தொடர்கள்
தமிழ்
எமதினிய தமிழ்ச் சொற்களை இழக்காமல், மீட்டெடுப்போம்... - 3 - - இரா.சு.இராசன்

20210525195238358.jpeg

முன்னாளின் இலக்கியத் தமிழில் வழக்கத்தில் இல்லாது, இன்னாளில் பேச்சுத் தமிழிலும், எழுத்திலும் வழங்கப்பட்டு வரும் பல சொற்களில் “சாப்பாடு”, “சாதம்” என்ற இரு சொற்கள் வழக்கில் உள்ளன. அவை பிற மொழிச் சொற்கள் என்று சொல்லச் சான்றுகள் ஏதும் இல்லை. பிற மொழி என்றால் எந்த மொழி என்றும் தெரியவில்லை.

சாப்பாடு என்ற புதுச் சொல்லுக்கு உணவு, உண்டி என பழந்தமிழர் உரைத்தனர்.

“உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே” என்று மணிமேகலையிலும்...

‘உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு’ என்று அவ்வை சொல்லிலும் வேறு பலவிடத்தும் காண்கிறோம்.

‘வல்சி’ என்ற சொல்லும் உணவு என்ற பொருளில் புறநானூற்றுச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது போல் “சாதம்” என்ற சொல் முன்னாளில் பயன்பாட்டில் இருக்கவில்லை. “சோறு” என்றே தான் சொல்லி வந்தோம்.

சோழ வளநாடு சோறுடைத்து என்றே தான் அவ்வை உரைத்தார்.

இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் சோறு என்றே தான் சொல்கின்றனர். இவ்விரு சொற்களும் (சாப்பாடு மற்றும் சாதம்) பிற மொழிச் சொற்கள் என்று சான்று ஏதும் இல்லாத நிலையில் தமிழரே ஏதோ பயன் கருதி உருவாக்கிய புதுச் சொற்களோ என்றறியக்கூட வில்லை.

ஆரியம் சுமந்த சேரநாட்டுத் தமிழ் (மலையாளம்) மொழியில் இன்றும் “ஊண்” (ஊணு) என்றும் உண்ணுங்கள் என்பதற்கு “உண்ணுக” என்றும் தான் சொல்கிறார்கள்.

சாதம் என்ற சொல் அங்கு இல்லவே இல்லை. சோறு மட்டும் தான் உள்ளது.

மேலும் சொற்கள்...

அடுத்து வரும் இதழில்.