இந்த வாரம் குட்டி குட்டியாக நியூஸ் அயிடம்ஸ்:
1. விகடன் டெலிவிஸ்டாஸ் அநேகமாக ஜீ தமிழ் சேனலில் தங்களது புதிய டிவி தொடரினை துவக்கலாம் என தெரிகிறது. வழக்கம் போல அவர்களது ஆஸ்தான இயக்குநர் குமரன் தான் தொடரின் இயக்குநர். அவுட்லைனாக ஒரு கதை கூட ரெடியாகி விட்டது. படப்பிடிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என தெரிகிறது. இது இப்போதைய ட்ரெண்டின் படி ரொமான்ஸ் நிறைந்த குடும்பக் கதையாக இருக்கும்.
2. விஜய் டிவியில் இந்த வாரம் முதல் துவங்கியிருக்கும் ‘பாவம் கணேசன்’ தொடர் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது சேனல். வழக்கமான கதைதான். நாயகியும் நாயகனும் எதிரெதிர் துருவங்கள். ஒரே ஒற்றுமை, இருவருமே அவர்களது வீட்டின் மொத்த சுமையினையும் ஒற்றை பொதி மாடாக சுமக்கும் பொறுப்பாளர்கள். இவர்களுக்குள் சொத்து தொடர்பாக என்ன பிணக்கு, வீட்டாரின் கனவுகளை நிறைவேற்ற இவர்கள் என்னென்ன தியாகங்கள் செய்கிறார்கள் என்கிற ரீதியில் தொடர் பயணிக்குமென அதன் முதல் எபிசோடிலேயே தெரிந்து விட்டது. இதன் நாயகன் நவீன் விஜய் டிவி நேயர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு மிமிக்ரி கலைஞர் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட். வழக்கமான பாணியில் கதை துவங்கியிருந்தாலும், நாயகனுக்கு அந்தக் கால பாக்யராஜ்தான் அளவு சட்டை என்பதால் தொடர் சீக்கிரத்திலேயே கிளிக் ஆகும் வாய்ப்பு பிரகாசம். நாயகி கேரக்டருக்கு அந்தக் கால நடிகை சரிதா ‘அளவு ஜாக்கெட்டாக’ இருப்பார் என தெரிகிறது. பார்ப்போம்...இன்னும் ஒரே வாரத்தில் கதை போகிற போக்கு தெரிந்து விடும். அதன் பிறகு ஆயிரம் எபிசோடுகள் ஆனாலும் அதே பாதையில்தான் கதைப்பயணம் தொடரும்! அதுதான் விஜய் டிவி!
3. சன் டிவியில் புதிதாக ஆரம்பித்துள்ள தொடர்களில் ‘வானத்தை போல’ மற்றும் ‘அபியும் நானும்’ தொடர்கள் இரண்டும் படா வெற்றி! இரண்டுமே குறுகிய காலத்திலேயே ஸ்லாட் லீடர்கள் ஆகி விட்டது.
இன்னும் ‘கண்னான கண்ணே’ மற்றும் ‘அன்பே வா’ தொடர்கள் வேகம் எடுக்கவில்லை. வழக்கம் போல மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சன் டிவியும், தொடர் தயாரிப்பாளர்களும்!
இதற்கிடையே ஸ்பெஷல் எபிசோடுக்கு பிறகு ‘சித்தி2’ தொடரின் கதை வேகமெடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததை சொல்லியே ஆக வேண்டும். ஆனால் அந்த டைம் ஸ்லாட்டிற்கு இந்த வாரம் முதல் போட்டியாளராக வந்திருப்பது விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2 “ தொடர். இரண்டில் அமோக ஆதரவினை எந்த தொடருக்கு தமிழக தாய்மார்கள் தரப் போகிறார்கள் என்பது இன்னம் ஒரிரு வாரங்களில் தெளிவாக தெரிந்து விடும்.
4. ஒரு வழியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கேரக்டர் மாறி விட்டார். பாரதி கண்ணம்மா தொடரில், பாரதியின் ஒன்று விட்ட சகோதரியாக அறிவு எனும் கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவ்யாதான் புதிய முல்லை. நடிகை சித்ரா நடித்து வந்த இந்த கேரக்டருக்கு வேறு எந்த நடிகையாலும் ஜீவன் தர முடியாது..பேசாமல் இந்த கேரக்டரையே சித்ரா மறைவுக்கு பிறகு முடித்து விடலாம் என தொடரின் டெக்னீஷியன்கள் நினைத்த போதும் சேனல் இந்த முடிவினை பரீசிலிக்க மறுத்து விட்டது. புதிய முல்லை பாத்திரத்தை மற்ற கேரக்டர்கள் வாயிலாக மெதுவாக உள் நுழைத்து பிறகே கதிர் கேரக்டரோடு ரொமான்ஸ் சீன்கள் வைப்பது என முடிவாகி இருக்கிறது. எப்படியோ புதிய ஜோடியின் காதல் காட்சிகள் விரைவில் வெளி வர ஆவலுடன் காத்திருக்கிறார்கள், ரசிகர்கள்!
5.இதே போல நடிகர் மாறிவிட்ட ஜோடி ‘செம்பருத்தி’ தொடரின் ஆதி - பார்வதி ஜோடியின் ஆதி. புதிய ஆதியாக நடிகர் அஸ்வின் கலக்குகிறார். சொல்லப் போனால் பழைய நடிகர் கார்த்திக்கை விட இவர் மிக நன்றாகவே நடிக்கிறார். பழைய நடிகர் ரிஜிட் முகத்துடன் ஒரே மாதிரி நடிப்பார். ஆனால் புதிய ஆதியிடம் நல்ல களையும், ஏற்ற இறக்கத்துடன் கூடிய இயல்பான நடிப்பும், குறிப்பாக அருமையான புன்னகை முகமும் இருப்பது ரசிகைகளுக்கு பிடித்து விட்டது. இதனால் செம்பருத்தி தொடர் விரைவில் மீண்டும் முதலிடத்திற்கு வரலாம் என தெரிகிறது.
6. சன் டிவிக்காக இயக்குநர் சுந்தர்.சி புதிதாக தயாரித்து வரும் தொடர் நந்தினி 2. இதுவும் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் அரங்கேறி விடும். இதன் முதல் பாகம் பெரிய ஹிட் என்பதால் சன் டிவி இதன் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. அநேகமாக எட்டரை மணி ஸ்லாட்டில் ‘பூவே உனக்காக’ தொடருக்கு பதிலாக நந்தினி 2 இடம் பெறலாம். அப்படியெனில், மிகுந்த பொருட்செலவில் ஈவிபியில் பெரிய பங்களா செட் போட்டு எடுக்கப்பட்டு வரும் ‘பூவே உனக்காக’ தொடரின் கதி என்னாகும்? கொஞ்ச காலத்துக்க்கு வேறு ஸ்லாட்டுக்கு துக்கியடிக்கப்படும். அங்கும் திருப்திகரமாக பர்ஃபார்ம் செய்யவில்லையென்றால் அதோ கதிதான்!
Leave a comment
Upload