தொடர்கள்
நொறுக்ஸ்
ஆபரண பிரியரின் தங்க ‘மாஸ்க்’! - மாலாஸ்ரீ

20210524205500226.jpg

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த சாமியார் மனோஜானந்த் மகராஜ் (80). இவர், உலகமெங்கும் கொரோனாவின் 3-வது அலை பரவுவதற்கு முன்பே, தங்கத்தில் சுமார் 101 கிராம் எடை கொண்ட ‘மாஸ்க்’ (முகக்கவசம்) உருவாக்கி அணிந்து வருகிறார்.

‘‘நான் 101 கிராம் எடையில் தங்கத்திலான மாஸ்க் செய்து அணிந்திருக்கிறேன். இதன் பெயர் ‘சிவ்ஷரன்’… விலை சுமார் ₹5 லட்சம்! இது, என்னை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும். எப்படியெனில், இந்த தங்க மாஸ்க்கில் நாம் சுவாசிக்கும் காற்றை தூய்மைப்படுத்தி உள்ளே அனுப்பும் வசதி உள்ளது. இது, 12 முதல் 15 மாதங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும்.

எனக்குக் கடந்த 12 ஆண்டுகளாக தங்க நகைகள் அணிவதில் அதிக விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. துவக்கத்தில் நான் 250 கிராமில் 4 முதல் 5 தங்கச் சங்கிலியை செய்தேன். பின்னர் படிப்படியாக தங்கத்தில் செய்யப்பட்ட விதவிதமான ஆபரணங்களை செய்து அணிந்து கொண்டேன். தற்போது எனது கழுத்தில் சுமார் 2 கிலோ எடையிலான தங்க நகைகளை போட்டிருக்கிறேன்.

எனக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் வந்தாலும்கூட, நான் தங்க நகைகள் அணிவதை நிறுத்தவில்லை. அதற்குப் பதிலாக, எனக்கு பாதுகாப்பு அளிக்க 2 பாடிகார்டுகளை நியமித்துள்ளேன்!’’ என்று மனோஜானந்த் மகராஜ் சிரித்தபடி தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்க, எத்தனையோ விதமான ‘மாஸ்க்’ (முகக்கவசம்) அறிமுகமாகியிருக்கிறது. எனினும், தங்கத்திலான மாஸ்க்கில் காற்றை தூய்மைப்படுத்தி அனுப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளேன் என மனோஜானந்த் மகராஜ் கூறியிருப்பது பற்றி பலரும் ஏராளமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.