அன்று காலை, எட்டு மணியாகியும், நியூஸ் பேப்பர் வராததால், என் வீட்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்து காத்திருந்தேன். உள்ளே இருந்து வந்த என் பத்து வயது பேரனோ, “தாத்தா… பேப்பர்காரர் வந்தா, பணத்தைக் குடுத்து, மீதி வாங்கச்சொல்லி, அம்மா இந்த ஐநூறு ரூபாயை உன்கிட்டே குடுக்கச்சொன்னா” என்று நான் கட்டியிருந்த காவி வேட்டியின் மீது போட்டான். பணத்தை எடுத்து, என் சட்டைப் பையில் போட்டுக்கொண்டேன்.
சில வினாடிகள் கழித்து, யாரோ என் கழுத்தை நெரித்தது போலிருந்தது. அப்படியே, என் உடல் படிக்கட்டிலேயே சரிந்தது.
“ஏன் இவனை தூக்கிட்டீங்க? நாளைக் காலையில்தானே, இவனுக்கு ஆயுள் முடியிது” என்று சொல்லிவிட்டு, மேலும், “என்ன… உங்களிடமிருந்து ஏதோ ஒரு வாசனை வருகிறதே?” என்று எமதர்மனிடம், கேட்டார் சித்ரகுப்தன்.
வெகுநாட்களுக்குப் பிறகு, பூமியின் இந்தப் பகுதியில், ‘சோமபானம்’ கிடைப்பதாக, எனக்கு, நம் எமலோக உளவுத்துறை, தகவல் கொடுத்தது. நாமும் சோமபானம் அருந்தலாமே என்று வந்தேன். நியூ ஸ்டாக் என்றார்கள். ஆசைப்பட்டு, சற்று அதிகமாகவே குடித்துவிட்டேன். தலை கிறுகிறுத்ததில், குழம்பிப்போய், தெரியாமல், இந்த ஆன்மாவை, அதன் உடலைவிட்டு பிரித்துவிட்டேன்” என்று புலம்பினார், எமதர்மன்.
பிறகு, இருவரும் கூடிப்பேசி, பிரம்மதேவனை அழைத்து நிலைமையை விளக்கினார்கள்...
பிரம்மாவோ, என் ஆன்மாவிடம், “இங்க பாருப்பா… இந்த உடலிலிருந்து உன்னை நாளை எடுப்பதற்கு பதிலாக, தவறுதலாக, இன்றே, பிரித்துவிட்டார் எமன். நடந்தது நடந்து போச்சு. உன்னை மீண்டும் அதே உடம்புக்குள்ளயே விட்டுவிட, எமனிடம் சொல்கிறேன். வேணுன்னா, நாளைக்காலை வரையில், நீ பூமியிலே வாழ்ந்துவிட்டு வா,” என்று டீல் பேசினார்.
“பிரம்மாவே கேட்கும்போது நான் என்ன முடியாதுன்னா சொல்லப்போறேன். இருந்தாலும்… இந்த எழுபது வயதில், இதே உடம்போடு, நாளை காலைவரை, எக்ஸ்டிராவா வாழ்ந்து, நான் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. அதனால, உங்களோடவே வரேன்” என்றது, என் ஆன்மா.
“முட்டாளாட்டுமா பேசாதே. ஆயுள் முடிந்தவர்களுக்குத்தான், இந்திரசபையில், ‘கர்மா’ கணக்குகளை, ஆடிட்டிங் பண்ணமுடியும். அதனால், நீ நாளை காலைவரை, உன் உடம்போடு, இங்கேதான் இருக்க வேண்டும்” என்றார் பிரம்மதேவன்.
இந்தச் சிக்கலை யூஸ் பண்ணிக்கொண்டு, இதுவரை நடக்காத ஒரு விஷயத்தை நடத்திக்கொள்ள, என் ஆன்மா ‘பிளான்’ போட்டது.
“சரி, தேவரகசியத்தைச் சொல்லி நீங்க கெஞ்சிக் கேட்பதால, நானும் நாளைக் காலைவரை இங்கேயே இருக்க சம்மதிக்கிறேன். ஆனா… ஒரு கண்டிஷன்” என்றது என் ஆன்மா.
“சொல்லித்தொலை… எல்லாம் இந்த பாழாப்போன ‘சோமபானத்தை’ குடிச்சதாலே வந்தவினை” என்று, தலையில் அடித்துக் கொண்டார், காலதேவன்.
“பத்து வருஷம் கழிச்சு, இந்த ஊர்லயே, இதே தேதியிலே, நான் உயிரோட வாழ்ந்திருந்தா, ‘என்னைச்சுற்றி’ நிகழ்வுகள் எப்படியிருக்கும்? அந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு வேணும். அதுக்கு ஓக்கேன்னா சரி. இல்லேன்னா நீங்க செய்த காரியத்தை, ‘சமூக வலைதளங்களில்’ ஃபிளாஷ் பண்ணி, பதினாலு லோகத்திலேயும் உங்க மானத்தை வாங்கிடுவேன்”, என மிரட்டியது, என் ஆன்மா.
“சரிப்பா. உன் வழிக்கே நாங்க வரோம். உனக்கு உயிர் குடுத்த ஷணம் முதல், நாளை காலை உன் ஆயுள் முடியும் நேரம்வரை, நீ மட்டும், இப்போ இருக்கிற மாதிரியே இருப்பே. ஆனால், உன்னைச் சுற்றி எல்லாமே, பத்து வருஷங்கள் கழித்து நிகழ்வதுபோல, நீ உணர்வாய்” என்று சொன்னார் பிரம்மா. என் ஆன்மாவும் ‘சரி’ என்றது.
என் ஆன்மாவை பிடித்து, மீண்டும் என் உடலுக்குள்ளேயே தள்ளிவிட்டார் காலதேவன். பிறகு, “நாளைக்கு காலையிலே, எட்டு மணிக்கெல்லாம் தயாரா இரு” என்று சொல்லி மறைந்தார். நானும், உயிர் பெற்று எழுந்தேன்.
என் வீட்டின் முகப்பே மாறிப்போயிருந்தது. வீட்டிலிருந்து வெளியே வந்தவர், “யார் நீங்க? என்ன வேணும்?” என்றார்.
“இந்த வீட்டில குடியிருந்தவங்க…” என்று இழுத்தேன். “நாங்கதான் ஏழு வருஷமா இந்த வீட்டிலே குடியிருக்கோம். நான் அவசரமா பள்ளிவாசலுக்குப் போயிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, அவர் போய்விட்டார்.
“பக்கத்துத் தெருமுனையில், காலிப்பிளாட்டுக்கு அடுத்து இருக்கும், சக்தி வினாயகர் கோவிலில், குருக்களிடம், என் குடும்பத்தாரைப் பற்றி, விஜாரிக்கலாம்” என்று போனேன்.
அந்த காலிமனையில், ஒரு பெரிய ‘ஜெபக்கூடம்’ இருந்தது. ‘தேவன் அருளிய நற்செய்தி’ என்று யாரோ பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி வினாயகர் கோவிலைக் காணவில்லை.
இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும், ‘பெருமாள் கோவிலுக்கு’ போவோம். அங்கே நம் நண்பர்கள் இருக்கிறார்களே, என்று எண்ணியபடியே, நடக்கலானேன்.
பக்கத்து குறுக்கு சந்தில் இருக்கும் ‘கங்கோத்ரி டிபன் சென்டர்’ ஞாபகத்திற்கு வந்தது. அங்கே, காலையில் போடும் பூரியும், மசாலும், ‘குன்னக்குடியின் வயலினும், வலையப்பட்டியின் தவிலும்’ இணைந்த ‘கச்சேரி’ போல, இதமாக இருக்குமே என்பது, ஞாபகத்துக்கு வரவே, பக்கத்து குறுக்கு சந்தில் நுழைந்தேன்.
அந்த சந்தில் ‘சரக்குக் கடைக்கு வழி’ என்று எழுதி, அம்புக்குறி போட்டிருந்தது. ஏதோ ‘கும்பாபிஷேகம்’ பார்க்க நிற்பவர்கள் போல, கண்களில் எதிர்பார்ப்புடன், மனதில் ஆர்வம் பொங்க, சமூக இடைவெளியின்றி, ஒன்றிணைந்து நின்றிருந்தார்கள் குடிமகன்கள்.
நானும், அங்கே நின்ற, ‘மது-விழைவோரின்’ வரிசையைத் தாண்டி, ‘கங்கோத்திரியை’ தேடி நடந்தேன்.
“யோவ்… கஸ்மாலம்… எங்களை பார்த்தா கேனையாட்டும் தெரியுதா? காலையிலே இருந்து, நாஸ்தா கூட துண்ணாம லைனை புடிச்சு போயிட்டிருக்கோம். உனக்கு இன்னா அவசரம். பின்னால போய்யா’ என்று சொல்லி, ‘டேக் டைவர்ஷன்’ போர்டை காட்டினார், ஒரு ‘மதுப்பிரியர்’.
அடுத்த நொடி… தள்ளாடியபடியே தான் தள்ளிக்கொண்டு வந்த சைக்கிளை, என் கால்களுக்கு இடையே, பார்க்கிங் செய்தவனிடம், “ஏம்பா… ‘காலையிலேயே கண்டதையும்’ குடிச்சிட்டு வந்து, வண்டியை என் மீது மோதறியே? தப்பில்லையா?” என்று கேட்டேன்.
“யோவ் பெரிசு… என் வண்டியை உன் மேல மோதினதை தப்புன்னு சொல்லு, மன்னாப்பு கேட்டுக்கிறேன். பத்தலியா… கால்லவுளுடா கயிதேன்றியா... கபால்னு உளுவரேன். அத்தை உட்டுட்டு, உனக்கு இன்னா தெனாவெட்டு இருந்தா, நான் ஏத்திக்கிட்ட ‘சரக்கை’, இன்ஸெல்ட்டு பண்ணுவே?” என்று என்னிடம் மல்லுக்கு நின்றான்.
அவனுக்கு பயந்து, சற்று வேகமாய் நடந்ததால், என் வேட்டி தடுக்கவே, தடுமாறி கீழே விழப்போனேன்.
“என்னா சார்! பார்த்தா படிச்சவராட்டுமா இருக்கீங்க. சரக்கை வாங்கி ஊட்டாண்ட கொண்டுபோய் குடிக்க கூடாதா? அதோட, இந்த வயசிலே, அளவா குடிக்க கூடாதா?” என்றார் ஒரு போலீஸ்காரர்.
“டிஃபனே வேண்டாம். கோவில்ல அன்னதானம் போடுவாங்க” என்று எண்ணியபடியே, மெயின் ரோட்டுக்கே வந்தேன். ஷேர்-ஆட்டோ வந்து நின்றது. உள்ளே ஏறி ஓரமாய் அமர்ந்தேன். “பெருமாள் கோவில் ஸ்டாப்புக்கு, ஒரு டிக்கட்” என்றேன்.
ஆட்டோ டிரைவரோ, “யோவ்… சாவுகிராக்கி, காலங்காத்தால, ‘நாராசமான’ வார்த்தையை சொல்லாதே. ‘பகுத்தறிவு பாசறை ஸ்டாப்புனு’ கேளு. அத்தை உட்டுட்டு …” என்றதும் எனக்கு முழி பிதுங்கியது.
அந்த ‘பெருமாள்’ வாசஸ்தலத்தின் முகப்பில், பத்து வருடத்திற்கு முன்பு, நான் பார்த்து பரவசித்த, ஒரு கோபுரத்தை, காணவில்லை.
அருகே இருந்த முட்டைக் கடைக்காரரிடம், “கோபுரம் என்ன ஆச்சு? கோவிலுக்கு எப்படி போகணும்?” என்று கேட்டேன்.
“கோபுரத்திலே, ‘அசிங்க அசிங்கமா, ஆபாசமான பொம்மைகள்’ இருந்துச்சுன்னு இடிச்சுட்டாங்க. நீங்க நேராப்போனா, மீன் மார்கெட் இருக்கு. அதைத்தாண்டி போனால், ‘பெருமாள் கோயில்’ வரும்”, என்றார் கடைக்காரர்.
அருகே இருந்த ‘ஒரு சாமி சன்னதிக்குள்’, பெரிய குங்கும பொட்டு வைத்துக்கொண்டு, ஒரு பெண் இருந்தாள். இங்கே ‘பட்டர் இருக்காரா?’ என்றேன்.
“இதென்ன ஆவின் பால்-பூத்தா? ‘பட்டர்’, ‘பால்கோவான்னு’ கேட்கிறே. இந்த சாமிக்கு, நான்தான் பூசாரி. வேணுன்னா சாமி கும்பிடு…” என்றதும் மலைத்துப் போனேன்.
அப்போது அங்கே வந்தவன், “அக்கா, சிவன் கோயிலாண்ட, அன்னதானமா குடுத்த ‘சிக்கன் பிரியாணி’ காலியாயிடுச்சாம். இங்கே அன்னதானத்திலே, ‘பரோட்டா-குருமா’ இருந்தா, ரெண்டு பார்சல் கட்டி, வாங்கியாரச் சொல்லிச்சு, நம்ம ‘கபாலி பூசாரி’ என்றான்.
அங்கு வந்த, வேறுஓரு பையன், ”பூசாரியக்கா… சூரத்தேங்காயை எங்கன உடறது?” எனக்கேட்டான். “இன்னாடா மேட்டரு?” என்றார் அந்தப்பெண் பூசாரி.
“இந்த வருஷம், ஸ்கூலுக்கே போவாம, ஆன்-லைன்லேயே கிளாஸ் அட்டன்டு பண்ணி, பரீட்சை எழுதாமலேயே, நான் பாஸாயிட்டேன்” என்றான் அந்தப் பையன்.
நான் அவனிடம், “சூரத்தேங்காயை, பிள்ளையார் கோவில்லேதானே உடைப்பாங்க” என்றேன்.
“அது யாருய்யா… பிள்ளையாரு?. ஊர்ல நீ சொல்லுற ‘சாமி-கோயில்’ எங்கேயும் கிடையாதே!” என்று அவன் சொன்னதும், நான் அதிர்ந்து போனேன்.
“பத்தே வருடத்தில், ‘இங்கே’ இவ்வளவு மாறுதல்களா? பேசாம… பிரம்மா சொன்னபடி, ‘அன்றே ஒரு-நாள்’ வாழ்ந்திருக்கலாம். ‘இப்போ…?’ என்று சலித்துக் கொண்டேன்.
உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன், அருகே இருந்த வணிகவளாக கட்டிடத்தின் மாடிக்கு ஏறினேன். முதல் தளத்தின் வராண்டாவை ஒட்டியிருந்த மின்-கம்பிகளை இறுகப்பற்றித் தொங்கினேன்.
“யோவ், கிழட்டு மூதேவி, கரண்டே எப்பவாவதுதான் வருது. சரக்கடிச்சுட்டு, கம்பியைப் புடிச்சுத் தொங்கி, அத்துவுட்டுறாதே” என, கீழே இருந்த கடைக்காரர் சவுண்டு விட்டார்.
“குதித்து உயிரை விடுவோம்”, என்று கம்பியை விட்டுவிட்டேன். கீழே விழுந்த எனக்கு, சின்ன அடிகூட படவில்லை.
இப்போது என் மனக்கண்ணுக்கு, எமன் காட்சியளித்தார். ”ஜஸ்ட் வெயிட்… நாளைக் காலைவரை உன்னால் தற்கொலை கூட பண்ணிக்கொள்ள முடியாது. ‘இந்த வாழ்வை, வாழ்ந்து பார்க்கத்தானே ஆசைப்பட்டாய்?” என்று, சொல்லி மறைந்தார்.
“ஐய்யோ… இந்த ‘ஒன்-டே லைஃப்’ வேண்டாமே…” என்ற என் “ஆன்மாவின் அலறல்” யார் செவிகளிலும் விழவில்லை.
Leave a comment
Upload