அடாணா (தொடர்ச்சி..)
ஶ்ரீ மதுமிதா
‘ரத்தக் கண்ணீர்’ என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது எம்.ஆர். ராதாவின் அட்டகாசம் தான். அந்தக் ‘கண்ணீரில்’ அழகான அடாணாவும் கரைந்துள்ளது சிலருக்கே தெரிந்தது. ‘கதவை சாத்தடி... கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவை சாத்தடி..’ என்றொரு அடாணா ராகப் பாடலை எம்.எல். வசந்தகுமாரி பாடியிருப்பார். கேட்கவே பரமானந்தமாகயிருக்கும். சங்கதிகள், பிர்காக்கள் எல்லாம் குற்றால அருவி போல கொட்டும். மிருதங்கம் வாசித்தது யாரோ மகாவித்வான்! அந்த சொல் எல்லாம் அவ்வளவு தெளிவாக விழும். ஏன்... பாட்டையே வாசிப்பது போல் இருக்கும். இந்த நடன பாட்டின் இறுதியில் வரும் எம்.எல்.வி-யின் விறுவிறு ஸ்வரங்கள், அசாத்தியமானது.
சி.எஸ். ஜெயராமன்
இப்படத்திற்கு இசை யார் தெரியுமா? சிதம்பரம் ஜெயராமன்! வெகு சில படங்களுக்கே இசையமைத்துள்ள இவரின் குரல் வளம் தமிழ் சினிமாவில் இன்று வரை யாருக்கும் அமையாதது! கர்நாடக சங்கீத மேடையிலும் பெரிய ரவுண்ட் வந்திருக்க வேண்டியவர். திராவிட சித்தாந்தப் பின்னணியும், சினிமாவும் அவரை திசை திருப்பி விட்டு விட்டது. தமிழ் மட்டுமல்ல கன்னட படங்களில் கூட இவர் பாடிய பாட்டுக்களை கேட்டிருக்கிறேன். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் முதல் படமான ‘பேடர கண்ணப்பா’வில் ‘சிவப்பா காயோ தந்தே’ என்றொரு அமர்க்கள பாடலை சி.எஸ். ஜெயராமன் பாடுவார். இன்று வரை ராஜ்குமார் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடல்!
ராஜ்குமார்
ராஜ்குமாரைப் பற்றி சொல்லும்போது நமது ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. இருவருமே ராகவேந்திர சுவாமி பக்தர்கள். அடாவடித்தனம் அறியாதவர்கள். எளிமையானவர்கள். யாரையும் புண்படுத்தக் கூடாது என்று எண்ணியவர்கள். இதில் சுவாரஸ்யமானது... 1980-களில் ராஜ்குமாரை யார் யாரோ அரசியலுக்கு இழுத்தார்கள். பெங்களூர் சதாசிவ நகரிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரோடு ‘யோகா’ செய்வார்கள் அரசியல்வாதிகள். உடனே கன்னட பத்திரிக்கைகள் நம்மூர் போல இதற்கு அரசியல் சாயம் பூசி படத்தோடு செய்தி வெளியிடும். குண்டுராவ், வீரப்ப மொய்லி, பங்காரப்பா என்று பலர் இந்த பட்டியலில் உண்டு. ராஜ்குமார் ரொம்பத் தெளிவு! எதற்கும் தேவையின்றி பதிலளிக்க மாட்டார். நிருபர்கள் கேட்டால், சிரிப்பார். அவருக்கு அரசியல் ஆசை என்பது துளியும் இல்லை. ஆனால் ராஜ்குமாரை தன் குருநாதர் என்று சொல்லிக் கொள்ளும் ரஜினி, அரசியல் விஷயத்தில் மட்டும் ஆசைப்பட்டுவிட்டார். ஆனால் முழுக்க இறங்க ஆரம்பத்திலிருந்தே துணிச்சல் வரவில்லை. தானும் குழம்பி, மக்களையும் குழப்பி இறுதியில் 70 வயதில் ஜகா வாங்கி விட்டார்! தன் குரு ராஜ்குமார் வழியை தெளிவாகப் பின்பற்றியிருந்தால் அவருக்கு இந்த தர்மசங்கடங்கள் வந்திருக்காது!
ஜேம்ஸ் வசந்தன்
அரசியலை ஒதுக்கி தள்ளிவைத்துவிட்டு அடாணாவிற்கு திரும்பலாம். ‘யாரது யாரோ யாரோ... நெஞ்சிலே வந்தது யாரோ’ என்றொரு அருமையான பாடல், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துளசி செடி போல் நம் பலரது காதுகளுக்கு எட்டாமலேயே போய்விட்டது. மழை காலத்தில் ஈசல் போல புறப்படும் அதிர்வு பாட்டுக்கள் பல நேரங்களில் நல்ல மெலடிகளை காலி பண்ணி விடுகிறது. 2010-ம் ஆண்டு வெளிவந்த ‘யாதுமாகி’ படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் வந்த அழகான அடாணா! பாட்டின் ஆரம்பத்திலிருந்து ஆங்காங்கே வரும் புல்லாங்குழல் இந்த ராகத்தின் வெவ்வேறு சொரூபங்களை அம்சமாக வெளிப்படுத்தும். இளம் பாடகர்கள் பெல்லி ராஜ், ஸ்ரீ மதுமிதா இளமை கொஞ்ச பாடியிருப்பார்கள். மதுமிதா, பாடகி சாருலதா மணியின் சகோதரி. அக்காவைப் போலவே தங்கையும் ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டார்.
ஏனோ தெரியவில்லை... கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி., இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் கூட அடாணாவை அத்தி பூத்தாற் போல பயன்படுத்தினார்கள் என்றால் பிற்காலத்தில் வந்தவர்கள் ரஹ்மான் உள்பட பலரும் அந்த ராகத்தை சட்டை செய்யவே இல்லை என்பது நீண்ட தேடலுக்குப் பிறகு புரிந்தது! ஜேம்ஸ் வசந்தனிடமிருந்து திடீரென ஒரு அடாணா வந்ததே இதமான அதிர்ச்சி. அற்புதமான ராகங்களை எடுத்துக் கையாளவே ஒரு பெரிய சாமர்த்தியமும் இசை அறிவும் வேண்டும். கீ போர்ட்டையும், வெளிநாட்டு சாஃப்ட்வேர்களையும் நம்பியிருக்கும் கோலிவுட் உலகில் இதையெல்லாம் நினைக்க நேரமேது?
மதுரை சோமு
கடந்த வாரம் சொல்ல மறந்த கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் இரண்டு. ‘ராம நாமமு.. ஜென்ம ரட்சக மந்திரம்..’ மதுரை சோமு பல கச்சேரிகளில் பாடியிருக்கிறார். யூ ட்யூபிலும் உள்ளது. திடீரென தன் குரு சித்தூர் சுப்ரமணிய பிள்ளை பாணியில் அடாணாவை சற்று அதட்டலாக பாடிவிட்டு சிரிப்பார். அவர் ஒரு அதிசயம். இந்தக் கீர்த்தனையில் தியாகராஜர் முத்திரை இருந்தாலும் அவருடையது தானா என்ற சந்தேகமும் சங்கீத வட்டாரத்தில் உண்டு. இன்னொன்று, ஸ்ரீரங்கம் ரங்கசாமிப் பிள்ளையின் ‘யார் உன்னைப் போல் ஆதரிப்பவர் ஆறுமுகத்தரசே’. திருவாதிரை களி போல அவ்வளவு சுவையான பாடல்.
பின்குறிப்பு: இந்த சைனா கொரோனா இப்போது லண்டனுடன் கை கோர்த்ததில் திருவையாறு ஆராதனைக்கும் ஆபத்து வந்துவிட்டது. வழக்கமான ஐந்து நாள் உற்சவம் இந்த வருடம் இல்லை. வெளியூர் பட்டுப்புடவை பாடகிகளும் இந்த வருடம் வரப் போவதில்லை என தகவல். பிப்ரவரி 2-ம் தேதி தியாக பிரம்மத்தின் புஷ்ய பகுள பஞ்சமி திதி காலையில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் மட்டும் உள்ளூர் வித்வான், விதூஷிகளை வைத்து சமூக இடைவெளியில் பாடச் சொல்லப் போகிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக ஆராதனை பந்தலில் நடு நாயகமாக அமர்ந்து பாடும் சுதா ரகுநாதன் இந்த ஆண்டு திருவையாறு வரப் போவதில்லையாம். வேடிக்கை ஆட்டோகிராஃப் கூட்டம் வருத்தப்படலாம். அதற்கு முதல் நாளான பிப்ரவரி 1-ம் தேதி மாலை எளிமையான துவக்க விழா உண்டு. அப்புறம் கொஞ்சம் நாயனம்! பஞ்சரத்னத்திற்கு தூர்தர்ஷன் கவரேஜ் உண்டாம். இம்முறை அனாவசிய சந்தடி இல்லாததால், கீர்த்தனைகள் ஸ்ருதி சுத்தமாக டி.வி.யில் கேட்கும் என நம்பலாம். இடம் கிடைக்காமல் பந்தலுக்கு வெளியில் பாடும் உள்ளூர் மடிசார்கள் பலரை வருடா வருடம் கவனித்திருக்கிறேன். அவ்வளவு சுகமாக, பாடகிகளைவிட தெளிவாக பாடுவார்கள். பாடிப் பாடிப் பழக்கம். ஆகப் பிரதானமாக பாட அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு - வைரஸ் புண்ணியத்தில். தியாகராஜர் மனம் குளிர்வார்.
- இன்னும் பெருகும்
Leave a comment
Upload