ஒரு பக்கம் கொரோனா, கட்சிப் பிரமுகர்கள் மற்றும் தலைமைக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தினாலும், அடுத்தாண்டு தேர்தலுக்கான ஆயத்த வேலையை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது என்பதை இரண்டு திராவிட கட்சிகளும் ஏற்கவில்லை. அது உண்மையா, பொய்யா...? அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடிய தலைவர் யார் என்பதை அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் தீர்மானித்து விடும்.
அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர் இருக்கும்போது யார் முதல்வர் என்ற பேச்சு வரவில்லை, ஜெயலலிதாவுக்கும் அது பொருந்தும். ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலா முதல்வராக விரும்பினார். ஆனால், அது நடக்கவில்லை. எடப்பாடி சசிகலாவால் நியமிக்கப்பட்டார். எடப்பாடி இப்போது சசிகலா வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். இது அவர் துணிந்து எடுத்த முடிவு. இதன் நடுவே சசிகலாவுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் கருத்து சொன்னபோது கூட, அதுபற்றி தன் கருத்து அல்ல என்று மூத்த அமைச்சர் ஜெயக்குமார் மூலம் சொல்ல வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்தும் இதுதான். இப்போது கிட்டத்தட்ட அதிமுகவின் அடிமட்ட தொண்டன் முதல் தலைவர்கள் வரை, கட்சிக்கு சசிகலா வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. அமைச்சர்களுக்கு இடையே இரண்டு பிரிவாக பிரிந்து, எடப்பாடி தான் முதல்வர் என்றும் பொதுக்குழு செயற்குழு தீர்மானிக்கும் என்று மற்றொரு பிரிவும் கருத்து சொல்லும்போது, ஓபிஎஸ் தான் முதல்வர் என்ற போஸ்டர் சர்ச்சையானது.
அதன் பிறகு மூத்த அமைச்சர்கள் எடப்பாடி வீட்டிற்கும், ஓபிஎஸ் வீட்டிற்கும் ஓடி ஓடிப் பேசி சமாதானப்படுத்தி, அதன் பிறகு இருவர் பெயரிலும் ஒரு அறிக்கை வெளியானது. அந்த சமாதான அறிக்கையில் மிகவும் கவனிக்க வேண்டிய வார்த்தை, ஒரு குடும்பம் மற்றும் ஒரு குழு பிடியில் மக்களாட்சி சிக்கி விடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பம் என்பது சசிகலா குடும்பம்.. குழு என்ற வார்த்தையை ஒபிஎஸ் வற்புறுத்தி அந்த அறிக்கையில் சேர்க்கச் சொன்னார் என்கிறார்கள். அதாவது எடப்பாடி கோஷ்டி அரசியல் செய்கிறார் என்பதை மறைமுகமாக உணர்த்த, குழு என்ற வார்த்தையை ஓபிஎஸ் சேர்க்கச் சொன்னார் என்று அப்போது அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. எது எப்படியோ அந்த அறிக்கை எடப்பாடி, ஓபிஎஸ் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் பற்றி எதையும் குறிப்பிடாமல், யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்று பொதுவாக அறிவுறுத்திய ஒரு அறிக்கையாக இருந்தது என்பது மட்டும் உண்மை.
12 அமைச்சர்கள் இந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். இருந்தாலும் எடப்பாடியும், பன்னீர் செல்வமும் இன்று வரை தொடர்பு எல்லையில் பட்டும் படாமலும் தான் இருக்கிறார்கள். ஆகஸ்ட் 15 அன்று நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில், அது வெளிப்படையாக தெரிந்தது.
எடப்பாடியை பொருத்தவரை பெரும்பான்மை அமைச்சர்கள், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மை மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறது. இதற்கு காரணம் எடப்பாடி எளிதில் நெருங்கக் கூடியவர், கருத்துக்களை கேட்கக் கூடியவர் என்ற பெயரைப் பெற்று விட்டார். இது எல்லாம் ஜெயலலிதா காலத்தில் கூட இல்லாமல் இருந்தது. இது தவிர, எடப்பாடி எல்லோரின் தேவையறிந்து, அவர்களுக்குத் தேவையானதை உடனே செய்து தருகிறார் என்ற பெயரையும் அதிமுக வட்டாரத்தில் பெற்றிருக்கிறார்.
ஓபிஎஸ் ஐ பொருத்தவரை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தாலும், அவர் மகன் மட்டும் வெற்றி பெற்றார். தற்போது பாரதிய ஜனதா ஆதரவு ஓபிஎஸ்-க்கு கிடைத்திருக்கிறது. அவரை அடுத்த முதல்வராக்க, பாரதிய ஜனதா விரும்புகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
‘எடப்பாடியார் பாரதிய ஜனதா நலம் விரும்பி. ஆனால், அவர் அவர்களின் தலையாட்டி பொம்மையாக இருக்க விரும்பவில்லை’ என்கிறார் அவரது ஆதரவு அமைச்சர் ஒருவர்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல். முருகன் சந்தித்துப் பேசினார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சமூக இடைவெளியுடன் ஊரடங்கு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடத்த அனுமதி கேட்டு பேசவே அந்த சந்திப்பு என்று சொல்லப்பட்டது. முருகனுடன் மாநில பொதுச் செயலாளர் கரூநாகராஜனும் சென்றிருந்தார். பொதுவான விஷயங்களை முதல்வர் பேசிவிட்டு, அதன் பிறகு கரு நாகராஜனை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, முருகனிடம் அரசியல் பேசினார் முதல்வர். பாரதிய ஜனதா - அதிமுக சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி சொல்லி, தமிழக அரசியல் கணக்குகளை எடுத்துச்சொல்லி... ‘கூட்டணி தொடரும். உங்களுக்கு இவ்வளவு தொகுதிகள் என்று மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையை சொல்லி... பாராளுமன்ற தேர்தலின் போது, கடைசி நிமிடம் வரை கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது. இப்போது சீக்கிரம் உங்கள் முடிவை டெல்லி இடம் பேசிவிட்டு சொல்லுங்கள்’ என்றவர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கிடையாது என்றும் சொல்லி அனுப்பினார். முதல்வர் எடப்பாடியை பொருத்தவரை பாரதிய ஜனதாவுடன் அவரது உறவு பட்டும் படாமலும் தான் இருக்கிறது.
இதன் நடுவே சில அமைச்சர்கள் ஊழல் பற்றி ஆளுநர் ஆதாரத்துடன் முதல்வரை அழைத்து மிரட்டும் தொனியில் பேச, அதை பாரதிய ஜனதா வட்டாரம் பெருமையாக சொல்லி வருகிறது. ஆனால் எடப்பாடி அதுபற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பாரதிய ஜனதாவின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தேர்தல் நிதி என்று அடிக்கடி அதிமுகவிடம் கணிசமான தொகையை வாங்கிச் சென்றிருக்கிறார். எனவே ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி ஆதரவு அமைச்சர் வேலுமணி, தங்கமணி இருவரும் பியூஸ் கோயலை சந்தித்து, ஆளுநர் சந்திப்பு பற்றி பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு இந்த பிரச்சனை அப்படியே முடிந்தது.
இதன் நடுவே விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராததால், தமிழக பாரதிய ஜனதா கடும் அதிர்ச்சியில் இருந்தது. பாரதிய ஜனதா தலைவர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதை குறிப்பிட்டு, ஆண்மையுள்ள அரசு என்று கர்நாடக அரசை பாராட்டியிருந்தார். இதற்கு பதிலடியாக அதிமுக தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த கோவை சத்யன், ‘ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல் - நவீன திருவள்ளுவர்’ என்று குறிப்பிட்டு ராஜாவை கிண்டல் செய்திருந்தார்.
எடப்பாடியை பொருத்தவரை, அவரது தேர்தல் வியூகம் துவங்கிவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆய்வு என்று தொடர்ந்து சென்று வருகிறார். அரசின் ஆய்வுக் கூட்டம் முடிந்ததும், அவர் தங்கும் இடத்தில் அந்த மாவட்டத்தின் முக்கிய கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அந்த மாவட்டக் கட்சி பிரமுகர் பற்றி, மாவட்ட அமைச்சர் பற்றி, மாவட்ட செயலாளர் பற்றி, மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பற்றி, உளவுத்துறை சேகரித்து தந்த தகவல்களை கோடிட்டுக் காட்டி எச்சரிக்கிறார்.
வேட்பாளர் தேர்வில் எடப்பாடி கையே ஓங்கி நிற்கும் என்பது இன்றைய நிலவரம். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 20 கோடி முதல் 25 கோடி வரை செலவு செய்ய அதிமுகவில் திட்டம் தயார். அதற்கான நிதி ஆதாரத்தை கொரோனா காலம் வாரி வழங்கி விட்டது.
எடப்பாடியை பொருத்தவரை தேர்தல் ஜுரத்தை சமாளிக்க வேண்டிய எல்லா மருத்துவ நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துவிட்டார். அவர் எதற்கும் தயார் என்ற நிலைப்பாடும் எடுத்துவிட்டார். இதுதான் அதிமுகவில் இன்றைய நிலவரம்.
திமுகவை பொருத்தவரை ஸ்டாலினின் நீண்ட நாள் கனவு கட்சித் தலைவர் பதவி, முதல்வர் பதவி. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரிடம் வம்படித்து வாங்கிய பதவிதான் துணை முதல்வர் பதவி. கருணாநிதி தனது முதல்வர் பதவியை இப்படிப் பங்கு போடுவதை உண்மையில் அன்று விரும்பவில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்தார். அதிமுக இரண்டாகும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று நினைத்தார். அவர் கனவில் முதல் பாகம் நடந்தது. அதாவது அதிமுக இரண்டாக கிட்டத்தட்ட உடைந்தது, ஆனால் அவருக்கு ஆதரவாக அந்த சட்டமன்ற உறுப்பினர்களை அவரால் திருப்ப முடியவில்லை. அதன் பிறகு இந்த ஆட்சி இன்று கவிழும், நாளை கவிழும் என்றெல்லாம் பேசியவர்... ஒரு கட்டத்தில் அடுத்த தேர்தலில் நமது ஆட்சி என்று பேச ஆரம்பித்துவிட்டார். எனவே இப்போது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்துக்கு அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஸ்டாலினை பொறுத்தவரை அவரின் முடிவு எடுக்கும் அதிகாரம் அவரது மருமகன் சபரிசன்தான். அவர் கையில், பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம். திமுகவிற்கு யோசனை சொல்வது, உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி எல்லாமே சபரீசன் ஏற்பாடுதான். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் சபரீசன் அவசியம் ஆகிவிட்டார், சில பாரதிய ஜனதா தலைவர்கள் கூட அவரிடம் பேசி வருகிறார்கள்.
சபரீசன், பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் குழு யோசனையை அப்படியே ஏற்கிறார். பிரசாந்த் கிஷோர் சில யோசனைகளை சபரி என்றும் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான சில இதோ...
காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் தந்து விரயம் செய்ய வேண்டாம். திமுகவில் தொடர்ந்து இரண்டு, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களை ஒதுக்கி, இளைஞர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள். சிறிய கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட கட்டாயப் படுத்துங்கள். இந்த முறை திமுக 175 முதல் 180 இடங்களில் போட்டியிட வேண்டும். பெரும்பான்மை உள்ள அரசாக திமுக ஆட்சியில் அமர வேண்டும், இதை சபரீசன் கிட்டத்தட்ட எல்லா மாவட்டத்திலும் தனக்கென்று உள்ள ஒரு குழு மூலம் தகவல் சொல்லி விட்டார். அது மூத்தவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கு.க. செல்வம், வி.பி. துரைசாமி ஆகியோர் பாரதிய ஜனதாவில் அடைக்கலம் ஆனதற்கும், கேபி ராமலிங்கம் திமுக எதிர்ப்பு நடவடிக்கைக்கும் இதுதான் காரணம்.
இதன் நடுவே ‘கட்சிக்காரர்கள் மீது சொல்லப்படும் புகார்களை விசாரிக்கிறேன்’ என்று புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு நடத்தும் ஆய்வு இன்னொரு கூத்து. உதாரணமாக சென்ற மாதம் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய நேரு சென்றிருந்தார். அவருடன் கட்சி கொறடா சக்கரபாணி, மதுரை சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோரும் சென்றிருந்தார்கள். திருப்பூர் கட்சி அலுவலகத்தில் நேரு “தலைவர் சொல்லித்தான் நான் வந்திருக்கிறேன். கொங்கு மாவட்டத்தில் அதிமுக அளவுக்கு திமுக பலமாக இல்லை, இதற்கு என்ன காரணம் என்று உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள்” என்று கேட்க... அப்போது திருப்பூர் மாநகர பொறுப்பாளர் நாகராஜ், “அண்ணே புகார் சொல்லும் அளவுக்கு இங்கு பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கிறது” என்று கருத்து சொல்ல... உடனே கோபமாக எழுந்த கே.என். நேரு, “என்னது பிரச்சனை இல்லையா, போன தேர்தலில் நாலு தொகுதியில் நாம் தோற்று இருக்கிறோம். உங்கள் மேலேயே எவ்வளவு புகார் வந்திருக்கு பாருங்க” என்று டேபிள் மேல் கற்றையாக போட்டு ‘நீங்களே, அதை எடுத்துப் படிங்க பார்ப்போம்’ என்று சத்தம் போட.. மாநகர பொறுப்பாளர் ஆடித்தான் போனார். தொடர்ந்து பேசிய நேரு... “கிரிமினல் கேஸ், பொம்பள கேஸ் உள்ளவர்களுக்கு எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு, நீங்கள் கட்சிப் பதவி தந்திருக்கிறீர்கள். உங்களால் கட்சிக்கு ரொம்பவும் கெட்ட பெயர், உள்ளூர்காரர்களுக்கு கட்சிப் பொறுப்பு தராமல், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு கட்சிப் பொறுப்பு தந்திருக்கிறீர்கள்.. அப்புறம் எப்படி கட்சி வளரும்?”என்று பொரிந்து தள்ளினார்.
அப்போது ஒரு கட்சி நிர்வாகி, ‘நீங்கள் மட்டும் இருந்தால் நிறைய விஷயம் பேசலாம். மாவட்ட செயலாளர், மாநகர பொறுப்பாளர் ஆகியோரை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி வெளிப்படையாக கருத்து சொல்ல முடியும்?’ என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி நேருவிடம் தர... உடனே மாவட்ட செயலாளர், நகர பொறுப்பாளர் இருவரையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, விசாரணையை தொடங்கினார் நேரு.
புகார் மேல் புகார்கள் வந்து குவிந்தனவாம். ஆளும் கட்சியுடன் இவர்கள் வைத்திருக்கும் கூட்டு பற்றியெல்லாம் கூட ஆதாரத்துடன் கட்சி நிர்வாகிகள் விலாவாரியாக சொல்ல... நேரு நொந்து போனாராம். இதேபோல் நேரு, பல மாவட்டங்களில் புகார்களை விசாரித்து சபரீசனிடம் சொல்லி வருகிறார். சபரீசன் இதுபற்றியெல்லாம் ஒரு அறிக்கையாக மாவட்ட வாரியாக தயார் செய்து வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் வேட்பாளர் தேர்வின்போது பயன்படுத்துவது என்பது சபரி சமையல் திட்டம்.
பிரசாந்த் கிஷோரின் ஐ பேக்நிறுவனம் திமுக பக்கம் மாணவர்களை இழுக்க திட்டம் தீட்டி செயல்படுத்தி இருக்கிறது. 20 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களை திமுகவின் ஐடிவிங்கில் இணைத்திருக்கிறார்கள். அவர்களின் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் திமுக ஆதரவு, எடப்பாடி எதிர்ப்பு கருத்துக்களை பதிவிடுவதே அவர்களது வேலை. இதற்கு அவர்களுக்கு கணிசமான தொகை, மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. இது ஓரளவு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும்போது, எடப்பாடியின் ஆல் பாஸ் திட்டம் மாணவர்களை கவர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் ‘எடப்பாடிக்கு எங்கள் ஓட்டு’ என்று தங்கள் சமூக தளங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் இதை சமாளிக்க தெரியாமல் விழிபிதுங்கி முழிக்கிறார்.
ஓட்டுக்கு பணம் என்பதைவிட, கட்சித் தொண்டர்களுக்கு பணம் என்ற ஃபார்முலாவை தற்போது திமுக பெரிதும் நம்புகிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டனை நன்கு கவனிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறது. கொரோனா காலத்தில் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், பணம் என்று அவர்களை கரிசனத்துடன் கவனித்து வருகிறது. திமுகவின் நமக்கு நாமே திட்டத்தில் பெரிதும் பலனடைந்தவர்கள் திமுக தொண்டர்கள் மற்றும் திமுகவின் வாக்காளர்கள் தான்.
திமுகவை பொருத்தவரை தேர்தல் செலவை ஏவா வேலு, ஆ. ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தான் கவனிப்பார்கள். ஆ. ராசா பொருளாளர் பதவி கேட்டார். ஆனால், அது தனக்கு தான் என்று டி.ஆர். பாலு பிடிவாதம் பிடித்தார். இதனால் ஒரு மாதம் கோபித்துக்கொண்டு ஆ. ராசா டெல்லியில் இருந்தார். அதன் பிறகு டி.ஆர். பாலு அவரிடம் பேசி சமாதானப்படுத்தினார். துரைமுருகனும் தனது பொதுச் செயலாளர் பதவியை விட்டு கொடுப்பதை விரும்பவில்லை. அதன் பிறகு வேறு வழியின்றி தேர்தல் அறிவித்து, இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். டி.ஆர். பாலு, துரைமுருகனை தொடர்ந்து இப்போது பொன்முடி “நான் கூட மூத்த தலைவர் தானே, எனக்கு மாநில பதவி கிடையாதா?” என்று கேள்வி கேட்கத் துவங்கியிருக்கிறார். ஸ்டாலினை பொறுத்தவரை முதல்வர் நாற்காலியை குறிவைத்து காய்களை நகர்த்துகிறார், அதற்காக எதுவும் செய்யத் தயார் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டார்.
தேர்தல் நெருங்க நெருங்க... இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து நிறைய தடாலடி அதிரடிகளை பார்க்கலாம்.
Leave a comment
Upload