ஹுமாயூன்...
கேலிக்கூத்தான மன்னிப்புகள்!
மொகலாய சரித்திரத்தில் சற்று அனுதாபத்துக்கு உரிய மன்னராக சித்தரிக்கப்படுபவர், பாபரின் மகன் ஹுமாயூன் என்பது பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கும் தெரிந்த விஷயம்! ஹுமாயூன் பாதுஷாவிடம் ‘ப்ளஸ் பாயிணட்’டுகள் இல்லாமல் இல்லை. அவற்றையெல்லாம் காட்டாறாக அடித்துக்கொண்டு சென்றுவிட்டது, அவருடைய ‘மைனஸ் பாயிண்ட்’டுகள் என்பதுதான் பரிதாபம்!
பாபர் தலைமையில், பானிபட் யுத்தத்தில் தன் பதினேழாவது வயதில் மிகுந்த வீரத்துடன் போர் புரிந்தவர் ஹுமாயூன். ஆனால், தந்தை இறந்த பிறகு, ஒரு மன்னராக நாட்டை ஆள நேர்ந்த போது, அவர் தடுமாறி தவித்ததைத்தான் வரலாறு கணக்கில் எடுத்துக் கொண்டது!
ஹுமாயூனிடம் விஷயம் இல்லாமல் இல்லை. வானியல், பூகோளம், ஜோதிடம், பௌதிகம் மற்றும் ஓவியம் போன்ற நுண்கலைகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பழகுவதற்கு அவர் இனிமையானவர். நல்ல கவிஞர். நிறைய நகைச்சுவை உணர்வும் ஹுமாயூனிடம் இருந்தது. அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிய, இவை மட்டும் போதுமா?
விஷப்பாம்புகளுக்குப் பால் வார்த்து வளர்க்கும் அளவுக்கு மென்மையான குணம் கொண்டவராக இருந்தார் ஹுமாயூன். விளையாட்டு, போர் என்று வந்துவிட்டால், சற்று கொலைவெறி - ஆவேசம் ஒரு தலைவனுக்கு தேவை. அது, ஹுமாயூனிடம் இல்லாமல் போனது. பிரச்னைகளை முழுதும் தீர்க்காமல், அந்தரத்தில் விட்டுவிட்டு, கேளிக்கைகளில் ஆழ்ந்து விடுவதும் அவரிடம் உள்ள ஒரு கெட்ட குணம்!
‘வெற்றி என்ற வார்த்தை அரசல்புரசலாக காதில் விழுந்தால் போதும் - உடனே அதை கொண்டாட மது, மாது, ஓபியம் என்ற போதைப் பொருட்களில் மூழ்கி விடும் உல்லாச மனிதர் ஹுமாயூன்!’ என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இதெல்லாம் போதாதென்று ‘மூடநம்பிக்கை’ என்ற வியாதி வேறு, அவரை வாழ்நாள் பூராவும் பீடித்து அலைக்கழித்தது. காபூல் ஜோசியரையும் மீறி, ராணா சங்காவை பாபர் வெற்றி கொண்டதை முன்னொரு அத்தியாயத்தில் பார்த்தோம். மகன் நேர் எதிரிடை! உதாரணமாக, எங்கு கிளம்பினாலும் மிகுந்த கவனத்துடன் வலது காலை முன்வைத்துதான் நடக்க ஆரம்பிப்பார் ஹுமாயூன்! மற்றவர்களும் இதை மீறக்கூடாது. ஒருமுறை, தவறிப்போய் இடது காலை முன்வைத்து ஆலோசனை மண்டபத்தில் நுழைந்த அமைச்சர் ஒருவரை திருப்பி வெளியே அனுப்பி, மறுபடி ‘வலது காலை முன்வைத்து’ உள்ளே வரச்சொன்னார் பாதுஷா ஹுமாயூன் என்றால் பார்த்துக் கொள்ளலாம்!
ஒவ்வொரு நாளும் அந்த கிழமைக்கேற்ப ஆஸ்தான மண்டபங்கள், சிம்மாசனங்கள் தயாரித்துக் கொண்டவர் ஹுமாயூன். சூரிய அரண்மனை, சந்திர அரண்மனை என்று வாரம் ஏழு நாட்களுக்கு ஏழு மண்டபங்களில் மாறி மாறி அமர்ந்து ஆட்சி புரிந்தவர், இந்த மொகலாய மன்னர். ஞாயிறன்று மஞ்சள் உடை, திங்களன்று பச்சை உடை என்று ‘அதிர்ஷ்ட உடை’களை அவர் அணிய ஆரம்பித்தது, மேலும் ஒரு தமாஷ்! தன் திருமணத்துக்கு தானே கச்சிதமாக முகூர்த்தம் பார்த்துக் கொண்டதோடு அல்லாமல், குழந்தை அக்பர் பிறந்தவுடன் மகனின் ஜாதகத்தை அறுபது பக்கம் நுணுக்கமாக கணித்து எழுதி, ஒரு நோட்டு புத்தகமே தயாரித்தார் ஹுமாயூன். அதில், அக்பர் உலகப் புகழ்பெறுவார் என்பதையும் முன்கூட்டியே திட்டவட்டமாக எழுதியதை, ஹுமாயூனின் சில வெற்றிகரமான சாதனைகளில் ஒன்றாகக்கூட சொல்லலாம்!
இந்தியாவில் பாபர் அமைத்துவிட்டுப் போனது, பிரமாண்டமான ஒரு சாம்ராஜயத்துக்கான வலுவான அஸ்திவாரம்தான். அதன்மீது எப்படி கட்டடம் எழுப்புவது என்பது புரிபடாமல் திணறித் தடுமாறினார் மகன் ஹுமாயூன். விளைவாக, மொகலாய சாம்ராஜய்மும் தவித்து தள்ளாடியது!
பாபருக்கும் பிற்பாடு அக்பருக்கும் இணையாக அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தத் தெரியாத இந்த மன்னர், எடுத்த எடுப்பில் சந்திக்க நேர்ந்த பிரச்னைகள் சற்று அதிகம் என்பதையும் குறிப்பிட வேண்டும்..!
மால்வா மற்றும் குஜராத் பகுதிகளை ஆண்டு வந்த பகதூர் ஷா என்ற பலம் பொருந்திய ஒரு மன்னரை வழிக்குக் கொண்டு வருவதற்குள் பாபர் இறந்துவிட, பகதூர் ஷா பெரும் படையைத் திரட்டிக்கொண்டு, ஹுமாயூனுக்கு எதிராகப் பரபரத்துக் கொண்டிருந்தது ஒருபுறம்..!
பீஹாரில் தங்கியிருந்த முகமது லோடி (இப்ராஹிம் லோடியின் சகோதரர்) மொகலாயர்களை பழிவாங்க படை திரட்ட, அவருடைய சகோதரியை மணந்து கொண்டிருந்த வங்காள மன்னரும் மைத்துனரோடு ஹுமாயூனுக்கு எதிராகச் சேர்ந்துகொண்டது இன்னொரு புறம்..!
பீஹாரில் கங்கை நதிக்கரையோரம் ஷெர்கான் என்னும் வீரர் (பிற்பாடு ஷெர்ஷா என்று புகழ்பெற்றவர்!) மறுபடியும் டெல்லியில் ஆப்கானிய கொடியை ஏற்றும் லட்சியத்தோடு, தன் இனத்தை சேர்ந்த ஆப்கானிய வீரர்களை ஒன்று சேர்த்து படை திரட்டிக் கொண்டிருந்தது மற்றொரு புறம்..!
இந்த எதிர்ப்பு வியூகம் முழுமை அடையாத குறையைத் தீர்த்து வைத்தவர்கள் ஹுமாயூனின் சகோதரர்களான காம்ரான், அஸ்காரி மற்றும் ஹிண்டால்! (காம்ரானும் அஸ்காரியும் ஒரு சிற்றன்னைக்கும் ஹிண்டால் இன்னொரு சிற்றன்னைக்கும் பிறந்தவர்கள்.) குறிப்பாக, அண்ணன் ஹுமாயூன்மீது காம்ரான் கொண்டிருந்தது கொலைவெறி!
தம்பி காம்ரான், ஹுமாயூனுக்கு இழைத்த துரோகங்களை பட்டியலே போடலாம். ஆனால், அந்தத் துரோகங்களையெல்லாம் வரிசையாக மன்னித்து, சகோதரரை அரவணைத்துக் கொண்டார் ஹுமாயூன். ‘சகோதரர்களை அன்புடன் நடத்து!’ என்று தந்தை சொல்லிவிட்டு போன அறிவுரை, ஹுமாயூன் காதில் ரீங்காரமிட்டதுதான் இதற்குக் காரணம்! அதை இந்தளவுக்கு மகன் பின்பற்றுவார் என்று தெரிந்திருந்தால், பாபர் அப்படி சொல்லியிருப்பாரா என்பது சந்தேகம்தான். பழைய சில சுல்தான்களைப் போல, முன்னெச்சரிக்கை என்ற பெயரில், கூடப் பிறந்தவர்களின் தலைகளைச் சீவித் தள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் தந்தை அப்படி குறிப்பிட்டாரே அன்றி - கூடப் பிறந்தவர்களை அவர்கள் துரோகிகளாக இருந்தாலும், மன்னிக்க வேண்டும் என்பது நிச்சயம் பாபரின் எண்ணமாக இருந்திருக்காது. ஆனால், மென்மையான குணம் கொண்ட ஹுமாயூன் ‘மன்னிப்பு’ என்பதையே கேலிக்கூத்தாக்கினார். அது, அவர் வாழ்வில் பல சங்கடங்களை ஏற்படுத்தியது…
காபூலையும் காந்தாரத்தையும் நிர்வகித்து வந்த காம்ரான், ஹுமாயூன் சக்ரவர்த்தியின் அனுமதி இல்லாமல் பெஷாவர், லாகூரை கைப்பற்றினார். அவரை தண்டிக்க வேண்டிய ஹுமாயூன், ‘‘பரவாயில்லை. நீயே கவனி!’’ என்று சொல்லி, அந்த நகரங்களையும் சகோதரருக்கே தந்தார். அண்ணனுக்கு போலியாக நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய காம்ரான் சும்மா இருக்கவில்லை. சில மாதங்கள் கழித்து பஞ்சாபையும் கைப்பற்றினார். அப்போதும் ஹுமாயூன் வெளிப்படுத்தியது தர்மசங்கடமான புன்னகையே!
இதற்குள், இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, அலஹாபாத் அருகில் உள்ள ஜான்பூரை கைப்பற்ற படை திரட்டிச் செல்ல, ஹுமாயூனின் படை அவரை முறியடித்தது. என்னதான் மன்னருக்கு திறமையும் சுறுசுறுப்பும் அவ்வளவு போதாது என்றாலும், பானிபட் யுத்தத்தில் இப்ராஹிம் லோடியையும் பிறகு ராணா சங்காவையும் முறியடித்த மாவீரர்களை கொண்ட பெரும் படை அவர் கீழ் இருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது! ஆனால், பெற்ற வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை ஹுமாயூன்.
அதற்கு பதிலாக, உடனே ஆக்ரா திரும்பிய மன்னர் கோலாகலமான வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்ய ஆணையிட்டார். பிரபுக்களுக்கும் அமைச்சர்களுக்கும் தளபதிகளுக்கும் மாபெரும் விருந்து படைக்கப்பட்டது. 12,000 பேர் தங்க நாணயங்கள், ஆபரணங்கள் என்று மன்னரிடம் பரிசுகள் பெற்றனர். பிறகு மங்கைகள், மது என்று கேளிக்கைகளில் இறங்கினார் ஹுமாயூன். குறிப்பாக - ஓபியம்! மன்னருக்கு ஓபியத்தை சிறுசிறு வில்லைகளாக்கி, பன்னீரில் கரைத்து விழுங்குவது என்றால் ஏக குஷி!
மயக்கத்தில் இருந்த ஹுமாயூன் பாதுஷாவை தட்டி எழுப்பினார்கள். ‘‘குஜராத் சுல்தான் பகதூர் ஷா ராஜஸ்தானில் நுழைந்து, சித்தூரை முற்றுகையிடுகிறார்…’’ என்று பதற்றத்துடன் எடுத்துச் சொன்னார்கள். சுதாரித்துக்கொண்டு எழுந்த மன்னர், உடனே மொகலாய பெரும்படையுடன் குவாலியர் வரை சென்றார். போனவர், ‘‘என்ன அவசரம்? பகதூர் ஷாவை பிறகு கவனிப்போம்!’’ என்று முடிவு செய்தார்.
குவாலியர் நகரத்து அழகில் மயங்கி பிக்னிக், வேட்டை என்று இரண்டு மாதங்கள் மன்னர் காலம் கழித்தது, பாபரின் கீழ் பணியாற்றிய துடிப்பான வீரர்களுக்கு நிச்சயம் வெறுப்பேற்றியிருக்க வேண்டும்! பிறகு பொறுப்பை உணர்ந்து பகதூர் ஷாவை நோக்கி ஹுமாயூன் முன்னேறியபோது, அவருக்கு வந்தது - ஒரு செய்தி! ‘விக்கிரகங்களை ஆராதிக்கும் இந்து மன்னர்களுக்கு எதிராக புனிதப் போரில் குஜராத் சுல்தான் பகதூர் ஷா ஈடுபட்டு இருக்கும்போது, அவரை எதிர்த்து மன்னர் ஹுமாயூன் போர்முரசு கொட்டுவது நியாயமா?’ என்று ஒரு ஓலை (பகதூர் ஷா அனுப்பியதுதான்!). தர்மசங்கடத்தில் ஆழ்ந்த ஹுமாயூன், கடைசியில் போரில் இறங்கவில்லை. சித்தூரை நிம்மதியாக கைப்பற்றிய பகதூர் ஷா, இப்போது அந்த கோட்டைக்குள்ளும் பாசறைகள் அமைத்து, பெரும்பலத்துடன் ஹுமாயூன் பக்கம் திரும்பினார்!
இப்படித் தேவையில்லாத ஒரு கால விரயம்! அப்படியும் சமாளித்துக் கொண்ட ஹுமாயூனின் படை, குஜராத் சுல்தானைத் துரத்தியடித்தது. தெற்கே தன் வசம் இருந்த மாண்டு நகரத்தில் புகுந்துகொண்டார் பகதூர் ஷா. நல்லகாலமாக உடனே வெற்றி விழா எதற்கும் ஏற்பாடு செய்யாமல், தொடர்ந்து மாண்டு நகர் நோக்கி படையுடன் முன்னேறினார் ஹுமாயூன்.
போர்ச்சுக்கீசியர் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமனில் காலூன்றிய நேரம் அது! போர்ச்சுக்கீசிய உதவி கேட்க பகதூர் ஷா டையூ சென்றடைய… குஜராத்தில் கடலோரம் உள்ள கேம்பே நகரம் வரை பின்தொடர்ந்தார் ஹுமாயூன்! (கடற்கரையை நேரில் பார்த்த முதல் மொகலாய மன்னர் என்ற பெருமையும் ஹுமாயூனுக்கு உண்டு!).
(தொடரும்)
Leave a comment
Upload