தொடர்கள்
Daily Articles
உடல் வெப்பத்தை சீராக்கும் காசினிக் கீரை பற்றி தெரிந்து கொள்வோம்!! - மீனாசேகர்.

20210002181619266.jpeg

“சீரைத் தேடின் கீரை தேடு” என்பது முதுமொழி. சீர் என்றால் சிறப்பு என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் என ஆசைப் படுபவர்கள் எல்லாவிதமான கீரைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
கீரைகளில் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக இயற்கை வழங்குகின்றது. சில வீடுகளில் குழந்தைகள் யாரும் கீரையே உண்பதில்லை. குழந்தைகளுக்கு ஆறாம் மாதம் முதலே கீரையை மசித்து சாப்பிடத் தந்து பழக்க வேண்டும். கீரைகளை வேக வைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாது. எனவே இன்று முதல் ஏதாவது ஒரு கீரையை மசித்தோ, வதக்கியோ, சாம்பாரில் அல்லது காரக் குழம்பில் கலந்தோ சமைத்துக் கொடுத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு உண்ணப் பழக்குங்கள்.

கீரைகளைப் பற்றி மக்களுக்கு இப்போது போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது...

காசினிக் கீரை.. புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இது நல்ல ருசியுள்ளது. உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.

இக்கீரை உடலின் வெப்பத்தை சீராக்கும் சக்தியைக் கொண்டது.

காணாம்கோழிக் கீரை என்ற பெயர்தான் மருவி காசினிக் கீரை ஆனது.

காசினிக் கீரையானது கொம்புக் காசினி, சீமைக் காசினி, வேர்க் காசினி, சாலடு காசினி என பல வகைப்படும்.

காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரி இச்செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

இக்கீரைக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை அவசியமாகும். நல்ல குளிர்ச்சியான பகுதிகளிலும் இக்கீரையை பயிரிடப்படுகின்றது. உலகளவில் இந்தியா, காசினிக் கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது. குளிர்ச்சி பகுதிகளான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. காசினி பலவகைப்பட்ட மண் வகைகளிலும் வளரும் தன்மையுடையது. செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை உடையது.

காசினிக் கீரையின் அற்புதங்கள்:

காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரணக் கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது. காசினிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் நலம் மேலோங்கும். காசினிக்கீரை இலை, வேரை பொடி செய்து காபி, தேநீருக்கு பதிலாக பருகலாம்.
காசினிக் கீரை உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

காசினிக் கீரையின் மருத்துவ குணங்கள்:

காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடல் வெப்பத்தை சீராக வைக்கவும் மற்றும் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், தாதுவை விருத்தி செய்ய உதவும்
காசினிக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகக் கற்கள் கரையும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அற்புத மருந்தாகும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் பற்று போட்டு கட்டி வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றினை காசினிக் கீரை குணமாக்கும்.

காசினிக் கீரையை சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

காசினிக் கீரை பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். இதன் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது.

காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

காசினிக் கீரை செடியை வீட்டிலும் வளர்க்கலாம்:

விதை மூலமே உற்பத்தி செய்யப்படும் காசினிக் கீரை செடியை ஒவ்வொரு வீட்டிலும், வீட்டு வாசலிலோ அல்லது கொல்லைப் புறத்திலோ, மொட்டை மாடி தோட்டத்திலோ தேவையான கீரை விதைகளை தூவி விட்டால் போதும். நர்சரிகளில் விதைகள் விற்பனைக்குக் கிடைக்கும். ஒரு முறை வைத்த செடி, பல மாதங்களுக்கு பலன் தரும். இதனை மிதமான வெயில் படும் இடத்தில் வைத்து, அளவாகத் தண்ணீர் விட்டு
எப்பொழுதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள நன்றாக வளரும்.

அடுத்தவாரம்... கீரைகளின் அரசன், சக்கரவர்த்தி கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!