அவர்களை நாளைக்கு வீட்டிற்கு அழைத்து வரேன், பின்னால் இருக்கும் இடத்தை பேசிமுடிச்சிடலாம் வேலு… நல்லரேட்டு வரும்போதே கொடுத்திடு. உனக்கும் ஏதோ அவசரம், மொடைங்கிறே என்றார் நிலத்தரகர் பாலு.
மொடையா? என் புள்ளை செந்திலுக்கு புற்றுநோய், அந்த சிகிச்சைக்கு ஆபரேஷன் செய்யணும்னுதான் என் விளைநிலத்தையே விற்க நினைக்கிறேன். உனக்கு தெரியாதா? நீயும் அவர்களிடம் சொல்லிவிடு, குழி பத்தாயிரம் ரூபாய் என்றால் வரட்டும் என்றார் வேலு கறராக.
முதலில் இடத்தை அவர்கள் பார்க்கட்டும்,பிடித்துவிட்டால் அவர்களே அந்த விலையை கொடுப்பார்கள் என கூறி வேலுவின் ஆசையைத் தூண்டி, இடத்தை பார்வையிட சம்மதிக்க வைத்தான்.
என்ன பாலு, இன்றைக்கு இடத்தை பார்த்து முடித்திடலாமா? தனியார் அலைபேசி நிறுவன அதிகாரி தாமஸ் கேட்டதற்கு.
பார்த்திடலாம் சார், ஆனால் குழி பன்னிரெண்டாயிரம் சொல்றாரு, பிள்ளைக்கு ஆபரேசன் என வேற சொல்றாரு பாவம், நீங்களும் கொஞ்சம் மனசு வச்சு பாருங்க, என விலையை கூடுதலாக ஏற்றி சொன்னார் தரகர் பாலு.
விலையில் ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் அந்த இடம்தான் வேண்டும். அங்குதான் நமக்கு ஒதுக்கிய அலைவரிசை தங்கு தடையின்றி நன்றாக கிடைக்கின்றது, மேலும் அந்தப் பகுதியில் வசிப்போரிடமிருந்தும் எந்த சிக்கலும் நமக்கு வரக்கூடாது அதையும் பார்த்துக்கொள் என்றனர் அதிகாரிகள்.
வராதுங்க, கிராமத்திலே வேலுவிற்கு என்று நல்ல பெயர் இருக்கு,
அவரை எதிர்த்து யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள், அதுவும் பிள்ளையின் சிக்சைக்காகத்தான் நிலத்தை விற்கிறாரு... அதனால் ஒரு எதிப்பும் இருக்காது என்ற பாலுவிடம்...
எதுக்காக அந்த நிலத்தை நாம கேட்கிறோம் என வேலுவிற்குத் தெரியுமா என கேட்ட அதிகாரியிடம்...
இதுவரை தெரியாது என நினைக்கிறேன், தெரியவும் கூடாது. நாம நிலத்தை வாங்கிய பிறகு அவராக அதை தெரிந்துக்கொள்ளட்டும் என அதிகாரியிடம் தெரிவித்தான் பாலு.
ஏன் நிலத்தை விற்கின்றாய் வேலு? வேறு ஏதாவது தொகையினை ஏற்பாடு செய்து பிள்ளையை காப்பாற்றலாமே என அறிவுரைகளை இலவசமாக வழங்கினர் ஊரார்கள்.
கிராமத்தில் இந்த டவர் அமைவதால், அதனருகே வரும் பறவையினங்களுக்கு ஆபத்து, பாதிக்கப்பட்ட பறவையால் அதிக தூரத்துக்கு பறக்க முடியாது, திசையறியும் திறன் இழந்துவிடும்.
மேலும், பறவைகளின் முட்டைகள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு உறைந்து, பறவையினமே குறைந்துவிடும்.
அருகே வசிக்கும் பச்சிளம் பிள்ளைகளுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு, கேன்சர் போன்ற வியாதிகள் வருவதற்கு நாமே அழைப்பிதழ் அளித்த மாதிரியாகிடும் என்று அவனிடம் எடுத்துக் கூறினர் கிராமவாசிகள்.
சிலர் அதெல்லாம் ஒரு பாதிப்பும் இல்லை என்றும், நாம் செல்போன் அதிகம் பேசறதிலேதான் அதிகம் பாதிப்பு வரும் என்றனர் பலர்.
விதிமுறைக்கு மேல் கதிர்வீச்சை அதிகமாக பயன்படுத்தப்பட்டால் அனைவருக்கும் ஆபத்துதான் என்றார் ஒருவர்.
இவை எதுவும் வேலுவின் காதில் விழவில்லை. அவன் கவனமெல்லாம் பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவன் சிறுக சிறுக சாவதைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தந்தையாக துடிதுடித்துப்போவான். மனைவியும் அவன் படும் வேதனைகளை கண்டு நிம்மதியிழந்திருந்தாள்.
“உன் சொத்து சொகம் எதுவும் வேண்டாம், ஒத்த புள்ளயை காப்பாற்றிக் கொடு” என கணவனிடம் வேண்டினாள்.
அதற்கு இந்த அறுவை சிகிச்சை நடக்க வேண்டும், அதற்கு பணம் தேவை என்பதிலேயே வேலுவின் கவனம் முழுவதும் இருந்ததால், ஊரார் சொன்னது எதுவும் அவன் காதில் விழவில்லை. இரவு வந்ததும், படுக்கை விரித்துப் படுத்தான் தூக்கம் வர மறுத்தது.
பிள்ளை செந்தில் தலைவலியின் வேதனையில் முனகி கொண்டிருக்க... எந்த தகப்பனுக்கும் தூக்கம் வரும்? செந்திலின் தலையை விரல்களால் கோதிய படி சோகத்துடன் விழித்திருந்தாள் அவனின் தாய்.
மகனின் வலியின் வேதனையும், மனைவியின் ஆற்றாமையும் கலந்து மனத்தில் பெரிய வடுவாகியிருந்தது வேலுவிற்கு.
நிலம் சம்பந்தமாக சரியான முடிவெடுத்து விட வேண்டும் என நினைத்து தூங்க முயன்று தோற்றார் வேலு.
மறுநாள் காலை வேலுவின் இடத்தில் காய்கறித்தோட்டம் அமைப்பற்காக ஆட்கள் நிலத்தை சீர் செய்துக் கொண்டிருந்தனர்.
அங்கியிருந்த எறும்பு புற்று ஒன்றை கலைக்க பணியாளர்கள் முற்பட்டதைக் கண்டு, நிறுத்துங்க என கத்தியபடி வந்த வேலு... அந்த இடத்தை விடுங்கள் என்றவர், மனைவியிடம் அரிசி மாவை எடுத்து வர சொல்லி அங்கு கொட்டினார். எறும்பகள் அதனை எடுத்துக்கொண்டு நகர்வதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த வேலுவிற்கு அந்தக் காட்சி மனசுக்கு ஏனோ இதமாக இருந்தது.
தனியார் அலைபேசி நிறுவன அதிகாரிகளோடு அந்தச் சமயம் அங்கு வந்த பாலு...
என்ன வேலு, இடத்தை பேசி முடிச்சிடலாமா? எனக் கேட்டதும்...
இல்லை, இடத்தை கொடுப்பதற்கில்லை என்றார் வேலு தீர்க்கமாக..
ஏன் வேலு என்ன...?
வேண்டாம் என்கிறேன், விடேன் என்றதும்...
உன் மகனுக்காகத்தான் விற்க முற்படுவதாக சொன்னாயே என பாலு கேட்டதும்...
அந்த மரண அவஸ்தை செந்தில் ஒருத்தனோடு போகட்டும், கிராமத்திலே மற்ற புள்ளைங்களும், அந்தக் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்துதான் விற்க வேண்டாம் என நினைக்கிறேன் என்றார் வேலு.
உனக்கு ஒரு தேவை என்றால், இந்த ஊரா வந்து நிற்கப் போகுது என கேட்ட பாலுவிடம்...
இருப்பதை பகிர்ந்து கொடுத்தும், பிற உயிர்களை வாழ வைத்துதான் என்னை போல விவசாயிகளுக்குப் பழக்கம். என்னால் எந்த உயிர்களுக்கும் பாதிப்பு வரக்கூடாதுல்லே, என்றார்.
இந்த உயர் கோபுரத்தாலே யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என ஆராய்சிகள் சொல்லுது என்ற அதிகாரிகளிடம்...
அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க என்ற வேலு, பாதிப்பு உண்டா இல்லையா என ஒரு சந்தேகம் மக்களுக்கு வருது என்றால், மற்ற உயிர்கள் நிம்மதியாக வாழ எது நல்லதோ அந்த முடிவைத்தானே எடுக்க வேண்டும். பாதிப்பே இல்லையென்றாலும் சந்தேகத்தோடு ஏன் அதை எதிர்கொள்ள வேண்டும் எனக் கேட்டார் வேலு.
தன் கமிஷனுக்கு குந்தகம் வருவதை உணர்ந்த பாலு...
ஊருக்காக மகனை இழக்கப் போறீயா? உன் மகனை நீ காப்பாத்த பாரு என்ற பாலுவிடம்....
அதை ஆண்டவன் பார்த்துப்பான் என்றவர், கைகூப்பி அவர்களுக்கு
விடை கொடுத்தார்.
கடவுளின் கருணையான அகண்ட அலைவரிசை, வேலுவின் வீட்டில் வீசத்துவங்கியது அந்த நிமிடம் முதல். செந்தில் தானே எழுந்து வந்து கோழிகளோடு ஓடி விளையாடிக் கொண்டியிருந்தான்.
Leave a comment
Upload