விகடகவியார் உள்ளே நுழைந்தபோது, அவருக்கென்று புதியதாக தருவித்த சுழல் நாற்காலியை காட்டி பவ்யமாக “அமருங்கள்” என்றோம்.
விகடகவியார் நாற்காலியை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்து, பிறகு நாற்காலியில் வசதியாக சாய்ந்து அமர்ந்து... “நாற்காலிக்கான போட்டியாளர் ஒருவர் விலகிவிட்டாரே” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
நாம் உடனே.. “ரஜினிக்கு நாற்காலி ஆசை இருந்ததா..?” என்று கேட்டோம்.. அதற்கு விகடகவியார்... “அப்படி அவர் ஆசைப்பட்டதாக தெரியவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தனது நெருங்கிய நண்பர்களிடம், ‘நான் முதல்வர் வேட்பாளராக ஒருவரை என் மனதில் வைத்துள்ளேன்’ என்று சொன்னாராம். இந்தத் தகவலை, சமீபத்தில் என்னிடம் பகிர்ந்துகொண்ட அந்த ரஜினி நண்பரிடம், யார் அந்த முதல்வர் வேட்பாளர் என்று கேட்டேன்..! ‘தற்போது அவர் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட போது, அவரது சாய்ஸ் யார் என்பதை இப்போது சொல்வது சரி இருக்காது. ஆனால், தமிழருவி மணியன் இல்லை’ என்றார். அதற்கு மேலும், நானும் அவரை வற்புறுத்தவில்லை” என்ற விகடகவியாரிடம்....
“சரி. ரஜினி தன் மருத்துவர்கள் எச்சரிக்கையை மீறி, திடீரென கட்சி தொடங்குவேன் என்றாரே... அப்புறம் இப்போது இல்லை என்கிறாரே..ஏன்? என்ன காரணம்? ” என்றோம்.
விகடகவியார் நிமிர்ந்து உட்கார்ந்தார். “இதெல்லாம் தமிழ்நாட்டில் தாமரை மலர செய்யப்பட்ட முன்னோட்டம்... இதற்கான சர்வீஸ் சார்ஜ் எவ்வளவு என்றெல்லாம் கூட ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டது தான். பேச்சுவார்த்தையின் போதே ‘நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்து அல்லது பாரதிய ஜனதாவுடன் கூட்டணியாகவும் போட்டி போட முடியாது, நான் தனியாகத்தான் 234 தொகுதிகளிலும் போட்டி போடுவேன்... என் வழி தனி வழி’ என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தார் ரஜினி. தாமரை தரப்பு, அதற்கும் தலையை அசைத்தது” என்று விகடகவியார் சொல்லிய போது... நாம் இடைமறித்து, “அப்படியானால் ஒரு வேளை ரஜினி களமிறங்கியிருந்தால்...அதிமுகவுடன், பாரதிய ஜனதா கூட்டணி சேர்ந்திருக்காதா? ” என்று கேட்க.. “ ஆம்..தேர்தலில் போட்டியிடாமல், பாரதிய ஜனதா ஒரேயடியாக ஒதுங்கி இருக்கும்” என்று அதிர்ச்சியளித்தார் விகடகவியார்.
“இப்படியெல்லாம் பக்காவாக பிளான் போட்டும், ஏன் ரஜினி இந்த ஜகா? ”
“எல்லாம் ஹைதராபாத் படப்பிடிப்பில் தான் இந்த முடிவுக்கு அவர் வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். அங்கு இரண்டு மூன்று அரசியல் புள்ளிகள், அரசியல் தரகர்கள் அவரை சந்தித்தார்கள். அவர்கள் தந்த அழுத்தம் தான், அவரை இந்த முடிவுக்கு தள்ளியது. இதுவே நிஜம்”.
“அவரை குருமூர்த்தி சந்தித்தார், ஓபிஎஸ் சந்தித்தார் என்றெல்லாம் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கிறதே” என்று கேட்க விகடகவியார் இரு புறமும் இல்லை என்பது போல தன் தலையினை பலமாக அசைத்தார்.
“இரண்டு செய்தியும் உண்மை இல்லை. துணை முதல்வர் எப்போதும் தன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். அப்படி இருக்கும்போது ரகசிய சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை. இதேபோல் குருமூர்த்தியும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவர். எனவே அவரும் ரகசியமாக சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. இருவரும் நேரடியாக சந்திக்கவில்லை. ஆனால், தொடர்பு எல்லையில் இருந்திருக்கலாம்... என்ன இருந்தாலும்..." என்று விகடகவியார் இழுக்க... “என்ன இருந்தாலும் என்று ஏன் இழுக்கிறீர்கள்..” என்று கேட்ட போது சட்டென மெளனமானார் விகடகவியார்.
சிறிய யோசனைக்குப் பிறகு, “ரஜினி தம் முடிவில் எப்போதும் உறுதியாக இருப்பார். ஆனால், அரசியல் விஷயத்தில் அவர் ரொம்பவும் சொதப்பி விட்டார். அவரின் தொண்டர்கள், ரசிகர்கள் கூட இன்று அவர் மீது வெறுப்பு காட்டத் துவங்கி விட்டனர். அவரது மருத்துவ அறிக்கையை நான் சுருக்கமாக சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்... சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்ட போது, அவர் உடல்நிலை கொஞ்சம் மோசமாகத்தான் இருந்தது என்பது உண்மை. சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு, இந்தியாவில் சட்டப் பிரச்சினை, சட்ட சிக்கல்கள் எல்லாம் நிறைய... இந்திய சட்ட திட்டங்கள் ரஜினியின் உடனடி சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லை. அதனால் தான் சிங்கப்பூரில் சஞ்சய் எனும் இந்திய இளைஞரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தப்பட்டது. அவர் அங்கு சில காலம் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். தனக்கு கிட்னி அளிக்க முன் வந்த சஞ்சய் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ரஜினி. சிஙகப்பூரிலிருந்து திரும்பிய பிறகும் கூட தன் நெருங்கிய வட்டத்திலேயே அவரை வைத்திருந்தார். இத்தனைக்கும் கிட்னி தானத்திற்காக அவருக்கு பெரும் பணத்தினை ஆபரேஷனுக்கு முன்பே கொடுக்க வைத்திருந்தார் ரஜினி. அந்த இளைஞர் சஞ்சய் ‘தாங்கள் நலமுடன் இந்தியா திரும்பிய பிறகு பணம் பெற்றுக் கொள்கிறேன்’ என்று சொன்ன போது கூட ‘அது வேண்டாம். எனக்கு ஏதாவது ஆகி விட்டால் என் குடும்பம் என்னைப் போன்றே நடந்து கொள்ளும் என நம்புவதற்கில்லை. உனது குடும்பம் இந்த தானத்திற்கான மொத்த பணமும் வந்து சேர்ந்தது என சொன்னால் மட்டுமே நான் சிங்கப்பூர் செல்ல சம்மதிப்பேன்” என அடம் பிடித்தார் ரஜினி.
ஊர் திரும்பிய பிறகு இந்த இளைஞரை தன்னுடனேயே நிழல் போல வைத்திருந்தார். இடையில் இவர் மீது ரஜினி பெயரை அநாவசியமாக உபயோகப் படுத்துவதாக புகார் எழ..அவரை சில காலம் விலக்கியும் வைத்தார் ரஜினி. ஆனால் மீண்டும் இந்த இளைஞர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக ரஜினியால் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டார்.
சிங்கப்பூர் மருத்துவர்கள் அவர் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து மிக நீண்ட பட்டியலிட்டனர். மற்றும் ஒரு நாளைக்கு 4 கிராம் உப்பு மட்டுமே உணவில் உட்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடற்பயிற்சி கூட அளவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நீண்ட எச்சரிக்கைகளை ரஜினிக்கு தந்தனர். அப்படியிருந்தும் கூட அவரை அரசியலுக்கு இழுக்க வேண்டிய நிர்பந்தம் ஏன் என்ற கேள்வி தற்போது எழுகிறது” என்று விலாவாரியான மருத்துவக் குறிப்பை விகடகவியார் விவரித்தார்.
“சரி. ரஜினி வாய்ஸ் இப்போது யாருக்கு..? கமலஹாசன் கூட அவர் ஆதரவினை கேட்கப் போகிறேன் என்கிறாரே” என்று நாம் கேட்டபோது...
“இப்போதைய சூழ்நிலையில் ரஜினி வாய்ஸ் என்பது அவர் யாருக்கு தந்தாலும் எடுபடுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று. இதுதான் சமயமென ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை அதிமுக வெகு ஜோராக துவங்கி விட்டது என்பது மட்டும் நிச்சயம்” என்று பெருமூச்செறிந்தார் விகடகவியார்.
“ஏன் திமுகவால் ரஜினி ரசிகர்களை இழுக்க முடியாதா” என்று நாம் சந்தேகத்துடன் கேட்டபோது... “திமுக என்னதான் இழுத்தாலும், ரஜினி ரசிகர்கள் திமுகவை ஆதரிக்க மாட்டார்கள். 1996 தேர்தலில் ரஜினி வாய்ஸ் தந்து கருணாநிதி முதல்வரான போது, ரஜினி ரசிகர்கள் சிபாரிசுகளை அப்போதைய திமுக கண்டுகொள்ளவில்லை. அது ஒரு காரணம். தவிர ரஜினி அரசியலுக்கு வந்து நம்மை சங்கடப்படுத்த இருந்தார் என்ற வருத்தம் திமுக தலைமைக்கு கொஞ்ச காலமாகவே உண்டு. அவர்களும் கூட கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்தவர்கள் தானே.. ‘இதெல்லாம் உணராத முட்டாள்களல்ல நாங்கள்’ என ரஜினி ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அதுவுமின்றி ரஜினியின் ரசிகர்கள் இந்து மதத்திலும் ஆன்மிகத்திலும் பற்று உடையவர்கள். அவர்கள் எப்படி இந்து மத விரோதிகள் போல நடக்கும் திமுகவை ஆதரிப்பார்கள்?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் விகடகவியார்.
“சரி அடுத்த கட்சிக்கு தாவுங்கள்” என்று நாம் சொன்னதும்... “நான் என்ன அரசியல் தலைவரா? கட்சி தாவா...” என்று செல்லமாக கோபித்துக் கொண்ட விகடகவியார், அடுத்த கட்சியின் செய்திக்கு போனார்...
“அதிமுகவில் தனி ஒருவராக எடப்பாடியார் போராடுகிறார். இரு தினங்களுக்கு முன், முக்கிய ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் வெற்றி நடை போடும் தமிழகம் என்று எடப்பாடி தன் சாதனைகளை அவரே பாராட்டிக் கொண்டு, அவரும் ஜெயலலிதாவும் இருக்கும் படத்துடன் முழு பக்க விளம்பரம் தந்திருந்தார். அந்த விளம்பரத்திற்கு கூடுதல் கட்டணமும் வழங்கப்பட்டதாம். இதனால், விளம்பரம் வாங்கிய பத்திரிகைகள் கொஞ்ச காலம் எடப்பாடி புகழ் புகழ் பாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டன. இதில் திமுக ஆதரவு நாளேடு ஒன்றும் அடக்கம். அமைச்சர் சிவி சண்முகம், ‘இரட்டை இலையை முடக்க சதி’ என்கிறார். ‘தொண்டர்கள் எங்கும் போகவில்லை, தலைவர்கள்தான் பதவி ஆசைக்காக போய் வருகிறார்கள்’ என்றும் பேசி வருகிறார்.
இரட்டை இலையை யாரும் முடக்க முடியாது என்று திருச்சி பிரச்சாரத்தில் முதல்வர் சொல்லியிருக்கிறார். இதேபோல், முதல்வர் வேட்பாளர் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாமக, பாரதிய ஜனதா சொல்வது பற்றி முதல்வரிடம் கேட்டபோது... ‘அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்...இப்போதைக்கு வேலையைப் பாருங்க’ என்று அசால்டாக பதில் சொல்கிறார்” என்று விகடகவியார் விவரித்தார்.
நாம், உடனே “ இன்றைய சூழலில் பாரதிய ஜனதாவின் திட்டம்தான் என்ன?” என்று கேட்டோம்.
“ அதிமுகவிடம் ‘100 தொகுதிகளை எங்களிடம் தாருங்கள்... கூட்டணி கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவர்கள் தேர்தல் செலவு உள்பட’ என்று பாஜக முதலில் சொல்லி இருக்கிறது. இதற்கு ஓபிஎஸ் எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால், எடப்பாடியார் ‘அது முடியாது’ என்று தீர்மானமாகவே பதில் சொல்லியிருக்கிறார். அதேசமயம், தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் முதல்வரை தொடர்பு கொண்டு தொகுதிப் பங்கீடு பற்றி கேட்டபோது... ‘உங்களுக்கான இடங்களையெல்லாம் பாரதிய ஜனதா தான் முடிவு செய்யும், அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றும் பதில் சொல்லியிருக்கிறார். ஆக எடப்பாடியார் டபுள் கேம் ஆடி எல்லாரையும் இப்போது குழப்பிக் கொண்டிருக்கிறார்” என்றார் விகடகவியார்.
“ எனில் எடப்பாடியாரின் அஜெண்டா என்னவோ? ஏன் இப்படி குழப்பம் விளைவிக்கிறார்? “ என்று நாம் கேட்க...
“ எடப்பாடியார் படா தெளிவு! ஆளாளுக்கு, அவர்களுக்கு ஏற்கனவே கொடுத்த தொகுதியை விட ஒரு தொகுதியாவது கூட தர வேண்டும் என்று நச்சு பண்ணினார்கள். அதான் பந்தை அந்தப் பக்கம் தள்ளிவிட்டார். இது தவிர, கொஞ்ச நாட்கள் முன்பு வரை கூட பாரதிய ஜனதா நிர்மலா சீதாராமனை தமிழக அரசியலில் இறக்க முடிவு செய்திருக்கிறது. எல்லாம் சரியாக நடந்திருந்தால், முதல்வர் வேட்பாளர் என்று கூட அவரை சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்றுள்ள தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா நினைப்பதெல்லாம், தற்சமயம் எதுவுமே நடப்பதில்லை என்பதுதான் பாவம் உண்மை!” என்றார் விகடகவியார்.
நாம் உடனே.. “அது சரி.. எல்லாம் சரியாக இருந்திருந்தால் என்று சொன்னீரே.. அது என்ன என்று விளக்கும்!” என்க...உடனே “சரியான காரியக்காரர் நீர்” என்று செல்லமாக தோளில் அடித்தார் வி.கவியார்.
“அதிமுகவினர் அடிக்கடி எதற்கெடுத்தாலும் அம்மாவின் ஆட்சி, அம்மாவின் ஆட்சி என்று மூச்சு முட்டாமல் பேசி வருகிறார்கள். எனவே ஜெயலலிதா என்ற பிம்பத்தை முதலில் உடைக்க வேண்டும். ஊழலுக்காக தமிழகத்தில் சிறை சென்ற அ.தி.மு.க. முதல்வர் ஜெயலலிதா எனும் உண்மையை போட்டு உடைக்க வேண்டும். இதுதான் முதலில் பாரதிய ஜனதாவின் திட்டம்” என்று விகடகவியார் சொன்னதும்... “சரி. அதைப் போட்டு உடைக்க வேண்டியது தானே” என்று கேட்டோம்.
“அப்படி செய்ய முடியாமல் இருப்பதற்கும் காரணம் இருக்கிறதே! சசிகலா சிறையை விட்டு வந்ததும் என்ன பேசப் போகிறார் என்பதுதான் அவர்களின் யோசனை. சசிகலா என்ன பேசப் போகிறார் என்று கிட்டத்தட்ட இப்போது தெரிந்து விட்டதுதான் பாஜகவின் தயக்கத்திற்கும் காரணம். ” என்று விகடகவியார் சஸ்பென்ஸுடன் சொல்லி நிறுத்த... “சரி.. சசி என்ன பேசுவார் என்பதை முதலில் சொல்லுங்கள்” என்று நாமும் ஆர்வத்துடன் தயாரானோம்.
சின்ன புன்னகை பூத்த விகடகவியார்... “ ‘நான் எம்எல்ஏ-வோ, மந்திரியோ கிடையாது. நான் எந்த ஊழலும் செய்யவில்லை. என்னிடம் இருந்த பணம், இருக்கும் பணம், எனக்கு கிடைத்த சொத்து, நான் சம்பாதித்தது கிடையாது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எனவே என் மீது ஊழல் கரையெல்லாம் இல்லை. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதற்கு நான் ஏற்கனவே அபராதம் செலுத்தி விட்டேன், இன்னும் செலுத்துவேன்’ ” என்பாராம். ஆக சசியே ‘ஜெயலலிதா தான் ஊழல் செய்து சம்பாதிக்க என்னை ஒரு கேடயமாகத்தான் உபயோகித்தார்’ என சொல்ல முடிவெடுத்த பிறகு பாஜகவும் ஜெயலலிதாவை குறை சொன்னால் அது எங்கே எடுபடப் போகிறது என்பதே பாஜகவின் தயக்கத்துக்கு காரணம்! அதுவுமின்றி ஜெயலலிதாவை கழுவில் ஏற்ற மோடிக்கு முதலில் முழு சம்மதம் இல்லையாம்! பாஜகவின் தர்ம சங்கடத்துக்கு அதுவும் ஒரு காரணம்!
இன்னொரு விஷயம் சொல்கிறேன் கேளும்!.. ‘நான் விடுதலையாகும் போதே இளவரசி, சுதாகரன் இருவரும் என்னோடு சேர்ந்து விடுதலை ஆகட்டும், ஒன்றும் அவசரம் வேண்டாம்’ என்றும் சசிகலா தன் வழக்கறிஞரிடம் சொல்லியிருக்கிறாராம். இதெல்லாம் ஒரு மாதிரியான அரசியல் கணக்கு மாதிரி தெரிகிறது” என்று விகடகவியார் சொல்லி நிறுத்தினார். நமக்கு ‘கிர்’ரென்றது!
திடீரென “சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று நம்மிடமே கேட்டார். நாம் உடனே “நீங்கள் சொல்ல, நாங்கள் கேட்போம். அதுதானே முறை?!” என்று பவ்யமானோம்!
“நீங்கள் அவரை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.. அவர் எந்த அரசியல் கருத்தும் சொல்வதில்லை... கொரோனா, முகக் கவசம், தடுப்பு மருந்து, இன்றைய கொரோனா பாதிப்பாளர்கள், இப்படித்தான் அவர் பேச்சு இருக்கும்... எல்லாமே அவர் இலாகா சம்பந்தமாக தான் இருக்கும். இது ஏன் என்று சந்தேகப்பட்டு ஒரு சக அமைச்சர் இன்னொரு அமைச்சரிடம் கேட்க... அவரும் ஆச்சரியப்பட்டு, அதானே என்று சொல்ல...ஆளாளுக்கு வி.பாஸ்கர் பற்றி பேசிக்கொள்கிறார்கள்” என்றார் விகடகவியார்.
நாம் உடனே “அது ஏன் என நீர்தான் விளக்கிச் சொல்லுமே” என்று கேட்க... “எடப்பாடிக்கு முதல்வர் பதவி ஜாக்பாட் அடித்தது போல், அவருக்கும் அடிக்கும் என்று ஆருடம் சொல்லப்பட்டுள்ளதாம்,.அதனால் தான் என்கிறார்கள் புதுக்கோட்டை வாசிகள்” என்றார் வி.கவியார்.
நாம் உடனே “திமுக செய்திக்கு வாரும்” என்றோம்.
“அங்கும் புகைச்சலுக்கு பஞ்சமில்லை. அழகிரி, கோபாலபுரம் வந்து விட்டுப் போன பிறகு, குடும்பத்தில் சற்று கசமுசா. இது தவிர, ஸ்டாலினுக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்... ‘கூட்டம் கூடிய இடத்துக்கு போக வேண்டாம். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி இதெல்லாம் வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மாத்திரையை அவர் சாப்பிடவில்லை என்றால், அது அவரது நினைவாற்றலை வேறு மாதிரி திசை திருப்பி விடுமாம். சமீபத்தில் அந்த மாத்திரையை அவர் சரியாக சாப்பிடாமல், அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாம். அதையும் எச்சரிக்கை செய்து தொடர்ந்து எடுத்துக் கொண்டே ஆகவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்டாலினும் மறுபடியும் லண்டனுக்குப் போய் மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும், டெல்லியில் இதற்காக அனுமதி கூட வாங்கி விட்டார். ஆனால், லண்டனில் தற்போது நோய்தொற்று உச்சத்தில் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதி கிடைக்கவில்லை. எனவே ஸ்டாலின் சுற்றுப்பயணம் தற்போதைக்கு ரொம்ப விரிவாக எல்லாம் இருக்காது. காணொளி மூலம் அவர் தொண்டருடன் பேச வேண்டும் என்ற யோசனை அவருக்கு சொல்லப்பட்டுள்ளது, முடிவு ஸ்டாலின் கையில்தான்.
இதேபோல் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரச்சாரம் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருப்பதால்... சபரீசன், அவரை இரண்டு மணி நேரம் உட்கார வைத்து, பொது வெளியில் என்ன பேசலாம் என்ன பேசக்கூடாது என்று நிதானமாக வகுப்பு எடுத்தாராம். மச்சானுக்கு இது பிடிக்காமல் ‘எனக்கு வகுப்பெடுக்க அவருக்கு என்ன தகுதி இருக்கு? நானெல்லாம் பிறவி திமுககாரன்’ என தன் அம்மாவிடம் உ.ஸ்டாலின் எகிறினாராம். ” என்ற விகடகவியார், ‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்று சொல்லி சட்டென ஜூட் விட்டார்.
Leave a comment
Upload