தொடர்கள்
ஆன்மீகம்
சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட நாயன்மார்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்

20210524234554487.jpeg

“பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
- ஔவையார்

இந்த உலகம் மிகப் பெரியது, அப்போ.. இந்த உலகம் தான் பெரிதா? இல்லையில்லை அதை பிரமன் படைத்தான், அப்போ பிரமன் தான் பெரியவனா? இல்லையில்லை.. பிரமன் திருமாலின் உந்தியில் (தொப்புள்) வந்தவன் அப்போ திருமால் பெரியவனா? இல்லையில்லை திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவன், அப்போ கடல் தான் பெரிதா? இல்லையில்லை.. அந்த அலைகடலும் குறுமுனி அகத்தியர் கையில் அடக்கம். அப்போ அகத்தியர் தான் பெரியவரா? இல்லையில்லை... அகத்திய முனி கும்பம் எனும் மண் பானையில் பிறந்தவன்.. அப்போ மண்ணாகிய பூமி தான் பெரிதா? இல்லையில்லை இந்த பூமி ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனுக்கு ஒரு தலைதாங்கற அளவு தான்.. அப்போ, ஆதிசேஷன்கிற பாம்பு தான் பெரிய ஆளா? இல்லையில்லை.. அந்த பாம்பு உமையம்மையின் சுண்டுவிரல் மோதிரமாக இருக்கிறது. அப்போ உமையம்மை தான் பெரியவரா? இல்லையில்லை.. உமையம்மை இறைவன் சிவபெருமானின் இடப்பக்கத்தில் ஒடுக்கம். அப்போ சிவபெருமான் தான் பெரியவரா? இல்லையில்லை.. பெருமானே அடியார் பெருமக்களின் உள்ளங்களில், அவர்களின் அன்பில் கட்டுண்டு கிடக்கிறார் என்றால்... அவ்வளவு மகிமை வாய்ந்த அடியவர்கள், நாயன்மார்கள் பெருமையை என்னவென்பது என்பது தான் பாடலின் பொருள்.

இறைவனை அடைய சுலபமான வழி பக்தி மார்க்கம். பக்தி மார்க்கத்தின் முதன்மையானவர்கள் நாயன்மார்கள்.

புராணத்தில் சொல்லப்பட்ட பக்தியை, நடைமுறை வாழ்க்கையில் காண்பித்தவர்கள் நாயன்மார்கள்.

சிவபக்தி உயர்வுக்கு வித்திட்டவர்கள் நாயன்மார்கள். நாயன்மார்கள் என்ற சொல், தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது.
அறுபத்துமூன்று நாயன்மார்களும் சமயத்தையும், மொழியையும், மனித வாழ்க்கைக்கான பண்பையும், பக்தியையும் வளர்த்தார்கள். பக்தி என்பது செயலில் இல்லை. அன்பில் உள்ளது என்பதை எடுத்துரைத்தனர். ஒவ்வொருவருடைய பக்தியும் ஒன்றுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும்.

நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து வந்தவர்கள். இவர்கள் அனைவருமே சிவத்தொண்டே தங்கள் உயிர் மூச்சாக வாழ்ந்தவர்கள். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவத்தொண்டுக்காகவே தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்.

இறையருளுக்கு பக்தி மட்டுமே போதுமானது என்றும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பது இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக அமைந்துள்ளது.

நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர், சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய திருத்தொண்டத் தொகையில் நாயன்மார்கள் மொத்தம் அறுபது. சுந்தரமூர்த்தி நாயன்மாரின் மறைவுக்கு பின் சில ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அறுபது நாயன்மார்களை சற்று விரிவாய் திருத்தொண்டர் திருவந்தாதியில் பாடினார். அதில் திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் சேர்த்து அறுபத்தி மூவராக்கினார்.

அறுபத்தி மூன்று நாயன்மார்களில், மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கி.பி 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையாரே பெண் நாயன்மார்களில் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் அம்மையாரின் இயற்பெயர் “புனிதவதி” ஆகும். இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பெண்நாயன்மார் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் “நின்றசீர் நெடுமாற நாயனார்” என்ற நாயன்மாரின் மனைவியான “மங்கையர்கரசி”யாவார். மூன்றாவது பெண் நாயன்மாராக இடம்பெற்றவர், திருநாவலூரை சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி “இசைஞானி”.

நாடுகளின் அடிப்படையில் நாயன்மார்கள்:

அன்றைய நாடுகளின் அடிப்படையில் நாயன்மார்கள் பின்வருமாறு வாழ்ந்துள்ளனர்...

சேர நாட்டில் இரண்டு நாயன்மார்கள்,
சோழ நாட்டில் முப்பத்தேழு நாயன்மார்கள்
தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள்
நடு நாட்டில் ஏழு நாயன்மார்கள்
பாண்டிய நாட்டில் ஐந்து நாயன்மார்கள்
மலை நாட்டில் இரண்டு நாயன்மார்
வட நாட்டில் இரண்டு நாயன்மார்கள்

அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பெயர்கள் :

1. அதிபத்த நாயனார்
2. அப்பூதியடிகள் நாயனார்
3. அமர்நீதி நாயனார்
4. அரிவாட்டாய நாயனார்
5. ஆனாய நாயனார்
6. இசைஞானியார் நாயனார்
7. இடங்கழி நாயனார்
8. இயற்பகை நாயனார்
9. இளையான்குடி மாறநாயனார்
10. உருத்திர பசுபதி நாயனார்
11. எறிபத்த நாயனார்
12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்
13. ஏனாதி நாத நாயனார்
14. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
15. கணநாத நாயனார்
16. கணம்புல்ல நாயனார்
17. கண்ணப்ப நாயனார்
18. கலிய நாயனார்
19. கழறிற்றறிவார் நாயனார்
20. கழற்சிங்க நாயனார்
21. காரி நாயனார்
22. காரைக்கால் அம்மையார்
23. குங்கிலியக்கலய நாயனார்
24. குலச்சிறை நாயனார்
25. கூற்றுவ நாயனார்
26. கலிக்கம்ப நாயனார்
27. கோச் செங்கட் சோழ நாயனார்
28. கோட்புலி நாயனார்
29. சடைய நாயனார்
30. சண்டேஸ்வர நாயனார்
31. சத்தி நாயனார்
32. சாக்கிய நாயனார்
33. சிறப்புலி நாயனார்
34. சிறுத்தொண்ட நாயனார்
35. சுந்தரமூர்த்தி நாயனார்
36. செருத்துணை நாயனார்
37. சோமாசிமாற நாயனார்
38. தண்டியடிகள் நாயனார்
39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
41. திருநாவுக்கரசு நாயனார்
42. திருநாளைப் போவார் நாயனார்
43. திருநீலகண்ட நாயனார்
44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
45. திருநீலநக்க நாயனார்
46. திருமூலர் இடைய நாயனார்
47. நமிநந்தியடிகள் நாயனார்
48. நரசிங்கமுனையரைய நாயனார்
49. நின்றசீர் நெடுமாற நாயனார்
50. நேச நாயனார்
51. புகழ்ச்சோழ நாயனார்
52. புகழ்த்துணை நாயனார்
53. பூசலார் நாயனார்
54. பெருமிழலைக் குறும்ப நாயனார்
55. மங்கையர்க்கரசியார் நாயனார்
56. மானக்கஞ்சாற நாயனார்
57. முருக நாயனார்
58. முனையடுவார் நாயனார்
59. மூர்க்க நாயனார்
60. மூர்த்தி நாயனார்
61. மெய்ப்பொருள் நாயனார்
62. வாயிலார் நாயனார்
63. விறன்மிண்ட நாயனார்

2021052423581817.jpeg

கோயிலின் பிரகாரத்தில் அறுபத்து மூவர்:

நாயன்மார்களுக்கு, பெரிய சிவன் கோயில்களின் சுற்றுபிரகாரத்தில் அறுபத்து மூவர் கற்சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோக உற்சவர் சிலைகளும், ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு “அறுபத்து மூவர் திருவீதி உலா” என அழைக்கப்படுகிறது.

அறுபத்து மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவன் கோயில்களில் “நால்வர்” என்றழைக்கப்படும் “அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்” உருவச்சிலைகளாவது வைக்கப்பட்டிருக்கும்.
சென்னை-மயிலாப்பூரில் வருடா வருடம் பங்குனி மாதத்தில் “அறுபத்து மூவர் விழா” சிறப்பாக நடைபெறுகிறது.

நாயன்மார்களின் அவதார ஸ்தலங்கள்:

நாயன்மார்கள் பிறந்த ஸ்தலங்களை “நாயன்மார்களின் அவதார ஸ்தலங்கள்” என்று அழைக்கின்றனர். இவற்றில் ஐம்பத்தி எட்டு ஸ்தலங்கள் தமிழகத்தில் உள்ளது. பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற விகிதத்தில் ஸ்தலங்களும் உள்ளது.

நாயன்மார்களின் மூன்று விதமான முக்தி:

நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முக்தி அடைந்ததாக கூறப்படுகின்றது.

குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள். சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்தியொரு நாயன்மார்கள். அடியாரை வழிப்பட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்தியொரு நாயன்மார்கள் ஆவார்கள்.

அரசக்காலத்தில் நாயன்மார்களுக்கென்று பிரத்யேகமான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

சுந்தரமூர்த்தி நாயன்மாரின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும், அவர் பாடிய அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றினையும், அத்துடன், நம்பியாண்டார் நம்பி அடிகள் எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டு, திருத்தொண்டர் புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இதுவே பெரியபுராணம் எனப் பெயர் பெற்று, பன்னிரண்டாம் திருமுறையாகத் திகழ்கிறது.

இவை நாயன்மார்கள் பற்றிய பொதுவான தகவலாகும். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு நாயன்மாரைப் பற்றி அகர வரிசையில் தொடர்ந்து தெரிந்துக்கொள்வோம்.

ஓம் நமச்சிவாய.!
நற்றுணையவது நமசிவாயவே.!!
திருச்சிற்றம்பலம்.

அடுத்த பதிவில் அதிபத்த நாயனார்…