- 3 -
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்!
பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன் எதை முக்கியப் பிரயோஜனமாகக் கொண்டு கண்ணனாக அவதரித்தான்? பூமிபாரத்தைக் குறைப்பதற்காக, கம்ஸன் சிசுபாலன், தந்தவக்கிரன், முதலானோரை வதம் செய்வதற்காகவே கண்ணன் பிறந்தான் என்பர் சிலர். வேறு சிலர் கண்ணபிரான் பாண்டவ தூதனாகவும், பார்த்தசாரதியாகவும் இருந்து, அடியவர்களுக்குத் தான் கீழ்ப்பட்டவனாக இருக்கும் குணத்தை வெளிப்படுத்தவே பிறந்தான் என்பர். ஆனால் இங்கு ஒரு கேள்வி எழலாம். இவை தான் கண்ணனுடைய அவதாரத்திற்குப் பிரயோஜனம் என்றால் கண்ணபிரான் வசுதேவர் மகனாக இருந்தே இக்காரியங்களைச் செய்திருக்கலாமே! அவன் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் மகனாக வளர்ந்ததற்குக் காரணம் என்ன? வேறு ஏதோ ஒரு முக்கிய காரணத்தை முன்னிட்டே அவன் வசுதேவர் மகனாகப் பிறந்திருந்தும், திருவாய்ப்பாடியிலே இடையர்கள் தலைவனான நந்தகோபன் குமரனாகப் போய்ச் சேர்ந்தான். அதற்கான காரணத்தை நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில் அற்புதமாக அருளிச் செய்கிறார்.
சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபந்தரா நிற்கவேயங்கு- ஓர்மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்திமிலேற்றுவன்கூன்
கோட்டிடையாடினை கூத்து அடலாயர்தங் கொம்பினுக்கே
(திருவிருத்தம் 21)
ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகள் எம்பெருமானுக்கு திருமஞ்சனம் கண்டருளப் பண்ணிக் கொண்டிருந்தார்களாம். அந்த ஸமயத்தில் நாரதர் முதலானோர் அவனிடம் வந்து ‘பூமியில் திருவாய்ப்பாடி என்றொரு இடம் இருக்கிறது; அங்கு ஆயர்கள் வசிக்கிறார்கள்; அவர்களிடத்தில் நிறைய வெண்ணெய் இருக்கிறது’ என்று சொன்னார்களாம். அந்தச் சமயத்திலே நித்யசூரிகள் எம்பெருமானுக்கு தூபம் ஸமர்ப்பித்தார்களாம். அந்த தூபத்தின் புகையானது எம்பெருமானை மறைக்க, எம்பெருமான் அங்கிருந்து மறைந்து பூமியில் கண்ணனாக அவதரித்து விட்டானாம். கண்ணிமைத்தலும் இல்லாமல் ‘ஸதா பச்யந்தி’ என்கிறபடியே எப்போதும் எம்பெருமானையே பார்த்துக் கொண்டிருக்கிற நித்யசூரிகள் கண்களிலும் மணலைத் தூவிவிட்டுத் திருவாய்ப்பாடிக்கு வந்து விட்டானாம். அங்கே ஆயர்கள் சிரமப்பட்டுக் கடைந்தெடுத்த வெண்ணெயைத் திருடி உண்டானாம்.
``(தொடுவுண்ணப்போந்து) க்ருத்ரிமத்தாலே புஜிக்கப் போந்து; இவன் கையிலே சிலவர் இடினும் அநபிமதமாயிருந்தது.''
என்பது இங்கே பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். நம்மாழ்வார் பரமபதத்திலும் தாம் அவனோடிருந்து, அவன் இங்கு அவதரித்தபோதும் அவனோடு கூடவே சென்றவர் போல அங்கு நடந்த நிகழ்ச்சிகளையும் இங்கு நடந்த நிகழ்ச்சிகளையும் சேர்த்தனுபவிக்கிறார். ஆக, வெண்ணெய் உண்பதற்காகவே கண்ணனாக அவதரித்தான் என்று நம்மாழ்வார் அருளிச் செய்து விட்டார். வெண்ணெய் உண்ண வேணுமென்றால் அதற்கு அவதரிக்கத் தான் வேண்டுமோ? ஸர்வேச்வரனாக இருந்தால் வெண்ணெய் கிடைக்காதோ? என்றால் அதற்குப் பெரியவாச்சான்பிள்ளை (பெரிய திருமொழி 5-2-3 உரையில்) அருளிச் செய்வது காண்மின்:
“(பிள்ளையுருவாய்த்தயிருண்டு) ஸர்வேச்வரனாயிருந்து வைத்து வெண்ணெய் அமுது செய்யப் பார்த்தால் இசைவாரில்லை. அதுக்காகப் பிள்ளை உருவு கொண்டு தயிரை அமுது செய்து”
வெண்ணெய் உண்ண வேணுமானால் பிள்ளை வடிவு கொண்டாக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வோம். அது நந்தகோபன் குமரனாய்த் தான் இருக்க வேணுமோ என்றால் அதற்கும் ஆசார்யர்கள் அருளிச் செய்வது கேண்மின்:
“(கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன்) இடையனாய் வெண்ணெய் உண்ட திருப்பவளத்தை உடையவனை; சக்ரவர்த்தித் திருமகனாகில் வெண்ணெயுண்ண வொட்டார்கள் என்று கருத்து.”என்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.
“சக்ரவர்த்தித் திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே சிலர் ராஜாவாக்கிச் சீராட்டுகையாலே வந்து வெண்ணெய் களவுகாண வொண்ணாதே”
என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (அமலனாதிபிரான் 10 வ்யாக்யானத்தில்.)
வெண்ணெய் உண்ண வேணும் என்றால் ராமனாகப் பிறந்தாலும் வெண்ணெய் உண்ணவொட்டார்களென்று கண்ணனாய்ப் பிறந்தான். அதுவும் எப்படிப் பிறந்தான்? அறிவு கேட்டுக்கு எல்லை நிலமான இடைக் குலத்திலே யன்றோ பிறந்தான்! அப்படிப் பிறந்ததனாலன்றோ வெண்ணெயைத் திருடி உண்ண முடிந்தது.
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்தான்காணேடீ
(பெரியதிருமொழி11-5-4)
வெண்ணெயுண்ண வேணுமென்ற ஆசை ஏற்பட்டு விட்டால் எம்பெருமானுக்கும் கூட இப்படிப் பிறந்தால் தான் அது கிடைக்கும் போலும்! அறியாதார்க்கு - அறிவில்லாதவர்களுக்குள்ளே; ஆனாயனாகி - கடைகெட்ட இடையனாகி, வெண்ணெயுண்டு பிறவிப்பயன் பெற்று விட்டது போல் மகிழ்ந்தான் கண்ணன்.
“நாட்டில் பிறந்து படாதனபட்டு மனிசர்க்கா” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடியே நமக்காக எம்பெருமான் இங்கே அவதரித்துச் செய்த செயல்கள் இருக்கட்டும்; வெண்ணெய்க்காக எம்பெருமான் அவதரித்துப் பட்ட பாடுகள், அப்பப்பா! ஒன்றல்ல இரண்டல்ல. கண்ணபிரான் வெண்ணெயைக் களவு கண்டது பற்றி ஆழ்வார்கள் அருளிச் செய்யுமிடங்களிலெல்லாம் ஆசார்யர்கள் தவறாமல் இதைக் கூறியருளுகிறார்கள். ஓரிடம் மட்டும் பார்ப்போம்:
(பற்றியுரலிடை ஆப்புமுண்டான்) வெண்ணெய் தனக்கு தாரகமாகக் கொண்டு, அதுதானும் நேர்கொடு நேர் கிடையாமே களவு கண்டு புஜிக்கப்புக்கு, அதுவும் தலைகட்ட மாட்டாமே, ஒரபலை கையிலே அகப்பட்டு,அவள் வரவிழுத்து, ஒன்றோடே கட்டக் கட்டுண்டு, ஸம்ஸார பந்த ஸ்திதி மோக்ஷஹேதுவான தான் ப்ரதிக்ரியை பண்ணமாட்டாதே நின்றான்.
(நாச்சியார் திருமொழி 12-8 வ்யாக்.)
இப்படிக் கண்ணபிரான் வெண்ணெய்க்காக ஆடிய கூத்துக்கள் தான் எத்தனை! இதனால் அவனுக்கு வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை என்றே திருநாமும் ஏற்பட்டது. எம்பெருமானாருடைய ஆசார்யர்களுள் ஒருவரான பெரிய திருமலைநம்பியின் திருவாராதன எம்பெருமான் திருநாமம் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை என்று ஈடு (1-4-8) வ்யாக்யானத்தில் கூறப்படுகிறது. எம்பெருமானாருக்குத் திருவாரதனமாக எழுந்தருளியிருந்த எம்பெருமான் திருநாமமும் வெண்ணெய்க்காடும் பிள்ளை என்று ஈட்டில் (3-6-8) காட்டப்படுகிறது.
வெண்ணெயைப் பெறுவதற்காக் கண்ணபிரான் ஆடிய கூத்தை தேசிகன் ‘நவநீத நாட்யம்’ என்றே வர்ணிக்கிறார்.
ஆவிர்பவத்வநிப்ருதாபரணம் புரஸ்தாத்
ஆகுஞ்சிதைக சரணம் நிப்ருதாந்தபாதம்
தத்நா நிமந்த முகரேண நிப்த்ததாளம்
நாதஸ்ய நந்தபவநே நவநீத நாட்யம்
(கோபாலவிம்சதி 4)
(ஒரு திருவடியை மடக்கிக் கொண்டும், மற்றொரு திருவடியை நன்கு ஊன்றிக் கொண்டும், நந்தகோபரது திருமாளிகையில் தயிர் கடையும் ஒலியைத் தாளமாகக் கொண்டு, திருவாபரணங்கள் அசைய, கண்ணபிரான் வெண்ணெய்க்காக ஆடும் கூத்து என் கண் முன் தோன்றட்டும்) என்கிறார் தேசிகன்.
Leave a comment
Upload