தொடர்கள்
கதை
சர்மாஜியும் பாம்பு சித்தரும்... - கி.கல்யாணராமன்

20210525195736221.jpeg

கோவையில் அந்த அடுக்கு மாடி குடி இருப்போர் நல சங்கத்தின் கூட்டம் கூடி இருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். ஆண்களும், பெண்களும் அமர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள். தலைவர் குப்புசாமி வந்ததும் கூட்டம் துவங்கியது.

“நமது சங்கத்தில் சில நாட்களாக பாம்புகள் காணப்பட்டன. அவற்றை எல்லாம் நாம் கண்டுபிடித்து அழித்துவிட்டோம். ஆனால், பாம்பு கடித்தால் என்ன முதலுதவி செய்வது என்று நமக்கு எடுத்து சொல்ல... நமது சர்மாஜி அவர்கள் அவரது நண்பர் சித்த வைத்தியர் பாம்பு சித்தர் நாகபூஷணம் அவர்களை அழைத்து வந்திருக்கிறார். சித்தருக்கு பல மொழிகள் தெரியும். ஆனால் தமிழ் அதிகம் தெரியாது. சித்தர் சொல்வதை, நமது சர்மாஜி விளக்கி சொல்வார். சந்தேகம் இருந்தால் நீங்கள் கேட்கலாம்.” தலைவர் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.

சர்மாஜி, “இப்பொழுது, பாம்பு வைத்திய சித்தர் அவர்கள் பாம்பு கடி வைத்தியம் பற்றி பேசுவார். எல்லோரும் அமைதியாக இருந்து கவனிக்கவும்.”

சித்தர்: “பாம்ப்....... ரேப்....... டைல்”

கூட்டத்தில் ஒரே சலசலப்பு, சத்தம். பலர் கூட்டமாக எழுந்து வெளியே ஓட முயற்ச்சித்தார்கள். கூட்டத்தில் ஒருவர், “சர்மாஜி என்ன இது, சித்தர் எதோ “பாம்” இருப்பதாக சொல்கிறார். மேலும் எதோ “ரேப்” என்கிறார். என்ன இதெல்லாம்?”

சர்மாஜி: “எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள். நான் சித்தர் கூறியதை விளக்கமாக சொல்கிறேன்.

சர்மாஜி இப்படி சொன்னதும் மீண்டும் எல்லோரும் அமைதியாக அமர்ந்தனர்.

சர்மாஜி: “பாம் இல்லை. அது பாம்பு. சித்தர் பாம்பை பாம்ப் என்று சொல்கிறார். “ரேப்பு” என்றால் நீங்கள் நினைப்பது இல்லை. நாம் ஊர்ந்து செல்லும் உயிர்களை, ஆங்கிலத்தில் ரேப்டையில் என்று சொல்வோம். ரேப்டையில் என்பதை ரேப் டைல் என்று அவர் சொன்னார். அதாவது பாம்பு ஊர்வன வகையை சேர்ந்தது. அவர் மேலும் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்.”

சித்தர்: “பாம்ப் கடி நஹி. கொத்தனார்.”

கூட்டத்தில் சிரிப்பு. “பாம்பு கொத்தனார் என்றால், தேள் சித்தாளா?” என்று கேலி பேசினர்.

சர்மாஜி: “அமைதி. சித்தர் பாம்பு கடிக்காது, அது கொத்தும் என்று சொல்கிறார்.”

தலைவர்: “நாசமா போச்சு..இப்படியே பேசிக்கொண்டிருந்தால், நமக்கு தமிழே மறந்து போய்விடும்.”

சித்தர்: “பாம்ப் ஜன்த் பொன்த்.”

தலைவர்: “என்ன சர்மாஜி ஒண்ணும் புரியல..”

சர்மாஜி: “பாம்பு ஒரு ஜந்து என்று சொல்கிறார். அது பொந்தில் இருக்கும்.. அதாவது அது பொந்தில் இருக்கும் ஜந்து.”

தலைவர்: “அது எங்கேயோ இருந்து தொலைக்கட்டும். அது கடித்தால் எப்படி வைத்தியம் செய்வது.?”

சித்தர்: “பாம்ப் கொத்து பல் கடி...”

“இதுக்கு என்ன அர்த்தம் சர்மாஜி?”

“முதலுதவி செய்பவர், அவரது பற்களால் பாம்பு கடித்த இடத்தை கடித்து விஷத்தை உறிஞ்சு துப்ப வேண்டும். முதலுதவி செய்பவர் வாயில் புண்ணோ காயமோ இருக்கக் கூடாது.”

“பாம்பு கை அல்லது காலில் கடித்தால் நீங்க சொன்னது போல செய்யலாம். அது எங்காவது ஏடா கூடமான இடத்தில் கடித்து வைத்தால் என்ன செய்வது?”

சித்தர்: “பச்சல சூர் கஷா..”

“இது என்ன சர்மாஜி?”

“நீங்க கேட்டதுக்கு பதில். அப்படி ஒரு இடத்தில் கடித்துவிட்டால், சித்தரின் மூலிகை பச்சை இலையுடன் அவர் கொடுக்கும் சூரணம் சேர்த்து கஷாயம் குடித்தால் சரியாகிவிடும்.”

சித்தர்: “பாம்ப் முட்ட குட்டி பால் மத்...”

சர்மாஜி: பாம்புக்கு முட்டை, பால் எல்லாம் பிடிக்கும். நீங்கள் இங்கே பூனை, நாய் எல்லாம் வளர்க்க... பால், முட்டை கொடுப்பதால், அதற்கு பாம்பு வருகிறது.

“சரி. அது என்ன முட்ட குட்டி?”

சர்மாஜி: பாம்பு குட்டி போடாது. முட்டை தான் போடும்.

இப்படி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று சித்தர் தனது பையில் இருந்து ஒரு பாம்பை எடுத்து வெளியே விட்டார்.
அவ்வளவுதான்... கூட்டம் முழுவதும் அலறி அடித்துக்கொண்டு கலைந்து சென்றுவிட்டது. வேகமாக பாய்ந்து, எல்லோரும் ஓடிவிட்டார்கள். சித்தர் தவிற அங்கு யாரும் இல்லை. கூட்டம் இனிதே முடிந்தது!