுலபமாக அவதானிக்க முடிகிறது. அதனால் எல்லாம், இங்கே துளி பிரச்னை ஏற்படுவதில்லை. எங்கும், எதிலும் ஆண் பெண் இடையே சரிநிகர் சமானம் தான்.. மகிழ்ச்சி தான்.. கொண்டாட்டம் தான்..

இங்கே சொத்துகள் சேர்க்கிற பழக்கமில்லை. பெண் உடல் அரசியல் இல்லை. உடைமை மனநிலை இல்லை. ஆணாதிக்க மனோநிலை இல்லை.

நாட்டாமை திரைப்படத்திற்கு வருவோம். மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டித் தந்த வெகுஜன திரைப்படம். இதில் நாட்டாமை தன் தம்பி மனைவியாக வருகிற மீனாவிடம் ஒரு காட்சியில், ‘ஏம்மா.. போயி ஒரு செம்புல தண்ணி கொண்டா..’ என்பார். அதற்கு அவர், உங்களுக்கு வேணும்னா, நீங்க போயி எடுத்து குடிங்க என்பார்.

இதில் நாட்டாமை சரத்குமார் அப்படி இருக்கிறாரா? அவருக்கு அவரை சுற்றி சேவகம் செய்ய நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். மற்றவர்கள் கீழே நிற்க, அவர் சிம்மாசனத்திலும், ஊஞ்சலிலுமே உட்கார்ந்து பரிபாலனம் செய்கிறார். அவர் சொல்வதற்கு யாரும் மறுபேச்சு சொல்வதில்லை. அப்படியென்றால் அங்கே ஜனநாயகம் எப்படி இருக்கும்? எப்படி அங்கே ஆணவம் இல்லாமல் இருக்கும்.

அவர் மனைவியாக வருகிற குஷ்பு அவருக்கு ஒரு அடிமை விசுவாசி. தம்பி சரத்குமார், இன்னொரு அடிமை விசுவாசி. அண்ணன் நாட்டாமை சொல்கிறதற்கு மறுபேச்சு பேசத் தெரியாத, வாயிருந்தும் குரலற்றவராகவே இருக்கிறார்.

இப்படி யோசித்து பார்ப்போம். நாட்டாமை நாயகி மீனாவிடம் தண்ணீர் கொண்டு வரும்படி சொல்கிற மாதிரி, மீனா தனக்கு தண்ணீர் தேவைப்பட்டால், நாட்டாமையிடம் கொண்டு வரும்படி சொன்னால், அவர் கொண்டு வந்து தருவாரா? அப்படி ஒருவேளை கொழுந்தியாள் மீனா அப்படி கேட்கிறபட்சம், நாட்டாமையின் ஆணாதிக்க மனோநிலை எப்படியெல்லாம் சீறியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஒருவேளை அப்படி நாட்டாமை தண்ணீர் கொண்டு வந்து தருகிறவராய் இருந்தால், நிச்சயம் மீனாவும் அவர் கேட்டவுடன் தண்ணீர் கொண்டு வந்து தந்திருப்பார். அவர் படித்த, சொந்த காலில் நிற்கிற திராணியோடு இருக்கிற பெண். அதனால், அவர் அவருக்கே உரித்தான வழியில், அவருக்கு ஒரு பாடம் புகட்டியதாகவே பார்க்க முடிகிறது.

உடனே நாட்டாமைக்கு ஆதரவாக மீனாவின் கணவன் சின்ன நாட்டாமை, நாட்டாமையின் மனைவி அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு வருவதன் மூலம், தங்களின் ராஜவிசுவாசத்தை, அடிமைத்தனத்தை பட்டவர்த்தனப்படுத்துகிறார்கள்.

நாட்டாமையை அப்படி அசால்டாக கேட்க வைப்பது எது? மீனா என்பவர், அந்த வீட்டு மருமகள். மருமகள் என்பவள் சம்பளம் வாங்காத பணிப்பெண் என்கிற மனநிலை இருப்பதாலேயே அப்படி கேட்க முடிகிறது. அல்லது அவரை சுற்றி இருக்கிற ஒரு வேலையாளிடம் சொல்லி, தண்ணீர் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். அவரே அதை செய்து கொள்ள முடியாதபடிக்கு, அவர் புரையேறி துடித்துக்கொண்டும் இருக்கவில்லை. அந்த இடத்தில் ஒரு வகையில் மீனா, ஆண் - பெண் சமத்துவ மனநிலையை தன்னையும் அறியாமல் நிறுவி விடுகிறார்.

இதே நாட்டாமை, தம்பி சரத்குமார் மீது தவறான தீர்ப்பு தந்து ஊரை விட்டே ஒதுக்கி வைக்கிறார். அந்தத் தவறான தீர்ப்பின் காரணமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக தம்பி சரத்குமாரும், மீனாவும் ஒரு குடிலில் கிடந்து அல்லல் உறுகிறார்கள். எது அவரை தீர விசாரிக்காமல் தீர்ப்பு வழங்க வைக்கிறது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்கிற தான்தோன்றித்தனம் தானே? அந்த சின்னஞ்சிறுசுகளை எது இப்படி கஷ்டப்பட வைக்கிறது. தன்னையும் அறியாமல், தம்பி தனக்குள் விரித்துக் கொள்கிற பாசம் என்கிற அடிமை வலை தானே? அவன் தனக்கு கட்டுப்பட்டவன். அதனால் அவன் குடும்பமும் தனக்கு கட்டுப்பட்டது என்றே நாட்டாமை நம்புகிறார்.

20210524183646806.jpg

ஒரு வகையில் இப்படிப்பட்ட நாட்டாமையிடமிருந்து தன் கணவன் பிரிந்து வந்தது ஒரு வகையில் நல்லதே.. அவரின் அடிமைதனத்திலிருந்து அவருக்கு ஒரு வகையில் அது விடுதலையே என்று கூட மீனா நினைத்திருக்க கூடும். அதனாலேயே, வசதியான வீட்டில் வளர்ந்திருந்த அவர், ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தக் குடிலில் வாழ்வதை கூட அசௌகர்யமாக எடுத்துக் கொள்வதில்லை. சௌகர்யத்தை விட மகிழ்ச்சி பிரதானமானது என்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார்.

தவறான தீர்ப்பு கொடுத்தது அறிந்ததும் உயிர் துறப்பதென்பது எப்படி அதற்கு தீர்வாகும்? கொளுந்தியாளை ஒரு பெண் என்பதாலேயே, சுயமரியாதையோடு நடத்த தெரியாத நாட்டாமை, தனக்கே தெரியாமல் தனக்குள் ஒளிந்திருக்கிற ஆணாதிக்க மனோபாவத்தால், தம்பி மனைவியின் தன்மானத்திற்கு பங்கம் ஏற்படுத்தியதை உணர்ந்து, மனம் திருந்தி, அதற்காக வருந்தியிருந்தால், இன்னுமே அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். ஆண்,பெண் இருபாலரும் சமூக, பொருளாதார, அரசியல் அதிகார பகிர்வில் சமநிலை எய்தும் காலம் வருகிற வரை அதற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

20210524183504461.jpg