வெற்றிக்கு சில புத்தகங்கள் - 3
வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்
வாழ்க்கைக்கு - “மீன்”
தலைப்பே வித்தியாசமாய் இருக்கிறதல்லவா? ஆமாம், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ, உற்சாகத்தோடு ஜெயிக்க, குடும்பம், அலுவலகம் இரண்டிற்கும் மிகத் தேவையான தத்துவம், ஒரு மீன் மார்க்கெட்டில் இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு கிடைக்கிறது. அவர் அதை பதிவு செய்து ஒரு புத்தகமாகவே வெளியிட்டார். மிகப் பிரபலமான புத்தகமான அது பல லட்சம் பிரதிகள் விற்று விற்பனையில் சாதனை படைத்தது.
“Fish ! for Life - John Christenson, harry paul & stephen Lundin” ஜான் கிறிஸ்டென்சன் தனது மீன் மார்க்கெட் அனுபவத்தை மற்ற இருவரின் துணையோடு புத்தகமாய் எழுதினார்.
இனி புத்தகத்தை பற்றி....
சியாட்டில் நகரில் இருக்கும் “பைக் பிளேஸ்” என்ற அந்த மீன் மார்க்கெட், இந்த புத்தகம் வெளிவந்த பிறகு உலகப்புகழ் பெற்று விட்டது. சுற்றுலாப் பயணிகள், மேனேஜ்மென்ட் மாணவர்கள், பெரிய கார்பொரேட் நிறுவன தலைவர்கள் என அந்தக் கூட்டம் மிகப்பெரியது. எல்லாரும் வருவது வேடிக்கை பார்க்க, கற்றுக் கொள்ள... நம்ப முடிகிறதா? அப்படி என்ன விசேஷம் அங்கே?
அங்கே இருக்கும் மீன் கடையின் தினசரி செயல்பாடுகளை பார்த்த பிறகு அதனை தொகுத்து “மீன் தத்துவம்” ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பல புத்தகங்கள், செய்திப் படங்கள் என இந்த தத்துவங்கள் வெற்றி சூத்திரங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
இந்த FISH! தத்துவத்தில் நான்கு பகுதிகள் உண்டு:
* ஜாலியா (வேலை ) விளையாடு
* அடுத்தவர்களை மதித்து, உற்சாகப்படுத்து
* செய்யும் வேலையில் முழுமையாய் ஈடுபடு
* புன்சிரிப்பு மனப்பான்மையை தேர்ந்தெடு
பைக் பிளேஸ் மீன் மார்க்கெட்டில் இருப்பவர்களும் கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் தான். ஆனால் அவர்கள் தங்கள் வேலையை இஷ்டப்பட்டு செய்கிறார்கள். ஜாலியாய் ஒரு விளையாட்டாய் செய்கிறார்கள். களைப்போ, சுணக்கமோ அவர்களிடம் இல்லை. மேலும் அவர்கள் உற்சாகம் பார்வையாளர்களையும், அங்கு மீன் வாங்க வருபவர்களையும் தொற்றிக்கொள்கிறது. சும்மா வருபவர்கள்கூட ஏதாவது வாங்கி கொண்டு செல்கிறார்கள். வியாபாரமும் அதிக அளவில் நடக்கிறது.
அங்கே நடப்பது இது தான்:
உங்களுக்கு ஒரு கிலோ நண்டு வேண்டும், அங்கே கல்லாவில் நிற்பவரிடம் ஆர்டர் செய்கிறீர்கள். அவர் உடனே “ஒரு கிலோ நண்டு பார்ஸ்ஸ்ஸ்ஸால்ல்ல்ல்ல்”....என்று உற்சாகமாய் குரலெழுப்புவார். அதயே உள்ளே இருப்பவர்களும் ஒரே குரலில் கோரஸாக. உற்சாகமாய்க் குரலெழுப்புவார்கள். கட்டப்பட்ட பார்சல் உள்ளிருந்து பறந்து வரும் அல்லது ஒவ்வொரு நண்டாய் வெளியே எடை போடுபவரிடம் பறந்து வரும். “ஒன்று”.... “ரெண்டு” “மூன்று” என்று உற்சாகமாய் குரல் கொடுத்துக்கொண்டே தூக்கி போடுவார்.... பிடிப்பவரும் மற்றவர்களும் சேர்ந்து குரல் கொடுக்க, அந்த இடமே உற்சாகமாய் இருக்கும். இதே போலே ஒவ்வொரு ஆர்டரும் நடக்கும்.
இதையே நம் அலுவலகத்திலும், குடும்பத்திலும் ஏற்று நடத்தினால், எல்லாமே சுலபமாய் நடக்கும், உற்சாகம் மிகுந்த இடத்தில் உழைப்பது சுலபம், மகிழ்ச்சியும் பொங்கும்.
எந்த வேலை செய்தாலும், அதில் முழுவதுமாக ஈடுபாட்டோடு செய்வது, இது மூன்றாவது தத்துவம். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை செய்தால் எதுவும் முழுமை பெறாது. இந்தத் தப்பை பைக் பிளேஸ் மீன் மார்க்கெட்டில் இருப்பவர்கள் யாரும் செய்ய மாட்டார்கள். முழு கவனமும் வாடிக்கையாளர்கள் மீது தான் இருக்கும். அவர்கள் சிறிது முக வாட்டமாய் இருந்தாலும் அருகில் வந்து உற்சாகப்படுத்துவார்கள், அவர்களையும் கடையின் உள்ளே கூட்டி வந்து பறந்து வரும் மீன்களையோ அல்லது நண்டுகளையோ பிடிக்கச் செய்வார்கள். பார்க்கும் அனைவரும் உற்சாகப்படுத்துவார்கள்... பத்து நிமிடத்தில் எந்த கவலை இருந்தாலும் உங்கள் மனம் இலேசாக மாறிவிடும்.
உங்கள் கஷ்டத்தை யார் மேலும் சுமத்தாதீர்கள். வாழ்க்கையை உற்சாகமாக வாழுங்கள், சக மனிதரிடத்தில் அக்கறை காட்டுங்கள். அடுத்தவர் நாளை உங்கள் அன்பான செயல்களின் மூலம் அவர்களின் மனதில் நிலைத்திடச்செய்யுங்கள்.
உங்கள் வீடோ, அலுவலகமோ “பைக் பிளேஸ் மீன் மார்க்கெட்டாய் மாறட்டும், உற்சாகம் பொங்கி வழியட்டும்”.
Leave a comment
Upload